Followers

Sunday, August 01, 2021

வணிக வாய்ப்புகளை உருவாக்குவோம்

 

வணிக வாய்ப்புகளை

உருவாக்குவோம்

-----------------------------

- CMN SALEEM

===============

அபுதாபி தொழில் வர்த்தக சங்கத்தின் ( Abu Dhabi Chamber of Commerce and Industry (ADCCI) துணைத் தலைவர் பொறுப்பிற்கு LuLu நிறுவனத்தின் தலைவர் ஜனாப் யூசுப் அலி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த சங்கத்தின் மொத்த உறுப்பினர்கள் 29 பேரில் ஒரேயொரு இந்தியர் LuLu யூசுப் அலி மட்டுமே.

 

அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் தொழில் வர்த்தகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் முடிவு செய்யும் உயர் அதிகாரமிக்க அரசு நிறுவனம் இது .

 

இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரக அரசின் தொழில் வர்த்தக கொள்கை முடிவுகளில் பங்கெடுக்கும் வாய்ப்பு LuLu நிறுவனத்தின் தலைவர் யூசுப் அலி அவர்களுக்கும் அவர் பிறந்த கேரள மாநிலத்தவர்களுக்கும் கிடைத்திருக்கிறது.

 

LuLu யூசுப் அலி அவர்களின் அயராத உழைப்பிற்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் அவரின் பிசிறில்லாத 

கொடைத்தன்மைக்கும் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம் இது. 

 

LuLu நிறுவனம் துவங்கப்பட்ட 30 ஆண்டுகளில் பிரமாண்டமான  211 சில்லறை வர்த்தக பேரங்காடிகளை வளைகுடா நாடுகள் அனைத்திலும்  நிறுவியிருக்கிறது.

 

அதோடு பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாமில் உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலையும் மிகப்பெரிய அளவிற்கு நடத்தி வருகின்றனர்.

 

தற்சமயம் 57 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 27 ஆயிரம் பேர் மலையாளிகள் என்பதை கவனிக்க வேண்டும்.

 

தனிநபர் ஒருவரின் தொலைநோக்குப் பார்வையும் உழைப்புயும் 27 ஆயிரம் கேரள குடும்பங்களை வாழவைத்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல மாநிலத்தின் அந்நிய செலாவணி பெருக்கத்திலும் பெரும் பங்காற்றி வருகிறது.    

 

LuLu யூசுப் அலி அவர்கள் மூலம் தமிழக மக்களும் தமிழக அரசும் பயன்பெறும் வாய்ப்புகளை கண்டறிந்து அதை முறையாக திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது.

 

அரபுலக பொருளாதாரத்தை மலையாளிகள் போல முறையாக பயன்படுத்திக் கொள்வது குறித்து இப்போதாவது நாம் சிந்திக்க வேண்டும்.

 

LuLu நிறுவனத்தின் 211 பேரங்காடிகளில் விற்கப்படும் காய்கறி பழங்கள் இறைச்சி பால்பொருட்கள் இவற்றில் ஒரேயொரு சதவிகித பொருட்கள் மட்டும் மதுரை திருச்சி கோவை சென்னை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களிலிருந்து அனுப்பும் வணிக வாய்ப்புகளை உருவாக்கினால் தமிழக கிராமப் புறங்கள் பெரும் முன்னேற்றம் அடையும்.அந்நிய செலாவணி ஈட்டுதலில்  மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும்.

 

டாஸ்மாக் வருவாயை மட்டுமே பெரிதாக சார்ந்து தமிழக இளைஞர்களை குடிகாரர்களாக மாற்றும் அவலத்தை அடுத்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற வணிக முன்னெடுப்புகள் மூலம் மாற்றி விடலாம்.

 

தமிழகதின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வம், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகிய மூவரையும் அபுதாபிக்கு அழைத்து LuLu யூசுப் அலி அவர்களுடன் நட்பு ரிதியான விருந்துடன் கூடிய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

நட்பு ரீதியான சந்திப்புகளில் துவங்கி அரசு ரீதியான அதிகாரபூர்வ சந்திப்புகளாக அது மாற வேண்டும். இந்த ஆட்சியில் இதை சிறப்பாக செயல்படுத்த முடியும்.     

    

அபுதாபி அய்மான் சங்கம்,வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருக்கும் லால்பேட்டை ஜமாஅத், மதுரை ஐக்கிய ஜமாஅத், விருதுநகர் ஜமாஅத், ஆகியோர் இணைந்து அறிவார்ந்த மக்களை கொண்ட ஒரு குழு அமைத்து செயல்பட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் தனித்துவத்துடன் வளர்ச்சியடையும்.

 

இறங்கி வந்து கைகோர்த்தால் மட்டுமே வாய்ப்புகளும் வளர்ச்சியும் ஏற்படும் என்பதை அல்லாஹ் இந்த உலகத்தின் விதியாக்கியுள்ளானே என்ன செய்ய.

 

நான் ஆர்வக்கோளாறு காரணமாக ஒரு வரைவு திட்டமாக எழுதியுள்ள இந்த கருத்தை தொழில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சற்று ஆழமாக சிந்தித்தால் தமிழகம் சந்திக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வாக முடியும்.






1 comment:

Dr.Anburaj said...

உருப்படியாக தகவல்.வாழ்க.