Followers

Sunday, May 22, 2011

ஜனாதிபதி உமருடைய கடைசி நாட்கள்!

3700. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்.


உமர் இப்னு கத்தாப்(ரலி) கொலை செய்யப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன் மதீனாவில் அவர்களை பார்த்தேன். அவர்கள் ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அவர்களுக்கும், உஸ்மான் இப்னு ஹுனைஃப்(ரலி) அவர்களுக்கும் அருகில் நின்று கொண்டு (அவர்கள் இருவரையும் நோக்கி, 'சவாதுல் இராக் விஷயத்தில்) நீங்கள் எப்படிச் செயல்பட்டீர்கள்? அந்த நிலத்திற்கு (மக்களால்) சுமக்க முடியாத வரிச்சுமையை சுமத்திவிட்டதாக நீங்கள் அஞ்சுகிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், 'அந்த நிலத்திற்கு அதன் (உரிமையாளர்களின்) சக்திக்கேற்பவே (வரி) விதித்தோம். அதில் மிக அதிகமாக ஒன்றுமில்லை" என்றனர். அதற்கு உமர்(ரலி), 'அந்த நிலத்திற்கு (மக்களால்) சுமக்க முடியாத வரிச்சுமையை சுமத்தி விட்டீர்களா? என்று (நன்கு) யோசித்துப் பாருங்கள் என்றார்கள். அந்த இருவரும், 'இல்லை. அதன் சக்திக்கேற்பவே வரி சுமத்தினோம்)" என்று பதிலளித்தனர். அப்போது உமர்(ரலி), 'அல்லாஹ் என்னை உயிரோடு வைத்திருந்தால் இராக் வாசிகளின் விதவைப் பெண்களை எனக்குப் பிறகு வேறெவரிடமும் கையேந்தத் தேவையில்லாத நிலையில் தான்விட்டுச் செல்வேன்" என்று கூறினார்கள். இப்படி அவர்கள் சொல்லி நான்கு நாள்கள் கூட சென்றிருக்காது. அதற்குள் (பிச்சுவாக் கத்தியால்) உமர்(ரலி) குத்தப்பட்டு வட்டார்கள்.


உமர்(ரலி) குத்தப்பட்ட நாளில் அதிகாலை(த் தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்று கொண்டிருக்கிறேன். எனக்கும் உமா(ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. உமர்(ரலி) (மக்களுக்குத் தொழுகை நடத்துவதற்கு முன்) இரண்டு தொழுகை அணிகளுக்கு இடையில் சென்றால் (மக்களை நோக்கி), 'சீராக நில்லுங்கள்" என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அணிகளுக்கிடையே சீர் குலைவு தென்படாத போதே முன் சென்று (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) கூறுவார்கள். சில சமயம் 'யூசுஃப்' அத்தியாயம் அல்லது 'நஹ்ல்' அத்தியாயம் அல்லது அது போன்ற (வேறோர் அத்தியாயத்)தை, மக்கள் தொழுகை;காக வந்து சேரும் வரையில் முதல் ரக்அத்தில் ஓதுவார்கள்.

(சம்பவ தினத்தன்று) அப்போது நான் தக்பீர் கூறியிருப்பாக்hள். 'என்னை நாய் கொன்றுவிட்டது... அல்லது தின்றுவிட்டது..." என்று கூறினார்கள். (அப்போது 'அபூ லுஸலுஆ ஃபைரோஸ்' என்பவன் பிச்சுவாக் கத்தியால் அவர்களைக் குத்தி விட்டிருந்தான்). உடனே, அந்த 'இல்ஜ்' (அரபில்லாத அந்நிய மொழி பேசும் இறைமறுப்பாளன்) தன்னுடைய பிச்சுவாக் கத்தியை எடுத்துக் கொண்டு தன்னுடைய வலப்பக்கம், இடப்பக்கம் நிற்கும் எவரையும் விடாமல் குத்திக் கொண்டே விரைந்தோடலானான். முடிவாக, பதின்மூன்று ஆண்களை அவன் குத்தி வட்டிருந்தான். அதில் ஏழுபேர் இறந்துவிட்டனர். இதைக் கண்ட (அங்கிருந்த) முஸ்லிம்களில் ஒருவர் தம் நீண்ட தொப்பியை (கழற்றி) அவன் மீது வீசி எறிந்தார். அந்த அந்நிய மொழிக்காரனான இறைமறுப்பாளன், தாம் பிடிபட்டு விடுவோம் என்று எண்ணிய தன்னைத் தானே அறுத்து (த் தற்கொலை செய்) கொண்டான். மேலும், (தொழுகை நடத்திக் கொண்டிருந்த) உமர்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களின் கரத்தைப் பிடித்து (மக்களுக்குத் தொழுகை நடத்துவதற்காகத் தம்மிடத்தில்) முன்னிறுத்தினார்கள். நான் பார்த்த (இந்தச் சம்பவத்)தை உமர்(ரலி) அவர்களுக்கருகே இருந்தவர்களும் பார்த்தனர். ஆனால், பள்ளி வசாலின் மூலைகளில் (தொழுது கொண்டு) இருந்தவர்களுக்கு இது தெரியவில்லை. ஆயினும், (தொழுகை நடத்திக் கொண்டிருந்த) உமர்(ரலி) அவர்களின் சப்தம் நின்றுவிட்டபோது அவர்கள் 'சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன், அல்லாஹ் தூயவன்)" என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (சிறிய அத்தியாயங்களை ஓதி) சுருக்கமாகத் தொழுகை நடத்தினார்கள்.

மக்கள் (தொழுது முடித்து) திரும்பியபோது உமர்(ரலி), 'இப்னு அப்பாஸ் அவர்களே! என்னைக் கொன்றவன் யார் என்று பாருங்கள்" என்று கூறினார்கள். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து, 'முகீராவின் அடிமை தான் (உங்களைக் குத்தியது)" என்று கூறினார்கள். உமர்(ரலி), 'அந்தத் திறமையான தொழில் கலைஞனா?' என்று கேட்டார்கள். 'ஆம்" என்று இப்னு அப்பாஸ்(ரலி) பதிலளித்தார்கள். 'அல்லாஹ் அவனைக் கொல்லட்டும்! அவன் விஷயத்தில் நல்லதைத் தானே நான் உத்தரவிட்டேன்! ஆனால், என்னையே அவன் கொன்றுவிட்டானே)! தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரின் கரத்தால் எனக்கு மரணம் நேரும்படிச் செய்து விடாத அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (மதீனா நகரத்தின் சில பணிகளுக்கு அரபுகள் அல்லாத அந்நியர்கள் அவசியம் எனக் கூறி) அரபுகள் அல்லாத அந்நிய(த் தொழிற் கலைஞ)ர்கள் மதீனாவில் அதிகம் இருக்க வேண்டுமென (இப்னு அப்பாஸ் அவர்களே!) நீங்களும் உங்கள் தந்தையார் (அப்பாஸ்) அவர்களுமே விரும்பக் கூடியவர்களாக இருந்தீர்கள்" என்று உமர்(ரலி) கூறினார். அவர்களிடையே அப்பாஸ்(ருலி) அவர்களே நிறைய அடிமைகள் உடையவராக இருந்தார்கள். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) (உமர் - ரலி அவர்களை நோக்கி), 'நீங்கள் விரும்பினால் (மதீனாவிலுள்ள அரபுகளல்லாத தொழில் கலைஞர்கள் அனைவரையும்) கொன்று விடுகிறோம்" என்று கூறினார்கள். உமர்(ரலி), 'நீங்கள் (இந்த எண்ணத்தினால்) தவறிழைத்து விட்டீர்கள். உங்களின் மொழியில் அவர்கள் பேசிய பின்பும், உங்களின் கிப்லாவை நோக்கித் தொழுத பின்பும், உங்களைப் போன்றே 'ஹஜ்ஜு' செய்த பின்புமா? (முஸ்லிம்களான அவர்களைக் கொலை செய்யப்போகிறீர்கள்?)' என்று கேட்டார்கள்.

பிறகு, (குற்றுயிராயிருந்த) உமர்(ரலி) அவர்களை அவர்களின் வீட்டுக்கு சுமந்து செல்லப்பட்டது. அவர்களுடன் நாங்களும் சென்றோம். அன்றைய நாளுக்கு முன்னால் எந்தத் துன்பமும் நிகழ்ந்திராதது போன்று மக்கள் (கடுந் துயரத்துடன்) காணப்பட்டனர். ஒருவர், 'அவருக்கு ஒன்றும் ஆம் விடாது" என்கிறார். மற்றொருவர், 'அவருக்கு (மரணம் சம்பவித்து விடும் என்று) நான் அஞ்சுகிறேன்' என்று கூறுகிறார். அப்போது, (காயத்தின் ஆழத்தைக் கண்டறிவதற்காக) பேரீச்சம் பழச்சாறு கொண்டு வரப்பட்டது. அதை உமர்(ரலி) அருந்தினார்கள். உடனே, அது அவர்களின் வயிற்றின் (காயத்தின்) வழியாக வெளியேறியது. (வெளியில் வந்தது பேரீச்சம் பழச் சாறா அல்லது உமரின் இரத்தமா என்று பாகுபடுத்த முடியாத விதத்தில் இரண்டும் ஒரே நிறத்தில் இருந்ததால்) பிறகு, பால் கொண்டு வரப்பட்டது. அதை அவர்கள் அருந்தினார்கள். அதுவும் காயத்தின் வழியாக (வெள்ளை நிறத்தில்) வெளியேறிவிட்டது. அப்போது அவர்கள் இறக்கும் நிலையை அடைந்துவிட்டார்கள் என்று மக்கள் அறிந்து கொண்டனர்.

அவர்களின் அருகே நாங்கள் சென்றோம். மக்கள் வந்து உமர்(ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசத் தொடங்கினார்கள். ஓர் (அன்சாரி) இளைஞரும் வந்தார். அவர், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே!" அல்லாஹ்வின் தூதருடனான (உங்களுடைய) தோழமை, இஸ்லாத்தில் (உங்களுக்கிருக்கும்) நீங்களே அறிந்துள்ள சிறப்பு, பிறகு நீங்கள் (ஆட்சித் தலைவராகப் பதவியேற்று (குடி மக்களிடையே) நீதியாக நடந்து கொண்டது, பிறகு (இப்போது) உயிர்த் தியாகம் (செய்ய விருப்பது) ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள நற்செய்தி கொண்டு நீங்கள், மகிழ்ச்சி அடையுங்கள்" என்று கூறினார். (இதைக் கேட்ட) உமர்(ரலி) 'இவையெல்லாம் எனக்கு (சாதகமாக இல்லாவிட்டாலும் பாதகமாக இல்லாமலிருந்தாலே போதும். எனவே, இவை எனக்கு) சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம். சரிக்குச் சமமாக இருப்பதையே விரும்புகிறேன்" என்று கூறினார்கள். அந்த இளைஞர் திரும்பிச் சென்றபோது அவரின் கீழங்கி பூமியைத் தொட்டுக் கொண்டிருந்தது. (இதைக் கண்ட) உமர்(ரலி), 'அந்த இளைஞரை என்னிடம் திரும்ப அழைத்து வாருங்கள்" என்று கூறினார்கள். (அவர் திரும்பி வந்த போது), 'என்னுடைய சகோதரரின் மகனே! உன்னுடைய ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டு! இது உன் ஆடையை நீண்ட நாள் நீடிக்கச் செய்யும்; உன்னுடைய இறைவனுக்கு அஞ்சி நடப்பதுமாகும்" என்று கூறினார்கள்.

(பிறகு தம் மகனை நோக்கி), 'உமரின் மகன் அப்துல்லாஹ்வே!என் மீது எவ்வளவு கடன் (பாக்கி) உள்ளது என்று பார்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள், கணக்கிட்டுப் பார்த்தனர். எண்பத்தாறாயிரம் (திர்ஹம்ஃதீனார்) அல்லது அது போன்றது இருப்பதைக் கண்டார்கள். உமர்(ரலி), 'இந்தக் கடன்களை அடைப்பதற்கு உமரின் செல்வம் போதுமென்றால் அதிலிருந்து கொடுத்து விடு. அவ்வாறு போதுமானதாக இல்லாவிட்டால் (நம் கூட்டத்தாரான) அதீ இப்னு கஅப் மக்களிடம் கேட்டு (வாங்கிக்) கொள். அவர்களின் செல்வமும் போதுமானதாக இல்லாவிட்டால் (நம்முடைய குலமான) குறைஷிக் குலத்தாரிடம் கேட்டு (வாங்கிக்) கொள். இவர்களையும் தாண்டி வேறு யாரிடமும் செல்லாதே. (இவர்களிடம் கேட்டு வாங்கிய) பின், என் சார்பாக இந்தக் கடன்களை நீயே அடைத்து விடு! (பிறகு) இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா அவர்களிடம் நீ சென்று, 'உமர் உங்களுக்கு சலாம் கூறுகிறார்' என்று கூறு. 'விசுவாசிகளின் தலைவர்' என்று (என்னைப் பற்றிக்) கூறாதே. ஏனெனில், நான் இன்று (முதல்) விசுவாசிகளுக்கு (ஆட்சித்) தலைவனல்லன். மேலும், (அன்னை ஆயிஷா - ரலி - அவர்களிடம்) 'உமர் தம் இரண்டு தோழர்கள் (நபி - ஸல் - மற்றும் அபூ பக்கர் - ரலி - அடக்கம் செய்யப்பட்டுள்ள உங்களின் அறையில் அவர்கள்) உடன் தம்மையும் அடக்கம் செய்வதற்கு (உங்களிடத்தில்) அனுமதி கோருகிறார்' என்று சொல்' எனக் கூறினார்கள். ஆயிஷா(ரலி) அவர்களிடம் உமர்(ரலி) அவர்களின் புதல்வர் சென்று சலாம் கூறி, (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்ட பிறகு வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது ஆயிஷா(ரலி) (உமர் - ரலி அவர்கள் குத்தப்பட்ட செய்தியறிந்து) அழுது கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டார். அப்போது, அவர்களைப் பார்த்து, '(என் தந்தை) உமர் இப்னு கத்தாப் தங்களுக்கு சலாம் கூறுகிறார். தம் இரண்டு தோழர்களுடன் தம்மையும் அடக்கம் செய்வதற்குத் தங்களிடம் அனுமதி கேட்கிறார்" என்று கூறினார். அப்போது ஆயிஷா(ரலி), 'எனக்காக அ(ந்த இடத்)தை (ஒதுக்கிக் கொள்ள) நான் நினைத்திருந்தேன். (இப்போது அங்கு அடக்கம் செய்யப்படுவதற்கு) என்னை விட அவருக்கே முதலிடம் கொடுத்து விட்டேன். (அவரையே அந்த இடத்தில் அடக்கிக் கொள்ளுங்கள்)" என்று கூறினார்கள்.

பிறகு அவர் (உமர் - ரலி - அவர்களிடம்) திரும்பி வந்தபோது, 'இதோ, உமர் அவர்களின் மகன் அப்துல்லாஹ் வந்துவிட்டார்" என்று கூறப்பட்டது. (ஒருக்களித்துப் படுத்திருந்த) உமர்(ரலி), 'என்னைத் தூக்கி உட்கார வையுங்கள்" என்று கூறினார்கள். அப்போது (அங்கிருந்த) ஒருவர் தன்னோடு அவர்களை அணைத்துக் கொண்டு சாய்த்து அமர்த்தினார். அப்போது உமர்(ரலி) (தம் மகனை நோக்கி), 'உன்னிடம் என்ன (பதில்) உள்ளது?' என்று கேட்டார்கள். 'நீங்கள் விரும்பியது தான், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! (ஆயிஷா (ரலி) அனுமதித்துவிட்டார்கள்" என்று அப்துல்லாஹ் கூறினார்கள். (அப்போது) 'எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இதுதான் எனக்கு கவலையளித்துக் கொண்டிருந்தது. (இப்போது என் ஆசை நிறைவேறிவிட்டது.) நான் இறந்துவிட்டால் என்னைச் சுமந்து (என்னை அடக்கம் செய்யும் அந்த அறைக்குக்) கொண்டு செல்லுங்கள். பிறகு, ஆயிஷா அவர்களக்கு நீ சலாம் சொல்லி, (அவர்களிடம்) உமர் இப்னு கத்தாப் (தம் இருதோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்வதற்குத் தங்களிடத்தில்) அனுமதி கேட்கிறார்' என்று (மீண்டும் ஒரு முறை) சொல். அவர்கள் அனுமதித்தால், என்னை (அந்த அறைக்கு) உள்ளே கொண்டு செல்லுங்கள். அவர்கள் (அனுமதி தர) மறுத்தால் என்னை (மற்ற) முஸ்லிம்களின் (மண்ணறைகள் அமைந்திருக்கும் பொது) அடக்கலத்திற்குத் திருப்பிக் கொண்டு சென்று விடுங்கள்' என்று கூறினார்கள். (உமர் - ரலி - அவர்கள் இருந்த அந்த இடத்திற்கு அவர்களின் மகள்) இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஹஃப்ஸா(ரலி) வந்தார்கள். அவர்களுடன் பல பெண்களும் வந்தனர். அவர்களை நாங்கள் கண்டபோது நாங்கள் கண்டபோது நாங்கள் எழுந்து விட்டோம். உமர்(ரலி) அவர்களிடம் ஹஃப்ஸா(ரலி) வந்து, சிறிது நேரம் அவர்களுக்கு அருகில் அழுது கொண்டிருந்தார்கள். அப்போது ஆண்கள் (சிலர்) உமர்(ரலி) அவர்களிடம் வர அனுமதி கோரினர். ஹஃப்ஸா(ரலி) உடனே அவர்களுக்குள்ள நுழைவிடம் ஒன்றில் நுழைந்து கொண்டார்கள். உள்ளேயிருற்து அவர்கள் அழுகிற சப்தத்தை அப்போது நாங்கள் கேட்டோம்.

(அங்கிருந்த ஆண்கள் உமர்(ரலி) அவர்களை நோக்கி), 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! தங்களுக்கு ஒரு பிரதிநிதியை அறிவித்து, இறுதி உபதேசம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்களோ அந்தச் சிலர் அல்லது அந்தக் குழுவினர். தாம் இந்த (ஆட்சித் தலைமை) விஷயத்தில் (முடிவு செய்ய) வேறெவரை விடவும் மிகத் தகுதி படைத்தவர்களாக எனக்குத் தெரிகிறார்கள்." என்று கூறிவிட்டு, அலீ(ரலி), உஸ்மான்(ரலி), ஸுபைர்(பின் அவ்வாம் (ரலி), தல்ஹா(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) ஆகியோரின் பெயர்களையும் அப்போது குறிப்பிட்டார்கள். மேலும், உமர்(ரலி), 'உமரின் மகன் அப்துல்லாஹ்வும் உங்களுடன் இருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் அவருக்கு எந்தப் பங்குமீல்லை இதை மகன் அப்துல்லாஹ்வூக்கு ஆறுதல் போன்று கூறினார்கள். தலைமைப் பதவி ஸஅத் அவர்களுக்கு கிடைத்தால் அதற்கு அவர் அருகதையானவர் தாம். அவ்வாறு அவருக்கு கிடைக்கவில்லையாயின், உங்களில் ஆட்சித் தலைவராக ஆக்கப்படுகிறவர் (ஸஅத் இப்னு அபீ வக்காஸ்) அவர்களிடம் (ஆலோசனை) உதவி பெறட்டும். ஏனெனில், நான் ஸஅத் அவர்களை, அவர் இயலாதவர் என்பதாலோ, மோசடி செய்துவிட்டார் என்பதாலோ (கூஃபா நகரின் ஆளுநர் பதவியிலிருந்து) பதவி நீக்கம் செய்யவில்லை. மேலும், '(இஸ்லாத்தில்) முன்னவர்களான முஹாஜிர்களின் உரிமைகளை அறிந்து, அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று எனக்குப் பின்னர் (வரவிருக்கும்) ஆட்சித் தலைவருக்கு நான் இறுதி உபதேசம் செய்கிறேன். மேலும், (நபி - ஸல் - மற்றும் நபித்தோழர்கள் ஆகிய) அவர்கள் ஹிஜ்ரத் செய்து வருவதற்கு முன்பே ஹிஜ்ரத் நாட்டை (மதீனாவை) தம் இருப்பிடமாகக் கொண்டு, இறை நம்பிக்கையை (உறுதியாக)ப் பற்றிக் கொண்ட அன்சாரிகளுக்கு நன்மையை(ப் புரியும்படி)யும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன். அவர்களில் நன்மை புரிபவரிடமிருந்து (அவரின் நன்மை) ஏற்கப்பட்டு, அவர்களில் தவறிழைப்பவர் மன்னிக்கப்படவேண்டும். (இதே போன்று) நகர்ப்புற மக்களுக்கும் நன்மையை(ச் செய்யும் படி)யும் அவருக்கு நான் உபதேசம் செய்கிறேன். ஏனெனில், அவர்கள் இஸ்லாத்திற்கு உறுதுணை ஆவர். நிதி திரட்டித் தருபவர்களாகவும், எதிரிகளை (தங்களின் வீரத்தாலும் பெரும் எண்ணிக்கையாலும்) ஆத்திரமடையச் செய்பவர்களாகவும் உள்ளனர். அவர்களிடமிருந்து அவர்களின் (தேவைகளுக்குப் போக) எஞ்சியதை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். அதையும் அவர்களின் சம்மத்துடன் தான் எடுக்க வேண்டும்.
மேலும், கிராமப்புற அரபுகளுக்கும் நன்மையே புரியும்படியும் அவருக்கு நான் உபசேதம் செய்கிறேன். ஏனெனில், அவர்களே பூர்விக அரபிகளும், இஸ்லாத்தின் அடிப்படையும் ஆவார்கள். அவர்களின் செல்வத்தில் மலிவானவை மட்டுமே எடுக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், அல்லாஹ்வின் பொறுப்பிலும் அவனுடைய தூதரின் பொறுப்பிலும் இருப்பவர்க(ளான முஸ்லிமல்லாதவர்க)ளுக்கு அளிக்கப்படட் உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் (அவர்களின் எதிரிகள் அவர்களைத் தாக்க வரும் போது) அவர்களுக்குப் பின்னாலிருந்து அவர்களுக்காகப் போர் புரிய வேண்டுமெனவும், (காப்பு வரி விதிக்கும் போது) அவர்களின் சக்திக்கேற்பவே தவிர அவர்கள் சிரமத்திற்குள்ளாக்கப்படக் கூடாது என்றும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன்' என்று உமர்(ரலி) கூறினார்.


