Followers

Tuesday, March 10, 2009

தெற்கு இலங்கையில் மனித வெடிகுண்டு தாக்குதல்


தெற்கு இலங்கையில் மனித வெடிகுண்டு தாக்குதல் : உடல்சிதறி 15 பேர் பலி! : மிலாது நபி ஊர்வலத்தில் சோகம்
மார்ச் 11,2009,00:00 IST

கொழும்பு : இலங்கையில் மிலாது நபி ஊர்வலம் நடந்த இடத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் பேர் உடல் சிதறி பலியாயினர்; அமைச்சர் மகிந்தா விஜேசேகரா, தெற்கு மாகாண முன்னாள் முதல்வர் ஸ்ரீசேனா உள்ளிட்ட 30 பேர் படுகாயம் அடைந்தனர். "விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்' என இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கை, முல்லைத் தீவில் 45 சதுர கி.மீ., பரப்பளவுக்கு உட்பட்ட பகுதிக்குள் விடுதலைப் புலிகளை முடக்கி விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் நடந்த சண்டையில் மட்டும் 200க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ராணுவத்தை பழி வாங்கும் வகையில், போர் நடக்கும் முல்லைத் தீவு பகுதியைத் தவிர, நாட்டின் வேறு பகுதிகளிலும் தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்பதை நிரூபிப்பதற்காக விடுதலைப் புலிகள் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இலங்கையின் தென் கோடியில் உள்ள மாத்தறை மாவட் டத்தில் அக்குரச கொடப்பிட்டிய என்ற இடத்தில் உள்ள ஒரு மசூதியில் நேற்று மிலாது நபி விழா கொண்டாடப்பட் டது. இதையொட்டி, அந்த பகுதியில் ஊர்வலம் ஒன்றும் நடத்தப்பட்டது. இதில், இலங்கையின் முக்கிய அமைச் சர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். அமைச் சர்கள் ஆறு பேர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அப்போது, ஊர்வலத்துக்குள் புகுந்த மர்ம நபர், தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. அந்த பகுதி முழுவதும் ஒரே பதட்டமும், பரபரப்பும் காணப்பட்டது. குண்டு வெடிப்பில் சிக்கியவர்களின் உடல் பாகங்கள் அந்த பகுதி முழுவதும் சிதறிக் கிடந்தன. அந்த பகுதி முழுவதும் ரத்தம் படிந்திருந்தது.

இந்த தாக்குதலில் 15 பேர் உடல் சிதறி பலியாயினர். இலங்கை தொலைத்தொடர்பு மற்றும் தபால் துறை அமைச்சர் மகிந்தா விஜேசேகரா, தெற்கு மாகாண முன்னாள் முதல்வர் ஸ்ரீசேனா உள்ளிட்ட 30 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அமைச்சர் விஜேசேகரா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித் துள்ளனர். கொழும்பில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் விமானம் மூலம் மாத்தறைக்கு விரைந்தனர். இந்த தற்கொலைப் படை தாக்குதல் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் பதட்டமான சூழ்நிலை காணப் படுகிறது. போலீஸ் செய்தித் தொடர்பாளர் ரஞ்சித் குணசேகரா கூறுகையில், "இந்த தாக்குதலில் பத்தில் இருந்து 15 பேர் பலியாகி இருக்கலாம். சரியான எண் ணிக்கை இன்னும் தெரியவில்லை' என்றார்.

ராணுவ செய்தித் தொடர்பாளர் லக்ஷ்மன் குல்லுகல்லே கூறுகையில், "இது ஒரு தற்கொலைப் படை தாக்குதல். கண்டிப்பாக விடுதலைப் புலிகள் தான் இதை நடத்தியுள்ளனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தேவைப் பட்டால் காயம் அடைந்தவர்களை ஹெலிகாப்டர் மூலமாக கொழும்பு கொண்டு வருவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்' என்றார்.

இலங்கையில் நிதி நெருக்கடி: சமீபத்தில் இலங்கை சென்ற ஐ.நா., மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி ஜான் ஹோம்ஸ் கூறுகையில், "சண்டை நடக்கும் பகுதியில் இருந்து அப்பாவி மக்கள் வெளியேறுவதற்கு புலிகள் தடையாக உள்ளனர். இதற்கு தேவையான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன' என்றார். அதே சமயம் புலிகள் பிடியில் இருந்து வெளியேறிய மக்கள் தங்க வைக்கப்பட்ட இடங்களில் பார்வையிட்டு நிலையை அறிய முடியாத சூழ்நிலை இருக்கிறது. இதற்கிடையே, இலங்கையில் நடந்துவரும் சண்டை, வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவுக்கு வந்து விடும் என்றும், ஆனால், இதன் பாதிப்பு எந்த அள வுக்கு இருக்கும் என்பதை தற்போது கூற முடியாது என்றும் இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், "தொடர்ந்து நடந்துவரும் சண்டையால் இலங்கைக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, சர்வதேச நிதியகத்திடம், இலங் கை சார்பில் நிதி உதவி கோரப் பட்டுள்ளது' என்றனர்.

-Dina Malar

No comments: