இரண்டு வாரம் முன்பு
சவுதி திரும்புவதற்காக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இமிக்ரேஷன் முடித்து விட்டு
விமானத்துக்காக காத்திருந்தேன். மதிய நேரம். ஆரிய பவனில் ஒரு தயிர்சாதம் வாங்கி சாப்பிட்டு
விட்டு வெள்ளிக் கிழமை ஜூம்ஆ என்பதால் தொழுது விடலாம் என்று அங்குள்ள பணிப் பெண்ணிடம்
'இங்கு தொழுகைக்கு இடம் உள்ளதா?'
என்று கேட்டேன்.
'இல்லை சார். இங்கேயே
ஒரு ஓரமாக தூய்மையான இடத்தில் தொழுது கொள்ளுங்கள்' என்று அந்த பணிப்பெண் சொன்னார்.
வேறு வழியின்றி காத்திருப்புக்கான
இடத்தில் தொழுது கொண்டு எனது கடமையை நிறைவேற்றினேன். அதன் பிறகு விமானம் ஏறி கொழும்புவில்
இறங்கி ரியாத் ஃபிளைட் பிடிக்க நடந்து போகும் போது ஒரு தகவல் பலகை கண்ணில் பட்டது.
'பிரார்த்தனைக் கூடம்'
என்று தமிழில் சற்று தப்பும் தவறுமாக எழுதப்பட்ட
ஒரு அறிவிப்பு பலகையை பார்த்தேன். மூன்று மொழிகளில் எழுதப்பட்டடிருந்தது. சம்பந்தப்பட்டவர்கள்
இந்த தவறை சரி செய்வார்களாக.. நமது சென்னை விமான நிலையத்தில் இப்படி எந்த ஒரு அறிவிப்பு
பலகையும் இல்லாதது வருத்தமாக இருந்தது. பயணிகளின் தேவை அறிந்து செயல்படும் இலங்கை விமான
நிலையத்துக்கு பாராட்டுக்கள்.
ரியாத் செல்ல இமிக்ரேஷனில்
அமர்ந்திருந்தபோது 'சுவனப்பிரியன்
... சவுக்கியமா?' என்று ஒரு குரல்..
யாரென்று பார்த்தால் ரியாத் நண்பர். 'என் பையன் 'அதோ சுவனப்பிரியன்
வரிசையில் நிற்கிறார்' என்று என் பையன் சொன்னவுடன்தான்
உங்களை கண்டு பிடித்தேன்' என்றார். ஆஹா.. நம்
பதிவுகளை சிறுவர்களும் படிக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டேன். உண்மையான பெயரை விட
புனைப் பெயர்தான் அதிக நபர்களால் அறியப்படுகிறது. இது இணையத்தில் எழுதுவதால் கிடைக்கும்
அங்கீகாரம்...
எல்லா புகழும் இறைவனுக்கே...
