அவர்களின் உதவியைப் பெற
நாம் கொடுத்த விலை மிகப்பெரியது...
















(எமக்கு பாடமான ஒரு மாணவியின் உருக்கமான வார்த்தைகள்)
நாங்கள் உயர் தரத்தில் கற்றுக் கொண்டிருந்த வேளை...
வகுப்பு நண்பிகள் அனைவரும் இடைவேளை நேரத்தில் காலை உணவுக்காக ஒன்று கூடுவது வழமை. யார் யார் எதைக் கொண்டு வந்தார்கள் என்று தெரியாத அளவுக்கு அனைவரது உணவையும் கலந்து விடுவோம்.
ஆனால் ஒரேயொரு ஏழை மாணவி மட்டும் எதையும் கொண்டு வருவதுமில்லை; எங்களோடு கலந்து கொள்வதுமில்லை. வெட்கத்துடன் ஒதுங்கியே இருப்பாள்.
அவளை அழைத்து யார் என்ன கொண்டு வந்தது என்று யாருக்கும் தெரியாது. எப்போதும் என் பக்கத்தில் வந்து அமர்ந்து சாப்பிடு என்று கூறி அவளை சம்மதிக்க வைத்து உட்கார வைத்தேன். அன்றிலிருந்து எங்களுடனேயே சாப்பிட ஆரம்பித்தாள்...
இது பல மாதங்கள் தொடர்ந்தன. திடீரென அவளது தந்தையும் மரணித்தார். அதன்பின் அந்த மாணவியின் நிலையும் மாறியது.நல்ல ஆடை, பணம் என முன்பிருந்ததை விட நல்ல நிலையில் இருந்தாள்.
அவளை நெருங்கி காரணத்தைக் கேட்டேன்.
என் கைகளைப் பிடித்துக் கொண்டு சற்றூ நேரம் அழுதாள். பின் " அல்லாஹ்வின் மீது ஆணையாக. நாங்கள் பல நாட்கள் இரவுச் சாப்பாடு இல்லாமல் தூங்கியிருக்கின்றோம். உங்களோடு காலை உணவை சாப்பிட வேண்டும் என்பதற்காகவே பாடசாலைக்கு வரும் நேரத்தை எதிர்பார்த்திருப்பேன்.
எங்கள் தாய் இரவு உணவுக்கான ரொட்டியை எங்கள் காலை உணவுக்காக எடுத்து வைப்பார். என் பங்கையும் என் சகோதரர்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக காலையில் நேர காலத்துடன் நான் பாடசாலைக்கு வந்து விடுவேன்.
தற்போது என் தந்தையின் மரணத்தின் பின் எல்லோரும் எங்களை ஆதரிக்கின்றனர்; உறவினர்கள் வருகின்றனர்; உதவிகள் பல செய்கின்றனர். நிறுவனங்கள் தேடி வந்து உதவுகின்றன... தற்போது நாங்கள் அனாதைகள் என்ற காரணத்தினால்...
எம் தேவையை உறவினர்களும், நிறுவனங்களும் உணர்ந்து கொள்ள நாம் கொடுத்த விலைதான் மிகப்பெரியது... எங்கள் தந்தையின் மரணம்.
(மரணத்துக்கு முன் என் தந்தை ஒரு முறையாவது வயிறு நிறைய சாப்பிட்டிருக்கக் கூடாதா... என்று ஏங்குகின்றேன்)
இதைக் கூறும் போது அவளால் அவளது அழுகையை அடக்க முடியவில்லை. சத்தமிட்டே அழுது விட்டாள்...
அன்றுதான் அவளின் கஷ்டம் எனக்கும் தெரிந்தது.
அவளது வார்த்தைகளும் அழுகையும் என்னையும் அழ வைத்தன. இன்று வரை அவளது அழுகையின் ஆழத்தை நினைத்துப் பார்க்கின்றேன்.
அவளுக்கு வகுப்பு நண்பிகள் நாங்களும் உதவ நினைத்தோம். ஆனால் மரணிப்பதற்கு முன்னரான அவளது தந்தையின் பசிக்கு என்ன செய்வது...
மரணித்ததன் பின் "நாங்கள் இருக்கின்றோம்" என்று கூறுவதில் பயனில்லை...
ஒருவரோடு சண்டையிட்டு பல வருடங்கள் உறவைத் துண்டித்து, மரணத் தருவாயில் " என்னை மன்னித்து விடு" என்பதில் பயனில்லை...
ஒருவரின் முன்னேற்றத்தில் எவ்வித பங்கும் எடுக்காது " உன்னால் பெருமை அடைகிறேன்" என்பதில் பயனில்லை...
கவலைக்குள் ஒருவரைத் தள்ளிவிட்டு " உன் கண்ணீர் என்னைக் கொல்கிறது" என்று கூறுவதில் பயனில்லை...
உரிய நேரத்தில் சொல்லப்படாத இந்த வார்த்தைகளால், உதவியால் என்ன பயன்தான் இருக்கின்றது...
என்று கூறுகிறாள் அந்த மாணவி...
No comments:
Post a Comment