Followers

Sunday, November 01, 2026

"ஓத்தாராம் அய்யிரு உள்ளான் மீனைத் தின்னுட்டு..."

 

"ஓத்தாராம் அய்யிரு உள்ளான் மீனைத் தின்னுட்டு..."

 

தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் இன்றும் வழங்கப்படும் ஒரு சொலவடை (பழமொழி) தான் இது. இது ஓர் ஆபாசமான சொற்றொடர் என்றோ, ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பிடும் சொல் தொடர் என்றோ கருதக் கூடும். ஆனால் உண்மை அதுவல்ல. இது சங்க இலக்கியத்தின் புழங்கு சொற்களைக் கொண்டு எளிய மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு பழமொழி.

 

வேதங்களில் தோத்திரம் இருக்கிறது. அந்தத் தோத்திரம் பாடக் கூட நாடோடிகளுக்குத் தெரியாது. சிந்துவெளிப் பகுதியின் அன்றைய மக்கள் தங்களின் 'முன்னோர்' மற்றும் 'ஞாயிறு' வழிபாடுகள் செய்வதைப் பார்த்து, கேட்டு, ஓத்துக் (ஓதி) கொண்டதே வேதத்தின் தோத்திரப் பாடல்கள். ஓதல், ஓதுவித்தல் என்னும் வினைகளின் மருஉச் சொல்தான் 'ஓத்து' என்னும் பெயர்ச்சொல்.

 

"மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்" (134) என்கிறது கடைச் சங்க இலக்கியமான திருக்குறள். கற்றதை மறந்து போனாலும், வேறொருவன் வழியாக ஓதச் செய்து (ஓதச் செய்து - ஓத்து - கற்பித்து) மறுபடியும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், அந்தணர்களின் (சமண, பௌத்த, ஆசிவக ஞானிகளின்) பிறப்பினால் நிகழும் அறச்செயல்கள், அவர்களின் ஒழுக்கம் குன்றினால் கெடும் என்பதே இதன் பொருள்.

 

பார்ப்பனர்கள் மீன் போன்ற அசைவ உணவுகளை மறைமுகமாகச் சாப்பிட்டு விட்டு மறையையும், கல்வியையும் ஓதுகிறார்கள். அதாவது, ஓத்துகின்றார்கள் (கற்பிக்கின்றார்கள்) என்றால், அவர்களிடம் ஓதிக் (ஓத்துக்) கொண்டவன் எப்படி அறநெறியில் நிற்பான். அதனால், அறநெறியில் வாழும் பெரியோர்கள் அப்படிச் செய்யக்கூடாது என்னும் சிறந்த பொருளமைந்த, சங்க இலக்கியச் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பழமொழி தான் இது.

 

மேற்குறிப்பிட்ட குறளுக்கு இன்னொரு விளக்கமும் உண்டு. 'பார்ப்பான் பிறப்பொழுக்கம்' என்றால், அவன் பிறவியே ஒழுக்கமானது என்றும் பொருள் தொனிக்கும். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொன்ன திருவள்ளுவரா இப்படிச் சொல்லியிருப்பார்? அவ்விடத்தில் "பார்ப்பான் பிறப்பு, ஒழுக்கம் குன்றக் கெடும்" என்று பிரித்துப் பொருள் கொளல் வேண்டும். அதாவது அறநெறியில் வாழ்பவன் ஒழுக்கம் குன்றினால், அவன் பிறப்பின் பயனான 'ஓத்து' என்னும் கற்பிக்கும் ஒழுக்கம் கெடும் என்பதன் நேரடிப் பொருள்.

 

மேலும், பார்ப்பான் என்ற அன்றைய சொல், இக்காலத்தில், சாதியைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லல்ல. அக்காலத்தில் பள்ளி ஏற்படுத்தி, கல்வி கற்பித்து, மருத்துவம் முதற் கொண்டு மக்களுக்குச் சேவை செய்தவர்களைத்தான் அறவோர், துறவோர், திறவோர், தாபதர், அந்தணர், பார்ப்பனர் என்று அழைப்பது வழக்கம். ஆரியர் வருகைக்குப் பின், சமுதாயத்தில் மேற்குறிப்பிட்ட அறவோர்களுக்கு இருக்கும் மரியாதையைக் கண்டு, அதைத் தாங்களும் அடைய விரும்பி, மாடு, மாமிசம் தின்பதைக் கைவிட்டுத் தங்களையும் அந்தணர், பார்ப்பனர் என்று அழைத்துக் கொண்டனர் ஆரியர்கள். இதனால்தான் "அந்தணர் என்போர் அறவோர்" என்று விளக்கமாக எழுதி வைத்தார் வள்ளுவர்.

 

இந்திரன், வாயு, வருணன், அக்னி என்று பசுவின் கொழுப்பூற்றி வேள்வி செய்பவனுக்குத் தொல்காப்பியமும், அதன் சூத்திரமும் எப்படித் தெரியும்? அகர முதல எழுத்தெல்லாம் என்பது எப்படிப் புரியும்? மானம் என்ற ஓர் அதிகாரம் முழுமையும், மானமிழந்தால் வாழாத தமிழ் மரபைக் கூறும் திருவள்ளுவர், அவ்வாறு மானம் போன நிலையிலும் வாழ்வது வடமரபு என்றும் கூறாமல் கூறுகிறார்.

 

உயிருக்கு ஆபத்து வருமானால், எப்படிப்பட்ட பஞ்சமா பாதகங்களையும் செய்யலாம் என்கின்றன வடபுலத்து மனுநீதியும், சாத்திரங்களும். ஆனால் நம் மக்களோ, ஆரியர்கள் செய்யும் தவறுகளைக் கூட நாகரிகமாக, 'ஓத்தாராம் அய்யிரு' என்று இலக்கிய நயத்துடன் சொல்லி இருப்பதைக் கேட்டுக் கேட்டு அப்பிறவிகள் இன்புறக் கடவதாக....

முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.

 

No comments: