Followers

Monday, October 20, 2014

பத்து வயதிலேயே துப்பறிந்தவனாக்கும் நான்! :-)



(பல வருடங்களுக்கு முன்பு கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஜெத்தாவுக்கு என்னை வழியனுப்ப தாத்தா வந்திருந்தபோது எடுத்த புகைப்படம்).

40 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு! முன்பு எங்களுக்கு சொந்தமான நிலம் நிறைய மதஹரம் என்ற ஊரில் இருந்தது. சொந்தமாக விவசாயம் பார்த்தோம். எனது தாத்தா அறுவடை சீசன்களில் 10 நாட்கள் கூட வீட்டுக்கு வராமல் அங்கேயே தங்கி விடுவார். எனக்கு அப்பொழுது 10 வயது இருக்கும். பள்ளி விடுமுறைகளில் நானும் வயல்வெளிக்கு சென்று சுகந்தமான காற்றை சுவாசிப்பது உண்டு. எங்கள் வீட்டிலிருந்து வயலுக்கு செல்வது குதிரை வண்டியில். இதற்காகவே தாத்தா அருமையான சிவந்த குதிரை ஒன்றை வாங்கினார். குதிரை வண்டியில் பயணம் செய்வதற்காகவே நான் விடுமுறையில் வயல்வெளிக்கு செல்வதுண்டு. குதிரை வண்டிக்காக தனி லாயமும், ஒரு ஓட்டுனரையும் சம்பளத்துக்கு தாத்தா வைத்திருந்தார். டக்... டக்.. டக்.... என்ற அந்த குதிரையின் குளம்பொளி ஏற்படுத்தும் சந்தத்தோடு அமைந்த அந்த சப்தம் மிக ரம்மியமாக இருக்கும். வழி நெடுக மரங்கள்..... செல்லும் வழி எங்கும் குடை பிடித்து எங்களை வெயிலின் தாக்கத்திலிருந்து காக்கும். அந்த அழகே அழகு......!

தாத்தாவுக்கு மதியம் வீட்டிலிருந்து சாப்பாடு போகும். வயலில் வேலை செய்பவர்களில் யாராவது ஒருவர் தினமும் சைக்கிளில் வந்து தாத்தாவுக்கான சாப்பாட்டை வாங்கிச் செல்வர். எங்கள் வீட்டிலிருந்து வயலானது கிட்டத்தட்ட எட்டு கிலோ மீட்டர் இருக்கும்.

ஒரு நாள் மத்தியான நேரத்தில் 'தாத்தாவுக்கு சாப்பாடு கொடுங்கள்' என்று ராஜேந்திரன் என்ற வயலில் வேலை செய்யும் நபர் வந்து கேட்டார். நாங்களும் சாப்பாட்டைக் கொடுத்து விட்டோம். மதியம் சாப்பிட வீட்டுக்கு நான் வந்தபோதுதான் அந்த நபரிடம் நானே சாப்பாட்டைக் கொடுத்தேன். அவர் சென்ற அரை மணி நேரம் கழித்து வேறொருவர் 'தாத்தாவுக்கு சாப்பாடு கொடுங்கள்' என்று கேட்டு வந்தார். ஏற்கெனவே ஒரு பையன் வந்து சாப்பாடு வாங்கி சென்று விட்டாரே என்று சொல்லி அவரை திருப்பி அனுப்பி விட்டோம். இன்று போல் அன்று தொலை பேசி வசதிகள் இல்லாததால் நேரமாகவே ஹோட்டலில் சாப்பாட்டை தாத்தா முடித்துக் கொண்டார்.

தாத்தா என்னிடம் மறுநாள் விசாரணை நடத்தினார்.

'ஞாபகப்படுத்திச் சொல். யார் சாப்பாட்டைக் கொண்டு சென்றது'

'நன்றாக ஞாபகம் இருக்கிறது. முன்பு நம் குதிரை வண்டி ஓட்டுனராக வேலை செய்த ராஜேந்திரன் தான்'

மறுநாளும் வந்தது. யார் என்பதை கண்டு பிடிக்க தாத்தா என்னையும் அழைத்துக் கொண்டு ராஜேந்திரனின் கிராமத்துக்கே சென்றார். ராஜேந்திரன் நான் வருவதை தூரத்திலிருந்து பார்த்து விட்டு அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி மறைந்து விட்டார். சாப்பாட்டு கேரியர் சுத்தமாக கழுவப்பட்டு கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது.

'ஐயா! மன்னிச்சிருங்கய்யா! என் பையன் தெரியாம செஞ்சுட்டான்' ராஜேந்திரனின் தகப்பனார்.

'பசித்தால் என்னிடம் கேட்டிருக்கலாமே! இப்படி திருடுவது தப்பில்லையா'

'அந்த பயலை நானும் அடிச்சேன்யா! வேலைக்கும் ஒழுங்கா போறதில்ல...'

'சரி.... இனிமேலாவது வீட்டுக்கெல்லாம் போக வேண்டாம் என்று சொல்லி கண்டித்து வை. இனி ஒரு தரம் இப்படி நடந்தால் போலீஸில் புகார் செய்து விடுவேன்'

என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம். 10 வயதிலேயே துப்பறிந்து ஒரு மிகப்பெரிய தவறையும் மிகப் பெரிய குற்றவாளியையும் கண்டு பிடித்த பெருமிதத்தில் தாத்தாவோடு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்து வந்தேன்.

பசித்த வயிற்றுக்காக ஒரு வேளை சாப்பாட்டை திருடிய ராஜேந்திரனுக்கு இத்தனை சிக்கல்கள் வந்துள்ளது. ஆனால் இன்றைய அரசியல்வாதிகளும், அரசு உத்தியோஸ்தர்களும் 50 கோடி, 100 கோடி என்று கொள்ளையடித்து விட்டு சிரித்த முகத்தோடு கோர்ட்டுக்கு எவ்வாறு வர முடிகிறது என்று ஆச்சரியப்படுகிறேன். மக்களுக்கு உழைக்க வேண்டிய இவர்கள் தங்களின் மக்களுக்காக உழைப்பதையே வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளனர். இறைவன் தான் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

வயல்வெளியையும் நிலத்தையும் மையமாக வைத்து புனையப்பட்ட அழகிய பாடல். மருதகாசியினுடையது. கேளுங்கள்......

வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா?-தலை
வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின் பக்கமா-இது
வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா?-என்
மனைக்கு வரக் காத்திருக்கும் நீ என் சொத்தம்மா!

நெத்தி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக-அது
நெல்மணியாய் விளைஞ்சிருக்கு கொத்து கொத்தாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக்கட்டாக-அடுச்சு
பதறு நீக்கி குவிச்சு வைப்போம் முட்டு முட்டாக!

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!….

பாடலாசிரியர்: கவிஞர். மருதகாசி.



No comments: