Followers

Friday, March 20, 2009

சவூதி அரேபியா ஓர் முன்மாதிரி!



புனித மக்கா நகர கவர்னர் இளவரசர் காலித் அல் பைசல் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற வந்திருந்தார். மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக் கழகத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

'ஆடம்பர வாழ்க்கை, வறிய வாழ்க்கை இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்க்கை முறையை சவூதிகளான நம்மில் பெரும்பாலோர் கடைபிடிக்கிறோம். விஞ்ஞான வளர்ச்சிக்கு இந்த அரசோ இஸ்லாமோ என்றுமே தடையாக இருந்ததில்லை. அதே சமயம் நவீனத்துவம் என்ற பெயரில் மேற்கத்திய கலாச்சாரத்தை கொண்டு வருவதிலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலக மக்களோடு போட்டி போடும் அதே சமயம் இஸ்லாத்தின் கொள்கைகளையும் நாம் கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும். இதை விடுத்து முன்னேற்றம் ஒன்றையே தங்களின் குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட பல நாடுகளின் தற்போதய நிலையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.'

'ஒரு தனி மனிதனின் வளர்ச்சியை விட அந்த மனிதனின் சமூகத்தின் வளர்ச்சிதான் முக்கியம். அதில் நாம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் பெற்றுள்ளோம். இந்த வளர்ச்சி கூட நமக்கு கிடைத்தது நம்மிடம் உள்ள எண்ணெய் வளத்தால் அல்ல. அதை எல்லாம் தாண்டி நமது வாழ்க்கை முறை இஸ்லாமாகவே இருப்பதால்தான் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.......'

மேற்கண்டவாறு இளவரசர் காலித் அல் பெய்சலின் பேச்சு சென்று கொண்டிருந்தது.

சில நேரங்களில் சவூதிகளின் வாழ்க்கை முறையை நினைத்து ஆச்சரியப்பட்டதுண்டு. எங்கள் வாடிக்கையாளர்களில் பல சவுதிகளை நேரில் பார்க்கும் போது மிக எளிமையாக இருப்பதும் அதே சமயம் அவர்கள் பல லட்சங்களுக்கும் கோடிகளுக்கும் சொந்தக்காரர்களாக இருப்பதும் அதிசயிக்க வைக்கும்.

ஒரு முறை எனக்கும் ஒரு சவூதி பிரஜைக்கும் வார்த்தை முற்றியதால் அந்த சவூதி போலீஸ் வரை சென்று விட்டார். வாழ்க்கையில் முதல் முறையாக காவல் நிலையத்தை பார்க்கும் நிலை ஏற்பட்டது. உயர் அதிகாரி விபரங்களைக் கேட்டார். என் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து என் சார்பாக பேசினார். உடன் சம்பந்தப் பட்ட சவூதி 'நான் ஒரு சவூதி. என் சார்பாக பேசாமல் இந்தியனுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே' என்று கோபப் பட்டார். உடன் அதிகாரி 'இங்கு சட்டம்தான் பேசும். நாடு எனக்கு முக்கியமல்ல.' என்று கூறி சம்பந்தப்பட்ட சவூதியின் வாயை அடைத்தார். இஸ்லாம் எந்த அளவு அந்த அதிகாரியை பக்குவப்படுத்தியுள்ளது என்று நினைத்து மகிழ்ந்தேன்.

போன மாதம் சவூதி அரேபியா ரியாத் நகரில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய காரில் தன்னுடைய சகோதரனுடைய மகளுடன் செக் போஸ்ட்டுக்கு அருகில் வரும் போது அங்கு பணியில் இருந்த இரு போலீஸ் அதிகாரிகள் அவரைத் தாக்கி, போலீஸ் காரில் பூட்டி வைத்து விட்டு அப்பெண்ணை கொடூரமாகக் கற்பழித்துள்ளனர். பின்னர் அவர்களை மிரட்டி அனுப்பி வைத்து விட்டனர்.

பின்னர் அவர் சவூதி காவல் நிலையத்தில் புகார் செய்ததன் விளைவாக கற்பழித்த அந்த இரு அதிகாரிகளும் உடன் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு அவ்விருவர் மேலுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவ்விரு போலீஸ் அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பொது மக்கள் முன்னிலையில் கடந்த வெள்ளி அன்று அவர்கள் இருவரின் தலையையும் வெட்டி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நம் இந்திய திருநாட்டில் இதே போன்ற குற்றம் நடந்திருந்தால் அதிக பட்சம் அந்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பண்ட் மட்டுமே செய்யப் பட்டிருப்பார்கள். அந்த இருவரின் தலை பொதுமக்கள் முன்னிலையில் வெட்டப்பட்டதால் இனி எந்த அதிகாரிக்காவது இது போன்ற தீய எண்ணம் வருமா? இது தான் இஸ்லாமிய சட்டம்.

அதே போல் என் நண்பன் ஹூசைன் கார் விபத்தில் இறந்த போது உடலை அடக்கம் செய்ய அனைவரும் சென்றிருந்தோம். அங்கு வேறொரு பிரேதத்தை அடக்க வந்த சில சவூதிகள் உடன் மண் வெட்டியை வாங்கி அவர்களே அனைத்து வேலைகளையும் செய்ததை ஆச்சரியத்தோடு பார்த்தேன்.

இது போல் பல சம்பவங்களைக் கூற முடியும். இதைச் சொல்வதால் எல்லா சவுதிகளும் மிகவும் நேர்மையானவர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நேர்மையற்றவர்களும் இருக்கவே செய்கின்றனர். நாம் இங்கு பெரும்பான்மையைப் பற்றியே பேசுகிறோம். மேலும் சில சம்பவங்களை நேரம் கிடைக்கும் போது பகிர்ந்து கொள்வோம்.

10 comments:

கோவி.கண்ணன் said...

//என்று கூறி சம்பந்தப்பட்ட சவூதியின் வாயை அடைத்தார். இஸ்லாம் எந்த அளவு அந்த அதிகாரியை பக்குவப்படுத்தியுள்ளது என்று நினைத்து மகிழ்ந்தேன்.//

எல்லாவற்றையும் ஏன் இஸ்லாமிய கண்ணோட்டத்துடன் எழுதுகிறீர்கள் ? அதே இஸ்லாமை பின்பற்றுபவன் தானே உங்களை அங்கே கொண்டு சென்றான். தனிமனித ஒழுக்கம் வேறு மதம் வேறு.

இன்னொரு தகவலையும் சொல்கிறேன், சென்ற ஆண்டு போதைக் கடத்தலில் கைதாகி மரண தண்டனைக்குக் காத்திருக்கும் பெண்களில் மலாய்காரர்கள் 17, சீனர்கள் 3 இந்தியர் 1 என்று சிங்கை செய்திதாள்கள் வெளியிட்டன. இதைப் படிக்கும் ஒருவர் என்ன மனநிலையை கொள்வார் என்பதை நினைத்துப் பாருங்கள். ஆனால் எனக்கு வந்தது வேறு மனநிலைதான். யார் வறுமைக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்களோ அவர்களைத் தான் குற்றத்தின் கைகள் பற்றுகிறது என்பதாக புரிந்து கொண்டேன்.

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//எல்லாவற்றையும் ஏன் இஸ்லாமிய கண்ணோட்டத்துடன் எழுதுகிறீர்கள் ? அதே இஸ்லாமை பின்பற்றுபவன் தானே உங்களை அங்கே கொண்டு சென்றான். தனிமனித ஒழுக்கம் வேறு மதம் வேறு.//

தன் மனித ஒழுக்கம் வேறு. மதம் வேறு என்பதை ஒத்துக் கொள்கிறேன். இஸ்லாத்துக்கு முன்பிருந்த அந்த மக்களின் வாழ்க்கையையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

சாதிக் கொடுமை, குலப் பெருமை, மொழி வெறி போன்றவை தலைவிரித்தாடியது. அரபி மொழியைத் தவிர மற்ற மொழிகளெல்லாம் ஊமைகள் பேசும் மொழி என்ற நினைப்பில்தான் வாழ்ந்தார்கள். ஆப்ரிக்காவில் இருந்து கொண்டவரப்பட்ட மனிதர்கள் ஆடுமாடுகளைப் போல் விற்கப்பட்டார்கள். (புரியாதவர்கள் எம்ஜிஆரின் 'ஆயிரத்தில் ஒருவன்' படம் பார்த்துக் கொள்ளவும் :-)). மதுவும் விபச்சாரமும் மலிந்து கிடந்த நாள் அந்த நாள். ஒரு நாளுக்கு ஒரு கடவுள் சிலை என்று 365 கடவுள்கள் வருடம் முழுதும் கொண்டாட்டம். பெண் குழந்தை பிறந்தால் உயிருடன் புதைத்து விடுவார்கள். தந்தையோ சமூகத்துக்கு வர வெட்கப்பட்டுக் கொண்டு ஒரு மாதம் வரை தலை மறைவாகி விடுவானாம். இதுதான் அன்றைய அரபுகளின் வாழ்க்கை. முகமது நபியின் வருகைக்கு பிறகுதான் அந்த மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாற்றப்படுகிறது. காலை எழுவதிலிருந்து இரவு படுக்கைக்கு செல்வது வரை பல சவுதிகள் இஸ்லாத்தை முன் மாதிரியாக கொள்கிறார்கள். பெரும்பாலான முஸ்லிம்களின் நிலையும் அதுவே!

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து வல்லரசாகப் போகும் நமது நாட்டையும் இங்கு ஒப்பிட்டுப் பாருங்கள்.

'கோயில் உள்ளே இதுவரை நாங்க போனதே கிடையாது. உள்ளே போக ஒரு நிமிஷம் ஆகாது. ஆனா அது அந்த காலத்துல ஏற்படுத்தின பண்பாடு :-(. அதை மதிக்கிறோம். அதே மாதிரி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எங்களுக்கும் சில எல்லைக் கோடுகள் இருக்கு. அதைத் தாண்டி அவங்களும் வரக் கூடாது. வரவும் மாட்டாங்க.' - செல்லக் கண்ணு தேவர், பாப்பாரப்பட்டி.

'பொதுவாகச் சொல்லணும்னா ஒரு கீழ்ச்சாதிகாரன் பாப்பாரப் பட்டிக்கு பஞ்சாயத்து தலைவரா வருவதை எங்க ஊர் குல தெய்வமும் சுத்துப்பட்டுல உள்ள பத்துப்பட்டிக்கும் குலதெய்வமுமான 'ஒச்சாண்டம்மன்' விரும்பலைங்க. அப்படி மீறி தேர்தல்ல நிக்கறவங்க யாரும் சில சமயம் உயிரோடு கூட இருக்கமாட்டாங்க. இவ்வளவு பிரச்னைக்கும் காரணம் தெய்வ குத்தம் தாங்க' -சாக்ரடீஸ், பாப்பாரப்பட்டி.

'இந்த ஊர்ல மேல்சாதிக்காரங்களை எதிர்த்து யாரும் நிக்கக் கூடாதுன்னு அவங்க நினைக்கிறாங்க. கடைசிவரைக்கும் நாங்க இப்படியேதான் அடிமையாக் கெடக்கணும்னு விதி போல... இன்னும் எத்தனை ஜென்மம்தான் எங்க சாதி செருப்பா தேயணும்ன்னு தெரியலை...- முனியம்மாள், பாப்பரப்பட்டி

-குமுதம் 9-5-2005

எத்தனை பெரியார்கள், எத்தனை அம்பேத்கார்கள், எத்தனை காந்திகள் நம் நாட்டுக்கு வந்தும் பாப்பாரப்பட்டியும், கீழ்வெண்மணிகளும், மாற்றம் அடைய முடிந்ததா? இதுவரை இல்லையே! இதை விட மோசமாக இருந்த அந்த அரபுகளை இறை நம்பிக்கையை ஊட்டி அந்த மக்களின் இன வெறியை அழித்தது இஸ்லாத்துக்கு கிடைத்த வெற்றியல்லவா!

//யார் வறுமைக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்களோ அவர்களைத் தான் குற்றத்தின் கைகள் பற்றுகிறது என்பதாக புரிந்து கொண்டேன்.//

ஜெயலலிதா, சசிகலா, லல்லுபிரசாத் யாதவ், கருணாநிதி போன்றோர் வறுமையின் கோரப்பிடியில் இருந்த போதா ஊழல் செய்து மாட்டிக் கொண்டார்கள்! இல்லையே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

கோவி.கண்ணன் said...

//பெண் குழந்தை பிறந்தால் உயிருடன் புதைத்து விடுவார்கள். தந்தையோ சமூகத்துக்கு வர வெட்கப்பட்டுக் கொண்டு ஒரு மாதம் வரை தலை மறைவாகி விடுவானாம். இதுதான் அன்றைய அரபுகளின் வாழ்க்கை. முகமது நபியின் வருகைக்கு பிறகுதான் அந்த மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாற்றப்படுகிறது. காலை எழுவதிலிருந்து இரவு படுக்கைக்கு செல்வது வரை பல சவுதிகள் இஸ்லாத்தை முன் மாதிரியாக கொள்கிறார்கள். பெரும்பாலான முஸ்லிம்களின் நிலையும் அதுவே!
//

இதுவும் உலகெங்கிலும் உள்ள நடைமுறைதான், அதை நாகரீக வளர்ச்சி என்பார்கள். இப்போதெல்லாம் எங்கே உடன்கட்டை ஏ(ற்)றுகிறார்கள் காட்டுங்கள் பார்ப்போம்.

//எத்தனை பெரியார்கள், எத்தனை அம்பேத்கார்கள், எத்தனை காந்திகள் நம் நாட்டுக்கு வந்தும் பாப்பாரப்பட்டியும், கீழ்வெண்மணிகளும், மாற்றம் அடைய முடிந்ததா? இதுவரை இல்லையே! இதை விட மோசமாக இருந்த அந்த அரபுகளை இறை நம்பிக்கையை ஊட்டி அந்த மக்களின் இன வெறியை அழித்தது இஸ்லாத்துக்கு கிடைத்த வெற்றியல்லவா!//

என்ன புண்ணியம் ? அரபுக்கள் அல்லாதவரை சக மனிதர்களாக நினைக்கிறார்களா பாருங்கள், சுற்றி உள்ள ஏழைநாடுகளின் சாமரத்தால் சவுதி குளீரப்பட்டுவருகிறது. சவுதியர்களைப் பொருத்து நீங்கள் இஸ்லாமியர் கிடையாது இந்தியன். உங்களுக்கு வேண்டுமானால் அவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு இடம் கொடுப்பார்கள். மற்றபடி உங்களை சக முஸ்லிம் என்று வாரி அணைத்துக் கொள்வதில்லை. இந்த வளைகுடா நாடுகள் நினைத்தால் உலகில் இஸ்லாமியர்களில் ஏழைகளே இருக்க முடியாது.

//ஜெயலலிதா, சசிகலா, லல்லுபிரசாத் யாதவ், கருணாநிதி போன்றோர் வறுமையின் கோரப்பிடியில் இருந்த போதா ஊழல் செய்து மாட்டிக் கொண்டார்கள்! இல்லையே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!//

நான் சுட்டியது வருமை குறித்து...நீங்கள் ஊழல் குற்றச் சாட்டுகளைப் பற்றிக் கூறுகிறீர்கள், நீங்கள் மேலே குறிப்பிட்டவர்களால அதிலிருந்து மீள முடிந்தது, ஆனால் நான் சுட்டியவற்றில் ? உதாரணம் கூறும் போது பொருந்துவதாக சொன்னால் நன்றாக இருக்கும்.

தனிமனித ஒழுக்கத்தை தயவு செய்து மதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள், இப்படிசெய்வதால் தனிமனித ஒழுங்கீனமும் மதத்தினால் ஏற்படுத்தப்படுகிறது என்று மறைமுகமாக ஒப்புக் கொள்வதாகும். ஏனெனில் தீவிரவாதிகள் கூட மதத்தின் பெயரால் தான் செயல்படுகிறார்கள். தனிமனித நற்செயல்களை மதத்துடன் ஒப்பிடுவது, மனிதனுக்கு மனிதன் உதவுதற்கு முன் மதத்தில் அது அனுமதிக்கப்பட்டு இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்வதாக புரிந்து கொள்ளப்படும்.

suvanappiriyan said...

//இதுவும் உலகெங்கிலும் உள்ள நடைமுறைதான், அதை நாகரீக வளர்ச்சி என்பார்கள். இப்போதெல்லாம் எங்கே உடன்கட்டை ஏ(ற்)றுகிறார்கள் காட்டுங்கள் பார்ப்போம்.//

சட்டத்துக்கு பயந்து உடன்கட்டை யாரையும் ஏற்றுவதில்லை. சட்டம் கொஞ்சம் தளர்ந்தால் திரும்பவும் அரங்கேற்றி விடுவார்கள். வட நாடுகளில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது. எனவே உலகம் உள்ளவரை மதத்தின் சட்டதிட்டங்கள் இருந்தே வரும். கடை பிடிப்பதில் வேண்டுமானால் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.

அரபுகளின் மாற்றத்தை நாகரீக வளர்ச்சி என்கிறீர்கள். இன்றும் உசிலம்பட்டியிலும் சேலத்திலும் கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தை கொல்லப்படுவதை எந்த வளர்ச்சி என்பீர்கள்? 'தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று ஒரு எல்லை இருக்கிறது. அதைத்தாண்டி அவர்களும் வரக்கூடாது. வரவும் மாட்டார்கள்' என்று பத்திரிக்கைக்கு பேட்டியும் கொடுப்பதை எந்த வித நாகரீக வளர்ச்சி என்று கூறுவீர்கள்?

//சவுதியர்களைப் பொருத்து நீங்கள் இஸ்லாமியர் கிடையாது இந்தியன். உங்களுக்கு வேண்டுமானால் அவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு இடம் கொடுப்பார்கள். மற்றபடி உங்களை சக முஸ்லிம் என்று வாரி அணைத்துக் கொள்வதில்லை.//

அப்படியென்று உங்களுக்கு யார் சொன்னது? சவூதியில் சில பள்ளிவாசல்களில் நான் இமாமாக(தலைவராக) நின்று தொழ வைத்திருக்கிறேன். என் பின்னால் சவூதி, பாலஸ்தீனி, எகிப்தியன், பாகிஸ்தானி என்று பல நாட்டவரும் தொழுகையில் ஈடுபட்டுள்ளார்கள். அங்கு நான் ஒரு இந்தியன் அல்ல. உலக முஸ்லிம்களில் ஒருவன். பல நாட்டவரும் ஒரே தட்டில் அமர்ந்து உணவு உண்ணும் காட்சியை இங்கு பரவலாக பார்க்கலாம். வெளிநாட்டவர் சவூதி பெண்களை மணந்து கொள்ள இருந்த தடையையும் அரசு தற்போது நீக்கி விட்டது.

இதே நேரம் நம் நாட்டையும் எண்ணிப் பார்க்கிறோம். ஒரே கோவில். ஒரே இந்து மதம். ஆனால் கோவிலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று ஒரு இடம். உங்களுக்கென்று ஒரு இடம். பிராமணர்களுக்கென்று ஒரு இடம் என்று இந்த காலத்திலும் பின்பற்றப்படுகிறதா இல்லையா?

//இந்த வளைகுடா நாடுகள் நினைத்தால் உலகில் இஸ்லாமியர்களில் ஏழைகளே இருக்க முடியாது.//

முகேஷ் அம்பானிகளும், ரத்தன் டாட்டாக்களும் மனது வைத்தால் நம் நாட்டு குடிசைகளையெல்லாம் கோபுரமாக்கி விடலாம் என்று நானும் சொல்லலாம்.

//நான் சுட்டியது வருமை குறித்து...நீங்கள் ஊழல் குற்றச் சாட்டுகளைப் பற்றிக் கூறுகிறீர்கள்,//

ஊழல் செய்வது குற்ற செயல்களின் பால் வராது என்பது போல் இருக்கிறது உங்கள் வாதம். இறை நம்பிக்கை ஒன்றுதான் எக்காலத்திலும் ஒரு மனிதனை தடம் புரளாமல் வைத்திருக்கும்.

//ஏனெனில் தீவிரவாதிகள் கூட மதத்தின் பெயரால் தான் செயல்படுகிறார்கள்.//

சட்டங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் ஏற்படும் குழப்பம் இது. இதில் மதத்தை நாம் எப்படி குறை காண முடியும்?

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்
சரியான நறுக்கென்ற பதில்
நன்றி சுவனப்பிரியன்

கோவி.கண்ணன் said...

///சுவனப்பிரியன் said...

//இதுவும் உலகெங்கிலும் உள்ள நடைமுறைதான், அதை நாகரீக வளர்ச்சி என்பார்கள். இப்போதெல்லாம் எங்கே உடன்கட்டை ஏ(ற்)றுகிறார்கள் காட்டுங்கள் பார்ப்போம்.//

சட்டத்துக்கு பயந்து உடன்கட்டை யாரையும் ஏற்றுவதில்லை. சட்டம் கொஞ்சம் தளர்ந்தால் திரும்பவும் அரங்கேற்றி விடுவார்கள். வட நாடுகளில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது. எனவே உலகம் உள்ளவரை மதத்தின் சட்டதிட்டங்கள் இருந்தே வரும். கடை பிடிப்பதில் வேண்டுமானால் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். //



அனானி நண்பர் சொன்னது போல் என்ன 'நறுக்' இருக்கிறது என்று தெரியல, முழுவதும் சப்பைக்கட்டு. நீங்களே ஒரு பதிவில் வளைகுடாவில் கடுமையான (இஸ்லாமிய) சட்டங்கள் இருப்பதால் குற்றங்கள் குறைவதாக எழுதி இருக்கிறீர்கள். அங்கேயும் அதே தானே அதில் தனிப்பெருமை என்ன இருக்கிறது. இங்கே உடன்கட்டை இல்லாமல் இருப்பதற்கு சட்டம் தான் காரணமாக இருக்கிறது என்பது நகைச்சுவை. இப்போதெலலம் பெண்கள் அவ்வளவு இழிச்சவாய் கிடையாது, எல்லாம் ஓரளவு படித்து இருக்கிறார்கள், யாராவது உடன்கட்டை ஏற்ற முயன்றால் அவர்களையே சிதையில் தள்ளிவிடுவார்கள். உலகம் முழுவதும் மதச்சட்ட திட்டங்களின் 'பிடியில்' இருக்கிறது என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும்.

//அரபுகளின் மாற்றத்தை நாகரீக வளர்ச்சி என்கிறீர்கள். இன்றும் உசிலம்பட்டியிலும் சேலத்திலும் கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தை கொல்லப்படுவதை எந்த வளர்ச்சி என்பீர்கள்? 'தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று ஒரு எல்லை இருக்கிறது. அதைத்தாண்டி அவர்களும் வரக்கூடாது. வரவும் மாட்டார்கள்' என்று பத்திரிக்கைக்கு பேட்டியும் கொடுப்பதை எந்த வித நாகரீக வளர்ச்சி என்று கூறுவீர்கள்?//



அப்படியா ? உசிலப்பட்டிக்கு ஏனைய பட்டிகளில் நடக்கும் பெண் குழந்தை கொலை, சட்டத்தை ஏமாற்றி நடக்கும் ஒன்று, சிக்கினால் சட்டம் பாயும், ஆனால் இஸ்லாமிய பெண் குழந்தைகளை பள்ளிப்பக்கமே அனுப்பாத தலிபான்களுக்கு எதிராக என்னவிதமான நடவடிக்கைகளை இஸ்லாமிய சட்டம் எடுத்தது என்று தெரிவித்துவிட்டு உசிலம்பட்டி பேசினால் நன்று.

