துருக்கியில் இன்றும் பாதுகாக்கப்படும் நோவாவின் கப்பல்!
துருக்கியில் இன்றும் பாதுகாக்கப்படும் நோவாவின் கப்பல்!
இறைத் தூதர் நோவாவின் வரலாறு!
இறைவன் ஆதமிலிருந்து முகமது நபி வரை பல தூதர்களை மனிதர்களுக்கு வழி காட்டியாக அவ்வப்போது உலகுக்கு அனுப்பி வைத்தான். இது பற்றி குர்ஆன் கூறும்போது...
'நோவாவுக்கும் அவருக்குப் பின் வந்த தூதர்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல முஹம்மதே! உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம்.'
4 : 163 - குர்ஆன்
எல்லாத் தூதர்களைப் போலவே இவருக்கும் அவருடைய சமுதாயத்தவர் பல துன்பங்களைக் கொடுத்தனர்.
'நோவாவை அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். 'என் சமுதாயமே இறைவனை வணங்குங்கள். உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்க்குரியவன் வேறு யாருமில்லை. மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்.' என்று அவர் கூறினார்.
7 : 59
'நாங்கள் உம்மைப் பகிரங்கமான வழி கேட்டிலேயே காண்கிறோம்' என அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் கூறினர்.
7 : 60
'அவரது சமுதாயத்தில் ஏக இறைவனை மறுத்த பிரமுகர்கள் 'இவர் உங்களைப் போன்றஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். இறைவன் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப் பட்டதுமில்லை.' என்றனர்.
'இவர் ஒரு பைத்தியக்காரர் தவிர வேறில்லை. சிறிது காலம் வரை இவருக்கு அவகாசம் கொடுங்கள்.' என்றனர்.
23 : 24, 25 - குர்ஆன்
'என் சமுதாயமே! என்னிடம் எந்த வழி கேடும் இல்லை. மாறாக நான் அகிலத்தின் இறைவனுடைய தூதன்' என்று அவர் கூறினார்.
7 : 61
'என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். உங்களுக்கு நலம் நாடுகிறேன். நீங்கள் அறியாதவற்றை இறைவனிடமிருந்து அறிகிறேன்.'
7 : 62
'நீங்கள் இறைவனை அஞ்சவும் உங்களுக்கு அருள் செய்யப் படவும் உங்களை எச்சரிப்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவதில் ஆச்சரியம் அடைகிறீர்களா?' என்றும் கூறினார்.
7 : 63
மேற் கண்ட குர்ஆனிய வசனங்களின் மூலம் அந்த மக்கள் நோவாவை நிராகரித்தது நமக்கு விளங்குகிறது.
நோவாவுடைய மனைவியையும், லோத்துடைய மனைவியையும் தன்னை மறுப்போருக்கு இறைவன் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் இறைவனிடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. 'இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்' என்று கூறப்பட்டது.
66 : 10 - குர்ஆன்.
இந்த வசனத்தின் மூலம் நபிமார்களின்மனைவியராக இருந்தும் தங்கள் கணவர்களின் போதனையை அந்த இரு பெண்களும் செவி மடுக்கவில்லை என்பதை அறிகிறோம். இதன் மூலம் உயர்ந்த குடும்பத்தில் பிறந்து நபிமார்களின் மனைவியராய் இருந்தாலும் தூதர்களின் வழி நடக்கவில்லை என்றால் அவர்களும் நரகவாசிகளே என்பதை விளங்குகிறோம். இதில்குலப் பெருமையையும், குடும்ப பாரம்பரியத்தையும் காட்டி நாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்பவருக்கும் படிப்பினை உள்ளது. நல்லறங்கள் செய்யாதவர் தூதர்களின் மனைவியாய் இருந்தாலும் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பது இதிலிருந்து நமக்கு கிடைக்கும் படிப்பினை.
'நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர். அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர். உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்' என்று அவர்கள் கூறினர்.
'அல்லாஹ் நாடினால் அவன்தான் அதை உங்களிடம் கொண்டு வருவான். நீங்கள் அவனை வெல்ல முடியாது.' என்று அவர் கூறினார்
11 : 32,33 - குர்ஆன்.
அந்த மக்களே வரம்பு மீறி நோவாவிடம் 'இறைவனின் தண்டனையைக் கொண்டு வாரும்' என்றனர். எனவே 'இனி இந்த மக்கள் திருந்த மாட்டார்கள். இவர்கள்அழியும் நேரம் வந்து விட்டது என்று நோவாவிடம் கூறிய இறைவன் நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு கப்பலை தயார்படுத்த சொன்னான்.
'அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். 'நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்.' என்று அவர் கூறினார்.
11 : 38 - குர்ஆன்
'இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.' என்றும் கூறினார்.
11 : 39 - குர்ஆன்.
இறைவனின் வேதனை அந்த மக்களை சூழும் நேரமும் வந்தது.
'நமது கட்டளை வந்து தண்ணீர் பொங்கிய போது ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும் உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும் நம்பிக்கைக் கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக' என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்..'
11 : 40 - குர்ஆன்
இறைத் தூதர் நோவா மிகப் பெரிய கப்பலை செய்து அதில் அனைத்து ஜீவராசிகளில் இருந்தும் ஒவ்வொரு ஜோடியை இறைவனின் கட்டளைக்கொப்ப ஏற்றிக் கொண்டார். தன்னை நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம்களையும் அந்த கப்பலில்ஏற்றிக் கொண்டார். தன்னுடைய மகனையும் நம்பிக்கை கொள்ளுமாறும், கப்பலில் ஏறிக் கொள்ளும்படியும் உபதேசித்தார். அவனோ 'இறைவனின் கோபம் என்னை ஒன்றும் செய்யாது. நான் மலையின் மீது ஏறி தப்பித்துக் கொள்வேன்' என்று இறுமாப்போடு சொன்னான்.
'மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி 'அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள். ஏக இறைவனை மறுப்போருடன் ஆகி விடாதே!' என்று நூஹ் கூறினார்.
11 : 42 - குர்ஆன்
'ஒரு மலையின் மீது ஏறிக் கொள்வேன். அது என்னை தண்ணீரிலிருந்து காப்பாற்றும்' என்று அவன் கூறினான். 'இறைவன் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை.' என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப் பட்டோரில் ஆகி விட்டான்.
11 : 43 - குர்ஆன்
ஒரு தூதரின் மகனாக இருந்தும் தன் தந்தையை இறைத் தூதர என விசுவாசம் கொள்ளாததால் நஷ்டமடைந்தோரில் ஒருவனாக ஆகி விட்டான். குடும்ப பாரம்பரியத்தால் நான் சிறந்தவன் என்று சொல்லித் திரிபவர்களுக்கு பாடமாக மேற்கண்ட இறை வசனம் அமைந்துள்ளது.
'பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞசிக் கொள். வானமே நீ நிறுத்து!' என்று கூறினோம். தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலையின் மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் இறையருளை விட்டும் தூரமானோர் எனவும் கூறப்பட்டது.
11 : 44
இந்த வெள்ளப் பிரளயமானது அதிகரித்து தண்ணீரின் அளவு மலைகளின் உயரத்திற்கு சென்றது. நோவா செய்த கப்பலும் தண்ணீரின் ஓட்டத்தோடு சென்று மலையின் மேல் நிலை கொண்டது.
இந்த மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் உயரம் பதினாறாயிரம் அடியாகும். இதை அகிலத்தாருக்கு அத்தாட்சியாக விட்டு வைத்தோம் என்று இறைவன் கூறுகிறான்.
'நோவாவையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்கு சான்றாக்கினோம்.'
29 : 15 - குர்ஆன்.
இந்த வசனத்தின் மூலம் நோவாவின் கப்பல் இன்று வரைஅம்மலை மீது உள்ளது நமக்கு தெளிவாகிறது. இந்த மலை பனிப் பாறைகளால் அதிகம் சூழப் பட்டுள்ளது. தற்போது பூமியில் வெப்பம் அதிகரிப்பதால் வருங்காலத்தில் ஜூதி மலையின் மேல் படர்ந்திருக்கும் பனிப் பாறைகள் உருக ஆரம்பிக்கும். அந்த நாளில் இறைத் தூதர் நோவாவின் கப்பல் உலக மக்களின் பார்வைக்கு வரும். அப்படி கப்பல் வெளிப்படும் பட்சத்தில் அதனுள் நமக்கு பல்வேறு விபரங்கள் கிடைக்க சாத்தியம் உண்டு. அந்த கால மக்களின் வணக்கங்கள். நோவாவுக்கு அருளப்பட்ட வேதத்தின் உண்மை நிலை நமக்கு தெரிய வரலாம். அதே போல் தற்போது சர்ச்சையாகி இருக்கும் இந்துக்களின் வேதமான ரிக்,யஜூர்,சாம, அதர்வண வேதங்களின் உண்மை நிலை வரலாறு போன்றவை தெரிய வாய்ப்பிருக்கிறது. இதன் உண்மைகளை இறைவனே அறிவான்.
இந்த குர்ஆன் இறைவனின் வேதம்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
'முஹம்மதே! இவை மறைவான செய்திகள். இவற்றை உமக்கு நாம் அறிவிக்கிறோம். இதற்கு முன் நீரும் உமது சமுதாயத்தினரும் இதை அறிந்திருக்கவில்லை. எனவே பொறுமையைக் கடைபிடிப்பீராக! நம்மை அஞ்சுவோருக்கே நல்ல முடிவு உண்டு.'
11 : 49 - குர்ஆன்.
இது போன்ற செய்திகள் அன்றைய அரபு மக்கள் அறிந்திருக்கவில்லை. இத்தனை காலமாகியும் இவை எல்லாம் நமக்கு புதிய செய்திகளாகவே தெரிகிறது. மக்கா,மதீனா, சிரியா,எமன் போன்ற நாடுகளுக்கு மட்டுமே சென்று வந்த முகமது நபி துருக்கி நாட்டில் உள்ள ஜூதி மலையில் நோவாவின் கப்பல் இன்றும் பாதுகாக்கப் பட்டுள்ளது என்ற விபரத்தை எப்படி அறிந்திருக்க முடியும்? என்ற கேள்வி வருகிறதல்லவா?
குர்ஆன் இறை வேதம்தான். அது முகமது நபியின் வார்த்தை அல்ல என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
இறைவனே மிக அறிந்தவன்
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.