'வணக்கம்' - 'சலாம்' எது சிறந்த வழிமுறை?
//தமிழ் நாட்டில் வாழும் உண்மையான தமிழன் யாராயினும் வணக்கம் என்று தான் சொல்லுவான். சலாம் என்று சொல்பவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.// - கதிரவன்!
தமிழ் அகராதியில் 'வணக்கம்' என்ற சொல்லுக்கு சிறப்பித்தல், கீழ்படிதல் என்ற இரண்டு பொருள்கள் உள்ளன. சிறப்பித்தல் என்ற பொருளில் ஒரு மனிதனை மற்றொரு மனிதன் 'வணக்கம்' என்று கூறினால் அதனை இஸ்லாம் தடை செய்யவில்லை. கீழ் படிதல் அதாவது அந்த மனிதனையே வணங்குதல் என்ற பொருளில் ஒருவருக்கொருவர் 'வணக்கம்' என்று சொல்லிக் கொள்வதை இஸ்லாம் தடுக்கிறது. இறைவனுக்கு நிகராக தன்னைப் பொன்று மல ஜலத்தை சுமந்து கொண்டு வாழும் ஒரு மனிதனை வணங்கும் பொருளில் 'வணக்கம்' என்று சொல்லுவதை எந்தவொரு சுய மரியாதை உடையவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மனிதன் தெய்வமாக்கப்படுவதின் முதல் படியே மனிதனுக்கு மனிதன் 'வணக்கம்' என்று சொல்லி அவர்களை நோக்கி கைகளால் கும்பிடும் இந்த பழக்கமே! இத்தனை கடவுள்கள் நமது மண்ணில் உண்டாக காரணமும் இந்த பழக்கம்தான்.
நம் முன்னால் வாழ்ந்து மறைந்த பசும் பொன் முத்துராமலிங்க தேவர் இன்று பல மக்களால் தெய்வமாக போற்றப்படுகிறார். கடவுளே இல்லை என்ற பெரியாருக்கு மாலை மரியாதைகள் நடக்க ஆரம்பித்து விட்டன. இன்னும் சூடம் கொளுத்தாததுதான் பாக்கி. மூடப்பழக்கங்களை எதிர்த்த அவருக்கே இந்த நிலை.அறிவியல் வளர்ச்சி முதிர்ந்த இந்த காலத்திலேயே நிலைமை இப்படி என்றால் 2000 வருடங்களுக்கு முன்னால் உள்ள நிலைமையை கற்பனை செய்து பாருங்கள். நம் நாட்டில் உள்ள தெய்வங்களை ஆராய்ந்து நதி மூலம், ரிஷி மூலம் பார்க்க ஆரம்பித்தால் முடிவில் அந்த தெய்வங்கள் அந்த ஊரின் பணம் படைத்தவராகவோ, ஆன்மீக தலைவராகவோ இருந்திருப்பார். இதனைத்தான் இஸ்லாம் தடுக்கிறது. தான் வரும் போது தனக்காக யாரும் எழுந்திருக்கக் கூடாது என்று முகமது நபி தனது தோழர்களிடம் கட்டளை யிட்டதும் இதற்காகத்தான். தனது காலில் யாரும் விழக் கூடாது என்று தடுத்ததும் இதற்காகத்தான். தனது உருவத்தையும் வரையக் கூடாது என்று என்று தடுத்ததும் இதற்காகத்தான்.
ஆனால் இதற்கு மாற்றமாக முஸ்லிம்கள் சொல்லும் 'சலாம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் 'அமைதி' என்பதாகும். ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் விரும்புவது அமைதியான வாழ்க்கையையே! 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னால் 'உங்கள் மீது அமைதி உண்டாகட்டுமாக' என்றும் அதற்கு பதிலாக 'வஅலைக்கும் சலாம்' எனும் போது 'அந்த அமைதி உங்களுக்கும் உண்டாகட்டுமாக' என்று ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்ளும் அழகிய முறையல்லவா இது. மொழி, இனம், நாடு கடந்து எந்த மனிதனும் எந்த மனிதனுக்கும் எந்த நிலையிலும் சொல்லக் கூடிய மிக அழகிய வார்த்தை இது. இதனை அரபியில் தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. தமிழ் ஆர்வலர்கள் இதனை தமிழிலேயே சொல்லலாம். இதற்கு இஸ்லாம் தடை ஒன்றும் விதிக்கவில்லை.
2 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் சுவன் பாய்.
kannan from abu dhabi
//அஸ்ஸலாமு அலைக்கும் சுவன் பாய்.//
வஅலைக்கும் சலாம் சகோ கண்ணன்! எப்படி இருக்கீங்க? சௌக்கியமா?
Post a Comment