வேலைக்குச் செல்லும் பெண்கள்!
'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்.ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு'-குர்ஆன் 4:32
'தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளை பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.......அவர்கள் மறைந்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்க்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.'-குர்ஆன் 24:31
சில குடும்பங்களில் வறுமையின் காரணமாக பெண்களை வேலைக்கு அனுப்புகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் வசதியானவர்கள் கூட காலத்தின் கட்டாயம் என்று பெண்களை வேலைக்கு அனுப்புகிறோம். இதனால் எழும் பிரச்னைகளைப் பற்றி யாருமே சிந்திப்பதில்லை. தினத் தந்தியில் வந்த செய்தியை படித்துப் பார்த்தால் அதன் விபரீதம் புரியும்.
31 டிசம்பர் 2009
வீட்டில் கணவரின் சந்தேகப் பார்வை; பஸ்சில் இடிமன்னர்களின் குறும்பு; அலுவலகத்தில் உயர்
அதிகாரிகளின் காமப் பார்வை!
வேலைக்கு போகும் பெண்கள் சந்திக்கும் `செக்ஸ்' கொடுமைகள்!
போலீஸ் கமிஷனர் முன்னிலையில் பெண்கள் பரபரப்பு பேச்சு
சென்னை, டிச.31-
வேலைக்குப் போகும் பெண்கள், தாங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள், `செக்ஸ்' கொடுமைகள் பற்றி நேற்று சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டனர்.
பெண்களின் பாதுகாப்பு
`பாதுகாப்பான சென்னை' என்ற இயக்கத்தை கமிஷனர் ராஜேந்திரன் தொடங்கி உள்ளார். அதன்
அடிப்படையில் சென்னை நகரில் வசிக்கும் பலதரப்பட்ட மக்களையும் தனது அலுவலகத்துக்கு
வரவழைத்து ஆலோசனைக் கூட்டங்களை கமிஷனர் ராஜேந்திரன் நடத்தி வருகிறார். வேலைக்குப் போகும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேலைக்குப் போகும் பலதரப்பட்ட பெண்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்குப் போகும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, வேலைக்குப் போகும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவர்களுக்கு ஏற்படும் `செக்ஸ்'
தொல்லைகள் குறித்தும் இவற்றையெல்லாம் தீர்க்க போலீசார் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஆவேசமாகவும், நகைச்சுவையாகவும், உணர்ச்சிகரமாகவும் தங்கள் கருத்துக்களையும், உள்ளக் குமுறல்களையும் கொட்டினார்கள்.
மூன்று விதம்
கமிஷனர் முன்னிலையில் இந்த பெண்கள் கொட்டிய உள்ளக்குமுறல்கள் வருமாறு:-
வேலைக்குப் போகும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மூன்று விதமாகச் சொல்லலாம். வீட்டில் சந்திக்கும் பிரச்சினை, அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ரோட்டில் நடந்து செல்லும் போது, பஸ் ஏற காத்திருக்கும் போது, பஸ்களில், ரெயில்களில் பயணம் செய்யும் போது ஏற்படும் உடல், உள்ள ரீதியான மற்றும் பாலியல் ரீதியான தொல்லைகள், அலுவலகத்தில் தனக்கு மேலும், கீழும் வேலை பார்க்கும் ஆண் அதிகாரிகள் கொடுக்கும் `செக்ஸ்' தொல்லைகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
வேலைக்கு பெண்கள் புறப்படும் போது நன்றாக ஆடை அணிந்து, அலங்காரம் செய்து சென்றால் சில கணவர்கள் பொறாமையோடு பார்க்கிறார்கள். இன்னும் சில கணவர்கள் சந்தேகப் பார்வை பார்க்கிறார்கள். இதனால் கணவர்களோடு வீட்டில் கடும் பிரச்சினைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. பையைத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்துவிட்டால் பலரும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கிறார்கள். ரோட்டில் தனியாக நடந்து செல்லும் போது எதிரில் வருபவர் சேட்டை பார்வை வீசுவார். பஸ் ஏற பஸ் நிலையத்தில் காத்திருக்கும் போது, வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை கிண்டல் பாட்டு பாடுகிறார்கள். பஸ்சில் ஏறிவிட்டால் போதும் இடிமன்னர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. பஸ் டிரைவர் `பிரேக்' போட மாட்டாரா என்று பல காமுகர்கள் ஏக்கத்தோடு நிற்கிறார்கள்.
`பிரேக்' அடித்தால் போதும் அந்தச் சாக்கில் பெண்கள் மீது சாய்ந்து அற்ப சுகம் காண்கிறார்கள்.
வெட்கத்தை விட்டுச் சொல்கிறோம், அவ்வாறு சாய்கிறவர்கள் முதலில் மார்பை குறி வைத்துத் தான் பிடிக்கிறார்கள். நாங்கள் அவர்களோடு சண்டை போடுவதா, எச்சரிக்கை செய்வதா, கன்னத்தில் அறைவதா என்பது புரியாமல் சில நேரங்களில் இடி மன்னர்களின் தாக்குதலைத் தாங்கிக் கொண்டு மவுனமாக அழுதுவிட்டுத் தான் வருகிறோம்.
மிரட்டல்
ஒரு வேளை எதிர்த்துச் சண்டை போட்டால், சிலர் பிளேடால் கீறி விட்டு ஓடிவிடுகிறார்கள்.
இன்னும் சிலர் கேவலமாகத் திட்டுகிறார்கள். இதையெல்லாம் சந்திக்க முடியாமல் நாங்கள் தவிக்கிறோம்.
அலுவலகத்துக்குச் சென்று விட்டால் உயர் அதிகாரிகளும், கீழ் அதிகாரிகளும் செய்யும் பாலியல் தொல்லைகள் சொல்லிமாளாது. இப்போது காணாத குறைக்கு செல்போனில் வேறு `ஓடிப் போகலாம் வர்றீயா' என்று கூப்பிடுகிறார்கள். செல்போன்களில் ஆபாசப் படங்களையும் அனுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர். ஒரு சினிமா படத்தில் `இப்படித் தான் இருக்க வேண்டும் பொம்பளை' என்ற பாடலை பாடினார். அந்தக் காலம் எல்லாம் இப்போது மலை ஏறிவிட்டது.
பெண்களாகிய நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். போலீசார் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
இருட்டான இடங்களில்...
பெண்கள் சில நேரங்களில் வேலைக்குப் போய்விட்டு இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்ப
வேண்டிய நிலை உள்ளது. அப்போது அவர்கள் ரோடுகளில் தனியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு பெண்கள் தனியாக நடந்து செல்லும் இருட்டான பகுதிகளில் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு சொல்லியபடி, பெண்களின் சுய பாதுகாப்புக்காக `விசாகா' கமிட்டிகளை அனைத்து பகுதிகளிலும் பலமாக நிறுவுவதற்கு போலீசார் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
போலீஸ் நிலையத்துக்குப் புகார் கொடுக்க சென்றால் புகார்களை வாங்காமல் இழுத்தடிப்பார்கள்,
உடனடியாக எப்.ஐ.ஆர். போட மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் பெண்கள் மத்தியில் உள்ளது. அதைப் போக்கும் வகையில் பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யவேண்டும்.
பஸ்களில்
தற்போது பெண்கள் செல்லுவதற்கு தனி ரெயில் விடப்பட்டுள்ளது. அது போல, பெண்கள் பயணம் செய்வதற்காக அதிகளவில் மகளிர் பஸ்களை விட வேண்டும். பொதுவான பஸ்களில் பெண்களை முன்பக்கத்தில் ஏறுவதற்கும், ஆண்களை பின்பக்கத்தில் ஏறுவதற்கும் விசேஷ ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு பொதுவான பஸ்களில் பெண் கண்டக்டர், ஆண் கண்டக்டர் என்று இரண்டு கண்டக்டர்களை நியமிக்க வேண்டும். தைரியமாக புகார் கொடுக்க வருவதற்கு பெண்கள் மத்தியில் இது போன்ற கூட்டங்களை நடத்தி போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.
அலுவலகங்களில், பெண்களுக்கு `செக்ஸ்' தொல்லை கொடுப்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பதையும், பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதி போட வேண்டும்.
நாங்கள் பஸ்சில் பயணம் செய்யும் போது பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு தான்
இடிமன்னர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்கிறோம். சில நேரங்களில் முக்கியமான
போலீஸ் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி, அவர்கள் எங்கள் உறவினர்கள் என்று சொல்லி இடிமன்னர்களை மறைமுகமாகப் பயமுறுத்துகிறோம்.
பெங்களூரில் ஆட்டோ டிரைவர்கள் தங்களது பேட்ஜ், உடை போன்றவற்றை அணிந்துகொண்டு நாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். ஆட்டோவிப் போட்டு இருக்கிறார்கள். சென்னை நகரிலும் ஆட்டோ டிரைவர்களை இது போல் நடப்பதற்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு பெண்கள் தங்களது உள்ளக் குமுறல்களை கொட்டி பேசினார்கள்.
-31 டிசம்பர் 2009
ஆண்களுடன் பெண்கள் தனித்திருக்கக் கூடாது; பெண்களின் தேவைகளுக்காக ஆண்கள்
உழைக்கவேண்டும்என்று இஸ்லாம் கூறும் அறிவுரையை பிற்போக்கான சிந்தனை என்று கூறி
அறிவுஜீவிகள் குறை கூறி வந்தனர். பெண்கள் வேலைக்குச் செல்வதில் தான்
அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்றும் வாதிட்டு வந்தனர். ஆனால் உண்மையில் பெண்கள் வேலைக்குச்செல்வதால் அவர்களுக்கு இருந்து வந்த சுதந்திரம் பறிக்கப்பட்டு
விட்டதுஎன்பதேஉண்மை. புகுந்த வீட்டாரின் அடக்கும் முறைக்கு மட்டும் ஆளான பெண்கள்
தமதுஅதிகாரிகளின் அடக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். வேலைக்குச் சென்றதால் வீட்டு வேலையில் இருந்து அவர்கள் விடுபட முடியாததால் அவர்கள் இரட்டைச்சுமையைச்சுமந்து வருகின்றனர் என்பது இன்று வேலைக்குச் செல்லும் பெண்களின் வாயாலேயே வெளியாகி விட்டது.
6 comments:
சகோ.சுவனப்பிரியன்,
உங்களின் இந்த இடுகை பலரை நிச்சயம் சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்.
'பெண்சுதந்திரம்' என்ற ஆணாதிக்க பரப்புரை மாய்மாலத்தை நம்பி ஏமாந்து பல அடிப்படை சுகங்களை இழந்து வேலைக்குச்சென்று கஷ்டப்படும் பெண்கள் வாயிலிருந்து வந்தவையே ஒரு பதிவாக...! 'நச்'..!
இஸ்லாம் பெண்களுக்காக சொன்ன முன்னெச்செரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளையும், அவர்களின் உடல்கூறின் அடிப்படையில் தரப்பட்ட சலுகைகளையும் பெண்ணடிமைத்தனமாக சித்தரிப்பது மடத்தனம்/வஞ்சகம் என்பதை விளக்கி நானும் இரண்டு பதிவுகள் போட்டுள்ளேன்.
"இஸ்லாத்தில் ஆணடிமைத்தனம் & பெண்ணாதிக்கம்"
மற்றும்,
"இஸ்லாமிய ஹிஜாபும் பெண்ணுரிமையே".
ம்ம்ம்... எல்லாமே புரிகிறது... ஆனாலும் புரியாதது மாதிரி நடிப்பார்கள் பாருங்களேன்...!
ஆசிக்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
கல்வெட்டு!
