உலகில் இருக்கும் காலமெல்லாம் ஏதாவது ஒரு வகையில் துன்பம் நம்மை வந்தடைகிறது. இன்பமும் வந்தடைகிறது. சில ஆண்டுகளில் இந்த உயிர் பிரிந்து மற்றுமொரு உலகத்துக்கு நாம் செல்லும் போதுதான் இந்த இன்ப துன்பமற்ற நிலையை நாம் அடைய முடியும் என்று பல சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் இறப்புக்கு பிறகுதான் ஒருவனின் உண்மையான நிரந்தர வாழ்க்கையே ஆரம்பிக்கிறது என்கிறது இஸ்லாம்.
பத்ரகிரியார் இறப்பின் சுகத்தைப் பற்றி பாடும் போது....
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்
என்று முடிக்கிறார். அந்த இறப்பு என்பது தூக்கத்தைப் போன்றதுதான். அதாவது நிரந்தர தூக்கம். அந்த தூக்கமானது தூங்காமல் தூங்கிய நிலையை அடைகிறது. தூங்குவது போல் நமக்கு தோற்றம் அளித்தாலும் உண்மையில் அந்த மனிதனின் உயிர் இறைவன் வசத்தில் என்றும் உயிர்ப்புடனே இருக்கும் என்று இந்த பாடல் நமக்கு அறிவுறுத்துகிறது.
இதே கருத்தை வள்ளலார் திருவருட்பாவில் பாடும் போது
இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே-துன்றுமல
வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.
சீர் பிரித்த பின்
இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று
என்று வருமோ அறியேன் என் கோவே - துன்று மல
வெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம்
பொருள்:
இன்று வருமோ = இன்று வருமோ
நாளைக்கே வருமோ = நாளைக்கே வருமோ
அல்லது = அல்லது
மற்று என்று வருமோ அறியேன் = அது என்று வருமோ, நான் அறியேன்
என் கோவே = என் தலைவனே
துன்று மல வெம் மாயை அற்று = காலம் காலமாக, தொன்று தொட்டு வரும் மாயை விலகி
வெளிக்குள் வெளி கடந்து = வானில் பல வெளிகள் அடுக்கடுக்காக உள்ளதை தாண்டி
சும்மா இருக்கும் சுகம் = சும்மா இருக்கும் சுகம்
இறப்பு என்பது இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது அது என்று வருமோ, நான் அறியேன்: என் தலைவனே! காலம் காலமாக, தொன்று தொட்டு வரும் மாயை விலகி வானில் பல வெளிகள் அடுக்கடுக்காக உள்ளதையும் தாண்டி உன்னை அடைந்து எந்த கவலையும் இல்லாமல் சும்மா இருக்கும் அந்த நாளே எனக்கு சுகமளிக்கும் நாள்.
வள்ளலார் விரும்பும் இத்தகைய நிலை வாழும் நாளில் மனித உயிர்களுக்கு தீங்கிழைக்காமல் இறைவன் சொன்னபடி அவனை வணங்கி வாழ்ந்து இறந்த நல்லவர்களுக்கே கிடைக்கும். அநியாய உயிர்க் கொலைகள் செய்து இறைவன் சொன்ன கட்டளைகளை மீறிய தீயவர்களுக்கு இந்த உலகை விட மிகப் பெரிய தண்டனை காத்துக் கொண்டிருப்பதாக அதே இறைவன் கூறுகிறான்.
'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர் தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. கேள்விகள் கேட்கப்படும் அந்த தீர்ப்பு நாளில் இறைவன் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'
'அவர்களே நேர் வழியை விற்று வழி கேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தை சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது'
-குர்ஆன் 2:174,175
'நம்பிக்கை கொண்டேரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால் மட்டுமே உள்ளங்கள் அமைதியுறுகின்றன'
-குர்ஆன் 13:28
"எவனொருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்"
-குர்ஆன் 5:32
இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Showing posts with label வள்ளலார். Show all posts
Showing posts with label வள்ளலார். Show all posts
Sunday, January 12, 2014
இறப்பு ஒன்றுதான் நிரந்தர சுகம்! - திருவருட்பா
Labels:
சங்க இலக்கியங்கள்,
தமிழ்,
திருவருட்பா,
வள்ளலார்
Subscribe to:
Posts (Atom)