(
கத்திக்குத்துக்கு உள்ளாம் மூன்று நாள்களுக்குப் பிறகு) உமர்(ரலி) இறந்துவிட்டார்கள். பிறகு அவர்களை (எடுத்துக்) கெண்டு (அவர்களின் இல்லத்திலிருந்து) நாங்கள் புறப்பட்டோம். (ஆயிஷா - ரலி - அவர்களின் அறைக்கு) வந்து சேர்ந்தோம். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (ஆயிஷா - ரலி - அவர்களுக்கு) சலாம் கூறினார்கள். பிறகு, '(உங்களுக்குரிய அறையில் தம் இரண்டு தோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்ய என் தந்தை) உமர் இப்னு கத்தாப் அவர்கள் (உங்களிடம்) அனுமதி கோருகிறார்கள்" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்' என்று கூறினார்கள். உடனே அவர்களை உள்ளே கொண்டு செல்லப்பட்டு அந்த இடத்தில் அவர்களின் இரண்டு தோழர்களுக்கு அருகில் வைக்கப்பட்டது. அவர்களை அடக்கம் செய்து முடித்தபோது அந்த (ஆறு பேர் கொண்ட) ஆலோசனைக் குழுவினர் (அடுத்த ஆட்சித் தலைவர் யார் என்று தீர்மானிப்பதற்காக ஓரிடத்தில்) குழுமினர். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், '(கருத்து வேறுபாட்டைக் குறைப்பதற்காக, ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்) உங்களின் உரிமையை உங்களில் மூன்று பேர்களிடம் ஒப்படையுங்கள்" என்று கூறினார்கள். அப்போது ஸுபைர்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை அலீ அவர்களுக்கு (உரியதாக) நான் ஆக்கிவிட்டேன்" என்று கூறினார்கள். பிறகு தல்ஹழ(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் உஸ்மான் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கி விட்டேன்" என்ற கூறினார்கள். பிறகு ஸஅத்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் அப்தூ ரஹ்மான் பின்அ வ்ஃப் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்" என்று கூறினார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அலீ ரலி- அவர்களையும் உஸ்மான்- ரலி- அவர்களையும் நோக்கி), 'உங்கள் இருவரில் இந்த அதிகாரத்திலிருந்து விலகிக் கொள்(ள முன்வரு)கிறவரிடம் இந்தப் பொறுப்பை நாம் ஒப்படைப்போம். அல்லாஹ்வும், இஸ்லாமும் அவரின் மீது (கண்காணிப்பாளர்களாக) உள்ளனர். உங்களில் சிறந்தவர் யாரென (அவரவர் மனத்திற்குள்) சிந்தித்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்கள். அப்போது இருமூத்தவர்(களான உஸ்மான்(ரலி) அவர்களும், அலீ(ரலி) அவர்)களும் மெளனமாக இருந்தார்கள். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'நீங்கள் (ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும்) அதிகாரத்தை என்னிடம் ஒப்படைக்கிறீர்களா? உங்களில் சிறந்தவரை நான் (தரத்தில்) குறைத்து மதிப்பிடவில்லை யென்பதை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான்" என்று கூறினார்கள். அதற்கு, அவ்விருவரும் 'ஆம்! (உங்களிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறோம்)" என்றனர். அப்போது அவ்விருவரில் ஒருவரின் ( - அலீ - ரலி அவர்களின்) கையை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) பிடித்துக் கொண்டு 'உங்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (நெருங்கிய) உறவுமுறை இருக்கிறது. மேலும், இஸ்லாத்தில் உங்களுக்கு நீங்களே அறிந்துள்ள சிறப்பும் உண்டு. அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான். உங்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் (குடிமக்களிடத்தில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்வீர்கள். உஸ்மான் அவர்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் அவருக்கு செவிமடுத்து, கட்டுப்பட்டு நடப்பீர்கள்" என்று கூறினார்கள். பிறகு இன்னொருவரிடம் ( உஸ்மான் - ரலி - அவர்களிடம்) தனியே வந்து அலீ(ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்றே (அவர்களிடமும்) வாக்குறுதி வாங்கிய பின், 'உஸ்மான் அவர்களே! தங்களின் கையைத் தாருங்கள்" என்று கூறி (உஸ்மான் - ரலி - அவர்களின் கையைப் பிடித்து) அவர்களுக்கு பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்து கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்களும் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மேலும், அந்நாட்டவரும் (மதீனா வாசிகளும்) வந்து அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தார்கள்.
Volume :4 Book :62