//அறிவியலை கேள்வி கேட்டால் மட்டும் பேசலாம் என்பது எனது நிலை.
நிலாவைல் பாட்டி வடை சுடுவதாக நானும் 7 வயதுவரை ( 8 க்கூட இருக்கலாம்) நம்பியதாகவே என் அம்மா கூறுகிறார்.
நான் இப்போது வளர்ந்துவிட்டேன்.//
நீங்கள் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறீர்கள் என்பதை www.suvanappiriyan.blogspot.com/2011/01/blog-post_11.html இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
வால்பையன்!
//அதில் இந்தியாவுக்கு இன்னார் என்ற விபரம் தெரியலைன்னு சொன்னா எப்படி,//
தெரியவில்லை என்றால் அந்த விபரம் இங்கு தேவையில்லை என்பதால் விடப்பட்டுள்ளது. முகமது நபி ஒரு அரேபியர். முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர்களும் அரபுகளே! அந்த மக்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் அரபு நாடுகளை ஒட்டி வாழ்ந்த தீர்க்க தரிஷிகளை குர்ஆன் பட்டியலிடுகிறது. ஒருக்கால் முகமது நபி தமிழராக இருந்திருந்தால் இலங்கை, பர்மா, தாய்லாந்து, சீனா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் பட்டியலை காண முடியும்.
//தனக்கு எதிராக செயல் படுவான் என்று தெரிந்து அனுப்பி வைத்திருக்கிறார் அல்லா அப்படி தானே!//
கண்டிப்பாக! சாத்தானின் தீங்கிலிருந்து மக்களை நேர்வழிப்படுத்த இது வரை ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட நபிகளை இறைவன் பூமிக்கு அனுப்பியுள்ளான். செவி ஏற்க்காதது அந்த மக்கள் செய்த தவறு.
கும்மி!
//சுவர் எந்த காட்டுக்குள் இருந்தாலும் மலையளவு உயரம் என்பதால் பார்வையின் வீச்சிற்குள் மலையைக் கண்டாலே சுவற்றையும் பார்க்க முடியும்.//
இரண்டு மலைகளுக்கு நடுவே கட்டப்பட்ட சுவர் அதுவும் மலை போல்தானே காட்சி அளிக்கும்!
//உயிருள்ளதைப் பற்றி பேசினால் உயிரற்றதை உதாரணமாகக் கொண்டு வருகின்றீர்கள்.//
உயிருள்ளதோ உயிரற்றதோ இங்கு தேடுதல் என்ற செயல் இரண்டுக்கும் பொருந்தும்.
//மனிதனின் காலடி படாத இடங்களை சாட்டிலைட்டுகள் மூலம் ஆராய முடியும்.//
மரங்கள் அடர்ந்த மலைகளை நீங்கள் சேடலைட் மூலம் பார்த்தால் மரங்களைத்தான் பார்க்க முடியுமே தவிர அதனுள் ஊடுருவி சென்று பார்க்க இயலாது. உசாமாவையும், தாலிபான்களையும் பிடிக்க முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கும் அமெரிக்கர்களிடம் கேளுங்கள் விபரம் சொல்வார்கள். ஆப்கனில் பாலைவனத்தில் உள்ள குகைகளையே அவர்களால் துல்லியமாக கண்டு பிடிக்க முடியவில்லை. அங்கு மரங்களோ காடுகளோ இல்லாத பாலைவனத்திலேயே இவ்வளவு பிரச்னை. சாடலைட்களால் தோராயமாகத்தான் காண முடியும் துல்லியமாக அல்ல!
//முகம்மதுவின் மாமனார்களுள் ஒருவரான உமர் அந்தச் சுவரை தேடிச் சென்றுவிட்டு அது போன்ற ஒன்று இல்லை என்று முயற்சியை கைவிட்டாரே.//
வழக்கமான பொய் செய்தி. இதனை எங்கிருந்து எடுத்தீர்கள் என்ற ஆதாரத்தை தாருங்கள்.
