Thursday, October 13, 2011

நெகிழ வைத்த ஒரு நிகழ்வு!

இரண்டு மாதத்துக்கு முன்பு ஒரு அவசர வேலை காரணாக தமிழகம் செல்ல நேரிட்டது. நோன்பின் முதல் நாள் எனது பயணம். எப்பொழுதும் சவுதியா விமானத்தில்தான் செல்வேன். இந்த முறை நமது நாட்டு விமானமான ஏர்இந்தியாவில் பயணிப்போமே என்று எண்ணினேன். பெட்ரோல் பணத்தைக் கூட திரும்ப செலுத்தாத அளவுக்கு நட்டத்தில் ஓடிக் கொண்டிருப்பதால் அந்த நிறுவனத்துக்கு நமது பயணமும் ஒரு ஊன்றுகோலாக இருக்குமே என்ற எண்ணத்தில் புக் செய்து கொண்டேன். கூடிய வரை படிக்கும் நாமும் ஏர் இந்தியாவிலேயே பயணம் செய்ய முயற்ச்சிப்போமாக!

விமானம் ரியாத்திலிருந்து 6:45 புறப்படுவதாக இருந்தது. நான் நோன்பாகையால் ஒரு கேக், ஒரு பாட்டில் தண்ணீர், ஒரு ஜீஸ் சகிதமாக முன்னெச்சரிக்கையாக வாங்கிக் கொண்டு விமானத்தில் அமர்ந்தேன். சவுதியா விமானமாக இருந்தால் கண்டிப்பாக நோன்பு திறக்க ஏற்பாடு செய்வார்கள். ஏர் இந்தியாவில் தரவில்லை என்றால் எப்படி நோன்பு திறப்பது என்ற முன்னெச்சரிக்கையே இவற்றை வாங்கச் சொன்னது. எனக்கு நடுவில் இருக்கை கிடைத்தது. வலது புறமும் இடது புறமும் அமர்ந்தவர்களிடம் ஒரு 'ஹலோ' சொல்லி விட்டு இருக்கையில் அமர்ந்தேன்.

சற்றும் எதிர்பாராத விதமாக ஏர் இந்தியா நிர்வாகம் பயணிகள் அனைவருக்குமே இரண்டு பேரித்தம் பழங்கள், ஒரு ஜீஸ், ஒரு கேக், ஒரு தண்ணீர் பாட்டில் என்று விநியோகிக்க ஆரம்பித்தனர். எனக்கு வலது புறம் அமர்ந்தவர் கொடுத்த மாத்திரத்திலேயே சாப்பிட ஆரம்பித்து விட்டார். நோன்பு திறக்க இன்னும் பத்து நிமிடம் இருக்க சாப்பிடுகிறாரே என்று நினைத்துக் கொண்டேன். ஒருக்கால் இந்து நண்பராகவோ அல்லது கிறித்தவ நண்பராகவோ இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். எனது இடது புறமாக அமர்ந்திருந்தவர் 'நோன்பு திறக்க இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது?' என்று கேட்டார். நானும் 'இன்னும் 10 நிமிடம் பாக்கி இருக்கிறது' என்று பதிலளித்தேன்.

நேரமும் வந்தது. விமானத்தில் அனைவரும் நோன்பு திறந்தோம். எனது இடது புறம் அமர்ந்திருந்தவரும் நோன்பு திறந்தார். அதன்பிறகு இருக்கையில் அமர்ந்தவாரே மாலை நேர (மஹ்ரிப்) தொழுகையை தொழுது கொண்டேன். நான் செய்யும் ஒவ்வொரு அசைவையும் இடது புற நண்பர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

நான் தொழுகையை முடித்தவுடன் எனது செயல்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த நண்பரிடம் 'நீங்களும் தொழுகலாமே? அமர்ந்து கொண்டு கூட தொழுகலாம்' என்று கூறினேன். அதற்கு அவர் 'சாரி. நான் முஸ்லிம் அல்ல. சௌராஷட்ரா வகுப்பை சார்ந்தவன். சவுதி வந்த நாள் முதல் இந்த நாட்டின் சுற்று சூழல் என்னையும் நோன்பு வைக்க ஆர்வத்தை ஏற்படுத்தியது. இப்படி இறைவனுக்காக நோன்பு வைப்பதில் மிகுந்த மன நிறைவை அடைகிறேன். எனக்கு தொழுக தெரியாது. எனவேதான் நீங்கள் தொழுததை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன்.' என்று சொன்னவுடன் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தேன்.

எனது வலது புறம் அமர்ந்திருந்தவர் தோற்றத்தில் முஸ்லிமைப் போல் இருந்ததால் 'உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டேன். 'அபுபக்கர்' என்று கூறினார். சிறிது நேரத்தில் விமானப் பணிப் பெண்ணிடம் 'மது கிடைக்குமா?' என்று கேட்டார். பணிப்பெண்ணும் தருகிறேன் என்று சென்று விட்டார். நான் அபுபக்கரிடம் 'முஸ்லிம் தாய் தந்தையருக்கு பிறந்து விட்டு நோன்பு நாளில் நோன்பும் வைக்காமல் மது அருந்துகிறாயே தம்பி! இறைவனின் பயம் உனக்கு கிடையாதா?' என்று கேட்டேன். அதற்கு அவர் 'இரண்டு வருடமாக மது அருந்தாமல் கட்டுப்பாட்டோடு இருந்தேன். விமானத்தில் மது அருந்தலாம் என்று தான் ஏர் இந்தியாவிலேயே பயணிக்கிறேன்' என்றார் கூலாக.

உடன் எனக்கு அருகில் இருக்கும் இந்து நண்பரைக் காட்டி 'இவர் இந்துவாக இருந்தாலும் இறைவன் மேல் உள்ள பிரியத்தால் நோன்பு வைக்கிறார். தொழுவதற்கும் ஆர்வத்தோடு இருக்கிறார். முஸ்லிம் தாய் தந்தையருக்கு பிறந்த நீங்கள் இறப்புக்கு பின்னால் இறைவன் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டவுடன் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சிறிது நேரத்தில் எனக்கு அருகில் இருக்கும் இருக்கையை காலி செய்து விட்டு கடைசியில் சென்று உட்கார்ந்து கொண்டார்.

இடது புறம் அமர்ந்திருந்த இந்து நண்பர் இஸ்லாம் சம்பந்தமாக பல கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தார். எனது வலைதள முகவரியையும், டார்வின் சம்பந்தமான கேள்விகளுக்கு நண்பர் ஆசிக்கின் வலைத்தளத்தையும் அடுத்து ஆன்லைன்பிஜே வலைத்தளத்தையும் மேலதிக விளக்கங்களுக்காக கொடுத்தேன். அவரும் ஆர்வமுடன் தனது லேப்டாப்பில் குறித்துக் கொண்டார்.


முஸ்லிம் தாய் தந்தையருக்கு பிறந்தும் இஸ்லாத்தை விளங்க அபுபக்கரால் முடியவில்லை. ஆனால் வேலை நிமித்தமாக சவுதி வந்தவருக்கு இந்து மதத்தில் பிறந்தும் இஸ்லாத்தின் மேல் ஒரு அதீத பற்றை கொடுத்த இறைவனின் கிருபையை என்னவென்பது?

'தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர யாரும் சிந்திப்பதில்லை'
-குர்ஆன் 2:269

28 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    அல்ஹம்துலில்லாஹ்...உணர்ச்சிபூர்வமான பகிர்வு.

    என் முஸ்லிமல்லாத நண்பர்களும், அவர்களது பெற்றோர்களும் ஆர்வமுடன் இஸ்லாத்தை பற்றி கேட்பார்கள். தெரிந்த வரை சொல்லுவேன்.

    இறைவன் யாரை நாடுகின்றானோ, அவர்களுக்கு நேர்வழி காட்டுகின்றான்.

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  2. வஅலைக்கும் சலாம்! சகோ. ஆசிக்!

    நேற்றுதான் சென்னையிலிருந்து கிளம்பி ரியாத் வந்து சேர்ந்தேன். உங்களை நேரில் சந்திக்கலாம் என்று முயற்ச்சித்தேன். குறைந்த லீவே இருந்ததால் உங்களை சந்திக்க இயலவில்லை. இறைவன் நாடினால் அடுத்த முறை சந்திப்போம்.

    வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  3. ஸலாம் நண்பரே
    நலமா!.ரொம்ப நாளுக்கு பிறகு பதிவு பார்ப்பதில் மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.
    2ஆம் ஓட்டு த.ம‌
    நன்றி

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சௌராஷட்ரா வகுப்பை சார்ந்த அந்த சகோதரர் முழுமையான மார்க்கம் கிடைக்கவும், அந்த இஸ்லாமிய சகோதரருக்கு நேர்வழி கிடைக்கவும் வல்ல இறைவன் அருள்புரிவானாக! நல்லதொரு பகிர்வு சகோ.

    ReplyDelete
  5. நாம் பிறந்த பிரிவுக்கு உண்மையாக நடந்துகொள்ளனும்.

    ReplyDelete
  6. //ஸலாம் நண்பரே
    நலமா!.ரொம்ப நாளுக்கு பிறகு பதிவு பார்ப்பதில் மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.//

    உங்களுக்கும் அமைதி உண்டாகட்டும் சார்வாகன்!

    வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி!

    தாயகம் சென்றிருந்ததால் சிறிய இடைவெளி. இனி அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வோம்.

    ReplyDelete
  7. //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சௌராஷட்ரா வகுப்பை சார்ந்த அந்த சகோதரர் முழுமையான மார்க்கம் கிடைக்கவும், அந்த இஸ்லாமிய சகோதரருக்கு நேர்வழி கிடைக்கவும் வல்ல இறைவன் அருள்புரிவானாக! நல்லதொரு பகிர்வு சகோ.//

    வஅலைக்கும் சலாம் சகோ. அஸ்மா!

    உங்களோடு சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன் அந்த சௌராஸ்ட்ரா சாப்ஃட்வேர் இன்ஜினியருக்காக! அவர் மும்பையை இருப்பிடமாகக் கொண்டவர்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  8. வாங்க லட்சுமியம்மா!

    //நாம் பிறந்த பிரிவுக்கு உண்மையாக நடந்துகொள்ளனும்.//

    நான் இஸ்லாமியனாக பிறந்திருப்பதனால் முஸ்லிம்கள் செய்யும் அனைத்து சடங்குகளையும் ஒத்துக் கொள்ளமாட்டேன். உதாரணத்திற்கு தர்கா வணக்கத்தை எடுத்துக் கொள்ளலாம். முஸ்லிம் அல்லாதவர்ளும் முஸ்லிம்களில் பெரும்பான்மையினரும் தர்ஹா வணக்கம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்றே நம்பி வருகின்றனர். குர்ஆனையும் முகமது நபியின் வாழ்வியலையும் சரியாக படிக்காததனால் வந்த குறைபாடு இது. இஸ்லாத்தின் உண்மையை விளங்கிய எங்களைப் போன்றவர்கள் இது போன்ற தவறுகளை சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம்.

    இதே போல் ஒவ்வொரு மதத்திலும் அந்த மதம் சொல்லாத சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மரியாதை என்ற பெயரில் செய்து வருவதால்தான் அந்த மதத்தின் மார்க்கத்தின் உண்மை முகம் அழிந்து அதன் பொழிவை இழந்து விடுகிறது. ஏசு நாதர் விஷயத்தில் இதை நாம் கண் கூடாக பார்க்கிறோம்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    அல்ஹம்துலில்லாஹ்...

    அருமையான பகிர்வு .

    தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.

    //நேற்றுதான் சென்னையிலிருந்து//

    சகோ உங்களுக்கு சென்னையா ?

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    Welcome back to KSA..!

    நீண்ட நாள் கழித்து பதிவு கண்டு மகிழ்ச்சி. அழகிய முறையில் பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளீர்கள். நன்றி சகோ.சுவனப்பிரியன்.

    //கூடிய வரை படிக்கும் நாமும் ஏர் இந்தியாவிலேயே பயணம் செய்ய முயற்ச்சிப்போமாக!//---ஸாரி... சகோ. இது மட்டும் என்னால் மட்டும் முடியவே முடியாது.

    கட்டுப்பாடற்ற ஊழல் நிர்வாகம், விமானங்கள் அடிக்கடி நேரம் தவறுதல், விமானிகளின் திடீர் வேலைநிறுத்தம், "பல" குடிகாரப்பயணிகளின் குமட்டல் மதுவகை துர்நாற்றம், சுத்தமின்மை... இவற்றையெல்லாம் ஏர் இந்தியா நீக்கினால், டிக்கட் கூட இருந்தாலும் பரவாயில்லை... அப்புறம் இது பற்றி யோசிக்கலாம்.

    ReplyDelete
  11. அந்த செளராஷ்டிரா சகோ போல எனக்குத்தெரிந்து பலர் ஆர்வமுடன் இருக்கின்றனர். பெரும்பாலும் வாழ்க்கையில் நேர்மையானவர்கள்.

    //கடைசியில் சென்று உட்கார்ந்து கொண்டார்.//---ஹா..ஹா..ஹா.. ஏர் இந்தியாவில் அவர் வந்த நோக்கத்தையே கெடுக்கும் உங்களோடு சேர்ந்தா... தன் மனஇச்சை அவ்ளோதான்... என்று பயந்து விட்டார் போல..!

    ஆனாலும், நேர்மையானவர்களுக்கு ஒரு கண்ணியம் தந்து, தான் செய்வது தவறு என்றும் உணர்ந்தும் இருக்கிறாரே.. அதுவரை அப்பாடா..! நிம்மதி.

    இறப்புக்கு பின்னர் இறைவன் கேட்கப்போகும் கேள்விகளுக்கு எங்கே சென்று தள்ளிப்போய் அமர்ந்து கொள்வாரோ..? சிந்தித்தால் நேர்வழியில் திரும்புவது இவருக்கு மிகவும் எளிதானதுதான்... இறைவன் நாடினால்.

    உங்கள் முயற்சி அவர்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இறைவன் இந்த இருவருக்கும் அருள் புரிந்து நேர்வழி காட்ட பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    நீண்ட நாட்களுக்கு பிறகு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி!
    இரண்டு வருடம் குடிக்காமல் இருந்ததால் அவர் எதையேனும் இழந்துவிட்டாரா?
    இவருக்குத்தான் முதலில் மார்க்கத்தை விளங்கவைக்கவேண்டும்.
    ஏனென்றால் நமது நன்நடத்தைகளால் மாற்று மதத்தவர்கள் செளராஸ்ட்ர நண்பரை போல் ஈர்க்கப்பட்டுவிடுகிறார்கள்.
    நெகிழவும் நெருடவும் வைத்த பதிவு.

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    நீண்ட நாட்களுக்கு பிறகு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி!
    இரண்டு வருடம் குடிக்காமல் இருந்ததால் அவர் எதையேனும் இழந்துவிட்டாரா?
    இவருக்குத்தான் முதலில் மார்க்கத்தை விளங்கவைக்கவேண்டும்.
    ஏனென்றால் நமது நன்நடத்தைகளால் மாற்று மதத்தவர்கள் செளராஸ்ட்ர நண்பரை போல் ஈர்க்கப்பட்டுவிடுகிறார்கள்.
    நெகிழவும் நெருடவும் வைத்த பதிவு.

    ReplyDelete
  14. சலாம் அலைக்கும் !
    எல்லாம் இறைவன் செயல் தானே !
    உங்களை மதப் பற்றுள்ளாக்கியதும், அவரை மது பற்றுள்ளவராகவும் இறைவன் தானே செய்துள்ளான். ஏன், அவரும் நல்லவராகவும், பல நல்லவை செய்பவராகவும் கூட இருக்கலாமே !மதம் தனிப்பட்டது,ஒழுக்கம் பொது. ஒழுக்கம் இல்லையென்றால் குறை சொல்லலாம். மதமில்லையென்று குறை சொல்வது சரியா?

    ReplyDelete
  15. இஸ்லாம் உண்மையான மூஸ்லீம்களால் மற்றவர்களை ஈர்க்கிறது.

    ஆனால் சில முஸ்லீம் பெயர் தாங்கிகளின் நடப்பினால் மற்றவர்களை இஸ்லாத்தை பற்றி தப்பபிப்பிராயம் கொள்ள செய்கிறது.
    **************

    சுட்டியை சொடுக்கி கேளுங்கள்.

    >>> மதமாற்றம் என்ற சொல்லே இஸ்லாத்தில் இல்லை. <<<<<

    ***************

    திருக்குர்ஆனை முதலில் இருந்து
    கடைசி வரை தேடிப் பார்த்தாலும்,
    மற்றவர் பேரில்
    வெறுப்பை வளர்க்கும்
    வாசகங்கள் எதுவும் இல்லை.

    பிரச்னை குர்ஆனில் இல்லை.
    நம்மிடம்தான்.

    திறந்த மனதுடன் அதைப்
    படித்துப் பார்க்க விரும்பிய,
    என் கண்களைத் திறந்த
    என் தந்தையார் தீவிர வைணவர்.”
    - சுஜாதா

    (தினமணி ரம்ஜான் மலர் – 2003)

    ******************
    வழக்கமான அர்த்தப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிமல்ல.
    ஆனால் இறைவனிடம் சரணாகதி அடைந்தவனே முஸ்லிம் என்ற கருத்துப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிம்தான்.

    குர்ஆனில் பல தெய்வீக உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். எங்களைப் போன்ற மேற்கத்தியர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

    W.மாண்ட்கோமரி, இஸ்லாமும் கிறிஸ்தவமும் இன்று (Islam and Christianity Today), லண்டன், 1983, பக்கம் ix
    *********************************
    அடிப்படைவாத முஸ்லிம்கள் வாளில் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது,

    வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது.

    டெ லேஸி ஓ லியரி, Islam at the Croosroads,லண்டன், 1923, பக்கம் 08.
    *****
    இன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன்.

    அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும்.

    ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, த ஜெனியுன் இஸ்லாம்.The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936).
    ***********

    ReplyDelete
  16. வஅலைக்கும் சலாம் சகோ. ஆயிஷர் அபுல்!

    //சகோ உங்களுக்கு சென்னையா ?//

    இல்லை! நான் தஞ்சை தரணியைச் சேர்ந்தவன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  17. வஅலைக்கும் சலாம் சகோ. ஆசிக்!

    //கட்டுப்பாடற்ற ஊழல் நிர்வாகம், விமானங்கள் அடிக்கடி நேரம் தவறுதல், விமானிகளின் திடீர் வேலைநிறுத்தம், "பல" குடிகாரப்பயணிகளின் குமட்டல் மதுவகை துர்நாற்றம், சுத்தமின்மை... இவற்றையெல்லாம் ஏர் இந்தியா நீக்கினால், டிக்கட் கூட இருந்தாலும் பரவாயில்லை... அப்புறம் இது பற்றி யோசிக்கலாம்.//

    ஆம்! உங்கள் கோரிக்கை நியாயமானதே! குறிப்பாக மதுவை தடை செய்தாலே கூட குடும்பத்தோடு பயணிப்பவர்கள் அதிகம் ஏர் இந்தியாவை நாடக் கூடும். ஏர் இந்தியா நிர்வாகம் கவனிக்குமா?

    நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பவும் இணையம் மூலம் பலரோடு தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  18. வஅலைக்கும் சலாம் சகோ. ஜபருல்லாஹ்!

    //இவருக்குத்தான் முதலில் மார்க்கத்தை விளங்கவைக்கவேண்டும்.//

    உண்மைதான். முஸ்லிம்கள் குர்ஆன் ஹதீஸின்படி நடக்க ஆரம்பித்து விட்டாலே வேறு பிரசாரமே தேவையில்லை. குர்ஆனின் வழிகாட்டுதலை தூரமாக்கியதால்தான் இன்று உலகம் முழுக்க முஸ்லிம்கள் அல்லல்படுகிறார்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  19. வஅலைக்கும் சலாம் தமிழன்!

    //எல்லாம் இறைவன் செயல் தானே !//

    எல்லாம் இறைவன் செயல்தான் என்று நாம் வீட்டில் முடங்கி உட்கார்ந்து விடுவதில்லையே! நமது தேவைக்காக வெளியில் சென்று பொருள் ஈட்டுகின்றோமல்லவா! எனவே தூண்டினால்தான் இறைவன் துணை செய்வான்.

    ''உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்து போகாமல் இருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தியுள்ளான். கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் இறைவன் நேசிக்க மாட்டான்'
    -குர்ஆன் 57:23

    எனவே விதி என்ற ஒன்று மனித குலத்தின் நன்மைக்காகவே இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. நல்லதையே நினைப்போம். அதன் மூலம் சுவனத்தையும் அடைவோம்.

    //மதம் தனிப்பட்டது,ஒழுக்கம் பொது. ஒழுக்கம் இல்லையென்றால் குறை சொல்லலாம். மதமில்லையென்று குறை சொல்வது சரியா?//

    அந்த ஒழுக்கத்தை தீர்மானிப்பது யார்? ஒருவர் வட்டி வாங்கி சாப்பிடலாம் என்கிறார். ஒழுக்கத்தோடு வாழும் ஒருவர் பெண்கள் விஷயத்தில் மட்டும் தவறிழைத்து விடுகிறார். எனவே ஒழுக்கம் என்பது இன்னதுதான் என்று தீர்மானிக்க உலக மக்கள் அனைவரும் ஒத்துக் கொள்ளக் கூடிய ஒரு மார்க்கம் தற்போது அவசியமாகிறது. அது எந்த மார்க்கம் என்று தீர்மானிப்பதில் தான் பிரச்னையே!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  20. வாஞ்சூர் அண்ணன்! நலமா?

    நான் தமிழகம் செல்வதற்கு முன்பே எனது மகனிடம் எப்பொழுது அப்பா வருகிறார் என்று இரண்டு முறை கேட்ட சுறுசுறுப்பு. நான் தமிழகம் வந்தவுடன் மூன்று முறை என்னோடு தொடர்பு கொண்டு ஒவ்வொரு முறையும் அலுக்காமல் சிங்கப்பூரிலிருந்து அரை மணி நேரம் பேசிய அதே சுறுசுறுப்பை அதுவும் இந்த வயதில் என்பதை நினைத்து ஆச்சரியப் படுகிறேன். இறைவன் உங்களுக்கு மேலும் மேலும் சகல சவுகரியங்களையும் தந்து உடல் நலத்தையும் கொடுத்து அழைப்புப் பணியை தொய்வின்றி செய்து வர அந்த ஏக இறைவனை இறைஞசுகிறேன்.

    //ஆனால் சில முஸ்லீம் பெயர் தாங்கிகளின் நடப்பினால் மற்றவர்களை இஸ்லாத்தை பற்றி தப்பபிப்பிராயம் கொள்ள செய்கிறது.//

    இதுதான் அழைப்புப் பணிக்கு உள்ள பெரும் இடைஞ்சலே! மாற்று மதத்தவர் பெரும்பாலோர் குர்ஆனையோ ஹதீஸையோ புரட்டிப் பார்ப்பதில்லை. தங்களோடு அக்கம் பக்கம் வீடுகளில் வாழ்ந்து வரும் பரம்பரை முஸ்லிம்களின் அன்றாட நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கின்றனர். தவறு செய்வதில் இவர்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நினைக்கும் போது பத்தோடு பதினைந்தாக இஸ்லாமிய மார்க்கத்தையும் நினைத்து விடுகிறார்கள். எனவே அழைப்புப் பணியை முதலில் நம்மவர்களிடமிருந்து துவக்கக் கூடிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும்.

    மாஷா அல்லாஹ்... மாற்று மதத்தவருக்கு இஸ்லாத்தைப் பற்றிய விளக்கம் கொடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளதே... இறைவன் நன்மைகள் பல உங்களுக்கு நாடுவானாக.

    பல மாற்றுமதத்தவர் பலர் குர் ஆனை ஆர்வத்துடன் வாசிக்கிறார்கள்.... ஆனால் இஸ்லாத்திற்கு வருவதில்லை.... அவர்களுக்கு புரிவதில்லையா.. அல்லது மாறுவதற்கு தயங்குகிறார்களா அல்லது அதையும் யாரோ எழுத்தாளன் எழுதிய காவியப் படைப்பு என்று நினைத்து விடுகிறார்களா என்று பல முறை நினைத்திருக்கிறேன்... ஹ்ம்.. அவர்கள் முன்னிருக்கும் திரையின் கயிறு இறைவனின் பிடியில் அல்லவா இருக்கிறது?!

    //அழைப்புப் பணியை முதலில் நம்மவர்களிடமிருந்து துவக்கக் கூடிய கட்டாயத்தில் இருக்கிறோம்.// நினைக்கையில் அதிக வேதனை தருகிறது.

    விமானப் பயணத்தில் நீங்கள் சந்தித்த இருவருமே இஸ்லாத்தில் முழுமையாக இணைய இறைவன் துணைபுரிவானாக!

    ReplyDelete
  22. உண்மையிலேயே ஆர்வத்தோடே நெகிழ்ந்து படித்து விட்டுப் போகிறேன்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

    ReplyDelete
  23. வஅலைக்கும் சலாம்! சகோ என்றென்றும் 16!

    //விமானப் பயணத்தில் நீங்கள் சந்தித்த இருவருமே இஸ்லாத்தில் முழுமையாக இணைய இறைவன் துணைபுரிவானாக!//

    உங்களோடு சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  24. சகோ ம.தி.சுதா!

    //உண்மையிலேயே ஆர்வத்தோடே நெகிழ்ந்து படித்து விட்டுப் போகிறேன்...//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  25. Anonymous2:26 PM

    உங்களை அதிக நாட்களாக காணவில்லையே என்று நானும் நினைத்தேன். திரும்ப காண்பதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  26. அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு பாய்,

    உங்களின் வருகையும், மீண்டும் பதிவுகளை காண்பதும் அளவிலா மகிழ்ச்சியை தருகிறது. அல்ஹம்துலில்லாஹ். தங்களுடன் பயணித்த இரு சகோதரகளுக்குமே இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக. அவர்களின் பாவங்களை மன்னித்து, மறைத்து, நேர்வழியிலுள்ளோராக்குவானாக. ஆமீன். இறைவன் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

    வஸ் ஸலாம் பாய்.

    ReplyDelete
  27. //அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு பாய்,//

    வஅலைக்கும் சலாம் சகோதரி அன்னு!

    //தங்களுடன் பயணித்த இரு சகோதரகளுக்குமே இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக. அவர்களின் பாவங்களை மன்னித்து, மறைத்து, நேர்வழியிலுள்ளோராக்குவானாக. ஆமீன். இறைவன் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.//

    ஆமீன்... தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  28. //உங்களை அதிக நாட்களாக காணவில்லையே என்று நானும் நினைத்தேன். திரும்ப காண்பதில் மகிழ்ச்சி.//

    இரண்டு மாதம் விடுப்பில் தாயகம் சென்றிருந்தேன். அங்கு தொடர்ந்த வேலை காரணமாக பதிவுகள் எழுத நேரம் இல்லை.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ பலீனோ!

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)