மேலே உள்ள நீண்ட வரலாறு ஒரு ஆட்சித் தலைவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறது. இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஜனாதிபதி இறந்து போகும் போது கடனோடு இறக்கிறார். அதனை அவரது மகன் ஏற்றுக் கொண்டு பின்னர் கடனை அடைத்த வரலாறை பார்க்கிறோம். நாட்டை ஆளுகிறோம் என்ற பெயரில் பல கோடிகளை சுருட்டும் அரசியல்வாதிகளையும் ஜனாதிபதி உமரையும் இங்கு நாம் ஒப்பிட்டு பார்க்கிறோம்.

தான் இறக்கும் போது தன்னுடைய அரவணைப்பில் வாழ்ந்த மாற்று மதத்தவர்களை பாதுகாப்பதும் தனக்கு பின்னால் வரும் ஆட்சியாளரின் கடமை என்று சொன்னதையும் பார்க்கிறோம். அன்னை ஆயிஷா அனுமதி தராவிடில் என்னை பொது பொது மைய வாடியில் மக்களோடு மக்களாக அடக்கம் செய்து விடுங்கள் என்று சொன்ன எளிமை இன்றைய ஆட்சியாளர்களிடத்தில் எத்தனை பேரிடத்தில் இருக்கிறது?

4 comments:

Anonymous said...

Mashallah.. May Allah be pleased with him. Our community needs such a leader to guide us...

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ சுவனப்பிரியன்

மிக மிக சிறந்த ஒரு பதிவை எழுதியுள்ளீர்கள்...

பொதுவாக ஹதீஸ்கள் வரலாற்று சம்பவங்கள்,நபி(ஸல்) அவர்களின் காலத்துடன் முற்றுப்பெற்ற அளவிலே சொல்லப்படும்..சகாபாக்களின் வாழ்வியல் அத்தனை விரிவாக எத்திவைக்க்ப்படவில்லை..

உமர்(ரலி) அவர்களின் இந்த சம்பவத்தை முதல்முறை உங்களால் அறிந்துகொள்கிறேன்...நன்றி...

தொடர்ந்து எழுதுங்களேன்..

அத்துடன்,இப்படியான விரிவான ஆதாரப்பூரவமான வரலாற்று நூல்கள் எங்கு கிடைக்கப்பெறும் என்பதையும் சொல்லுங்களேன்..

அன்புடன்
ரஜின்

suvanappiriyan said...

அனானி!

//Mashallah.. May Allah be pleased with him. Our community needs such a leader to guide us...//

உமரைப் போன்ற ஒரு தலைவர் நமக்கு இந்த காலக் கட்டத்தில் அவசியம் தேவைப்படுகிறது. இறைவன் அத்தகைய ஒரு சிறந்த நிர்வாகியை தர வல்லோனை இறைஞ்சுவோம்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ. ரஜின்!

//அத்துடன்,இப்படியான விரிவான ஆதாரப்பூரவமான வரலாற்று நூல்கள் எங்கு கிடைக்கப்பெறும் என்பதையும் சொல்லுங்களேன்..//

www.tamililquran.com

இங்கு சென்று தேவையான விபரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். புகாரி ஹதீது கிரந்தத்தை டவுன்லோடு செய்து கொண்டால் நிறைய விபரங்கள் கிடைக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நனறி!