Followers

Wednesday, February 15, 2017

திருக்குர்ஆனில் அறிவியல் கருத்துகள்- மகா வெடிப்பு

அறிவோம் இஸ்லாம்

பாத்திமா மைந்தன்

64. திருக்குர்ஆனில் அறிவியல் கருத்துகள்

திருக்குர்ஆன் இறைவனால் வழங்கப்பட்ட இறுதி வேதம்; அது அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம். ஆன்மிகப் பெட்டகமான திருக்குர்ஆன், இன்று அறிவியல் ஆய்வுக் களஞ்சியமாகத் திகழ்வது கண்டு அறிவுலகம் திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்ந்துள்ளது.

1,400 ஆண்டுகளுக்கு முன்னர் மனித அறிவுக்கு எட்டாத பல கருத்துகள் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன.

'பெரு வெடிப்பு கோட்பாடு' என்பது இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடு ஆகும்.

தொடக்க நிலையில் இந்த உலகம் ஒரு பெரும் பருப்பொருளாக இருந்தது. அது திடீரென்று வெடித்துச் சிதறியது. அவ்வாறு வெடித்துச் சிதறிய துண்டுகள் மணிக்கு 72 மில்லியன் கிலோ மீட்டர் வேகத்தில் பிரபஞ்ச வெளியில் விலகி ஓடின. அப்போது பிரபஞ்சம் முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

மகா வெடிப்புக்குப் பிறகே நட்சத்திரக் கூட்டங்கள் உருவாயின. மேலும் இவை சூரியனாகவும், பூமியாகவும், சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கோள்களாகவும் உருவாயின.

பிரபஞ்சம் தோன்றிய இந்த நிகழ்ச்சியை,
'கோளங்களும், பூமியும் (ஆரம்பத்தில்) ஒரே துண்டாக (ஒன்றாக)த்தான் இருந்தன. பிற்பாடு நாம் அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தோம்' (திருக்குர்ஆன்-21:30) என்று இறைவன் கூறுகின்றான்.

இன்றைய விஞ்ஞான உலகில் கூறப்படும் பெரு வெடிப்பு கோட்பாட்டை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் இந்த வசனத்தின் மூலம் எடுத்தியம்புகின்றது.

இந்தப் பேரண்டம் நட்சத்திரக் கூட்டங்கள் உருவாவதற்கு முன்பு புகை மண்டலமாக இருந்தது என்ற அறிவியல் உண்மை மகா வெடிப்பு கொள்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தையே,

'பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்' (திருக்குர்ஆன்-41:11) என்ற வசனம் பிரதிபலிக்கிறது.
விரிந்து கொண்டே செல்லும் பரந்த தன்மை கொண்டதாக இந்தப் பிரபஞ்சத்தை இறைவன் படைத்திருப்பதை, 'மேலும் நாம் வானத்தை (எவருடைய உதவியுமின்றி நம்) சக்தியைக் கொண்டு அமைத்தோம். நிச்சயமாக நாம் விரிவாற்றல் உடையவராவோம்' (திருக்குர்ஆன்-51:47) என்ற வசனம் உறுதிப்படுத்துகிறது.

நாம் வாழுகின்ற இந்தப் பிரபஞ்சம், விரிவடைந்து கொண்டிருக்கிறது என்ற பேருண்மையை வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள் வெளிப்படுத்தினார்.

இது குறித்து அமெரிக்காவின் மாபெரும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், 'நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகின்றது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பானது, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகவே திகழ்கிறது' என்று கூறியுள்ளார்.

பண்டைய காலத்தில் பூமி தட்டையானது என்ற நம்பிக்கை வெவ்வேறு நிலைகளில் நிலவியது. பின்னர் பல்வேறு காலகட்டங்களில் விஞ்ஞானிகள், இந்த பூமி உருண்டை வடிவிலானது என்ற உண்மையை உறுதிப்படுத்தினார்கள்.
இரவு-பகல் மாற்றம் குறித்து திருக்குர்ஆனில் ஏராளமான வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பூமி உருண்டை வடிவிலானது என்பதை உணர முடிகிறது.

'நீ தான் இரவைப் பகலில் புகுத்துகிறாய். நீ தான் பகலை இரவிலும் புகுத்துகிறாய்' (திருக்குர்ஆன்-3:27) என்றும்,
'நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்து கிறான். பகலை இரவில் புகுத்துகிறான்' (31:29) என்றும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.

'புகுத்துதல்' என்றால் ஒரு நிலை இருக்கும்போது, அது திடீரென்று மற்றொரு நிலைக்கு மாறி விடாமல், சிறிது சிறிதாக மாறி மற்றொரு நிலையை அடைவதே ஆகும்.

திடீரென்று இரவும், திடீரென்று பகலும் மாறி மாறி வந்து விடுவதில்லை. பூமியின் பாதிப்பகுதியில் சூரிய வெளிச்சம் விழுவதால் அது பகல் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு எதிர்ப்புறம் உள்ள பகுதி சூரிய வெளிச்சத்திற்கு அப்பாற்பட்டுள்ளதால் அது இரவு என்று அழைக்கப்படுகிறது.

சூரிய வெளிச்சம் படும் பகுதியில், ஒரு பகுதி இரவில் இருந்து விடுபட்டு பகலை நோக்கி வருகிறது. மற்றொரு பகுதி பகலில் இருந்து விடுபட்டு இரவை நோக்கி நகருகிறது. பூமி, உருண்டை வடிவில் இருப்பதால் சூரியனுடைய வெளிச்சம் ஒரே சீராக எல்லாப் பகுதிகளிலும் இருப்பதில்லை. உதிக்கும் பகுதியிலும், மறையும் பகுதியிலும் மிகக்குறைவான வெளிச்சமும், பூமத்திய ரேகை பகுதிகளில் அதிகமான வெளிச்சமும் காணப்படுகிறது. இதைப்போலவே இரவும் வருகிறது.

இப்படி இரவும் பகலும் பல நிலைகளைக் கடந்து மெல்ல மெல்ல புகுத்தப்படுவதால், திருக்குர்ஆனில் 'புகுத்துதல்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பூமியானது உருண்ட வடிவில் இருப்பதாலும், பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால் மட்டுமே இரவும் பகலும் மாறி வருவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு.

கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனம், பூமி உருண்டை வடிவானது என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டு கிறது:

'அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கின்றான். அவனே பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இன்னும் இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான்' (திருக்குர்ஆன்-39:5).

இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள 'சுருட்டுதல்' என்பதற்கு ஒன்றின் மீது ஒன்றைச் சுருட்டுதல் என்று கருதலாம். இது தலையில் சுற்றப்படும் தலைப்பாகைக்கு ஒப்பான செயலாகும்.

தலைப்பாகையும் ஒன்றின் மீது ஒன்றாகச் சுற்றப்படுகிறது. இது பகலின் மீது இரவும், இரவின் மீது பகலும் சுற்றப்படுகிறது என்பதைச் சுட்டுகிறது.

பூமி உருண்டையாக இருக்கும்போதுதான் இரவும் பகலும் சுற்றி வரும் செயல் நிகழ முடியும்.

Thursday, February 09, 2017

நடவுப் பாட்டு அழிந்த ஊரில் உஞ்சவிருத்திக்கு என்ன உற்சவம் ?





நடவுப் பாட்டு அழிந்த ஊரில் உஞ்சவிருத்திக்கு என்ன உற்சவம் ?


பஞ்சம் பொழைக்க

தவிக்கும் ஊரில்

பஞ்சரத்ன கீர்த்தனை

பட்டுப்போன

ஆற்றங்கரையில்

பட்டுப்புடவைகள் வாசனை.

ரசிக்க முடிந்தவர்

ரசிக்கலாம்

உழவர் நெஞ்சு வெடித்த

ஓசை மறந்து

உஞ்ச விருத்தி பஜனை !

காவிரியின் தாள கதி

காவியால் நிர்க்கதி

கர்நாடாகாவிடம் மல்லுக்கட்டி

கழனிகள் அதோ கதி !

இதற்கு இல்லை

உங்களிடம் ஒரு சுருதி

கூச்சமில்லாமல்

கொலைக்களத்தில்

களிப்புடன் கர்நாடக `சங்கதி’ !

வந்தவருக்கெல்லாம்

சோறு போட்ட

தஞ்சை பூமியே காலி

தியாகய்யரையும் ஊட்டி வளர்த்த

நெற்களஞ்சியம் மூளி !

நாற்றசையும் சுவரம் இன்றி

மருதப் பண் மரணம்

பார்த்துப் பதறாத

உங்கள் `அலங்காரம்’.

பசும் பால் காபிக்கு

கும்பகோணம்

பாடி மகிழ

ஆரோகணம், அவரோகணம்.

“கருணையிலாதது கண்ணா ?”

கேட்டார் வள்ளுவர்

கண்டும் சுரணையிலாதது

பண்ணா ?

கேட்கத் துடிப்பது உழவர்.

கார்ப்பரேட் ஆராதனை

விளைநிலம் விழுங்கி

கொள்ளையிடுது நாட்டை.

வாய்‍பேச்சுக்கும் வருத்தமில்லாமல்

உங்கள் நாவில் துள்ளுது ‘நாட்டை‘

மதகோசை முடங்கி

பயிரோசை ஒடுங்கி

உயிரோசை அடங்கும் புல்லினம்.

இதற்கொரு உணர்ச்சியில்லாமல்

இதயம் மரத்தது இசையா !

நீங்கள்

என்ன வகை உயிரினம் ?

கழுத்து மணி இல்லாமல்

கலை இழந்து

கால்நடைகள் குரலெடுக்க முடியாமல்

வாயில் நுரை தள்ளி.

கழுத்து ஆரம் ஆட்டி

காதணி குழையக் காட்டி

காய்ந்த ஊருக்கு நடுவே

களைகட்டும் உங்கள்

‘ஆரபி, வராளி‘

குரல், துத்தம், கைக்கிளை

உழை, இளி, விளரி, தாரம்

எனும் ஏழுவகைத் திருடி

தமிழ் தாள உறுப்புகள்

“அலகு ” லகுவாகி

“துரிதம்” த்ருதம் ஆகி

‘அரைத்துரிதம்’ அனுத்ருதம் ஆகி

களவாடி தமிழிசையை

கர்நாடக இசையாக்கி

தமிழ் நிலம் பாடாமல்

வக்ர ராகமும்,

தமிழில் பாடினால் தீட்டு எனும்

அக்ரகாரமும்

‘கெளளை‘ பாடும் சத்தத்தில்

தன்மானத்தில்

தவளை சாகுது மொத்தத்தில்.

வரப்பில்

வேலி முள்

எனத் தொட்டால்

வெளுத்து காய்ந்து கிடக்கும்

ஓணாண்.

வெங்காயச் சருகென

விலக்கினால்

வாசலில்

மக்கிக்கிடக்கும்

வண்ணத்துப் பூச்சி

தொட்டிலின் மேல்

ஒட்டடை

எனத் தட்டினால்

துருப்பிடித்து

வெகு நாளாய்

மறந்துபோன கருக்கரிவாள்

இறந்த விவசாயியின் முகத்தை

நிழற்படத்தில் வெறித்து,

வடியும் தாயின் கண்ணீரைப் பார்த்து

விளங்காமல் பயந்து

செதும்பும் குழந்தை.

ஏன் இந்தத் துயரம்

எது இதன் அடி நாதம் ?

ஊன் உருகும்

உங்கள் புல்லாங்குழலில்

இதற்கோர் இழை உண்டா…

‍பொங்கலுக்கு வழியின்றி

உழவன் வீட்டில் கருமாதி

உங்களுக்கு என்ன ?

உறுத்தாமல் அனுபவிக்க

‘காம்போதி‘

இந்தனைக்கும் நடுவே

இத்தரையில் அமர்ந்து

தொடை தட்டி, சுதி கூட்டி

பஞ்சமம், சட்சம்

உங்களால் முடியும்

ஆம்

உங்களால் முடியும்

பசையற்ற நிலத்தில்

இசைக் கூத்தடித்த

உங்களால் மட்டுமே முடியும் !

– துரை. சண்முகம்

குறிப்பு: ஒற்றை மேற்கோளில் வருபவைகள் ராகங்களின் பெயர்கள்.

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்- குர்ஆன் விளக்கங்கள் - 2

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்

அத்தியாயம் : 9

அத்தவ்பா - மன்னிப்பு

மொத்த வசனங்கள் : 129

117, 118 ஆகிய இரு வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், ஹிஜ்ரத் செய்து வந்தவர்களையும், அடைக்கலம் தந்து உதவியவர்களையும், குறிப்பாக தபூக் யுத்தத்தில் பங்கெடுக்காத மூன்று நபித்தோழர்களையும் அல்லாஹ் மன்னித்ததாகக் கூறுகிறான். ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே பாவமன்னிப்பு வழங்கியது பற்றி இந்த அத்தியாயம் பேசுவதால் இந்த அத்தியாயத்திற்கு 'அத்தவ்பா' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

71. நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஜகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

72. நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.

73. நபியே! (ஏகஇறைவனை) மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக!53அவர்களிடம் கடினமாக நடப்பீராக! அவர்களின் புகலிடம் நரகம். அது மிகக் கெட்ட தங்குமிடம்.

74. இறை மறுப்பிற்குரிய சொல்லை அவர்கள் கூறியிருந்தும் (அவ்வாறு) கூறவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். இஸ்லாத்தை ஏற்ற பின் மறுத்தனர். அடைய முடியாத திட்டத்தையும் தீட்டினார்கள். அவர்களை அல்லாஹ்வும், தூதரும் அவனது அருள் மூலம் செல்வந்தர்களாக ஆக்கியதற்காக140 தவிர (வேறு எதற்காகவும்) அவர்கள் குறை சொல்வதில்லை. அவர்கள் திருந்திக் கொண்டால் அது அவர்களுக்கு நன்மையாக அமையும். அவர்கள் புறக்கணித்தால் அல்லாஹ் அவர்களை இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்துவான். பூமியில் அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை.

75. "அல்லாஹ் தனது அருளை எங்களுக்கு வழங்கினால் தர்மம் செய்வோம்; நல்லோர்களாக ஆவோம்'' என்று அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுத்தோரும் அவர்களில் உள்ளனர்.

76. அல்லாஹ் தனது அருளை அவர்களுக்கு வழங்கியபோது அதில் கஞ்சத்தனம் செய்தனர். அலட்சியம் செய்து புறக்கணித்தனர்.
77. அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை மீறியதாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அவனை அவர்கள் சந்திக்கும்488 நாள்1 வரை அவர்களின் உள்ளங்களில் நயவஞ்சகத்தை அவன் தொடரச் செய்தான்.

78. அவர்களின் இரகசியத்தையும், பரம இரகசியத்தையும் அல்லாஹ் அறிவான் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா? அல்லாஹ் மறைவானவற்றையும் நன்கு அறிபவன்.

79. தாராளமாக (நல்வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான்.6 அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

80. (முஹம்மதே!) அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

தமிழாக்கம் : பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.

Wednesday, February 01, 2017

திருக் குர்ஆன் - விளக்கங்கள் -1

அத்தியாயம் : 9

அத்தவ்பா - மன்னிப்பு

மொத்த வசனங்கள் : 129

117, 118 ஆகிய இரு வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், ஹிஜ்ரத் செய்து வந்தவர்களையும், அடைக்கலம் தந்து உதவியவர்களையும், குறிப்பாக தபூக் யுத்தத்தில் பங்கெடுக்காத மூன்று நபித்தோழர்களையும் அல்லாஹ் மன்னித்ததாகக் கூறுகிறான். ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே பாவமன்னிப்பு வழங்கியது பற்றி இந்த அத்தியாயம் பேசுவதால் இந்த அத்தியாயத்திற்கு 'அத்தவ்பா' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

90. கிராமவாசிகளில் (போருக்குச் செல்லாது இருக்க) தங்களுக்கு அனுமதி வேண்டி காரணம் கூறுவோர் உம்மிடம் வந்தனர். அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் பொய் கூறியோர் போருக்குச் செல்லாது தங்கிக் கொண்டனர். அவர்களில் (ஏகஇறைவனை) மறுப்போருக்கு துன்புறுத்தும் வேதனை ஏற்படும்.

91. பலவீனர்கள் மீதும், நோயாளிகள் மீதும், (நல்வழியில்) செலவிடுவதற்கு எதுவும் இல்லாதோர் மீதும் அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நலம் நாடினால் எந்தக் குற்றமும் இல்லை. நன்மை செய்வோருக்கு எதிராக (தண்டிக்க) எந்த வழியும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

92. (முஹம்மதே!) வாகனம் கேட்டு உம்மிடம் வந்தோரிடம் "உங்களை ஏற்றி அனுப்புவதற்குரியது (வாகனம்) என்னிடம் இல்லை'' என்று நீர் கூறியபோது, (நல்வழியில்) செலவிடுவதற்கு ஏதுமில்லை என்ற கவலையால் கண்கள் கண்ணீர் வடிக்கும் நிலையில் திரும்பிச் சென்றோர் மீதும் குற்றம் இல்லை.

93. வசதி படைத்திருந்தும், உம்மிடம் அனுமதி கேட்டவர்கள் மீதே (தண்டிக்க) வழி உண்டு. அவர்கள் வீட்டோடு இருக்கும் பெண்களைப் போல் இருப்பதைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். எனவே அவர்கள் அறிய மாட்டார்கள்.

94. (போரை முடித்து) அவர்களிடம் நீங்கள் திரும்பும்போது அவர்கள் உங்களிடம் சமாளிக்கின்றனர். "சமாளிக்காதீர்கள்! நாங்கள் உங்களை நம்பப்போவதில்லை. உங்களைப் பற்றிய செய்திகளை அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! உங்கள் நடவடிக்கையை அல்லாஹ்வும், அவனது தூதரும் அறிவார்கள். பின்னர் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள்! நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

95. அவர்களிடம் நீங்கள் திரும்பும்போது அவர்களை நீங்கள் விட்டு விடுவதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்களை விட்டு விடுங்கள்! அவர்கள் அசுத்தமாவர். அவர்களின் தங்குமிடம் நரகம். இது அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கான தண்டனை.265

96. நீங்கள் அவர்கள் மீது திருப்தியடைய வேண்டுமென்பதற்காக உங்களிடம் சத்தியம் செய்கின்றனர். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் குற்றம் புரியும் கூட்டத்தை அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான்.

97. கிராமவாசிகள் (ஏகஇறைவனை) மறுப்பதிலும், நயவஞ்சகத்திலும் கடுமையானவர்கள். அல்லாஹ் தனது தூதர் மீது அருளியதன் வரம்புகளை அறியாமல் இருப்பதே அவர்களுக்கு மிக ஏற்றதாகும். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

98. தாம் செலவிடுவதை நட்டமாகக் கருதுவோரும் அக்கிராமவாசிகளில் உள்ளனர். உங்களுக்குச் சோதனைகள் ஏற்படுவதை எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கே கெட்ட வேதனை உள்ளது. அல்லாஹ் செவியுறுபவன்; 488 அறிந்தவன்.

99. கிராமவாசிகளில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்புவோரும் உள்ளனர். தாம் செலவிடுவதை அல்லாஹ்விடம் நெருங்குவதற்குரிய காரணமாகவும், இத்தூதரின் (முஹம்மதின்) பிரார்த்தனைக்குரியதாகவும் கருதுகின்றனர். கவனத்தில் கொள்க! அது அவர்களுக்கு (இறை) நெருக்கத்தைப் பெற்றுத் தரும். அவர்களை அல்லாஹ் தனது அருளில் நுழையச் செய்வான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

100. ஹிஜ்ரத்460 செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும்501 அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

ஆக்கம்: பி. ஜெய்னுல்லாபுதீன்