//நீங்கள் ஏன் அந்தச் சுவற்றை மட்டும் பார்க்கவில்லை?//
மற்ற இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. துல்கர்னைன் கட்டிய சுவர் எங்கிருக்கிறது என்ற விபரம் சொல்லப்படவில்லை. உலக முடிவு நாளில் அச்சுவர் உடைக்கப்படும். அந்நாளில் நானும் நீங்களும் உயிரோடு இருந்தால் அவசியம் பார்க்கலாம். இந்த உலகம் ஒரு நாள் அழியும் என்று விஞ்ஞானிகளும் ஒத்துக் கொண்டுள்ளனர்.
//தொலைக்காட்சியில் பர்கா -- ...ஏன் உங்கள் மதங்களில் கேள்வியே கேட்கக் கூடாதா? கேட்டாலே அது blasphemyதானா? அதுவும் இந்த நாட்டிலேயே இப்படின்னா இஸ்லாமிய நாட்டில் எவன் எதில் கேள்வி கேட்பான்? //
ஒன்றாம் எண்ணில் கேட்ட இந்த கேள்வியை ஏனிப்படி கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள்? பதில் தர முடியவில்லையா? மனமில்லையா?//
மனமில்லாமலெல்லாம் இல்லை. ஏற்கெனவே பேசப்பட்ட விஷயம் என்பதால்தான் அதை விட்டு விட்டேன். புர்கா என்பது முகம் கைகளைத் தவிர மற்ற இடங்களை அந்நிய ஆடவர்களின் பார்வையில் படாதவாறு அணிந்து கொள்வது. இதனால் அந்த பெண்கள் பாதுகாப்படைகிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் படும் துயரத்தை எனது முந்தய பதிவிலே விபரமாக கொடுத்துள்ளேன். இஸ்லாமிய பெண்கள் எங்களின் முன்னேற்றத்திற்க்கு புர்கா தடையாக இருக்கிறது என்று எங்குமே கொடி பிடிக்கவில்லை. சவூதியில் பெண்கள் அலுவலகததுக்கும் கல்லூரிக்கும் மருத்துவ மனைகளுக்கும் சென்று அங்கு பணி புரிந்தும் வருகிறார்கள். புர்கா அவர்களுக்கு எந்த இடைஞ்சலையும் ஏற்படுத்தவில்லை. நாம் ஆண்கள் முழுக்கை சட்டை, பேண்ட் போட்டுக் கொள்கிறோம். அதே போல் பெண்கள் தலையில் மாத்திரம் வெளியில் செல்லும்போது ஒரு துணியை கட்டிக் கொள்ள இஸ்லாம் பணிக்கிறது. ஜாக்கெட்டுக்கும் கீழ் ஒரு இடைவெளி எதற்கு? தொப்புளைக் காட்டுவதால் பெண்களுக்கு என்ன முன்னேற்றம் வந்து விடப் போகிறது? நமது கலைஞர் தொப்புளைக் காட்டித்தான் முதலமைச்சர் ஆனாரா?
சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்ற இரு இளம் பிரிட்டிஷ் பெண்களிடம் 'தற்போது புர்கா அணிவது சிரமமாக இல்லையா?' என்று கேட்கப்பட்டது. 'இல்லை! முன்பை விடப் பாதுகாப்பாக இருக்கிறோம். இன்று எங்களை யாரும் சீண்டுவதில்லை. இடிப்பதில்லை. மரியாதையாகப் பார்க்கிறார்கள். நாங்கள் இதை மிகவும் விரும்புகிறோம்' என்றனர். பிரான்சிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் புர்காவுக்கு தடை விதித்த போது பொங்கி எழுந்தது அதிகம் இஸ்லாமிய இளம் பெண்கள்தான்.
பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள புர்காவை விமர்சித்ததால் அதன் பெருமைகளை விளக்க முஸ்லிம்கள் முயற்ச்சித்திருக்கலாம். அது உங்களுக்கு வித்தியாசமாக தெரிந்திருக்கிறது.
Post a Comment