மறைந்த என் தந்தை எதைப் பற்றிப் பேசினாலும் ‘சயன்டிஃபிக்கா பாத்தோம்னா...’ என்று சொல்லும் வழக்கம் கொண்டிருந்தார். அந்தத் தலைமுறையின் மனநிலையை அது பிரதிபலித்தது என நான் நினைப்பதுண்டு.
இந்தியாவின் மரபான கல்விமுறை இரண்டு. மதக்கல்வி, தொழில்கல்வி. அவை குருகுல முறைப்படி கற்றுக்கொடுக்கப்பட்டன. ஐரோப்பியக் கல்விமுறை இங்கே ஆங்காங்கே அறிமுகமாகியிருந்தது. ஆனால், 1937-ல் இந்திய தேசியக் காங்கிரஸ் மாகாண சபைகளுக்கான தேர்தலில் பங்கேற்று, நாடெங்கும் காங்கிரஸ் அரசுகள் அமைந்தபோதுதான் தேசியப் பொதுக்கல்வி பற்றிய விழிப்புணர்ச்சி உருவாகியது.
சுதேசிக் கல்வி
ஒருங்கிணைந்த கல்விக் கொள்கைகள் விவாதித்து உருவாக்கப்பட்டன. காங்கிரஸ் அமைப்பு இந்தியாவெங்கும் சுதேசிக் கல்வி என்ற கோஷத்தைக் கொண்டுசேர்த்தது. கிராமங்கள்தோறும் ஆரம்பப் பாடசாலைகள் அமைந்தன. இந்தியாவின் பொதுக்கல்வியின் உண்மையான தொடக்கம் அதுதான்.
என் தந்தை அந்த எழுச்சியின் விளைவாகப் பள்ளிக்குச் சென்ற தலைமுறையினரில் ஒருவர். அவரது ஊரில் தேசியவாதி ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்விக்கூடம் ஒன்று அமைந்ததுதான் அப்பா கல்வி கற்பதற்கான காரணம்.
அந்தக் காலகட்டத்தின் சில அடிப்படை மனப்பதிவுகள் அவரிடம் கடைசிவரை இருந்தன. அதில் முக்கியமானது, அறிவியல் நோக்குதான் நவீனக் கல்வியின் அடிப்படை என்ற எண்ணம். இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு ஐரோப்பாவில் வளர்ந்துவரும் நவீன அறிவியலைக் கற்றுக்கொள்வது மிக அவசியமானது என்ற சிந்தனை அன்றைய தேசியவாதிகள் அனைவரிடமும் வேரூன்றியிருந்தது; அந்தக் காலக் கல்வியில் அது பிரதிபலித்தது.
நிகழ மறுத்த கொந்தளிப்பு
நவீன அறிவியல் என்று அவர்கள் நம்பியது நிரூபணவாதத்தைத்தான் (எம்பீரிசிஸம் -empiricism). புறவயமான சோதனைகள் மூலம் கண்ணுக்கும் கருத்துக்கும் நிரூபித்துக்காட்டப்படுவதே உண்மை என நம்புவதைத்தான் அவர்கள் அறிவியல் என்று சொன்னார்கள். படித்தவர்கள் அறிவியல்பூர்வமாகச் சிந்திக்க வேண்டும் என்று அவர்கள் நம்பினர்.
எவ்வளவு விரைவாக அலோபதி மருத்துவம் இந்தியாவில் காலூன்றியது என்பதே இதற்கு ஆதாரம். நுண்கிருமிகள் மூலம் நோய்கள் பரவுகின்றன என்ற கருத்து, இந்தியாவின் பல்லாயிரம் ஆண்டு மருத்துவ ஞான மரபுக்கு முற்றிலும் புதியது. நோய் என்பது உடலின் சமநிலைக் குறைவின் விளைவு என்றே நாம் நம்பிவந்தோம். அவ்வாறு ஒரு புதுக் கருத்து நம்முடைய சிந்தனையை வந்து மோதும்போது எவ்வளவு பெரிய கொந்தளிப்பு நிகழ்ந்திருக்க வேண்டும்… எவ்வளவு விவாதங்கள் நடைபெற்றிருக்க வேண்டும்!
ஒன்றுமே நிகழ வில்லை. வெறும் 20 ஆண்டுகளில் இந்திய மருத்துவ மரபு கிட்டத்தட்ட முழுமையாகவே கைவிடப்பட்டு, அலோபதி மருத்துவம் ஒரே மருத்துவமுறையாக இங்கே நிலைகொண்டது. என் தந்தையின் தலைமுறை அலோபதி மருத்துவம் மீது பெரும் நம்பிக்கைகொண்டிருந்தது. பல்லக்கில் உலாவந்த ஆயுர்வேதிகளின் குடும்பங்கள் பட்டினியால் வாடுவதை என் சிறுவயதில் கண்டிருக்கிறேன்.
பகுத்தறிவின் பொற்காலம்
ஆடைகளில், ஆச்சாரங்களில் நிகழ்ந்த இந்த மாற்றத்தைப் பகுத்தறிவு என்ற சொல்லால் நாம் சுட்டிக்காட்டுகிறோம். 1950-1980 வரையிலான 30 ஆண்டு காலத்தை இந்தியாவின் பகுத்தறிவியக்கத்தின் பொற்காலம் என்று சொல்லலாம். இந்தியா எங்குமே பகுத்தறிவை முன்வைத்த இடதுசாரி இயக்கங்கள் அரசியல் செல்வாக்குபெற்றன.
பகுத்தறிவுடன் இருப்பதே அறிவுடைமை என்ற நம்பிக்கை படித்தவர்களிடையே பரவலாக இருந்தது. கடவுள் நம்பிக்கை, குலச் சடங்குகள், சாதி போன்று எளிதில் மாற்றிக்கொள்ள முடியாத விஷயங்களைக் கொஞ்சம் வெட்கத்துடன் அந்தரங்கமாக வைத்துக்கொண்டனர். ஒரு மன்னிப்புகோரும் வகையில், “என்ன இருந்தாலும் ஒரேயடியா அப்படி விட்டுர முடியாதே” என்றெல்லாம்தான் அதைப் பற்றிச் சொல்வார்கள்.
போலி அறிவியல்
80-களுக்குப் பின் ஒரு மாறுதல் நிகழ ஆரம்பித்தது. மத நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றுக்கு எளிமையான அறிவியல் விளக்கங்களை அளிக்க ஆரம்பித்தனர். குளித்த பின்னர் விபூதி பூசுவதால் சளி பிடிப்பதில்லை என்பதுபோல எழுதப்பட்ட ‘அர்த்தமுள்ள மத’விளக்கங்கள் வந்தன. (அதற்கு ஏன் விபூதி? டால்கம் பவுடர் போதாதா என்று கேட்கக் கூடாது.) கோயிலில் பூஜைக்கு வைத்த வெற்றிலையில் மின்னூட்டம் உருவாகியிருக்கிறது, அந்த மின்னூட்டம் கோபுரக் கலசங்கள் வழியாக இறங்கிவந்திருக்கிறது என்பதுபோல போலி நிரூபணச் சோதனைகள் பரப்பப்பட்டன.
சென்ற தலைமுறையில் பொதுக்கல்வி எழுச்சிபெற்றபோது, மதக் கல்வி முழுமையாகவே கைவிடப்பட்டது. இந்து மதத்தைப் பொறுத்தவரை அதன் மெய்யியல், தத்துவம், குறியீடுகள் ஆகியவற்றைப் பற்றிய மிக எளிய புரிதல்கள்கூட சராசரி இந்துவிடம் இருப்பதில்லை. அதே சமயம், அவற்றில் ஆழமான பக்தியும் உள்ளது. மறுபக்கம் இவர்கள் அறிந்தது மிகமிக எளிய நிரூபணவாத அறிவியலை மட்டுமே. அறிவியல் கோட்பாடுகளை உருவாக்கும் அடிப்படைத் தத்துவநோக்கு பற்றிய அறிமுகமே இவர்களுக்கு இல்லை.
ஆகவே, தாங்கள் அறிந்த எளிமையான நிரூபணவாத அறிவியலைக் கொண்டு தாங்கள் நம்பும் மதச் சடங்குகளையும் குறியீடுகளையும் விளக்குவதற்காக முயல்கிறார்கள். விளைவாக, அசட்டுத்தனமான போலி அறிவியல் ஒன்று உருவாகி, இன்று எங்கும் புழங்கிக்கொண்டிருக்கிறது. செல்லாக்காசுதான் அதிவேகமாகப் புழங்கும்.
இரண்டாவது மூடநம்பிக்கைக் காலம்
இந்தியாவின் நவீன வரலாற்றில் இதை இரண்டாவது மூடநம்பிக்கைக் காலம் என்று சொல்லலாம். இந்த மூடநம்பிக்கை கொண்டவர்களில் கணிசமானவர்கள் உயர்கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆன்மிகம், தியானம், மாற்று மருத்துவம், பல்வேறு வகையான ‘ஹீலிங்’ முறைகள், விதவிதமான சோதிடங்கள் என்று ஏராளமான வட்டங்கள் இன்றுள்ளன.
ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், அவரது குரு அவருடைய குண்டலினியைக் கையால் தொட்டுக் காட்டியதாகவும் அங்கே ஒரு பாம்பின் சலனத்தை அவர் தொட்டு உணர்ந்ததாகவும் என்னிடம் சொன்னார். நான் சொன்னேன், ‘குண்டலினி என்பது ஓர் உறுப்போ அமைப்போ அல்ல… அது ஓர் உருவகம். மனிதனின் அடிப்படை செயல்விசையான காமத்தைத்தான் அப்படி உருவகித்திருக்கிறார்கள். யோகம் என்பது நீங்கள் நினைப்பதுபோல உடற்பயிற்சி அல்ல. அது குறியீடுகள் வழியாக நிகழ்த்தப்படும் ஓர் அகப்பயணம். நீங்கள் கற்க வேண்டிய ஆதாரமான பழைய நூல்களை வேண்டுமென்றால் சொல்கிறேன். இதை மரபான முறையிலும் நவீன நோக்கிலும் 20 ஆண்டுகள் கற்றிருக்கிறேன்.’
ஆனால், அவர் என் அறியாமைக்காக இரங்கி ஒரு புன்னகையை அளித்தார். ‘நீங்க பழைய பார்வையிலே பேசிட்டிருக்கீங்க சார்... நான் சயன்டிஃபிக்கா சொல்றேன்’ என ஆரம்பித்து ‘குண்டலினி, நெற்றிக்கண் இன்ன பிறவற்றை அமெரிக்க விஞ்ஞானிகள் சோதனைச்சாலையில் நிரூபித்துவிட்டார்கள்’ என விளக்க ஆரம்பித்தார். ‘சயன்டிஃபிக்’ என்ற சொல்லை மீண்டும் கேள்விப்படுகிறேன். முற்றிலும் வேறு சூழலில், வேறு பொருளில்!
அறிவியலும் தத்துவமும்
அறிவியல் என்பது தனக்கே உரிய தர்க்கமுறையைக் கொண்ட ஓர் அறிவியக்கம். நிரூபணவாதம் என்பது அதன் ஒரு பகுதிதான். அறிவியலின் சாரம் தத்துவத்துடன் உரையாடக் கூடியது. தத்துவம் தன்னுடைய தேடலை உருவகங்கள் மூலம் தேடிச் செல்லக்கூடிய ஒன்று. இரண்டு அறிதல் முறைகளின் அடிப்படை விதிகளையும் அறிந்தால் மட்டுமே இரண்டும் சந்திக்கும் புள்ளிகளைப் பற்றி நாம் பேச முடியும்.
இரண்டையும் புரிந்துகொள்ளாமல் குழப்பிக்கொள்ளும் இன்றைய போலி அறிவியலில் இருந்து தப்ப, இன்னொரு அறிவியக்கம் இங்கே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இரண்டாவது பகுத்தறிவியக்கம் அது.
- ஜெயமோகன், எழுத்தாளர், தொடர்புக்கு: jeyamohan.novelist@gmail.com
The Hindu.
இந்துத்வாவாதியாக அறியப்படும் ஜெயமோகனிடமிருந்து ஒரு வித்தியாசமான கட்டுரை! இந்து மதத்தின் கொள்கைகள் ஒரு வேளை சலிப்பைத் தந்து விட்டதோ என்னவோ? நமது நாட்டு கலை கலாசாரம், இறை பக்தி என்பதெல்லாம் மிக உயர்ந்த தரத்திலேயே முன்பு இருந்துள்ளன. இறைவனைப் பற்றிய பல ஆக்கங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இடையில் ஆரியர்களால் குழப்பப்பட்ட இந்து மதம் தான் தற்போது நம் கண் முன் உள்ளது. இந்த ஆரிய கருத்துக்களை நீக்கி விட்டு நமது பண்டைய இலக்கியங்களை நோக்கினால் அது ஏறக்குறைய இஸ்லாத்தை அடியொட்டியதாகவே இருக்கும். எனவே ஜெயமோகன் போன்றவர்கள் புதிதாக ஒரு பகுத்தறிவு இயக்கத்தை தேடுவதை விட்டு உங்கள் அருகிலேயே உங்கள் பக்கத்து வீடுகளில் வசித்து வரும் இஸ்லாமியர்களையும், இஸ்லாத்தையும், குர்ஆனையும், முகமது நபியையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுஙகள். நமது நாட்டுக்கு நிரந்தர தீர்வு இதில்தான் உள்ளது என்ற முடிவுக்கு வருவீர்கள்.
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts
Friday, November 29, 2013
Tuesday, January 08, 2013
இளையராஜா உதிர்த்த சமீபத்திய முத்துக்கள்
இளையராஜா உதிர்த்த சமீபத்திய முத்துக்கள்(உளரல்கள்)!
சமீப காலமாக இளையராஜா மேடையேறினால் ஏதாவது சர்ச்சைக்கிடமான பேச்சுக்களையே பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழாவுக்கு கௌரவ விருந்தினராக வந்திருந்தார். அதில் அவர் பேசிய சில முத்துக்களை பார்ப்போம்.
"வருஷா வருஷம் யாருக்காவது விருது கொடுத்தே ஆவது என்று முடிவு பண்ணி விட்டீர்கள். ஏற்கெனவே நீ முடிவு பண்ணி வைத்து விட்டு கொடுக்கும் விருது யாருக்கு தேவை? நான் டெல்லி தேசிய விருதைப் பற்றி சொல்கிறேன்"
இதற்கு முன்னால் இளையராஜாவுக்கு தேசிய அவார்டு கொடுக்கவில்லையா? தற்போதய காலத்துக்கு தக்கவாறு பல புதிய இசையமைப்பாளர்கள் வந்தால் அவர்களையும் தேர்ந்தெடுப்பதுதானே நியாயமாக இருக்கும்? திறமையானவர்கள் வருடத்துக்கு வருடம் மாறுபடத்தானே செய்வார்கள். இதற்கு ஏன் இளையராஜா இந்த அளவு கோபப்பட வேண்டும்?
'சார் நீதானே என் பொன் வசந்தம் பாடல்களெல்லாம் சூப்பரா இருக்கு'
"அத சொல்றதுக்கு உனக்கு என்ன தகுதியிருக்கிறது. இசையைப் பற்றி ஏதாவது உனக்குத் தெரியுமா? இதற்கு முன்னால் இது போன்ற இசைகளை தரம் பிரித்து கேட்ட அனுபவம் உண்டா? என்று நான் கேட்க மாட்டேனா?"
அடப் பாவமே! இசை நல்லா இருக்கு என்று சொன்ன உங்கள் ரசிகருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? இது போன்ற இசை அமைப்பாளர்களை எல்லாம் கடவுள் நிலைக்கு உயர்த்தி தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்களே அவர்களுக்கு இதுவும் வேண்டும்...இன்னமும் வேண்டும். அந்த ரசிகர்களுக்கு இது போன்ற அவமானகரமான பதிலைக் கொடுப்பதுதான் ஒரு இசையமைப்பாளருக்கு அழகா?
இந்த விழாவில் ஒரு கவிஞருக்கு பரிசு கொடுக்க இவரை அழைத்துள்ளனர். இவரைப் பார்த்து விருது வாங்க வந்தவர் 'நீரோ ஒரு இசையமைப்பாளர். நான் ஒரு கவிஞன். கவிதைகளைப் பற்றி என்ன அதிகம் உங்களுக்கு தெரிந்து விட்டது என்று நினைத்து எனக்கு பரிசு கொடுக்க வந்து விட்டீர்கள்?' என்று அவர் கேட்டால் இளையராஜாவின் மனது எந்த அளவு சங்கடப்படும். இதை இவர் உணர வேண்டாமா? ஒரு ரசிகனுக்கு சாஸ்திரிய சங்கீதங்கள் அனைத்தும் தெரிந்திருந்தால்தான் ஒரு இசையைப் பற்றி கருத்து சொல்ல முடியுமா? என்ன சொல்ல வருகிறார் இவர்?
'இசை எதில் இல்லை? பேசும் பேச்சில் இல்லையா? சிரிப்பில் இல்லையா? நாம் கோவிலுக்கு சாமி கும்பிடப் போனால் மனது ஒரு நிலையில் இருக்கிறதா? அலை பாய்கிறதல்லவா? அதே நேரம் ஒரு ஐந்து நிமிடம் 'ஜனனி ஜனனி' போன்ற பாடல்களை மெய் மறந்து கேட்டால் மனது ஒரு நிலைக்கு வருகிறதல்லவா?'
இது அடுத்த காமெடி. 'ஜனனி ஜனனி' பாட்டை கேட்கும் உங்கள் ரசிகன், அடுத்த ஐந்து நிமிடத்தில் 'வாடி என் கப்பங் கிழங்கே' என்ற பாடலைக் கேட்பானே. இன்னும் சில நிமிடங்களில் 'நிலா காயுது...நேரம் நல்ல நேரம்' என்ற பாடலையும் அதன் இடையில் வரும் முக்கல் முனகல் வரிகளையும் கேட்பானே. இந்த அழகில் அங்கு பக்தி வருமா! அல்லது விரசம் வருமா?
அடுத்து கோவிலுக்கு சாமி கும்பிட செல்பவர்களை இதைவிட மோசமான வார்த்தைகளில் ஒருவர் கேவலப்படுத்திவிட முடியாது. இனி தமிழர்கள் யாவரும் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இறை வழிபாடு செய்ய வேண்டுமாம். கோவிலுக்கு செல்வதெல்லாம் வெத்து வேலை என்கிறார் இவர். இதற்கு இந்து மத ஆர்வலர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
'தாயின் அன்பை விட, தகப்பனின் அன்பை விட், குழந்தைகளின் அன்பை விட இவர்களிடமிருந்தெல்லாம் கிடைக்காத நிம்மதி இசையில் உங்களுக்கு கிடைக்கும்.'
பெற்றோரின் பாசத்தை விட இசை இவருக்கு முக்கியமாகப் போய் விட்டது. இவருக்கு இசை சோறு போடுவதால் அந்த இசையை தலையில் தூக்கி வைத்து கொண்டாடட்டும். அதற்காக மற்றவர்களின் விலை மதிக்க முடியாத பாசப் பிணைப்புகளை கொச்சைப் படுத்த வேண்டாம்.
---------------------------------------------------
'சாருநிவேதா தனது 'கனவுகளின் நடனம்' புத்தகத்தில் தங்களை கடுமையாக விமரிசித்து உள்ளாரே! பார்த்தீர்களா?'
-குமுதம் வாசகர்
இளையராஜா: எனது பெயரை பயன்படுத்தி எத்தனையோ பேர் தங்களுடைய கடைகளுக்கு பெயர் வைக்கின்றனர். 'நானும் ராஜாவும்' என்று கூட எஸ்பிபி கச்சேரி பண்ணினான்.
என்பெயரை வைத்து ஒரு எழுத்தாளர் பிரபலமாக நினைக்கிறார். நடந்து விட்டுப் போகட்டுமே...தன்னை பிரபல்யப் படுத்திக் கொள்ள எத்தனையோ வழி...அதில் இதுவும் ஒன்று. என்னைப் பற்றி எழுதினால் எல்லோரும் படிப்பார்கள் என்ற எண்ணமும் இருக்கலாம்.
சாருநிவேதா வை விடைப்பது போல் இடையில் எஸ்பிபி யையும் ஒரு பிடி பிடித்துள்ளார். இளையராஜா பெயரை போட்டுத்தான் தனது கச்சேரியை நடத்தும் நிலையில் பாலு உள்ளார் என்பது சற்று மிகைப்படுத்தலே. இதற்கு எஸ்பிபி தான் பதில் சொல்ல வேண்டும்.
--------------------------------------------------
நான் படிக்கும் காலங்களில் மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, மூடுபனி, அழகே உன்னை ஆராதரிக்கிறேன், என்று பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். இன்றும் அந்த பாடல்கள் பல வீடுகளில் ஒலித்துக் கொண்டே உள்ளன. ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட காலம் இருக்கிறது. முன்பு எம்எஸ்வியின் ராஜ்ஜியம், அடுத்த 20 ஆண்டுகள் இளையராஜாவின் ராஜ்ஜியம் தற்போது ரஹ்மானின் ராஜ்ஜியம் இன்னும் சில ஆண்டுகள் போனால் வேறொருவர் வரப் போகிறார். எனவே அதிகம் தெரிந்தவன் என்ற அகங்காரத்தை தூர வைத்து விட்டு சாதாரண சராசரி மனிதனாக வலம் வாருங்கள். அதுதான் உங்களின் வயதுக்கும், திறமைக்கும் ஏற்றதாக இருக்கும்.
அதை விடுத்து சற்று வித்தியாசமாக பேசப் போகிறேன் என்று மேடைகளில் உளரல்களை அரங்கேற்ற வேண்டாம் என்று இசை ஞானியிடம் கேட்டுக் கொள்கிறோம். இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு எதையாவது பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கோரிக்கை வைக்கிறோம்.
Friday, November 11, 2011
நைஜீரிய படுகொலைகளும நமது நாட்டு இந்து மதமும்!

நைஜீரியாவில் தினம் தினம் நடந்து வரும் படுகொலைகள் நம்மை வேதனைப்படுத்துகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் நைஜீரியாவில் நமது நாட்டின் இந்து மத பிரிவுகளைப் போல் சிறு சிறு குழுக்களாக இருந்துளளனர். ஒவ்வொரு குழுக்களும் நம் நாட்டைப்போல ஒரு சாதியாக மாற்றப்பட்டது. ஒவ்வொரு சாதிக்கும் நம் நாட்டின் வழக்கைப் போல் ஒரு கடவுள் ஏற்படுத்தப் பட்டது. வைதீகம், வேதாந்தம், சமணம், பௌத்தம் என்று எப்படி பல வாறாக இறைக் கொள்கை பிரிக்கப்பட்டதோ அதே போன்ற நிலைதான் நைஜீரியாவிலும். அவரவர் தங்களின் சாதிகளின் அடிப்படையில் தங்களின் வணக்கங்களை செலுத்தி வந்தனர். இதில் சமணம், பவுத்தம் என்று நம் நாடடில் எப்படி ஒரே மதத்துக்குள்ளேயே குழி தோண்டுதல் நடந்ததோ அது போன்ற பழங்குடி இன மோதல்களுக்கு நைஜீரியாவும் சளைக்கவில்லை. பல சாதிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் அழிக்கும் வேலை நன்றாகவே நடந்து வந்தது.
இப்படி மக்கள் பலவாறாக பிரிந்து அழிவின் உச்சத்தில் இருந்த போதுதான் அங்கு இஸ்லாமிய பிரசாரகர்கள் நுழைகின்றனர். இஸ்லாம் அந்த மக்களை 50 சதவீதம் ஆட்கொள்கிறது. ஆனால் அங்கும் ஒரு சில உயர் சாதிகள் நம் நாட்டைப் போலவே இஸ்லாத்தை ஏற்க மறுக்கின்றன. புதிதாக அவர்கள் நாட்டில் புகுந்த இஸ்லாமிய கொள்கையை விரட்ட முற்படுகின்றனர். வழக்கம்போல் தோல்வியே ஏற்படுகிறது. இஸ்லாத்தை முற்றிலுமாக நைஜீரியாவில் துடைக்க பழங்குடி இன மக்களால் முடியவில்லை. அன்று முதல் சமீப காலம் வரை நைஜீரிய பழங்குடியினருக்கும் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கும் சிறு சிறு மோதல்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது.
1960 வாக்கில் நைஜீரியா பல சோதனைகள் போரட்டங்களுக்குப் பிறகு சுதந்திரம் அடைகிறது. பெரும்பான்மையினராக இஸ்லாமியர்கள் இருந்ததால் ஆட்சி அதிகாரமும் முஸ்லிம்கள் வசம் வருகிறது. இதை விரும்பாத கிறித்தவ, பழங்குடி குழுக்கள் அவ்வப்போது சுதந்திர நைஜீரிய ஆட்சியாளர்களுக்கு இன்று வரை தொல்லை கொடுத்து வருகின்றனர்.
அதன்பின் நம் நாட்டைப் போலவே காலனி ஆதிக்கம் நைஜீரியாவிலும் ஏற்படுகிறது. போர்ச்சுக்கீசியர்கள் நைஜீரியாவை தங்களது ஆளமைக்கு கீழ் கொண்டு வருகின்றனர். அதன் பின் பிரிட்டிசாரின் வருகையும் நடக்கிறது. இவர்கள் வந்தவுடன் இஸ்லாமாகாத பழங்குடி மக்களை கிறித்துவர்களாக மாற்றுகின்றனர். எஞ்சிய மிகச் சிலர் இன்றும் பழங்குடியினராகவே வாழ்ந்து வருகின்றனர்.
1960 வாக்கில் நைஜீரியா பல சோதனைகள் போரட்டங்களுக்குப் பிறகு சுதந்திரம் அடைகிறது. பெரும்பான்மையினராக இஸ்லாமியர்கள் இருந்ததால் ஆட்சி அதிகாரமும் முஸ்லிம்கள் வசம் வருகிறது. இதை விரும்பாத கிறித்தவ, பழங்குடி குழுக்கள் அவ்வப்போது சுதந்திர நைஜீரிய ஆட்சியாளர்களுக்கு இன்று வரை தொல்லை கொடுத்து வருகின்றனர்.
இடையில் சில நாட்கள் சண்டையில்லாமல் இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் பழங்குடியினருடன் சமாதானமாக சென்று சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தனர். ஆப்ரிக்காவில் பட்டினி சாவு இல்லாத ஒரு நாடாக செல்வ செழிப்பிலும் சிறந்து விளங்கியது. அள்ள அள்ள குறையாத கனிம வளங்களும் நைஜீரியாவை மேலும் செல்வ நாடாக மாற்றியது.
நம்ம பெரியண்ணன் அமெரிக்காவுக்கு ஒரு நாடு செல்வ செழிப்பில் சிறந்து விளங்குவதை கண்டால் பொறுக்குமா? வழக்கம் போல் ஐரோப்பியர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு அந்நாட்டு கிறித்தவர்களுக்கு ஆயுதங்களையும் கொடுத்து இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட தூண்டுகிறது. கிறித்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களை பிரித்து தனி நாடாக்கும் முயற்ச்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. அங்குள்ள கனிம வளங்களை பங்கு போடுவதே பெரியண்ணனின் திட்டம். இதை எதிர்க்கும் இஸ்லாமிய அரசுக்கும் ஆதரிக்கும் கிறித்தவ மற்றும் பழங்குடி இன மக்களுக்கும் இடையிலான போராட்டமே தற்போது நடந்து வருவது.
வரலாறு இப்படி இருக்க நமது எழுத்தாளர் ஜெய மோகன் அந்த நாட்டு நிகழ்வை நம் நாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்.
