Followers

Thursday, August 13, 2009

பிச்சைப் பாத்திரம் ஏந்தும் ஏமன் சிறுவர்கள்!



ரமலான் மாதங்களிலும், ஹஜ் நாட்களிலும் மக்கா மதீனா நகரங்களில் வெளிநாட்டவர் அதிகம் இருப்பர். இந்த நாட்களை பயன்படுத்தி சிறுவர்களை பிச்சை எடுக்க வைத்து ஒரு கும்பல் சவூதியில் பிழைக்கிறது. இந்த சிறுவர்கள் அனைவரும் பக்கத்து நாடான ஏமனிலிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டவர்கள். இந்த சிறுவர்களின் பெற்றோர்களின் ஏழ்மையை பயன்படுத்தி 'உங்கள் குழந்தையை நல்ல வேலையில் அமர்த்தி மாதா மாதம் பணம் அனுப்புகிறோம்' என்று கூறி சவூதிக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால் இங்கு அவர்களுக்கு கொடுக்கும் வேலையோ முழு நேரப் பிச்சைத் தொழில். ஐந்து நேரத் தொழுகைக்கும் மசூதிக்கு வெளியே இவர்களை நிறுத்தி வைப்பது. தொழுகை நேரம் முடிந்தவுடன் பெட்ரோல் பங்க், கடைத்தெரு என்று இவர்களை பிழிந்தெடுக்கிறது ஒரு கூட்டம். சவூதி அரேபியா முழுவதும் சுமார் 10000 சிறுவர்கள் இது போன்று பிச்சைத் தொழிலில் ஈடுபடுத்தப் படுவதாக அரப் நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் ஒரு புறத்தை மட்டுமே குறை சொல்லி பிரயோசனம் இல்லை. 50 பைசா,ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று சிலலரையை மாற்றி நாம் பிச்சை போட்டு இது போன்ற கும்பல்கள் வளருவதற்கு நாமே காரணம் ஆகிறோம். ஒரு சிறுவன் (அஹமது 10 வயது) ஒரு நாளைக்கு 100 லிருந்து 150 ரியால் வரை சம்பாதிப்பதாகவும் தனது முதலாளிக்கு :-) 75 ரியால் கொடுத்து விடுவதாகவும் அரப் நியூஸூக்கு பேட்டியும் கொடுத்துள்ளான். தன் தந்தையையும் தான் பார்ப்பேனா என்பது சந்தேகமாக இருக்கிறது என்று கண்ணீர் மல்க பெட்டியும் கொடுத்துள்ளான்.

வாங்கும் கரத்தை விட கொடுக்கும் கரம் சிறந்தது என்றார் முகமது நபி. நாம் கொடுக்கும் தர்மம் ஒருவனை பிச்சை எடுக்கும் தொழிலில் இருந்து விலக வைக்க வேண்டும். 5000, 10000 என்று அவனுக்கு கடனாகவாவது கொடுத்து அவனது வாழ்வை முன்னேற்ற நமது தர்மம் பயன்பட வேண்டும். இல்லை என்றால் அந்த நிலை வரும் வரை தர்மம் செய்யாமலே இருந்து விடலாம்.

ஒரு முறை ஒரு நபித்தோழர் அரசாங்க கஜானாவிலிருந்து பொருளுதவி கேட்டு முகமது நபியை அணுகுகிறார். முகமது நபியும் அவரின் தேவைக்கேற்ப பொருளுதவி அளிக்கிறார். அந்த தோழரோ தனக்கு இன்னும் அதிகம் வேண்டும் என்று கேட்கிறார். முகமது நபி சற்று கோபமடைந்தவராக 'தேவைக்கு அதிகமாக ஏன் கேட்கிறாய்? யாசித்து உண்பதை விட உழைத்து உண்பதுதான் சிறந்தது' என்று உபதேசிக்கிறார். உபதேசத்தில் தெளிவடைந்த அந்த தோழர் தான் இறக்கும் வரை யாரிடமும் எதையும் யாசிக்காமல் இறந்து போனதையும் பார்க்கிறோம். முகமது நபியின் இறப்புக்கு பிறகு ஜனாதிபதிகளான அபுபக்கரும், உமரும் அந்த நபர் வறுமையில் வாடுவதைப் பார்த்து பொருளுதவி தருவதற்காக ஆளனுப்புகிறார்கள். அந்த நபரோ 'முகமது நபி என்னை யாசிப்பதில் இருந்தும் தடுத்திருக்கிறார். எனக்கு எந்த உதவியும் வேண்டாம்' என்று மறுத்ததைப் பார்க்கிறோம். அதே அரபுகளில் ஒரு சிலர் சிறுவர்களை கடத்தி பிச்சை எடுக்க வைப்பதையும் பார்க்கிறோம்.

'நான் கடவுள்' படத்தில் பாலாவும் இதே பிச்சைக்காரர்கள் பிரச்னையை மிகவும் அழகாக கையாண்டிருப்பார். திரைப்படத்தைப் பார்த்து பழைய சிவாஜி படங்களில் அழுதும் இருக்கிறேன். புதுப் படங்களில் என் கண்களை கலங்க வைத்தது பாலாவின் இந்த 'நான் கடவுள்'. நம் நாட்டில் பிச்சைக் காரர்களின் நிலையை நினைத்து மனது கனத்தது. படிக்க வேண்டிய வயதில் இவர்கள் ரயிலிலும், பஸ்ஸிலும் பிச்சை எடுப்பதை பார்க்க பரிதாபமாக இருக்கும். கலர் டிவி, சிலைகள் என்றெல்லாம் பணத்தை வீணடிக்கும் அரசு பிச்சைக்காரர்களைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை. வசதியுடன் உள்ள ஒவ்வொருவரும் ஒரு பிச்சைக்காரரை தத்தெடுத்தால் மிக எளிதில் இந்தப் பிரச்னையை சமாளிக்கலாம். ஆனால் மனது வர வேண்டுமே!

No comments: