சகோதரி அம்மணி!
//'வெறும் சப்தமாகவும், ஓசையாகவும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றே ஏக இறைவனை மறுப்போரின் தன்மை உள்ளது. அவர்கள் செவிடர்கள்: ஊமைகள்: குருடர்கள்: எனவே விளங்க மாட்டார்கள்'
-குர்ஆன் 2:171
சூப்பர்.
மிகவும் அழகான வார்த்தைகளில் முகம்மது காபிர்களை திட்டுகிறார். ஆடுமாடு, செவிடன், குருடன், ஊமை ..
பாவம் கண்பதிராமன், இப்படியெல்லாம் திட்டு வாங்க வேண்டியிருக்கு.
அது சரி, எதுக்கு காபிர்களிடம் நேரத்தை விரயம் செய்துகொண்டிருக்கிறீர்கள். இவர்கள்தான் ஆடுமாடு, ஊமை, குருடு, செவிடாச்சே.//
இதற்கு முன்னால் உள்ள வசனத்தை நீங்கள் படிக்காததாலேயே உங்களுக்கு இந்த கேள்வி வந்துள்ளது.
'அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதனையே பின்பற்றுவோம்' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?
குர்ஆன் 2:170
முகமது நபி இஸ்லாத்தை அந்த மக்களிடம் போதிக்கும் போது அன்றைய மக்களின் நிலை என்ன? பெண் குழந்தையை வறுமைக்கு பயந்து உயிரோடு புதைத்தனர். வட்டி தொழிலில் மூழ்கி ஏழைகளை சுரண்டி வந்தனர்: மனிதர்களை அடிமைகளாக நடத்தும் பழக்கம் கொடி கட்டி பறந்தது: விபசாரம் சமூகம் எங்கும் வியாபித்திருந்தது: கடவுளை வணங்குகிறேன் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் கஃபாவை அம்மணமாக எந்த உடையும் இன்றி வலம் வந்தனர்: கொலையும், பழி வாங்குதலும் மிக சர்வ சாதாரணமாக அந்த மக்களிடத்தில் இருந்தது. தீண்டாமை கொடுமை நமது நாட்டை விட மோசமாக இருந்தது. இவ்வளவு சீரழிந்த ஒரு சமூகத்துக்குத்தான் முகமது நபி இஸ்லாத்தை எடுத்துக் கூற இறைவனால் அந்த மக்களுக்கு அனுப்பப் படுகிறார். முகமது நபியின் போதனையை உதாசீனப்படுத்திய அந்த மக்கள் அவருக்கு அளித்த பதில் 'எங்களின் முன்னோர்களை நாங்கள் எவ்வாறு கண்டோமோ அவ்வாறே எங்களின் வாழ்க்கையும் இறை வழிபாடும் இருக்கும்' என்று கூறுகின்றனர். அவ்வாறு கூறிய அந்த மக்களைப் பார்த்துத்தான் இறைவன் குர்ஆனில் 'ஊமைகள், செவிடர்கள், எதையும் விளங்காதவர்கள்' என்று கூறுகிறான்.
அன்று அரபுலகில் எந்த நிலை இருந்ததோ அதே நிலை இன்று நம் நாட்டில் நிலவுவதைப் பார்க்கிறோம். உசிலம்பட்டி, சேலம் போன்ற ஊர்களில் இன்றும் கூட வறுமைக்கு பயந்து பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொல்வதைப் பார்க்கிறோம். அகோரிகள் என்று கூறிக் கொண்டு ஒரு பெருங் கூட்டம் மனித மாமிசத்தை தின்பதை பார்க்கிறோம். உடலில் எந்த உடையும் இல்லாமல் பொது இடங்களில் சுற்றித் திரிவதை இன்றும் நியாயப்படுத்தி வருகிறோம். நேற்று சென்னை கல்லூரி ஒன்றில் மாணவர்களும் மாணவிகளும் முத்தப்புரட்சி செய்து விபசாரத்தின் வாசலை திறக்க வைத்துள்ளோம். மதுவை அரசாங்கமே தொழிலாக நடத்தி தமிழகமெங்கும் பெரும் புரட்சி நடப்பதையும் நாம் மறுக்க முடியாது. இவை எல்லாம் தவறு என்று யாராவது உபதேசம் செய்தால் 'எனது மூதாதையர்கள் இவ்வாறுதான் இருந்தார்கள். நானும் அவ்வாறுதான் இருப்பேன்' என்று யாராவது சொன்னால் அவர்களைப் பார்த்துதான் இந்த குர்ஆன் வசனம் பேசுகிறது. கணபதி ராமன் போன்ற சகோதரர்கள் இஸ்லாமிய சட்டங்களை நடுநிலையோடு அணுகுவதால் அவர்களைப் பார்த்து இந்த வசனம் கூறவில்லை. இது அவருக்கும் தெரியும். ஒன்றை தவறு என்று தெரிந்தும் 'எனது மூதாதைரயர் செய்ததனால் செய்வேன்' என்று ஒரு முஸ்லிம் முரண்டு பண்ணினாலும் அவரையும் பார்த்து இந்த வசனம் பேசும். எக்காலத்திலும் வாழும் மக்களுக்கு வழிகாட்டியாக வந்ததே இந்த குர்ஆன் என்பதற்கு இந்த வசனமும் ஒரு சாட்சி.
No comments:
Post a Comment