Saturday, May 12, 2018

இறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன்!


இறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன்!

1.இதற்கு முன் எஸ்.எம்.பாக்கரை நாம் மரியாதை செய்தோம்: அவருக்கு மதிப்பளித்தோம்: அவர் குர்ஆனையும் ஹதீஸையும் மக்களிடம் கொண்டு சென்றதற்காக!

என்றைக்கு அவரைப் பற்றி ஆதாரபூர்வமாக குற்றச்சாட்டுக்கள் வந்ததோ அன்றே அவரை தவ்ஹீத் ஜமாத்திலிருந்து விலக்கினோம்.

2.அதே போல் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி சிறு வயதில் குர்ஆனையும் ஹதீஸையும் அழகுற சொன்னதற்காக அவரை மதித்தோம். பல கிராமங்களுக்கும் கூட்டிச் சென்றோம்.

என்று அவர் மீது குற்றச்சாட்டு வந்ததோ அன்றே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவரை ஜமாத்திலிருந்து விளக்கினோம். அவருடைய தொடர்பையும் துண்டித்துக் கொண்டோம்.

3. பிஜே தனது வசீகர பேச்சால் பாமரனும் இஸ்லாத்தை விளங்கிக் கொள்ளச் செய்ததால் அவரை மதித்தோம். நமக்கு குர்ஆனையும் ஹதீஸையும் அழகுற விளக்கியதால் நமது குடும்பத்தில் ஒருவராக அவரைப் பார்த்தோம்.
இன்று பி.ஜெய்னுல்லாபுதீன் அவர்கள் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு அது உண்மைதான் என்று கண்டறியப்பட்டு அவரையும் ஜமாத்திலிருந்து மேலாண்மைக் குழுவால் ஒதுக்கி  வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தலைவர்கள் வரிசையாக ஓரங்கட்டப்பட்டதால் இந்த கொள்கை தவறானதாகி விடுமா?

1.சமாதிகளை வணங்காதீர்கள் என்றோம்.

2.மத்ஹபுகளை பின்பற்றாதீர்கள் குர்ஆன் ஹதீஸை பின் பற்றுங்கள் என்றோம்.

3. வரதட்சணை வாங்காதீர்கள்: மஹர் கொடுத்து திருமணம் முடியுங்கள் என்றோம்.

4. இறைவனைத் தவிர வேறு யாரையும் மரியாதை நிமித்தமாகக்கூட வணங்க வேண்டாம் என்றோம்.

5. அனாதைகளை ஆதரியுங்கள்: வயதான பெற்றோர்களை காப்பாற்றுங்கள் என்றோம். கைவிடப்படுபவர்களுக்கு ஆதரவு இல்லங்களை திறந்து திறம்பட நடத்தி வருகிறோம்.

6. ஆர்எஸ்எஸ் முஸ்லிம்கள் சம்பந்தமாக இந்துக்களிடம் விதைக்கும் நச்சுக் கருத்துக்களை பொய் என அம்பலப்படுத்த 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை பட்டி தொட்டி எல்லாம் நடத்தி மத மோதலை தடுத்து வருகிறோம்.

7.மார்க்க கல்வியோடு உலக கல்வியும் சேர்ந்தால்தான் ஒரு சமூகம் முழுமை பெற முடியும் என்ற கல்வி தாகத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளோம்.

8. அரசிடம் போராடி 3 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்து முஸ்லிம்கள் அரசு வேலைகளை பெற வகை செய்துள்ளோம்.

9. இரத்த தான முகாம் நடத்தி மத நல்லிணக்கத்தை பேணுகிறோம். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இரத்த தானம் செய்வதில் முதலிடத்தில் இருக்கிறோம்.

இந்த மாற்றங்கள் எல்லாம் எந்த தலைவர் வந்தாலும் போனாலும் தொடரும். தலைவர் யார் என்று பார்ப்பதில்லை. இங்கு கொள்கைதான் தலைவன். அது கியாமநாள் வரை தொடரும் என்று கூறிக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)