Followers

Wednesday, August 19, 2009

மனிதனின் வக்கிரபுத்தி இப்படியா போக வேண்டும்!

ஸ்டார் சேனலில் ஒரு க்விஸ் புரோக்ராம் நடத்துகிறார்கள். இதற்காக பல லட்சங்களையும் அள்ளிக் கொடுக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்த அந்தரங்க செய்திகளை சம்பந்தப்படுத்தி பல கேள்விகளை கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் உண்மையான பதிலை சொல்ல வேண்டும். நீங்கள் பொய் சொன்னால் உங்கள் உடலோடு ஒட்டியிருக்கும் 'உண்மை கண்டறியும்' கருவி காட்டிக் கொடுத்து விடும். இந்த கேள்விகளுக்கு நீங்கள் உண்மையான பதில் அளித்தால் பல லட்சங்களைக் கொட்டிக் கொடுக்கிறார்கள். தன் குடும்ப வாழ்வு சீரழிந்தாலும் பரவாயில்லை பல லட்சங்களுக்கு அதிபதியாக வேண்டும் என்ற வெறியில் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். கேள்விகளில் சில மாதிரிகளை கீழே தருகிறேன்.

1.(குடும்ப தலைவி) உங்கள் கணவனை யாருக்கும் தெரியாமல் என்றாவது அடித்தது உண்டா?

2.(குடும்ப தலைவி) திருமணத்துக்கு முன்பு வேறு ஆண்களோடு உங்களுக்கு தொடர்பு இருந்ததா?

3.(குடும்ப தலைவி) தற்போதுள்ள கணவனை விட இன்னார் தனது கணவராக வாய்த்தால் நன்றாக இருந்திருக்குமே என்று என்றாவது எண்ணியது உண்டா?

4.(குடும்ப தலைவி) பத்து பதினைந்து வயதுகளில் உங்கள் சொந்தங்களில் யாராவது உங்களை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்களா?

5. உங்கள் கணவன் உங்களுக்கு ஏற்றவராக இல்லை என்று என்றாவது எண்ணியது உண்டா?

இதே போன்ற ரகங்களில் அமைந்த கேள்விகளே அதிகம் இடம் பெறுகின்றன. இதைவிட கொச்சையாகவும் பல கேள்விகள் கேட்கப்படுகிறது. அந்த அரங்கத்திற்குள் அந்த பெண்ணின் கணவன், குழந்தைகள், அண்ணன், தம்பி, போன்றோரையும் அழைத்து நேரிலேயே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் வைக்கிறார்கள். அவர்களும் சந்தோஷமாக அந்த நிகழ்ச்சியை புன்முறுவலோடு கண்டுகளிப்பது கண்றாவியாக இருக்கிறது.

ஒரு மனிதனின் சிறு வயதில் நடந்த அந்தரங்கங்களை இப்படி வெளிச்சம் போடுவதால் யாருக்கு என்ன நன்மை. ஏற்கனவே சாதி மத வித்தியாசம் இல்லாமல் விவாகரத்து அதிகரித்து வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளால் இந்த விகிதாச்சாரம் இன்னும் அதிகரிக்கும். இதைத்தான் ஸ்டார் டிவி விரும்புகிறதா? இதை எப்படி அரசு அனுமதிக்கிறது என்றும் தெரியவில்லை.

ஒரு உண்மை சம்பவம்:

கணவனுக்கு மனைவி மேல் ரொம்ப நாட்களாக சந்தேகம். இரண்டாவது குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறான். அதை எப்படி தெரிந்து கொள்வது? அதற்கு ஒரு திட்டம் தீட்டுகிறான்.

தன் மனைவியிடம் சென்று 'ஸ்டார் டிவியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் சொல். பல லட்சங்கள் நமக்கு கிடைக்கும். நம் கஷ்டமெல்லாம் தீரும் என்கிறான்'. மனைவியும் சம்மதிக்கிறாள். போட்டிக்கு முன் நம் வீட்டிலேயே ஒத்திகை பார்த்துக் கொள்வோம் என்று கூறி தான் போட்டி நடத்துபவராக மாறி மனைவியிடம் கேள்விகளை கேட்கிறான். 'உங்களுக்கு பிறந்த குழந்தைகள் அனைத்தும் உங்கள் கணவனுக்கு சொந்தமானவர்களா?' என்று கணவன் கேட்க மனைவியோ அப்பாவியாக பரிசை வெல்லனுமே என்று 'ஒரு குழந்தை என் கணவனுக்கு பிறக்கவில்லை' என்று உண்மையைப் போட்டு உடைக்க கோபத்தில் கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து விடுகிறான். தற்போது கணவன் சிறைச்சாலையில். மனைவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்.

இது போல் இன்னும் எத்தனை குடும்பங்கள் சீரழியப் போகிறதோ? நல்ல வேளை இன்னும் நம் தமிழ் சேனல்கள் பக்கம் இந்நிகழ்ச்சியைக் புண்ணியவான்கள் கொண்டு வரவில்லை என்று நினைக்கிறேன்.

No comments: