Monday, July 23, 2012

ஒரு சவுதி தெரு கூட்டினால் எப்படி இருக்கும்?



துப்புறவு தொழிலாளர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்ற அறிவுரையை கொடுப்பதற்காக ஒரு சவுதியை ஒரு நாள் முழுக்க அந்த நண்பர்களோடு பணி செய்ய வைத்தனர். ஒரு நாள் முழுக்க பங்களாதேஷை சார்ந்த அந்த சகோதரர்களோடு ஒன்றாக இருந்து அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை சவுதிகள் அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த டாகுமெண்டரியை தயாரித்துள்ளனர்.

احترام عمال النظافة ليس ذوق فقط، و إنما ضرورة و إنسانية!

شكراً لتعاون الإدارة العامة للنظافة معنا لتصوير هذه الحلقة و الخروج معنا بكل شفافية

'துப்புறவு தொழிலாளர்களை மதித்து நடங்கள். அவர்களோடு மனித நேயத்தோடு நடந்து கொள்ளுங்கள்'

عشت يومي الأول كعامل نظافة.
التجربة كانت أصعب من المتوقع:
٩ ساعات عمل تحت الشمس! الله يعين العمالة على هالروتين اليومي

"முதல் முதலாக ஒரு துப்புறவு தொழிலாளியாக ஒரு நாள் முழுக்க வேலை செய்தேன். நான் எதிர் பார்த்ததை விட சிரமமான வேலைதான் இது. 9 மணி நேரம் வெயிலில் வேலை செய்து வரும் அந்த சகோதரர்களின் சிரமத்தை உணர்ந்து கொண்டேன். இறைவன் அவர்களுக்கு சிறந்த வாழ்வை அமைத்து கொடுக்கட்டும்."

இந்த காணொளிக்கு கிட்டத்தட்ட 4000 அரபிகள் பின்னூட்டம அளித்துள்ளார்கள். அத்தனை பேருமே இந்த துப்புறவு தொழிலாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் அவர்களும் முஸ்லிம்களாகிய நமது சகோதரர்கள் என்றும் ஒருமித்த குரலில் பின்னூட்டியிருந்தார்கள்.

எனது அலுவலகத்துக்கு அருகிலேயே இரண்டு பங்காளிகள் தொழுகைக்கு தொடர்ந்து பள்ளிக்கு வருவார்கள். அப்பொழுது அவர்களின் மஞ்சள் நிற யுனிஃபார்மில் சில இடங்களில் அழுக்கும் படிந்திருக்கும். எனவே சவுதிகளோடு தோளோடு ஒட்டி நிற்க சங்கோஜப்பட்டுக் கொண்டு சிலர் நகர்ந்தால் அவர்களை இழுத்து தங்கள் அருகில் நிறுத்திக் கொள்ளும் பல சவுதிகளை பார்த்துள்ளேன். அவ்வாறு தோளோடு தோள் நெருங்கி நிற்கா விட்டால் சம்பந்தப்பட்டவர்களின் தொழுகை முழுமை பெறாது. எனவே இடைவெளி விடாது அவர்களை நிறுத்திக் கொள்ளும் அழகை நான் பார்த்து ரசிப்பேன்.

இவர்களுக்கு சம்பளம் 400(5000 ரூபாய்) அல்லது 500(6000 ரூபாய்) ரியால் தான் என்றாலும் பார்ட் டைம் வேலையாக மாதம் 1000 ரியாலுக்கு மேல் சம்பாதித்து விடுவார்கள். இன்னும் சிலருக்கு தெரு கூட்டும் பொழுதே சில வீடுகளில் அன்பளிப்பாக தரும் தொகையும் கணிசமாக தேரும். உணவகங்களுக்கு இவர்கள் சென்றால் சம்பளம் குறைவு என்பதால் எவரும் பணம் வாங்குவதில்லை. இருந்தாலும் மற்ற வேலைகளோடு ஒப்பிடும் போது இவர்களுக்கு சம்பளத்தை அரசு உயர்த்த வேண்டும். அரசு ஒருவருக்கு 2000 ரியால் ஒதுக்குகிறது. ஆனால் இடையில் காண்ட்ராக்ட் எடுக்கும் கம்பெனிகள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு குறைந்த சம்பளத்தில் ஆட்களை அழைத்து வந்து விடுகின்றனர்.

மன்னர் ஃபைசல் காலத்தில் துப்புறவு பணிகளுக்கு இந்தியர்களைத்தான் முதலில் தேர்வு செய்தார். ஆனால் இந்திரா அம்மையாரோ எனது நாட்டு மக்கள் ஒரு நாட்டில் சென்று துப்புறவு பணியில் ஈடுபடுவது எங்களுக்கு இழுக்கு என்று மறுத்து விட்டார். எனவே அத்தனை விஷாக்களும் பங்களாதேஷூக்கு சென்றது. எப்படியோ சில வறியவர்களின் வீடுகளில் இன்பம் தழைத்தால் நமக்கும் சந்தோஷந்தானே!

ஒரு காலத்தில் அரபிகள் என்ற திமிரில் மற்ற மொழி பேசுபவர்களை 'ஊமைகள்' என்ற அடைமொழியோடு அழைத்தனர். அதாவது நீங்கள் அழகிய தமிழில் பேசினாலும் அவனை பொருத்த வரை விலங்குகள் மொழியைப் போனற விளங்காத மொழிதான். அரபி அல்லாத மற்ற மொழிகளை விலங்குகள் மொழி அதாவது 'ஊமை பாஷை' என்றே சொன்னான். ஆனால் இஸ்லாம் வந்து இந்த மொழி வெறி இன வெறியை உடைத் தெறிந்தது.

முகமது நபியின் கடைசி உரை:

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; உங்களது தந்தையும் ஒருவரே! அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

தலமைக்குக் கீழ்ப்படிவீர்!

ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; அவருக்குக் கீழ்ப்படியுங்கள்!”
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

இதற்குப் பிறகும் ஒரு முஸ்லிம் தன்னை உயர்ந்தவனாக எண்ணிக் கொள்வானா?

இதே நேரம் நம் நாட்டில் துப்புறவு தொழிலாளர்களை எந்த அளவு கேவலமாக நடத்துகிறோம் என்பதை நாம் தினமும் பார்க்கிறோம். சாதியால் இழிவாக்கப்பட்டு அவர்களை கோவிலிலும் அனுமதிப்பதில்லை. திருமண உறவுகளும் ஏற்படுத்திக் கொள்வதில்லை. மனித மலம் அள்ளுவதற்கும் இன்றும் இவர்களையே பயன்படுத்துகிறோம். சவுதியில் இதற்கெல்லாம் இயந்திரங்களின் உதவியையே நாடுகின்றனர். அவற்றை ஒன்றாக்கி உரமாகவும் தயாரித்து விடுகிறார்கள். ஆனால் நாமோ மொபைல் போனுக்கு செலவழித்தாலும் கழிவறை கட்ட மாட்டோம் என்று மத்திய மந்திரி குறைபட்டுக் கொள்ளும் நிலையில்தான் உள்ளோம். இது மாற வேண்டும்.

1.மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள் (இன்னிசை வெண்பா)
புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார்

2.மலம் சிறுநீர் கழிக்கும் முறை (குறள் வெண்பா)
பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயுனுள் நீர்

3.மலம், சிறுநீர் கழிக்கும் திசை (இன்னிசை வெண்பா)
பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்
அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இருபுலனும்
இந்திர தானம் பெறினும் இகழாரே
தந்திரத்து வாழ்துமென் பார்

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.

பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. கழிவறையின் தொன்மை வரலாறு பண்டைய இலக்கியங்களில் ஆங்காங்கு மலிந்து கிடக்கிறது.

ஆரியர்களின் ஊடுருவலுக்கு முன் தமிழர்களின் நிலை மிக சிறந்தே இருந்துள்ளதற்கு இந்த பாடல்கள் சிறந்த உதாரணமாக உள்ளது. வீட்டில் அவசியம் கழிவறை கட்டி சுகாதாரத்தைப் பேணுவோம். செல் போன்களை வசதி வரும் போது வாங்கிக் கொள்வோம். :-)







21 comments:

  1. Anonymous8:08 PM

    நல்ல செயல் தானே ! நாம் ஒவ்வொருவரும் இழி நிலை தொழில் என நாம் கருதும் தொழில்களை போய் செய்து பார்ப்போமானால் . அதன் இன்ப துன்பங்களை யாம் அறிய வாய்ப்பாய் இருக்கும் .... !

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.

    வள்ளுவரின் இந்த வாக்கை அடிக்கடி நான் நியாபகம் கொள்வேன்.

    ஒரு முறை டொறோண்டோ நகர மேயர், வார்டு உறுப்பினர்கள் என அனைவரும் மாணவர் மற்றும் இதர பொது மக்களோடு க்ளீன் டொரோண்டோ நிகழ்வை நடத்தினோம். கிட்டத் தட்ட ஒரு வாரம் வெவ்வேறு இடங்களுக்கு சென்று துப்புரவு தொழில் செய்தோம் .... !!!

    மிக கடினமான வேலை என்பதை நான் உணர்ந்தேன். குப்பை போடுவதற்கு ஒரு நிமிடம் ஆகும் நமக்கு. ஆனால் அதனை அள்ளி சுற்றம் செய்ய எவ்வளவு கடினம் .... !!! ஆனால் இங்கு துப்புரவு தொழிலாளிகளை இழிவாகவோ தீண்டத்தக்கவராகவோ பார்ப்பதில்லை. அவர் செய்வதும் ஒரு தொழில் அவ்வளவே !!!

    இதே மன நிலை இந்தியா மற்றும் கீழை நாடுகளுக்கு வெகு விரைவில் வரவேண்டும் ...

    தமிழர்களின் பண்பாடு மிகவும் உயர்ந்த ஒன்றே ! ஹரப்பா நாகரிக காலத்தில் திராவிடர்கள் பாத்ரூம் மற்றும் வாஸ் ரூம்களை கட்டி பயன்படுத்தி உள்ளார்களாம் ! இன்று இந்தியா திறந்தவெளி மலக்கூடமாக அல்லவா இருக்கின்றது ... !!!

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    பிறப்பால் உயர்வு தாழ்வு கருத கூடாது என நமக்கு பாடம் மூலம் கற்பிக்கப்பட்டாலும் கூட யாரும் அதை பின்பற்றுவதே இல்லை! பரிச்சை தாளில் எழுதுவதோடு சரி,....

    இறைவனுக்கு பயந்தால் மட்டுமே அதை கொள்கையாக கொள்ள முடியும்.

    அப்பறம் கழிவறை... முன்பு தான் கவர்மென்ட் கட்டி கொடுக்கும்னு வெயிட் பண்ணிட்டிருந்தாங்க. இப்ப பெரும்பாலும் எல்லோரும் நாகரிக சூழலுக்கு மாறிவிட்டதால் அனைவர் வீட்டிலும் இருப்பதாகவே நினைக்கிறேன். ஒருவேளை கிராமங்களை குறிப்பிட்டுள்ளீர்களா? அங்கேயும் டவுட்டுதான்.

    எனிவே அருமையான கட்டுரை சகோ. வாழ்த்துகள்

    ReplyDelete
  3. ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
    அடுத்தவரின் பசியை உணரும் நோன்பில்... அந்த நோன்பை வைத்துக்கொண்டு ஐம்பது டிகிரி செல்சியசில் கொளுத்தும் வெயிலில் சாலையில் பணியாற்றும் இந்த பங்காளிகளின் துயரை அவர்களோடு அதேபோல பணியாற்றினால்தான் உணர முடியும்..! மிக்க நல்லதொரு பகிர்வு..! நன்றி சகோ.

    ReplyDelete
  4. பிராமணர்கள் கழிவறை, சாக்கடை சுத்தம் செய்பவர்களாக, ரிக்சா இழுப்பவர்களாக, கட்டிட வேலை, கூலி வேலை , எடுபிடி வேலை செய்பவர்களாக

    சொடுக்குங்க‌ள் >>>>> “இப்படியாகிப்போனோமே” என்று அவர்கள் புழம்பும் விடியோ காணுங்கள்.

    .

    ReplyDelete
  5. Anonymous10:52 PM

    பல 'திண்ணை' பேச்சு மனிதர்களுக்கும் இந்த பதிவு ஒரு பதிலாக இருக்கும் என்று எடுத்துக்கொள்கிறேன். அருமையான பதிவு. பொருத்தமாக நீதினூலிலிருந்தும் மேற்கோள்கள் கொடுத்தது இன்னும் பதிவை அழகுற இருந்தது. அந்த சவுதி அரபி இளைஞரை பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  6. ஸலாம் ...

    சிறந்த பதிவு

    ReplyDelete
  7. Anonymous12:49 AM

    //அடுத்தவரின் பசியை உணரும் நோன்பில்..//

    இது தான் நோன்பின் நோக்கமா !!!


    எதற்காக நோன்பு நோற்க வேண்டும்?
    பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர்.
    பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறில்லை.
    பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
    மேலும் பணக்காரர்கள் கூட நோன்பு நோற்காமலேயே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். பசியை உணர்வதால் தான் சாப்பிடுகின்றனர். நெருப்பு சுடும் என்பதை எப்படிச் சர்வ சாதாரணமாக உணர்கிறோமோ அது போலவே மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன. எனவே இந்தக் காரணம் முற்றிலும் தவறாகும்.
    உடல் ஆரோக்கியம் பேணப்படுவது தான் நோன்பின் நோக்கம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

    ReplyDelete
  8. Anonymous12:50 AM

    continue.........

    நோன்பு நோற்பதால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. உடல் ஆரோக்கியம் இதனால் ஏற்படும் என்பது காரணம் என்றால் நோயாளிகள் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா?
    நோயாளிகளுக்குத் தானே ஆரோக்கியம் அவசியத் தேவை! நோன்பே ஒரு மருந்து என்றிருக்குமானால் நோயாளிகளுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே நோன்பு நோற்பதற்கு இதைக் காரணமாகக் கூறுவதும் தவறாகும்.
    சில மனிதர்களுக்கு இதனால் ஆரோக்கியம் ஏற்படலாம். அல்சர் போன்ற நோய் ஏற்பட்டவர்களுக்கு இதனால் நோய் அதிகரிக்கவும் செய்யலாம். எனவே இறை திருப்தியை நாடி நிறைவேற்றப்படும் ஒரு வணக்கத்திற்கு இது போன்ற அற்பமான காரணங்களைக் கூறி நோன்பைப் பாழாக்கி விடக் கூடாது.
    நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை.
    மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
    நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.
    நமக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை.
    யாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.
    ஹராமான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.
    இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
    யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
    நூல்: புகாரி 1903, 6057
    பசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இங்கே விளக்கப்படுகிறது.
    நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்துகிறார்கள்.
    உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
    அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
    நூல்: புகாரி 1893, 1903
    நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும்.

    ReplyDelete
  9. சகோ ஆமினா!

    //அப்பறம் கழிவறை... முன்பு தான் கவர்மென்ட் கட்டி கொடுக்கும்னு வெயிட் பண்ணிட்டிருந்தாங்க. இப்ப பெரும்பாலும் எல்லோரும் நாகரிக சூழலுக்கு மாறிவிட்டதால் அனைவர் வீட்டிலும் இருப்பதாகவே நினைக்கிறேன். ஒருவேளை கிராமங்களை குறிப்பிட்டுள்ளீர்களா? அங்கேயும் டவுட்டுதான்.//

    தமிழ் நாட்டில் நிலைமை ஓரளவு சரியானாலும் வட நாடுகளில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. சென்னையிலிருந்து மும்பை ரயிலில் பயணித்தால் இதை நேரிலேயே நாம் பார்க்கலாம்.

    மேலும் மதுரையில் கோவிலுக்கு பின்புறம் எவ்வாறு சாலையை கழிப்பிடமாக உபயோகிக்கிறார்கள் என்று ஒரு காணொளியே முன்பு இட்டுள்ளேன். எனவே போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.

    ReplyDelete
  10. இக்பால் செல்வன்!

    //தமிழர்களின் பண்பாடு மிகவும் உயர்ந்த ஒன்றே ! ஹரப்பா நாகரிக காலத்தில் திராவிடர்கள் பாத்ரூம் மற்றும் வாஸ் ரூம்களை கட்டி பயன்படுத்தி உள்ளார்களாம் ! இன்று இந்தியா திறந்தவெளி மலக்கூடமாக அல்லவா இருக்கின்றது ... !!!//

    இது வருந்தத்தக்க செய்தி. மும்பை போன்ற பெருநகரங்களில் பொது இடங்களை கழிப்பறைகளாக்கி சூழ்நிலையையே மாற்றி விடுகின்றனர். தொலைக்காட்சி, வாசிங் மெஷின், செல்போன் இவை எல்லாம் அவசியம் என்று பணம் செலவழிக்கும் நாம் கழிவறை அவசியம் என்பதை ஏனோ உணர்வதில்லை.

    ReplyDelete
  11. சலாம் சகோ ஆஷிக்!

    //அந்த நோன்பை வைத்துக்கொண்டு ஐம்பது டிகிரி செல்சியசில் கொளுத்தும் வெயிலில் சாலையில் பணியாற்றும் இந்த பங்காளிகளின் துயரை அவர்களோடு அதேபோல பணியாற்றினால்தான் உணர முடியும்..! மிக்க நல்லதொரு பகிர்வு..! நன்றி சகோ.//

    இதை பார்த்த அனேகமான சவுதிகள் அவர்களின் துயரை நன்றாக உணர்ந்ததாக பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார்கள். அவர்களின் சம்பளமும் இன்னும் உயர்ந்தால் நன்றாக இருக்கும். ஒரு சவுதி எனக்கு 3000 ரியால் சம்பளம் கொடுத்தால் நான் இந்த வேலையை செய்கிறேன் என்று சொல்லியிருந்தார்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  12. சலாம் சகோ சிந்தனை

    //ஸலாம் ...

    சிறந்த பதிவு//


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  13. salaam,
    நல்ல கருத்துகளை கொண்ட நன்மையான கட்டுரை


    புதிய வரவுகள் :இந்தியன்னு சொல்லவே கேவலமா இருக்கு,குடிதண்ணீரை எப்போ குடிக்கனும்னு உங்களுக்கு தெரியுமா?-www.tvpmuslim.blogspot.com

    ReplyDelete
  14. Anonymous7:02 AM

    Another jalra pathivu to saudi. Valga.

    ReplyDelete
  15. அனானி!

    //Another jalra pathivu to saudi. Valga. //

    நடப்புகளை எழுதினால் ஜால்ராவா? இந்த பதிவுக்கு பிறகாவது அவசியம் கழிவறை கட்ட முயற்ச்சிப்போம்.

    ReplyDelete
  16. திருவாளப்பத்தூர் முஸ்லிம்!

    //குடிதண்ணீரை எப்போ குடிக்கனும்னு உங்களுக்கு தெரியுமா?- www.tvpmuslim.blogspot.com//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  17. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே

    அருமையான அவசியமான பதிவு

    போதுவாகவே சவூதிகள் முக்கால் வாசிப்பேர் பாரபட்சம் பார்ப்பதில்லை என் அனுபவத்தில் கண்டவரை நான்கு பேர் உணவருந்திக் கொண்டு இருக்கும் போது அவர்களை கடந்து சென்றால் (பத்தல்) இங்கே வா சாப்பிடு என்று உண்மையாகவே அழைப்பார்கள் ஒரே தட்டில் சாப்பிட்டாலும் அவர்களின் முகம் கோனலாகி பார்த்ததில்லை

    ReplyDelete
  18. அஸ்ஸலாம் அலைக்கும் ...
    துப்புரவு தொழிலாளர்களின் விசயத்தில் எந்தஒரு அராபிய நாட்டவனும் அவர்களின் சம்பளவிசயத்தில் நேர்மையாக நடப்பதில்லை என்று அடித்து சொல்வேன்...ஒரு வீடியோ காண்பித்தால் அவர்களின் துயரம் போய்விடுமா?
    நான்கு வருடத்துக்கு முன்பு இங்கே(குவைத்) சம்பளத்தை உயர்திக்கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்ததற்கு, அப்பாவி 500 பங்களாதேஷிகளை பாஸ்போர்டில் ரெட் சீல் வைத்து நாட்டுக்கு அனுப்பிவிட்ட கொடுமையை யாருக்காவது தெரியுமா ?? மேலும் அவர்களின் வசிப்பிடங்களில் ஒருநாளாவது அரபியர்களை இருக்கசொல்லுங்களே பார்க்கலாம்...!!! அந்த தோழர்கள் ஒரு வாரம் வேலைக்கு போகவில்லையானால், அரேபியாவின் நிலை என்னவாகுமென்பதை சற்று யோசித்து பாருங்களேன் .......முதலில் அவர்களின் சம்பளத்தை உயர்த்தும் வழியை பாருங்க ..அப்புறம் இதுமாதிரியான " சவுதி பில்டப் " பதிவு தேவையில்லாதது ...." வியர்வை காயும் முன்னே , கூலியை கொடு " இந்த அழகிய நபிமொழிபடி அவர்கள் நடக்கிறார்களா ..!!! கொஞ்சம் கேட்டு சொல்லுங்க பாய்..

    ReplyDelete
  19. சகோதரா நாசர் உங்களின் ஆதங்கம் புரிகிறது அதேநேரத்தில் இந்த வேலைபாற்பவர்களின் சிரமங்களை பற்றி எந்த சவுதியும் சிந்திக்காத தருணத்தில் இந்த விசயத்தை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்த அந்த சவுதி(அரப்) இயக்குனர் பாரட்டப்படவேண்டியவரல்லவா? இதுபோன்ற நல்லுள்ளம் படைத்தவர்களை ஊக்குவிக்கவேண்டியது கடமையல்லவா? ஒன்றுக்கும் உதவாத செய்தி, புகைப்படங்களுக்கு முகநூலில் விருப்பம் எதிர்பார்க்கும் இக்காலத்தில் இதுபோன்ற நல்ல விசயத்தை ஆதரியுங்கள் சகோதரா, வஸ்ஸலாம்.

    ReplyDelete
  20. அருமையான பதிவு எனது முதல் வருகை உங்கள் தளத்தில் இனி தொடருவேன் ,உங்கள் கருத்துகளை நிறைய தளங்களில் பார்த்து இருகிறேன் இன்று தான் உங்கள் தளத்திற்கு வருகை புரிய அல்லா நாடி இருக்கிறான்

    ReplyDelete
  21. சகோ அசா அசத்!

    //அருமையான பதிவு எனது முதல் வருகை உங்கள் தளத்தில் இனி தொடருவேன் ,உங்கள் கருத்துகளை நிறைய தளங்களில் பார்த்து இருகிறேன் இன்று தான் உங்கள் தளத்திற்கு வருகை புரிய அல்லா நாடி இருக்கிறான் //

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)