//அப்படியென்று உங்களுக்கு யார் சொன்னது? சவூதியில் சில பள்ளிவாசல்களில் நான் இமாமாக(தலைவராக) நின்று தொழ வைத்திருக்கிறேன். என் பின்னால் சவூதி, பாலஸ்தீனி, எகிப்தியன், பாகிஸ்தானி என்று பல நாட்டவரும் தொழுகையில் ஈடுபட்டுள்ளார்கள். அங்கு நான் ஒரு இந்தியன் அல்ல. உலக முஸ்லிம்களில் ஒருவன். பல நாட்டவரும் ஒரே தட்டில் அமர்ந்து உணவு உண்ணும் காட்சியை இங்கு பரவலாக பார்க்கலாம். வெளிநாட்டவர் சவூதி பெண்களை மணந்து கொள்ள இருந்த தடையையும் அரசு தற்போது நீக்கி விட்டது. //



நானும் அதைத்தான் சொன்னேன், இஸ்லாமியர் என்பதால் உங்களுக்கு மசூதியில் தொழ இடம், இஸ்லமிய சடங்குகளில் கலந்து கொள்ள உரிமம கொடுத்திருப்பார்கள், மற்றபடி நீங்கள் அங்கு ஒரு இந்தியன் தான்

//இதே நேரம் நம் நாட்டையும் எண்ணிப் பார்க்கிறோம். ஒரே கோவில். ஒரே இந்து மதம். ஆனால் கோவிலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று ஒரு இடம். உங்களுக்கென்று ஒரு இடம். பிராமணர்களுக்கென்று ஒரு இடம் என்று இந்த காலத்திலும் பின்பற்றப்படுகிறதா இல்லையா? //



அப்படியா, அதற்கெல்லாம் சிதம்பரம் போன்ற கோவில்களில் போராடி உரிமை நிலைநாட்டப்பட்டுக் கொண்டு தான் வருகிறது, காஃபீர்களுக்கு நீங்கள் எங்கு இடம் கொடுத்திருக்கிறீர்கள் என்று சொன்னால் தெரிந்து கொள்வேன்.

//முகேஷ் அம்பானிகளும், ரத்தன் டாட்டாக்களும் மனது வைத்தால் நம் நாட்டு குடிசைகளையெல்லாம் கோபுரமாக்கி விடலாம் என்று நானும் சொல்லலாம். ஊழல் செய்வது குற்ற செயல்களின் பால் வராது என்பது போல் இருக்கிறது உங்கள் வாதம். //



அதுவும் குப்பை இதுவும் குப்பை தான் என்று சொல்வது போல் இருக்கிறது, பிறகு உயர்த்தி சொல்ல என்ன இருக்கிறது.

நான் இங்கே இந்துமதத்திற்கு சப்பைக் கட்ட வரவில்லை, தனிமனித நற்செயல்களை ஏன் மதத்தோடு தொடர்பு படுத்துகிறீர்கள் என்று மட்டும் தான் கேட்டேன்.

//இறை நம்பிக்கை ஒன்றுதான் எக்காலத்திலும் ஒரு மனிதனை தடம் புரளாமல் வைத்திருக்கும். ///

நான் இறை நம்பிக்கை பற்றி எங்கும் குறைத்துச் சொன்னது இல்லை. நான் மதநம்பிக்கையும் மதப்பிரச்சாரங்களை மட்டும் தான் பேசுகிறேன்.

இதற்கு மேல் இங்கே கருத்துரைக்க விருப்பம் இல்லை

Anonymous said...

சவூதியில் இருந்த பாகிஸ்தான் நண்பன் சவூதியின் கேவலத்தை எனக்கு சொல்லியுள்ளான். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த நீங்கள் எங்களுக்கு கதை விடுகிறீர்கள்.

suvanappiriyan said...

அனானி!

//சவூதியில் இருந்த பாகிஸ்தான் நண்பன் சவூதியின் கேவலத்தை எனக்கு சொல்லியுள்ளான். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த நீங்கள் எங்களுக்கு கதை விடுகிறீர்கள்.//

அவருக்கு அங்குள்ள குறைகள் மட்டுமே தெரிந்திருக்கும். நான் நிறைகளையும் பட்டியலிடடேன்.

suvanappiriyan said...

அனானி!

//அஸ்ஸலாமு அலைக்கும்
சரியான நறுக்கென்ற பதில்
நன்றி சுவனப்பிரியன்//

வஅலைக்கும் வஸ்ஸலாம்!
நன்றி!

suvanappiriyan said...

கோவிக் கண்ணன்!

//அனானி நண்பர் சொன்னது போல் என்ன 'நறுக்' இருக்கிறது என்று தெரியல, முழுவதும் சப்பைக்கட்டு.//

இதை அந்த அனானி நண்பரிடம்தான் கேட்க வேண்டும்.

//இஸ்லாமிய பெண் குழந்தைகளை பள்ளிப்பக்கமே அனுப்பாத தலிபான்களுக்கு எதிராக என்னவிதமான நடவடிக்கைகளை இஸ்லாமிய சட்டம் எடுத்தது என்று தெரிவித்துவிட்டு உசிலம்பட்டி பேசினால் நன்று.//

தாலிபான்கள் செய்வது எல்லாம் இஸ்லாமாகாது. தாலிபான்கள் பெயரால் அமெரிக்க மீடியாக்கள் சொல்வதைத்தான் நாமும் செய்தியாக படிக்கிறோம். கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை என்று பெண்களுக்கு இஸ்லாம் உரிமைகளை வழங்கியே இருக்கிறது. அதை முறையாக கொண்டு செல்லாதது இஸ்லாமியர்களின் தவறு என்று வேண்டுமானால் சொல்லலாம்.

//மற்றபடி நீங்கள் அங்கு ஒரு இந்தியன் தான்//

அங்கு என்ன? எங்குமே நான் இந்தியன்தான். இந்திய முஸ்லிமாக பிறந்தேன். இந்திய முஸ்லிமாக வாழ்கிறேன். இந்திய முஸ்லிமாகவே மரிப்பேன் இறைவன் நாட்டம் இருந்தால். என்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையும் படுகிறேன்.

//சிதம்பரம் போன்ற கோவில்களில் போராடி உரிமை நிலைநாட்டப்பட்டுக் கொண்டு தான் வருகிறது,//

மாற்றம் ஏற்ப்பட்டால் தமிழன் என்ற முறையில் சந்தோஷப்படுவேன்.

//காஃபீர்களுக்கு நீங்கள் எங்கு இடம் கொடுத்திருக்கிறீர்கள் என்று சொன்னால் தெரிந்து கொள்வேன்.//

என் இதயத்தில். என் பள்ளி காலங்களிலிருந்து இன்று வரை எனது இந்து நண்பர்களோடு நட்புடனேயே பழகி வருகிறேன்(உங்களையும் சேர்த்தே). இந்த நட்பு வருங்காலங்களிலும் தொடரும்.

'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.' -குர்ஆன் 4:1

இந்த வசனத்தின்படி நீங்களும் எனது சகோதரன்தானே!

//அதுவும் குப்பை இதுவும் குப்பை தான் என்று சொல்வது போல் இருக்கிறது, பிறகு உயர்த்தி சொல்ல என்ன இருக்கிறது.//

ஒரு மார்க்கம் மனிதனை நான்கு வர்ணங்களாக பிரித்து அதன் கட்டுக்கோப்பு கலைந்து விடாமல் இன்று வரை காப்பாற்றி வருகிறது. மற்றொரு மார்க்கம் உலக மக்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையிலிருந்து பிறந்த சகோதரர்களே என்று சகோதரத்துவத்தை விதைக்கிறது. இரண்டுக்குமே வித்தியாசம் இல்லை என்கிறீர்களா?

//இதற்கு மேல் இங்கே கருத்துரைக்க விருப்பம் இல்லை//

வருகை புரிந்து கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி!