Followers

Wednesday, August 26, 2009

தாயைப் போல பூமியின் அரவணைப்பு!

தாயைப் போல பூமியின் அரவணைப்பு!

'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை ஆக்கவில்லையா?'
-குர்ஆன் 77:25,26


பூமிக்கு உள்ள ஈர்ப்பு விசையை இந்த குர்ஆனின் வசனம் மெய்ப்பிக்கிறது. இதை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். கடைத் தெருவில் ஒரு தாய் தன் குழந்தையை கைகளைப் பிடித்தவாறு நடந்து அழைத்துச் செல்கிறாள். அந்த குழந்தை ஒரு கடையைப் பார்த்து விட்டு அங்கு செல்ல எத்தனிக்கும். உடனே தாயானவள் அந்த குழந்தையை தன் பக்கம் தன் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வருவதைப் பார்க்கிறோம். அப்பொழுதுதான் அந்த குழந்தை தான் தனது தாயின் கட்டுப்பாட்டில் இருப்பதையே உணருகிறது.

அதே போல் தாயின் மார்போடு ஒரு குழந்தை அமர்ந்திருக்கும்போது தலையை அங்கும் இங்கும் அசைக்கும். அதை ஒரு பொருட்டாக அந்தத் தாய் எடுத்துக் கொள்வதில்லை. அதே சமயம் தாயின் அரவணைப்பிலிருந்து துள்ளிக் குதித்து இறங்க முயற்ச்சிக்கும் போது அந்த தாயின் பிடி மேலும் இறுகி தன் குழந்தையை அவளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாள். இது நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாதாரண ஒரு நிகழ்வு.

இதையே நாம் பூமிக்கும் பூமிக்கு மேல் வசிக்கும் கோடிக்கணக்கான ஜீவராசிகளையும் பொருத்திப் பார்ப்போம். நம்முடைய அன்றாட வாழ்வில் பூமி நம்மை அரவணைத்திருப்பதை நாம் உணருவதில்லை. எப்படி ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பை உணருவதில்லையோ அதைப் போல. அதே குழந்தை சில வருடங்களில் பெரிதானவுடன், அதே தாய் அந்த குழந்தையை தனியே வெளியில் சென்று விளையாட அனுமதிக்கிறாள். இனி குழந்தைக்கு தனது பாதுகாப்பு தேவையில்லை என்று தாய் உணருவதால் குழந்தையை தனியே விட்டு விடுகிறாள்.

அதே போன்றுதான் ஓரளவு அறிவு வளர்ச்சி அடைந்த மனிதன் பூமியின் ஈர்ப்பாற்றலுக்கு மேலே அதாவது ராக்கெட்டில் சென்றால், இனி தனது ஈர்ப்பாற்றல் மனிதனுக்கு தேவையில்லை என்று கருதி ராக்கெட்டின் பிடிப்பை பூமி தளர்த்தி விடுவதையும் பார்க்கிறோம்.

இந்த இடத்தில் குர்ஆனின் 'அணைத்தல்' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகவும் இலக்கியத்துடனும், அறிவியல் சார்ந்தும் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டுள்ளதை நினைத்து நாம் ஆச்சரியப்படுகிறோம்.

மனிதர்கள் மட்டுமின்றி, விலங்கினங்களாயினும் அல்லது உயிரற்ற பொருட்களாயினும் சிதறடிக்கப்படாமல் அவைகளை இருக்கும் இடத்திலேயே இருக்க வைப்பது பூமியின் ஈர்ப்பு விசையே ஆகும்.

மேலும் இந்த பூமி நாம் வாழ்வதற்க்கென்றே விஷேசமாக படைக்கப்பட்ட ஒரு கோளாகும். இதன் காரணமாகவே அதனுடைய ஈர்ப்பு விசை ஒரு இழு விசையாக நமக்குத் தோன்றாமல் நாம் அணிந்திருக்கும் உடை போன்று ஒரு இதமான அணைப்பாகத் தென்படுகிறது. இதற்கு மாறாக பூமியின் ஈர்ப்பு விசை நமக்கு ஒரு இழு விசையாக தென்பட்டால் நம்மால் இதன்மீது ஒரு போதும் வாழ இயலாது.

பூமியும் அசுர வேகத்தில் சுற்றுகிறது. அது சுற்றுவதோடு அல்லாமல் சூரியனையும் குற்றி வருகிறது. அதோடல்லாமல் மொத்த கேலக்ஸியுமே ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு காரியங்கள் நடந்தும் நம்மால் அதை உணர முடிகிறதா?

ஆஹா... இறைவன் நம் மீது பொழிந்த கருணைக்கு அளவு உண்டோ?

'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா?'
-குர்ஆன் 77:25,26

Friday, August 21, 2009

வரலாற்றுச் சின்னங்கள் ஒரு பார்வை!



நான் தற்போது பணி செய்து கொண்டிருக்கும் இடம் சவூதியின் மாநிலங்களில் ஒன்றான தபூக். இந்த இடமும் சுற்றியுள்ள இடங்களும் இஸ்லாம், கிறித்தவம், யூதம போன்ற மார்க்கங்களுக்கு மிக நெருங்கிய தொடர்புடைய பல பிரதேசங்களைக் கொண்டுள்ளது. தபூக்கிலிருந்து ஜோர்டான்,எகிப்து, பாலஸ்தீன், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு கடல் மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் எளிதாக பயணிக்க முடியும்.

சில மாதங்களுக்கு முன்பு திபா என்ற கடற்கரை பிரதேசத்துக்கு பயணித்திருந்தோம். மிகவும் அழகிய ஆரவாரம் இல்லாத கடற்கரை. நம் ஊர் மெரீனா கடற்கரையைப் போன்ற பெரிய அலைகளை பார்ப்பது அரிது. நிறமும் சற்று வித்தியாசப்படுகிறது. கடற்கரை ஓரம் நின்று பார்த்தாலே எகிப்தின் கடற்கரைகளை காணக் கூடியதாக இருக்கிறது.

அங்கிருந்து பிறகு மக்னா என்ற இடத்தை நோக்கி பயணித்தோம். இது வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஒன்று. 'டென் கம்மேண்ட்ஸ்' படம் பார்த்தவர்கள் கடல் அலைகள் பிளந்து தூதர் மோஸே (மூஸா)வுக்கு வழி விட்ட சம்பவத்தைப் பார்த்திருக்கலாம். அந்த படத்தில் வரும் காட்சி இடம் பெற்ற இடத்தில்தான் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அந்த படத்தின் காட்சிகள் சூட் பண்ணப்பட்ட இடத்தையும் அங்குள்ளவர்கள் காட்டினார்கள்.

எகிப்து நாட்டின் பாரோ(பிர்அவுன்) மன்னன் தானே இறைவன் என்றும், தன்னையே வணங்க வேண்டும் என்றும் நாட்டு மக்களை மிரட்டுகிறான். இதற்கு இறைத்தூதர் மோஸேயும் அவரைப் பின்பற்றிய முஸ்லிம்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கோபம் கொண்ட மன்னன் மோஸேயையும் அவரது கூட்டத்தாரையும் அழிப்பதற்கு தனது படையுடன் துரத்துகிறான். மோஸேயும் அவரைப் பின்பற்றிய முஸ்லிம்களும் மன்னனின் தாக்குதலுக்கு அஞ்சி வெருண்டோடுகின்றனர். அப்போது அவர்களின் எதிரே கடல் குறுக்கிடுகிறது. முன்னால் கடல். பின்னால் மன்னனும் அவனது படைகளும்.

'இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டபோது 'நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர்.
'அவ்வாறு இல்லை என்னோடு என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்' என்று மூஸா கூறினார்.
'உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக!' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே கடல் பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போல் ஆனது.
அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும் அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மன்னனையும் அவனது கூட்டத்தையும் மூழ்கடித்தோம்.'
-குர்ஆன் 26:61....66.


குர்ஆனின் இந்த வசனத்தின் படி மோஸேயும் அவரது கூட்டத்தாரும் வழி விட்ட கடலில் பயணித்து கடலின் மறு கரையான தற்போது நாங்கள் நிற்கும் இடத்தை அடைகின்றனர். இந்த இடத்தை அடைந்த மக்களுக்கு தாகம் எடுக்கிறது. உடனே அந்த மக்கள் 'மூஸாவே! எங்களுக்காக இறைவனிடம் தண்ணீருக்காகப் பிரார்த்திப்பீராக' என்ற கோரிக்கையை வைக்கிறார்கள். இனி குர்ஆன் சொல்வதைப் பார்ப்போம்.

'மூஸா தனது சமுதாயத்திற்க்காக நம்மிடம் தண்ணீர் வேண்டியபோது 'உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!' என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்து கொண்டனர்.
-குர்ஆன் 2:60


மலைப்பாங்கான அந்த இடத்தில் ஊற்றுக்கள் வருவதற்கு அதிக சாத்தியங்கள் இல்லை. இறைவனின் ஆற்றலால் 12 ஊற்றுகள் பீறிட்டுக் கிளம்புகின்றன. மக்களுக்கும் தாகம் தணிகிறது. அந்த ஊற்றுகளில் சில ஊற்றுகளைத்தான் நாங்கள் பார்த்தோம். இன்றும் அந்த மலையிலிருந்து தண்ணீர் ஊற்றாக வந்து கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தோம். சில ஊற்றுகள் பாலைவன புழுதிக் காற்றால் மூடப்பட்டு விட்டது. இந்த இடத்தை புனிதமாக நினைத்து மக்கள் வணங்க அரம்பித்து விடுவார்கள் என்ற பயத்தில் சவுதி அரசு இந்த இடத்தை அதிகம் பிரபல்யப்படுத்தவில்லை.

இந்த இடங்களில் சிலவற்றைத்தான் மேலே ஸ்லைட் ஷோவில் நீங்கள் பார்க்கிறீர்கள். மேலும் மலைகளை குடைந்து வீடுகளை அமைத்த இடங்களையும் பார்வையிட்டோம். அதுபற்றிய விபரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Wednesday, August 19, 2009

மனிதனின் வக்கிரபுத்தி இப்படியா போக வேண்டும்!

ஸ்டார் சேனலில் ஒரு க்விஸ் புரோக்ராம் நடத்துகிறார்கள். இதற்காக பல லட்சங்களையும் அள்ளிக் கொடுக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்த அந்தரங்க செய்திகளை சம்பந்தப்படுத்தி பல கேள்விகளை கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் உண்மையான பதிலை சொல்ல வேண்டும். நீங்கள் பொய் சொன்னால் உங்கள் உடலோடு ஒட்டியிருக்கும் 'உண்மை கண்டறியும்' கருவி காட்டிக் கொடுத்து விடும். இந்த கேள்விகளுக்கு நீங்கள் உண்மையான பதில் அளித்தால் பல லட்சங்களைக் கொட்டிக் கொடுக்கிறார்கள். தன் குடும்ப வாழ்வு சீரழிந்தாலும் பரவாயில்லை பல லட்சங்களுக்கு அதிபதியாக வேண்டும் என்ற வெறியில் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். கேள்விகளில் சில மாதிரிகளை கீழே தருகிறேன்.

1.(குடும்ப தலைவி) உங்கள் கணவனை யாருக்கும் தெரியாமல் என்றாவது அடித்தது உண்டா?

2.(குடும்ப தலைவி) திருமணத்துக்கு முன்பு வேறு ஆண்களோடு உங்களுக்கு தொடர்பு இருந்ததா?

3.(குடும்ப தலைவி) தற்போதுள்ள கணவனை விட இன்னார் தனது கணவராக வாய்த்தால் நன்றாக இருந்திருக்குமே என்று என்றாவது எண்ணியது உண்டா?

4.(குடும்ப தலைவி) பத்து பதினைந்து வயதுகளில் உங்கள் சொந்தங்களில் யாராவது உங்களை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்களா?

5. உங்கள் கணவன் உங்களுக்கு ஏற்றவராக இல்லை என்று என்றாவது எண்ணியது உண்டா?

இதே போன்ற ரகங்களில் அமைந்த கேள்விகளே அதிகம் இடம் பெறுகின்றன. இதைவிட கொச்சையாகவும் பல கேள்விகள் கேட்கப்படுகிறது. அந்த அரங்கத்திற்குள் அந்த பெண்ணின் கணவன், குழந்தைகள், அண்ணன், தம்பி, போன்றோரையும் அழைத்து நேரிலேயே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் வைக்கிறார்கள். அவர்களும் சந்தோஷமாக அந்த நிகழ்ச்சியை புன்முறுவலோடு கண்டுகளிப்பது கண்றாவியாக இருக்கிறது.

ஒரு மனிதனின் சிறு வயதில் நடந்த அந்தரங்கங்களை இப்படி வெளிச்சம் போடுவதால் யாருக்கு என்ன நன்மை. ஏற்கனவே சாதி மத வித்தியாசம் இல்லாமல் விவாகரத்து அதிகரித்து வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளால் இந்த விகிதாச்சாரம் இன்னும் அதிகரிக்கும். இதைத்தான் ஸ்டார் டிவி விரும்புகிறதா? இதை எப்படி அரசு அனுமதிக்கிறது என்றும் தெரியவில்லை.

ஒரு உண்மை சம்பவம்:

கணவனுக்கு மனைவி மேல் ரொம்ப நாட்களாக சந்தேகம். இரண்டாவது குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறான். அதை எப்படி தெரிந்து கொள்வது? அதற்கு ஒரு திட்டம் தீட்டுகிறான்.

தன் மனைவியிடம் சென்று 'ஸ்டார் டிவியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் சொல். பல லட்சங்கள் நமக்கு கிடைக்கும். நம் கஷ்டமெல்லாம் தீரும் என்கிறான்'. மனைவியும் சம்மதிக்கிறாள். போட்டிக்கு முன் நம் வீட்டிலேயே ஒத்திகை பார்த்துக் கொள்வோம் என்று கூறி தான் போட்டி நடத்துபவராக மாறி மனைவியிடம் கேள்விகளை கேட்கிறான். 'உங்களுக்கு பிறந்த குழந்தைகள் அனைத்தும் உங்கள் கணவனுக்கு சொந்தமானவர்களா?' என்று கணவன் கேட்க மனைவியோ அப்பாவியாக பரிசை வெல்லனுமே என்று 'ஒரு குழந்தை என் கணவனுக்கு பிறக்கவில்லை' என்று உண்மையைப் போட்டு உடைக்க கோபத்தில் கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து விடுகிறான். தற்போது கணவன் சிறைச்சாலையில். மனைவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்.

இது போல் இன்னும் எத்தனை குடும்பங்கள் சீரழியப் போகிறதோ? நல்ல வேளை இன்னும் நம் தமிழ் சேனல்கள் பக்கம் இந்நிகழ்ச்சியைக் புண்ணியவான்கள் கொண்டு வரவில்லை என்று நினைக்கிறேன்.

Sunday, August 16, 2009

காந்திஜிக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர்கள் யார்?

இன்றைக்கு சுதந்திரம் என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது மகாத்மா எனும் தேசப்பிதாதான். அந்த மகாத்மாவை தேசப்பிதாவாக மாற்றியவர்கள் யார் என்ற உண்மையை எல்லா வரலாற்றாசிரியர்களும் சாமர்த்தியமாக மறைத்து விட்டனர். ஆனால் மகாத்மா காந்தி தனது சுய சரிதையில் தனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் யார் என்பதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இப் பதிவில் பார்ப்போமா!

அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இருவரும் சகோதரர்கள். குஜராத்தில் போர்பந்தரில் பிறந்த இவர்கள் பல நாடுகளுக்குச் சென்று பெயர் சொல்லும் அளவுக்கு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினார்கள். 1865ம் ஆண்டு 'தாதா அப்துல்லாஹ் கம்பெனி' என்ற பெயரில் 50 சரக்கு கப்பல்களையும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை இவர்கள் நிறுவினார்கள்.

இவர்களின் கம்பெனி அலுவலக வேலைகளை முறையாகச் செய்ய சட்டம் தெரிந்த ஒரு நபரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி அவர்கள் போர்பந்தரில் தனது வீட்டிற்க்கு அருகாமையில் இருந்த சட்டம் படித்து முடித்த இளைஞர் காந்தி அவர்களை அலுவலகப் பணிக்காக தனது சகோதரர்களுடன் கலந்து ஆலோசித்து 105 பவுண்டு சம்பளத்திற்க்கு வேலைக்கு அமர்த்தினார்கள்.

காந்தி என்ற அந்த இளைஞர் தேசப்பிதாவாக உருவாக்க விதை விதைத்த நேரம் இதுதான். 1863ம் ஆண்டு முதன்முறையாக காந்தி வேலையில் சேர்வதற்க்காக தென் ஆப்ரிக்கா பயணம் மேற்க்கொண்டார். அந்தப் பயணத்தில் இவர் ஒரு இந்தியன் என்பதால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டார். தென் ஆப்ரிக்காவில் உள்ள அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி அவர்களிடம் பயணத்தைப் பற்றிக் கூறும்போது ' நம் நாட்டிலே நமக்கு சுய மரியாதை இல்லை. அதை வேறு எங்கும் எதிர்பார்க்க முடியாது போலும்' என்றார் காந்தி.

உடனேயே 'நாம் உழைத்து உண்கிறோம். நாம் ஏன் சுய மரியாதையை இழக்க வேண்டும்? நாம் ஏன் நாட்டு மக்களுக்கு சுய மரியாதை கிடைக்க பாடுபடக் கூடாது?' என்ற கேள்விக் கணையைத் தொடுத்து காந்தியின் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பினர் ஜாவேரி சகோதரர்கள்.

அந்தக் கேள்விதான் காந்தியை தேச விடுதலைப் பற்றிய கவலையை ஏற்படுத்தியது. இதை காந்தி தன் சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். பின்பு காலங்கள் உருண்டோட ஒரு நாள் அப்துல்லாஹ் கம்பெனி வழக்கறிஞர் பேக்கர் அவர்களுக்கு உதவியாக டர்பனிலிருந்து பிரிட்டோரியாவிற்க்கு புகை வண்டியில் முதல் வகுப்பு பெட்டியில் செல்லும்போது வெள்ளையர்களால் காந்தி அவமானப்படுத்தப் பட்டு மாரிட்ஸ்பார்க் ஸ்டேஷனில் இறக்கிவிடப்பட்டார். அங்குதான் காந்தியின் சுதந்திர உணர்வு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

காந்தியும் ஜாவேரி சகோதரர்களும் சுதந்திர இந்தியாவைக் காண 'நேட்டால் இந்தியன் காங்கிரஸ்'
(Natal Indian Congress) என்ற அமைப்பை தென் ஆப்ரிக்காவில் நேட்டால் நகரிலுள்ள அவர்களது இல்லத்தில் 1894ம் ஆண்டு மே 22ல் ஆரம்பிக்கிறார்கள்.

அதன் முதல் தலைவராக அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி அவர்களும் முதல் செயலாளராக காந்தியும் நியமிக்கப்பட்டார்கள். இவ்வமைப்பின் மூலம் சுதந்திர உணர்வை மக்கள் மத்தியில் ஊட்டினார்கள். பின்பு 1896ல் நேட்டால் இந்தியன் காங்கிரஸின் இரண்டாவது தலைவராக அப்துல் கரீம் ஆதம் ஜவேரியும் இரண்டாவது செயலாளராக காந்தியும் நியமிக்கப் பட்டார்கள்.

பின்பு காந்தி தனது உறவினர்களைப் பார்ப்பதற்க்காக தாயகம் திரும்பினார்.1897ல் மீண்டும் இரண்டாவது முறையாக தென் ஆப்ரிக்கா சென்றார். தனது குடும்பத்துடன் எஸ்.எஸ். சூர்லேண்ட் என்ற தாதா அப்துல்லாஹ் கம்பெனியின் பயணக்கப்பலில் இலவசமாக பயணம் செய்தார். எஸ்.எஸ்.நாத்ரி என்ற இன்னொரு கப்பலும் சென்றது. மொத்தமாக 800 பயணிகள் பயணமானார்கள்.

இந்த பயணம் வைர வரிகளால் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்தப் பயணத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் இந்தியர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் துறைமுகத்திலிருந்து இந்தியர்கள் இறங்க அனுமதி வழங்கவில்லை.

இந்த தகவல் அறிந்த ஜவேரி சகோதரர்கள் இந்தியர்களின் சுதந்திர உணர்வுக்காக பிரிட்டிஷாரை கடுமையாக எதிர்த்தார்கள். ஜவேரி சகோதரர்களின் கடும் எதிர்ப்பைக் கண்டு கலங்கிய பிரிட்டிஷார் 23 நாட்கள் கழித்து இந்தியர்கள் அந்த துறைமுகத்தில் இறங்க அனுமதித்தனர்.

இது நேட்டால் இந்திய காங்கிரஸின் முதல் வெற்றி என்று வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த சம்பவம் மறைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு தாதா அப்துல்லா கம்பெனி பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதைத் தொடர்ந்து நேட்டால் இந்தியன் காங்கிரஸ் சுதந்திர உணர்வை மக்கள் மத்தியில் பரப்ப ஆரம்பித்தது. சுதந்திர வேட்கையைத் தூண்டும் ஆணிவேராக இருந்த ஜாவேரி சகோதரர்களின் கடல் வாணிபத்தை வீழ்த்த திட்டம் தீட்டினர் பிரிட்டிஷார்.

அதன் விளைவாக அவர்களின் நான்கு பயணிகள் கப்பல்களும் பல துறைமுகங்களில் நின்ற நிலையிலேயே மூழ்கடிக்கப்பட்டன. இன்றைய மதிப்பின்படி கிட்டத்தட்ட 150 கோடி தொகையை ஜாவேரி சகோதரர்கள் இந்திய விடுதலைக்காக இழந்தனர். மூழ்கடிக்கப்பட்ட 4 பயணிகள் கப்பலில் ஒன்று எஸ்.எஸ். கேத்திவ் கப்பல் குஜராத் மாநிலம் போர்பந்தர் துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டு இன்று வரை கடலுக்கடியில் இருக்கிறது.
நன்றி : விடியல் வெள்ளி

நாட்டு சுதந்திரத்திற்க்காக தங்கள் நிறுவனத்தையும் பணம் பொருள் அனைத்தையும் இழந்த இந்த ஜாவேரி சகோதரர்களை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஒருக்கால் இவர்கள் இந்து மதத்தில் அதுவும் உயர் சாதியில் பிறந்திருந்தால் இன்று நமக்கெல்லாம் அறியப்பட்டவர்களாக ஆகியிருப்பார்கள். உண்மைதானே!

Thursday, August 13, 2009

பிச்சைப் பாத்திரம் ஏந்தும் ஏமன் சிறுவர்கள்!



ரமலான் மாதங்களிலும், ஹஜ் நாட்களிலும் மக்கா மதீனா நகரங்களில் வெளிநாட்டவர் அதிகம் இருப்பர். இந்த நாட்களை பயன்படுத்தி சிறுவர்களை பிச்சை எடுக்க வைத்து ஒரு கும்பல் சவூதியில் பிழைக்கிறது. இந்த சிறுவர்கள் அனைவரும் பக்கத்து நாடான ஏமனிலிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டவர்கள். இந்த சிறுவர்களின் பெற்றோர்களின் ஏழ்மையை பயன்படுத்தி 'உங்கள் குழந்தையை நல்ல வேலையில் அமர்த்தி மாதா மாதம் பணம் அனுப்புகிறோம்' என்று கூறி சவூதிக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால் இங்கு அவர்களுக்கு கொடுக்கும் வேலையோ முழு நேரப் பிச்சைத் தொழில். ஐந்து நேரத் தொழுகைக்கும் மசூதிக்கு வெளியே இவர்களை நிறுத்தி வைப்பது. தொழுகை நேரம் முடிந்தவுடன் பெட்ரோல் பங்க், கடைத்தெரு என்று இவர்களை பிழிந்தெடுக்கிறது ஒரு கூட்டம். சவூதி அரேபியா முழுவதும் சுமார் 10000 சிறுவர்கள் இது போன்று பிச்சைத் தொழிலில் ஈடுபடுத்தப் படுவதாக அரப் நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் ஒரு புறத்தை மட்டுமே குறை சொல்லி பிரயோசனம் இல்லை. 50 பைசா,ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று சிலலரையை மாற்றி நாம் பிச்சை போட்டு இது போன்ற கும்பல்கள் வளருவதற்கு நாமே காரணம் ஆகிறோம். ஒரு சிறுவன் (அஹமது 10 வயது) ஒரு நாளைக்கு 100 லிருந்து 150 ரியால் வரை சம்பாதிப்பதாகவும் தனது முதலாளிக்கு :-) 75 ரியால் கொடுத்து விடுவதாகவும் அரப் நியூஸூக்கு பேட்டியும் கொடுத்துள்ளான். தன் தந்தையையும் தான் பார்ப்பேனா என்பது சந்தேகமாக இருக்கிறது என்று கண்ணீர் மல்க பெட்டியும் கொடுத்துள்ளான்.

வாங்கும் கரத்தை விட கொடுக்கும் கரம் சிறந்தது என்றார் முகமது நபி. நாம் கொடுக்கும் தர்மம் ஒருவனை பிச்சை எடுக்கும் தொழிலில் இருந்து விலக வைக்க வேண்டும். 5000, 10000 என்று அவனுக்கு கடனாகவாவது கொடுத்து அவனது வாழ்வை முன்னேற்ற நமது தர்மம் பயன்பட வேண்டும். இல்லை என்றால் அந்த நிலை வரும் வரை தர்மம் செய்யாமலே இருந்து விடலாம்.

ஒரு முறை ஒரு நபித்தோழர் அரசாங்க கஜானாவிலிருந்து பொருளுதவி கேட்டு முகமது நபியை அணுகுகிறார். முகமது நபியும் அவரின் தேவைக்கேற்ப பொருளுதவி அளிக்கிறார். அந்த தோழரோ தனக்கு இன்னும் அதிகம் வேண்டும் என்று கேட்கிறார். முகமது நபி சற்று கோபமடைந்தவராக 'தேவைக்கு அதிகமாக ஏன் கேட்கிறாய்? யாசித்து உண்பதை விட உழைத்து உண்பதுதான் சிறந்தது' என்று உபதேசிக்கிறார். உபதேசத்தில் தெளிவடைந்த அந்த தோழர் தான் இறக்கும் வரை யாரிடமும் எதையும் யாசிக்காமல் இறந்து போனதையும் பார்க்கிறோம். முகமது நபியின் இறப்புக்கு பிறகு ஜனாதிபதிகளான அபுபக்கரும், உமரும் அந்த நபர் வறுமையில் வாடுவதைப் பார்த்து பொருளுதவி தருவதற்காக ஆளனுப்புகிறார்கள். அந்த நபரோ 'முகமது நபி என்னை யாசிப்பதில் இருந்தும் தடுத்திருக்கிறார். எனக்கு எந்த உதவியும் வேண்டாம்' என்று மறுத்ததைப் பார்க்கிறோம். அதே அரபுகளில் ஒரு சிலர் சிறுவர்களை கடத்தி பிச்சை எடுக்க வைப்பதையும் பார்க்கிறோம்.

'நான் கடவுள்' படத்தில் பாலாவும் இதே பிச்சைக்காரர்கள் பிரச்னையை மிகவும் அழகாக கையாண்டிருப்பார். திரைப்படத்தைப் பார்த்து பழைய சிவாஜி படங்களில் அழுதும் இருக்கிறேன். புதுப் படங்களில் என் கண்களை கலங்க வைத்தது பாலாவின் இந்த 'நான் கடவுள்'. நம் நாட்டில் பிச்சைக் காரர்களின் நிலையை நினைத்து மனது கனத்தது. படிக்க வேண்டிய வயதில் இவர்கள் ரயிலிலும், பஸ்ஸிலும் பிச்சை எடுப்பதை பார்க்க பரிதாபமாக இருக்கும். கலர் டிவி, சிலைகள் என்றெல்லாம் பணத்தை வீணடிக்கும் அரசு பிச்சைக்காரர்களைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை. வசதியுடன் உள்ள ஒவ்வொருவரும் ஒரு பிச்சைக்காரரை தத்தெடுத்தால் மிக எளிதில் இந்தப் பிரச்னையை சமாளிக்கலாம். ஆனால் மனது வர வேண்டுமே!

Monday, August 10, 2009

மேகங்களைப் பற்றி சற்று சிந்திப்போமா!



மேகங்களில் ஒரு வகையான மேகம் மலை போன்ற பெரிய மேகமாகும். இது இடி மின்னலுடன் கூடிய மழையோடு சம்பந்தப்பட்டது. இந்த மலை போன்ற மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன அவை எவ்வாறு மழையையும், பனியையும்,மின்னலையும் உண்டாக்குகின்றன என்பதைப் பற்றி அறிவியலார் ஆராய்ந்துள்ளனர். இந்த மலை போன்ற மேகங்கள் மழையைப் பொழிவிப்பதற்கு கீழ்க்கண்ட மாற்றங்கள் நடைபெற வேண்டும்.

மேகங்கள் காற்றினால் தள்ளப்படுதல்: மேகங்களின் சிறுசிறு துண்டுகளை காற்றானது ஒரு குறிப்பிட்டப் பகுதிக்கு தள்ளுகின்றன. அவைகளை ஓரிடத்தில் குவியச் செய்வதால் மலை போன்ற மேகங்கள் உருவாகத் தொடங்குகின்றன.

ஒன்று கூடுதல்: இந்த சிறிய மேகங்கள் அனைத்தும் ஒன்று கூடி பெரிய மேகமாக ஆகத் தொடங்குகின்றன.

அடுக்கடுக்காக ஆகுதல்: சிறிய மேகங்கள் ஒன்று கூடி பெரிதாகும்போது, பெரிய மேகத்திலிருந்து மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் அதிகரிக்கின்றது. பெரிய மேகத்தின் மத்திய பகுதியில் இந்த மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் அதிகமாக உள்ளது. இந்த மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் மேகங்களைச் செங்குத்தாக வளரச் செய்கிறது. அதனால் மேகங்கள் அடுக்கடுக்காக உருவாகின்றன. இந்த மேல் நோக்கிய வளர்ச்சியானது மேகத்தை வானத்தின் குளிர்ந்த பகுதிக்கு விரியச் செய்ய வைக்கின்றது. அங்கே நீர்த்துளிகளும் பனிக் கட்டிகளும் உருவாகி அவைகள் பெரிதாக வளர்ந்து கொண்டே செல்கின்றன. இந்த நீர்த்துளிகளும் பனிக்கட்டியும் மேல் நோக்கிய காற்று மின்னோட்டத்தினால் மிகவும் கனமாக மாறுகிறது. பின்பு அவைகள் மேகத்திலிருந்து மழையாகவும் பனிக்கட்டியாகவும் பொழிய ஆரம்பிக்கின்றன.

இந்த அறிவியல் உண்மையை குர்ஆன் எப்படி அணுகுகிறது என்று பார்ப்போம்:

'இறைவன் மேகங்களை இழுத்து ஒன்றாக்குவதையும், பின்னர் அதனை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதை நீர் காண்கிறீர். வானத்திலிருந்து அதில் உள்ள பனி மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பியும் விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.'
-குர்ஆன் 24:43


இது நம்மைப் போன்ற ஒரு மனிதரின் வார்த்தையாகத் தெரிகிறதா? அல்லது நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தையாகத் தெரிகிறதா என்பதை அவரவரின் ஊகத்துக்கே விட்டு விடுகின்றேன்.

Friday, August 07, 2009

விவேகானந்தர்தான் சொன்னார்



பசு பாதுகாப்பு பிராச்சாரகர் ஒருவரிடம், “மனிதர்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களின் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி சோறுகூடத் தராமல் விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றுவதற்காக உணவை வாரி வாரித் தரும் சங்கங்களிடம் எனக்கு சிறிதுகூட அனுதாபம் கிடையாது. மனிதன் பட்டினியால் சாவதற்கு அவனது கருமங்கள் காரணம் என்று கரும நியதிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதாக இருந்தால் இந்த உலகத்தில் எதற்காகவும் முயற்சி செய்வதோ, போராடுவதோ பயனற்ற வேலை. பசுக்களைக் காப்பாற்றும் உங்கள் வேலையும் அப்படிப்பட்டதுதான்” என்றார் விவேகானந்தர்.

இதைக் கேட்ட பசு பாதுகாப்பு பிராச்சாரகர் கொஞ்சம் வெட்கம் அடைந்தவராகத் தடுமாறினார். பிறகு சமாளித்துக் கொண்டு “நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், பசு நமது தாய் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே” என்றார். சுவாமிஜி லேசாகச் சிரித்தபடி “ஆமாம். பசு நம் தாய்தான். எனக்குப் புரிகிறது. வேறு யாருதான் நம்மைப் போன்ற இவ்வளவு புத்திசாலிகளான பிள்ளைகளைப் பெற முடியும்” என்றார்.

(ஆதாரம்: ‘எனது சிந்தனைகள் - விவேகானந்தர்')

Wednesday, August 05, 2009

உலகலாவிய போட்டி! 1500 ரியால் பரிசு மூவருக்கு!

சுவனப்பாதை மாத இதழ் நடத்தும் உலகளாவிய கட்டுரைப் போட்டி

ஸனாயிய்யா – ஜித்தா, சவூதி அரேபியா

சவுதி ரியால் 1500க்கு, மதிப்புள்ள முதல் மூன்று பரிசுகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட ஆறுதல் பரிசுகள்.

விதிமுறைகள்:
1. கட்டுரைகள் 3 முதல் 6 பக்கத்திற்குள் மிகாமல் இருக்க வேண்டும், தட்டச்சு செய்திருந்தால் 1200-1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்
2. தட்டச்சு (Typing) செய்யப்பட்ட கட்டுரையின், எழுத்துருவும் (Font) ஈமெயில் மூலமாகவோ, நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
3. கட்டுரையை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்பிக்க விரும்புபவர்கள் மூடிய உறையிலிட்டு, முழுமையான முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணுடன் அனுப்ப வேண்டும்
4. பிற கட்டுரைகளிலிருந்து தொகுக்காமல், சொந்தமான ஆக்கங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும், புரட்சிகரமான கருத்துகள், புதுமை ஆக்கங்கள், ஆகியவை மார்க்கத்திற்கு முரண் இல்லாமல், ஆதாரங்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும, கட்டுரைகள் திருப்பி கொடுக்கப்பட மாட்டாது.
5. கட்டுரைகளை சமர்ப்பிக்கவேண்டிய முகவரி/இடங்கள்:
a. இஸ்லாமிய அழைப்பகம் – ஸனாய்யியா. (Jeddah, K.S.A)
b. துறைமுக நூலகம் – துறைமுகம் (Jeddah, K.S.A)
c. suvanam@gmail.com
d. P.O. Box No. 32628, Jeddah 21438, Saudi Arabia.
6. கட்டுரைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: பிறை 30 ஷஃபான் 1430 (ஆகஸ்ட் 21, 2009).
7. பரிசளிப்பு நாள் பின்பு அறிவிக்கப்படும்.
8. தமிழில் எழுத தெரிந்த அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்
9. சிறந்த கட்டுரைகள் சுவனப்பாதை மாத இதழில் வெளியிடப்படும். (மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு).
10. சுவனப்பாதை பத்திரிக்கை குழுவினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் இப்போட்டியில் கண்டிப்பாக கலந்துகொள்ள அனுமதி இல்லை
11. ஒருவர் பல தலைப்புகளில் கட்டுரை சமர்பிக்கலாம்
12. ஒரே தலைப்பில் பலர் கட்டுரை எழுதியிருந்தால் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற கட்டுரை மட்டுமே சுவனப்பாதையில் பிரசுரிக்கப்படும்.
13. ஒரே தலைப்பில் பலர் கட்டுரைகள் எழுதி முதல் மூன்று பரிசுக்களுக்கோ, அல்லது ஆறுதல் பரிசுக்களுக்கோ மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
14. பலர் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
15. ஆசிரியர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

தலைப்புகள்:
1. நபி(ஸல்) உலகத்திற்கோர் முன்மாதிரி
2. நீங்கள் ஒரு நல்ல மனைவியா?
3. தனிக்குடித்தனம் தரமானதா?
4. கருப்பை சுதந்திரம் பெண்ணுரிமையா?
5. இரண்டாம் திருமணத்தை பெண்கள் எதிர்ப்பதேன்?
6. விவாகரத்து ஒரு கழுகுப்பார்வை
7. தஃவாவில் பெண்களின் பங்கு
8. பெண்களும் உடற்பயிற்சியும்
9. அழகு சாதனப் பொருட்கள் – ஒர் ஆய்வு
10. கொடுப்பதும் எடுப்பதும் (மஹர், வரதட்சணை)
11. பத்திரிக்கை தர்மம்
12. பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப்பணி
13. இணையத்தில் இஸ்லாம் (சாதகங்களும் பாதகங்களும்)
14. கல்வியில் கணினியின் பங்கு
15. செல்ஃபோன் சிந்தனைகள்
16. மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் – ஓர் ஆய்வு
17. தவணைமுறை வியாபாரங்கள் – ஓர் ஆய்வு
18. முதல் உதவி மருத்துவங்கள்
19. மருத்துவமும் மனோதத்துவமும்
20. அறிவியல் சாதனைகளில் முஸ்லிம்கள்
21. இறைவனின் அருட்கொடை – ஃபைபாஸ் சர்ஜரி
22. டென்ஷன் ஆவது ஏன்?
23. அழைப்புப்பணியில் புதிய தொழில்நுட்பங்களின் பங்கு
24. முஸ்லிம்களின் நவீன எழுச்சியும் வீழ்ச்சியும்
25. தனிமனித வழிபாடு – ஓர் ஆய்வு
26. கற்காலத்தை நோக்கி மனிதன்
27. வெளிநாட்டு வாழ்க்கை (சாதகமும் பாதகமும்)
28. ஷியாயிசம் ஓர் ஆய்வு
29. ஈராக் – ஒரு வரலாற்றுப் பார்வை
30. சவுதி அரேபியா – ஒரு வரலாற்றுப் பார்வை
31. இலங்கையில் இஸ்லாம் (வரலாற்றுப் பார்வை)
32. கிரிக்கெட்
33. ஷேர் மார்க்கெட்
34. வியாபாரமும் வட்டியும்
35. அரசியலும் நபி(ஸல்) அவர்களும்
36. குடும்பவியலும் நபி(ஸல்) அவர்களும்
37. புறம், கோள் மற்றும் அவதூறு
38. தர்ஹா வழிபாடு மார்க்கமா? – ஓர் ஆய்வு
39. வீரமும் உமர் (ரலி) அவர்களும்
40. பொறுமையும் அபூபக்ர் (ரலி) அவர்களும்
41. உழைத்து உண்ணுதல்
42. அரசாங்க உயர் பதவிகளில் தமிழக முஸ்லிம்கள் இடம்பெறாதது ஏன்? தீர்வு என்ன?
43. அரசிடமிருந்து நமக்குள்ள முழு உரிமையையும் பெற்றுக்கொள்ள வலுவான ஒரே தலைமையின் கீழ் எல்லா முஸ்லிமகளும் அணிதிரள வழி என்ன?
44. பெரும்பாலான தமிழக முஸ்லிம்கள் வெளிநாட்டு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதேன்?
45. அரசியலில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுவதேன்?
46. நபி (ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை
47. குர்ஆன் இறக்கப்பட்டதின் நோக்கம்?
48. மாற்று மதத்தாருக்கு நாம் அளிக்கும் பங்களிப்பு
49. பொறுமையின் அவசியம்
50. நட்பு
--~--~---------~--~----~------------~-------~--~----~

Tuesday, August 04, 2009

பன்றிக் காய்ச்சலுக்கு தீர்வு என்ன?



உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஸ்வைன் ஃப்ளூ என்ற பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியாவும் தப்பவில்லை. புனேயைச் சேர்ந்த ரீடா ஷேக் என்ற 11 வயது சிறுமி தனது உயிரை இக் கொடிய நோயினால் இழந்துள்ளார். ஒரு உயிர் இழப்புக்கு பின்புதான் நமது நாடு தற்போது சுதாரித்துக் கொண்டிருக்கிறது. சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காததால்தான் இச்சிறுமியின் உயிர் பிரிந்தது என்று அரசு அறிக்கை கூறுகிறது. விமான நிலையத்தில் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் டாக்டருக்கும் இந்நோய் தொற்றியுள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் கிட்டதட்ட 500 பேருக்கு இந்நோயின் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகமானோர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த பயணிகளாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் தாக்கம் அதிகம் உள்ள நாடுகளுக்குப் பயணிக்க வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது போன்ற நிலைகளில் நாம் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துவதைப் பார்ப்போம்.

'ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு நீங்கள் போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது கொள்ளை நோய் பரவி விட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்க்காக அவ்வூரை விட்டு வெளியேறாதீர்கள்.' என்று முகமது நபி கூறினார்.

-முகமது நபி சொல்லக் கேட்டவர் நபித் தோழர் அப்துல்லாஹ் பின் ஆமிர்.
-ஆதார நூல் புகாரி, எண் 5973

இதிலிருந்து நாம் அறிவது ஒரு நாட்டில் தொற்று நோய் பரவி விட்டதாக கேள்விப் பட்டால் அந்நாட்டிற்க்குப் பயணிக்காமல் இருக்க வேண்டும். அடுத்து நாம் இருக்கும் ஊரில் தொற்று நோய் பரவி விட்டால் நோய்க்கு பயந்து வெருண்டோடக் கூடாது என்றும் விளங்குகிறோம். ஏனெனில் நம்மையறியாமல் நம்மை அந்த நோய் தாக்கியிருந்தால் அதை மற்றவருக்கு பரப்பும் காரணியாகவே நாம் ஆகி விடுகிறோம்.

முகமது நபி ஒரு மார்க்க அறிஞராக மட்டும் இல்லாமல் மக்கள் நலனிலும் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டுள்ளார் என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறோம். இதே முகமது நபியின் பெயரை பயன்படுத்தி தாலிபான்களும், பாகிஸ்தானிய தீவிரவாத குழுக்களும் நடத்தும் கூத்துக்களையும் இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கிறோம். இதற்க்கெல்லாம் காரணம் இந்த மடையர்கள்(பாகிஸ்தானிய தீவிரவாதிகள்) உண்மையான இஸ்லாத்தை சரிவர விளங்காததே!