//இந்தியாவில் என்ன வேற்றுமை? இந்தியாவை கிறித்தவ மயமாக்கும் காலனியாதிக்க முயற்சிகளை இந்துமதம் அனுமதிக்காமல் எதிர்த்து நின்றது. இஸ்லாமின் ஆதிக்கத்தை வென்றதுபோலவே கிறித்தவ ஊடுருவலையும் அது வென்றது. அதற்கான காரணம் என்ன? மிக எளிய விடைதான் ஏற்கனவே இந்து,சமண,பௌத்த மதங்களால் இந்தியாவின் சிறுவழிபாட்டுமரபுகள் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டுவிட்டிருந்தன. ஆகவே அவை நைஜீரியா போல தனித்தனி வழிபாட்டுக்குழுக்களாக தேங்கி இருக்கவில்லை. ஒன்றுடன் ஒன்று உரையாடி வளர்ந்து ஒருங்கிணைந்த சக்தியாக, வலுவான தத்துவ – வழிபாட்டு அடிபப்டையுடன் விளங்கின. ஆகவேதான் நைஜீரிய பழங்குடி மதங்களுக்கு நிகழ்ந்தது இந்துமதப்பிரிவுகளுக்கு நிகழவில்லை.//
-எழுத்தாளர் ஜெய மோகன்
அதாவது எழுத்தாளர் ஜெயமோகன் சொல்ல வருவது நமது நாட்டில் சாதிகள் மிகவும் ஆழமாக வேரூன்றி ஒவ்வொரு சாதியினரும் தங்கள் தெய்வங்களையும் வேதங்களையும் காப்பியங்களையும் ஒருங்கிணைத்ததால்தான் அதாவது இந்து மதம் என்ற ஒரு குடையின் கீழ் வந்ததால்தான் இஸ்லாமிய கிறித்தவ படையெடுப்புகள் இந்து மதத்தை அழிக்க முடியவில்லை என்கிறார். இது எந்த அளவு ஒத்துக் கொள்ளக் கூடிய கருத்து என்று எனக்கு விளங்கவில்லை.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சாதிகள் நிலைத்திருக்க வேண்டும் என்றும் மனிதர்கள் பல வருணங்களாக பிரிந்தே இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரா? அடுத்து எந்த காலத்தில் இந்து மத சாதிப் பிரிவுகளுக்குள் ஒற்றுமை இருந்தது? அப்படி இந்துக்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் மொகலாயர்கள் இந்த நாட்டை 1000 ஆண்டுகாலம் ஆட்சி செய்திருக்க முடியுமா?
அதன் பிறகு வந்த கிறித்தவர்கள் இந்த நாட்டை 300 வருட காலம் ஆட்சி செய்திருக்கத்தான் முடியுமா? மொகலாயர்களுக்கு முன்னால் வாழ்ந்த நமது பூர்வீக ஆட்சியாளர்கள் ஒழுங்காக மக்களை வைத்திருந்தால் அந்நியர்களின் ஆட்சி இத்தனை வருடம் தாக்குபிடித்திருக்க முடியுமா? சேர சோழ பாண்டியர்கள் அதிகாரத்துக்கு போட்ட சண்டைகளும் அதனால் மக்கள் பட்ட துன்பங்களுமே அந்நியர்களை இத்தனை வருட காலம் ஆட்சி செய்ய வைத்தது.
அடுத்து உலகிலேயே இஸ்லாமியர்களின் மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடிக்க போகிறது நமது இந்தியா. பாகிஸ்தான் இந்தியாவோடு சேர்ந்திருந்தால் அந்த இலக்கை என்றோ அடைந்திருக்கலாம். இவ்வளவு மதமாற்றங்கள் நடந்திருக்கின்றன. இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன. நிலைமை இப்படி இருக்க இந்தியாவில் இஸ்லாம் வெற்றி பெற முடியவில்லை என்று எதை வைத்து சொல்கிறார்?
இவ்வளவு தகவல் தொடர்பு சாதனங்களை பெற்ற நாம் காஸ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை நம் நாட்டை கட்டுக்குள் வைத்திருப்பதற்கே போதும் போதும் என்றாகி விடுகிறது. அந்த காலத்தில் அதுவும் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டில் ஆப்கானிஸ்தானத்திலிருந்து வந்த மொகலாயர்கள் இந்த நாட்டை அதுவும் பாகிஸ்தான் பங்களாதேசையும் சேர்த்து 1000 ஆண்டுகள் ஆட்சி செய்வது என்பது சாத்தியப்படுமா?
அடுத்து சாதிகளுக்குள ஒரு ஒற்றுமை இருந்தது என்கிறார் ஜெயமோகன். சமணர்களை வன்முறையால் ஒழித்தது தானே இன்றைய இந்து மதம்? அதே போல் பவுத்தத்தை இந்து மதத்தின் ஒரு பிரிவாக மாற்றியமைத்ததல்லவா நமது நாட்டு இந்து மதம். இனி குறு நில மன்னர்களுக்குள் சண்டை எந்த அளவு உக்கிரமாக இருந்தது என்பதையும் இனி பார்ப்போம்.
"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை (புறம் 76: 12)
என்று பாடியுள்ளார். இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. ஆயினும், மன்னர்கள் அவர்களது படைவீரர்கள் ஆகியோருடன் இது நின்று விடவில்லை. குடிமக்களையும் பாதிக்கும் ஒன்றாகவே போர் அமைந்தது. இதைச் சங்க நூல்கள் சுட்டுகின்றன.
பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார் என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,
"பகைவர் நாட்டில் தேர் செல்லும் தெருக்களைக் கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய். பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில் குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்". (புறநானூறு 15). இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர் வாழ்த்தும் பொழுது,
"வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்தலானே" (புறம் 6)
என்று வாழ்த்துகிறார். பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால் எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும் என்பது இதன் பொருளாகும்.
சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும் இரவும் கருதாது பகைவரது ஊரைத் தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின் புலம்பலோசையுடன் கொள்ளையிடுதலை விரும்புபவன் என்பதனை,
"எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின்"
என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும் வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக் கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.
பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல் அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய பாலை நிலத்திற்கு "செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல" என்ற உவமையைப் பயன்படுத்துகிறார்.
பகைவர் நாட்டைத் தீயிட்டு அழிக்கும் கொடுமை மட்டுமல்லாது போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப் பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன.
நன்னன் என்ற குறுநில மன்னன் தன்னுடைய பகைவர்களை வென்ற பிறகு அவர்களின் உரிமை மகளிரின் தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின் யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).
வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பழையன் என்ற மன்னனை வென்று அவன் மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப் பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான் (பதிற்றுப் பத்து 5ம் பத்து)
கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் மூவன் என்பவனைப் போரில் வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித் தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான்.
மத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற குறுநில மன்னனின் பற்களைப் பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில் பதித்து வைத்தான். (அகம் 211).
இத்தகையக் கொடுமைகள் தமிழ் மன்னர்களுக்கிடையில் நிகழ்ந்துள்ளன என்பதனையும் தமிழ் மக்களின் சொத்துக்களே அழிவுக்கு ஆளாயின என்பதனையும் நினைவிருத்திக் கொள்ளுவது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாகத் தனி மனிதர்களின் நாடு விரிவாக்கும் கொள்கையால் தமிழ்ச் சமுதாயம் அவலத்திற்காளானது.
இவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு நடந்த கொடுமைகள் என்றால் பதினொன்றாவது நூற்றாண்டில் படையெடுப்பின்போது நிகழ்ந்த கொடுமைகள் இவற்றை விஞ்சுவதாகவே உள்ளன.
ராஜ ராஜ சோழனின் மெய் கீர்த்திகளில் அவனது வெற்றிச் சிறப்புகளில் ஒன்றாக "இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று" என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜ ராஜன் தன் மகன் முதலாம் இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப் பெற்றான்.
முதலாம் இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற மேலைச் சளுக்கர் மன்னனுடன் போரிட்டு வென்று இரட்டைபாடியைக் கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன் மேற்கொண்ட பழி செயல்களை சத்தியாசிரையனின் கி.பி. ஆயிரத்தி ஏழாம் ஆண்டு காலத்திய கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 23940).
நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள் அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினான்.
இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின் ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வழங்கினான்.
சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன் காட்டுக்குள் ஓடிப்போனதாகவும், உடன்பாடு செய்து கொள்ளுவதாகச் சொல்லிய சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக் கொண்டு, மேற்கொண்ட செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது.
"தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றிலிருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண்பட்ட இடங்களிலெல்லாம் பெளத்த சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்" (சாஸ்திரி, 1989: 272).
வங்காள தேசத்து மன்னன் மகிபாலனை வென்று யானைகள், பெண்கள், செல்லம் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் (மேலது: 281).
முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின் மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற சிங்கள மன்னனை வென்றான். சிங்கள மன்னன் ஓடி ஒளிய அவனது தமக்கையையும், மனைவியையும் சிறை பிடித்ததுடன் அவனது தாயின் மூக்கை அறுத்தான் (ளு11 111; 5056).
இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.
- ஆ. சிவசுப்பிரமணியன்.
http://thatstamil.oneindia.in/art-culture/visai/mar05/siva.html
பண்டைய தமிழகத்தின் நிலை இவ்வாறு இருக்க இங்கு ஏதோ பாலாறும் தேனாறும் ஓடி மக்கள் சாதி வேறுபாடுகளை மறந்து சுபிட்சமாக வாழ்ந்ததால்தான் அந்நிய கலாசார படையெடுப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டன என்று எதை வைத்து ஜெயமோகன் எழுதுகிறார்?
நான் மதிக்கும் ஒரு சிறந்த எழுத்தாளரிடமிருந்து இத்தகைய கருத்தை எதிர்பார்க்கவில்லை.
Labels:
இந்தியா,
சமூகம்,
நைஜீரியா,
மொகலாயர்கள்,
ஜெயமோகன்
Subscribe to:
Posts (Atom)