Followers

Wednesday, October 28, 2015

மாட்டிறைச்சி சோதனை - உம்மண் சாண்டி காட்டம்!



டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் போலீஸார் 'மாட்டிறைச்சி' சோதனை மேற்கொண்ட விவகாரத்தில், அவர்கள் தவறை ஒப்புக் கொள்ளவில்லையெனில், சட்ட நடவடிக்கை பாயும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி எச்சரித்துள்ளார்.

கேரள அமைச்சரவையில் இந்த விவகாரம் இன்று விவாதத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, “டெல்லி போலீஸ் கடமையை மட்டுமே செய்தது என்றும், சட்டத்திற்கிணங்கவே சோதனை மேற்கொண்டது என்ற டெல்லி போலீஸாரின் வாதத்தை மத்திய அரசும் கடைபிடித்தால், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்.

மாநிலம் நடத்தும் அதிகாரபூர்வ விருந்தினர் இல்லத்தில் மாநில அதிகாரிகள் அனுமதியின்றி சோதனை மேற்கொள்வது எல்லை மீறியதாக உள்ளதோடு, சட்டத்தையும் மீறியுள்ளது. இதனால் மாநில - மத்திய உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

சோதனை குறித்த டெல்லி போலீஸாரின் விளக்கம் ஒருபோதும் மாநில அரசால் ஏற்றுக் கொள்ள முடியாதது. இது குறித்து பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்குக்கும் கடிதம் எழுதியுள்ளோம், பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.

இந்நிலையில் டெல்லி போலீஸ் அளித்த விளக்கத்தை மத்திய அரசும் மீண்டும் ஒரு முறை தெரிவித்தால், கேரள மாநிலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார் முதல்வர் உம்மன் சாண்டி.

மேலும், இந்த விவகாரத்தில் ஆதரவளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

“புகார் அளித்தவரின் நம்பகத்தன்மையைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றால், இது எந்தத் தரப்பையோ திருப்தி செய்ய நடத்தப்பட்டதாகவே தெரிகிறது. தவறை ஒப்புக் கொண்டால் கேரள அரசு அமைதியடையும்” என்றார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
28-10-2015

No comments: