Followers

Monday, September 24, 2018

கொலை வெறித்தாக்குதல் - சாதி வெறி

கடந்த 19-09-2018 அன்று பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் மிக்க ஒரு கடைத்தெருவில் புதுமண ஜோடியின் மீது மற்றுமொரு கொலை வெறித்தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. இங்கு ஒரு சிறிய வித்தியாசம் என்னவெனில் இங்கு கூலிப்படை அமர்த்தப்படாமல் பெண்ணின் தந்தையே கையில் அரிவாள் எடுத்து தனது மகளின் கணவனை வெட்டியுள்ளார். தடுக்க முயன்ற தனது மகளையும் வெட்டியுள்ளார்.
ஹைதராபாத்தில் பொற்கொல்லர் தொழில் செய்யும் சாதிய பின்னணியைச் சேர்ந்தவர் மாதவி. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாதவியும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சந்தீப்பும் காதலித்துள்ளனர். மாதவியின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் காதலர்கள் இருவரும் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி போலீசில் தஞ்சமடைந்திருக்கின்றனர். இருவீட்டாரையும் அழைத்துப் பேசியது போலீசு. பேச்சுவார்த்தையின் போதே மாதவியின் தாயார், சந்தீப்பின் குடும்பத்தினரை கடுமையாக சாதி ரீதியாக திட்டியுள்ளார்.
மாதவியின் தந்தை மனோகராச்சாரியால், இத்திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திருமணத்தில் மாதவியின் குடும்பத்தார் பங்கேற்கவில்லை. சந்தீப், மாதவி திருமணம் முடிந்த பின்னர், இருவரும் சந்தீப்பின் வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் மனோகராச்சாரி, சந்தீப் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் இணக்கமாகப் பேசியுள்ளார். தனது மகளிடமும் பேசிய மனோகராச்சாரி, இருவருக்கும் தாம் துணி எடுத்துத்தர விரும்புவதாகவும், அதனால் இருவரையும் நகரின் முக்கிய கடைத்தெரு பகுதிக்கு வருமாறும் கூறியிருக்கிறார்.
இதனை நம்பி இருவரும் அங்கு சென்றுள்ளனர். அதன்பிறகு அங்கு நடந்தவை அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன.
சந்தீப்பும், மாதவியும் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் சூழலில் அங்கு வந்து வண்டியை நிறுத்திய மனோகராச்சாரி, தனது பையிலிருந்து அரிவாளை எடுத்துக் கொண்டே அவர்களது வாகனத்திற்கு அருகே சென்று சந்தீப்பை வெட்டத் தொடங்குகிறார். உடனடியாக பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாதவி தனது தந்தையை கீழே தள்ளி விடுகிறார்.
தனது கோபத்தை தனது மகளின் மீது திருப்புகிறார் மனோகராச்சாரி. மாதவியை சரமாரியாக வெட்டித் தள்ளுகிறார். உடனேயே ஒருவர் இதனைத் தடுக்க ஓடி வருகிறார். அவரை அரிவாளைக் காட்டி மிரட்டி விரட்டுகிறார் மனோகர். பின்னர் மற்றொரு இளைஞர் ஓடி வந்து மனோகரின் முதுகில் ஓங்கி உதைக்கிறார். எனினும் மீண்டும் வெட்டுகிறார் மனோகர். அந்த சி.சி.டி.வி. காணொளிக் காட்சி இவ்வாறு முடிவடைகிறது.
வெட்டுப்பட்ட இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் கூடியிருந்த பொதுமக்கள். சந்தீப்புக்கும் மாதவிக்கும் விழுந்த அரிவாள் வெட்டில், அதிகமாக பாதிக்கப்பட்டது மாதவிதான். அவருக்கு தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் உதவி
வினவு



2 comments:

Dr.Anburaj said...

என்றாவது நமது பாட புத்தகங்களில் சாதி என்பது அர்த்தம் அற்றது. 200 வருடங்களுக்கு முன்பு இருந்த சாதி அமைப்பு இன்று இல்லை.இன்று இருக்கும் சாதி அமைப்பு நாளை இருக்காது. மநு கூட ” கன்னிப் பெண்ணுக்கும் துறவிக்கும் சாதி கிடையாது ” என்று பதிவு செய்துள்ளாா். சாதி கலப்பு மணம் என்பதை மநு வரவேற்கின்றாா்.ஒத்தபண்பாடு கலாச்சாரம் கொண்டவா்கள் திருமணம் செய்வதில் எந்த பிழையும் இல்லை.என்று தேவையான தகவல்கள் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்பட்டள்ளதா ?
அர்ச்சுன் என்ன சாதி? கிருஷ்ணன் எனன் சாதி ? கிருஷ்ணன் சகோதரி சுபத்திராவை கிருஷ்ணன் விரும்பி அா்ச்சுனனுக்கு திருமணம் செய்து வைக்கின்றான். காரணம் அரசகுடும்பம் என்ற ஒரு கருத்துதான்.
பாஞசாலி என்ன சாதி ? அர்ச்சுனன் என்ன சாதி ?
இராமன் என்ன சாதி ? சீதை என்ன சாதி ? திருமணம் அரச குடும்பம் என்ற அடிப்பைடையில் நடந்தது.
சேர( கேரள) சோழ பாண்டிய மன்னா்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொண்டார்களே என்ன சாதி இருந்தது . அரச குடும்பம் அந்த தகுதி ஒன்றுதான்.
மக்களுக்கு போதி விழிப்புணா்வு ஏற்படவில்லை. மாதவியின் தந்தை ஒரு ஆத்திரக்காரன். அவ்வளவுதான். இன்று சாதி மறுப்பு திருமணங்கள் சாதாரணமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்து சமூதாயத்தை சதா குறைகூறிக்கொண்டு மலீனப்படுத்த வேண்டும் என்ற ஆசை சுவனப்பிரியனுக்கு. கிடைத்து விட்டது.நன்றாக சொரிந்து கொள்ளும்.இரத்தம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ASHAK SJ said...

மநு கூட ” கன்னிப் பெண்ணுக்கும் துறவிக்கும் சாதி கிடையாது ” என்று பதிவு செய்துள்ளாா்

அப்பத்தானே கல்யாணம் செய்யலாம்