'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, November 26, 2014
ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈரும் பேனும்!
உசிலம்பட்டி தொடங்கி பெங்களூரு, அகமதாபாத், மஹாராஷ்டிரா என்று நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக கடந்த மூன்று மாதங்களுக்குள் அடுத்தடுத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிராக ஆதிக்க சாதியினர் நிகழ்த்தியிருக்கும் வன்கொடுமைகளும் – கொலைகளும் வக்கிரம் நிறைந்தவை!
உசிலம்பட்டி – போலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கள்ளர் சாதியைச் சேர்ந்த விமலாதேவி, தமது தந்தையிடம் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்த பள்ளர் சாதியைச் சேர்ந்த திலீப்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வாழ்ந்து வந்தார். வயதுக்கு வந்த இருவர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துவந்த நிலையில், அவர்களை போலீசின் துணையோடு சட்டவிரோதமாகப் பிரித்தனர், கள்ளர் சாதிவெறியர்கள். உசிலம்பட்டி துணைக் கண்காணிப்பாளர் சரவணக்குமார் முன்னிலையில்தான் இந்த சாதிப் பஞ்சாயத்தே நடைபெற்றிருக்கிறது. அங்கே, பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி; உசிலை சட்டமன்ற உறுப்பினரும் பார்வர்டு பிளாக் தலைவருமான கதிரவன்; மார்க்சிஸ்டு கட்சியின் செல்லக்கண்ணு மற்றும் கள்ளர் சாதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் தாலியைக் கழட்டி எறியுமாறு விமலாதேவியை மிரட்டியும் அந்தப் பெண் பணியவில்லை. நீதிமன்றத்தில் விமலாதேவி ஆஜர் படுத்தபட்டபோதும், “என்னை யாரும் கடத்தவில்லை. நான் விரும்பித்தான் திலீப்குமாருடன் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தேன்” என்று உறுதியாக அறிவித்தார். இருப்பினும் அவரைச் சட்டவிரோதமாக சாதிவெறிபிடித்த பெற்றோர்களிடமே ஒப்படைத்தது நீதிமன்றம்.
உடனே, விமலாதேவிக்கு கள்ளர் சாதியைச் சேர்ந்த சதிஷ்குமார் என்பவரோடுகட்டாயத் திருமணம் செய்துவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர், அவரது பெற்றோர். அதனை உறுதியாக எதிர்த்து நின்ற விமலாதேவி, அக்-1 அன்று இரவு கள்ளர் சாதி சுடுகாட்டில் எரிந்து சாம்பலாகிக் கிடந்தார். விமலாதேவி தற்கொலை செய்துகொண்டதாகவும், பிணத்தை எரித்துவிட்டதாகவும் திமிராக அறிவித்தனர் கள்ளர் சாதிவெறியர்கள்.
“என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் கேசு போட்டுக்கோங்க. ஆனால், என் மகளைக் கொன்னதாகத்தான் கேசு இருக்கனும். அவன் (திலீப்குமார்) பொண்டாட்டினு இருக்கக்கூடாது” என்று கூறியிருக்கிறார், விமலாதேவியின் தந்தை. இக்கூற்று ஒன்றே போதும், சாதிவெறியர்களின் திமிரை நிரூபிப்பதற்கு!
-----------------------------------------------------
மகாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகர் மாவட்டத்திலுள்ள காசர்வாடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் ஜாதவ், அவரது மனைவி ஜெயசிறீ மற்றும் அவர்களது மகன் சுனில் ஆகியோர் ஆதிக்க சாதி வெறியர்களால் அக்-21 அன்று நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார்கள். கண்டதுண்டமாக வெட்டப்பட்டு நாலாபுறமும் வீசியெறியப்பட்ட அவர்களது சிதைந்த உடல் பாகங்கள் விவசாயக் கிணற்றிலும், விவசாய நிலத்திலும் அழுகிய நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்டது.
கொல்லப்பட்ட சஞ்சய் ஜாதவிற்கு மேல்சாதியை சேர்ந்த திருமணமான பெண்ணொருவருடன் கள்ள உறவு இருந்ததாக குற்றம் சாட்டி இப்படுகொலையை நிகழ்த்தியிருக்கிறார்கள் ஆதிக்க சாதிவெறியர்கள். இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நிகழ்ந்துள்ள மூன்றாவது தாழ்த்தப்பட்டோர் படுகொலை இது.
-----------------------------------------------------
பஞ்சாபின் லூதியானா மாவட்டம் ஜமால்பூர் கிராமம். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர்களான ஹரிந்தர் சிங்கும் ஜதிந்தர் சிங்கும் தங்களுக்குச் சொந்தமான விளைநிலத்தை ஆக்கிரமித்து அனுபவித்து வரும் உள்ளூர் நிலப்பிரபுவுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தனர். நிலப்பிரபுவின் ஆக்கிரமிப்பை மீறி துணிவுடன் தங்களது நிலத்தில் இறங்கி விவசாயம் செய்ய முற்பட்டதற்காக அச்சகோதரர்கள் இருவரும் செப்.27 அன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். தங்களுடனான மோதலில் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவித்தது போலீசு. ஆனால் அந்த நிலப்பிரபு, தனது கைக்கூலியான அகாலி தளக் கட்சியின் பிரமுகரை வைத்து இந்தக் கொலையைச் செய்திருப்பதும், கொலைகாரர்களைக் காப்பாற்றும் பொருட்டு இதனை மோதல் கொலை என்று போலீசு சித்தரித்திருப்பதும் இப்போது அம்பலமாகியுள்ளது.
----------------------------------------------------
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவன் பி.ரமேஷ். சற்றே விலை கூடிய கைக்கடிகாரத்தை அவர் அணிந்திருந்ததை ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக மாணவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவரிடமிருந்து அதனைப் பிடுங்கி எறிய முயன்றுள்ளனர். ரமேஷ் அதனை எதிர்த்திருக்கிறார். கடந்த அக்-3 அன்று திருத்தங்கல் இரயில் நிலையம் அருகே ரமேஷை வழிமறித்த அந்த சாதிவெறி பிடித்த மாணவர்கள் கடிகாரம் கட்டிய மணிக்கட்டை வெட்டிச் சிதைத்தனர்.
-----------------------------------------------------
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகில் உள்ள கிராமம் செவ்வூர். இக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் சிங்கப்பூர் சென்று வேலை செய்வதால், எல்லோரிடமும் நிலம் இருக்கிறது. குடியிருப்புகளும் பெரும்பாலும் கான்கிரீட் வீடுகளாகியிருக்கின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஓரளவு முன்னேறியிருக்கின்ற காரணத்தால், தப்படிப்பது, சாவுச்சேதி சொல்வது உள்ளிட்ட சாதி அடிப்படையிலான அடிமைத்தொழில்ளைச் செய்யமாட்டோம் என மறுத்திருக்கின்றனர். இதன் காரணமாக கடந்த மே மாதம் முதல் தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் அனைத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து சமூகப்புறக்கணிப்பை அறிவித்திருக்கிறார்கள் ஆதிக்க சாதிவெறியர்கள்.
-------------------------------------------------------
குஜராத்தின் அகமதாபாத் மாவட்டம், பாய்லா கிராமத்தைச் சேர்ந்த மெகுல் காபிரா, வால்மீகி என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர். தன்னைப் போலவே தனது பிள்ளையும் துப்புரவுப் பணியாளராக அடிமைத் தொழில் செய்யக்கூடாது என்றெண்ணிய அவரது தந்தை, கடன்பட்டு மகனுக்கு ஆட்டோ ஒன்றை வாங்கித் தருகிறார். “குப்பை அள்ளும் சாதிக்காரன், ஆட்டோ ஓட்டுவதா?” என்று கருவிக் கொண்டிருந்த ஆதிக்க சாதிக் கும்பல் ஒன்று அவரது ஆட்டோவை அடித்து நொறுக்கியதோடு, அவரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியது. கடந்த 2012-ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்திற்காக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
------------------------------------------------------
பெங்களூரை அடுத்த நெலமங்களாவில் உள்ள ஜெயநகரை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியான ராஜ்குமாரின் எட்டு வயது மகன் சந்தோஷ், கடந்த அக்-19 அன்று தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு, அருகிலுள்ள ருத்ரேஸ்வரா கோயிலுக்குள் தண்ணீர்க் குடிப்பதற்காகச் சென்றிருக்கிறான். அப்போது கோயிலில் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்த கோயில் பூசாரி விஜயகுமாரிடம் தங்களுக்கும் பிரசாதம் வழங்குமாறு அச்சிறுவர்கள் கேட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிறுவர்கள் கோயிலுக்குள் நுழைந்துவிட்டதைக் கண்டு ஆத்திரமுற்ற பூசாரி விஜயகுமார், சிறுவர்கள் சந்தோஷ் மற்றும் அவனது நண்பர்களான சேத்தன், கௌதம் ஆகியோரை தடியால் தாக்கியிருக்கிறான். நண்பர்கள் ஓடிவிட, சந்தோஷை மட்டும் பிடித்துக்கொண்ட பூசாரி விஜயகுமார், அவனை வெயிலில் முட்டி போடவைத்து சித்திரவதை செய்திருப்பதோடு, அச்சிறுவனது மண்டை உடைந்து இரத்தம் கொட்டுமளவிற்கு தாக்கியிருக்கிறான்.
-------------------------------------------------------
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சாமானியனுக்கு மட்டுமல்ல; மாநில முதல்வர் என்ற அந்தஸ்தில் இருந்தாலும் கூட, ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைகளிலிருந்து தப்பித்து விடமுடியாது என்பதற்கு பொருத்தமான உதாரணம், பீகார் முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜிக்கு நேர்ந்த அவலம்.
பீகார் முன்னாள் முதல்வரான தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த போலோ பஸ்வான் சாஸ்திரி நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜி, “கடந்த ஆக-15-ம் தேதியன்று அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கினங்க மதுபானி மாவட்டத்திலுள்ள பகவதி பரமேசுவரி கோயிலுக்குச் சென்றிருந்தேன். நான் அக்கோயிலுக்கு சென்று திரும்பிய பிறகு, தீட்டுக்கழிப்பு சடங்குகள் நடத்தி, கோயில் கழுவப்பட்டிருக்கிறது” என தனக்கு நேர்ந்த வன்கொடுமையைச் சுட்டிக்காட்டி, சாதிவெறியர்களின் வக்கிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் நாளேடுகளில் வெளிவந்துள்ள வன்கொடுமை பற்றிய செய்திகள் இவை. உசிலம்பட்டி சாதிவெறிக் கொலையாகட்டும், லூதியானாவில் நடத்தப்பட்டிருக்கும் கொலையாகட்டும் இரண்டிலுமே சாதிவெறியர்களும் போலீசும் ஓட்டுக் கட்சிகளும் கூட்டணியாகச் செயல்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். உசிலைக் கொலையில் நீதிமன்றமும் ஆதிக்க சாதிவெறிக்குத் துணை நின்றிருக்கிறது.
விருதுநகர் சம்பவம், மாணவர்கள் மத்தியில் வளர்ந்துவரும் சாதிவெறிக்கு அச்சுறுத்தும் சான்றாக இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தைக் காட்டிலும் சமூகத்தின் பண்பாடு பின்னோக்கிச் செல்வதையும், தாழ்த்தப்பட்ட மக்கள் தம் வாழ்க்கையில் எட்டிப் பிடிக்கின்ற எளிய முன்னேற்றத்தைக்கூட சகித்துக் கொள்ள இயலாத அளவிற்கு ஆதிக்க சாதியினர் மத்தியில் சாதிவெறி கொழுந்து விட்டு எரிகிறது என்பதற்கு சிவகங்கை, அகமதாபாத் சம்பங்கள் எடுத்துக்காட்டாக இருக்கின்றன.
பெங்களூருவிலும் மகாராஷ்டிராவிலும் பீகாரிலும் நடைபெற்றுள்ள சம்பவங்கள் பிற்போக்கான காட்டுமிராண்டி நிலையிலேயே இந்தியச் சமூகத்தின் பல பகுதிகள் நீடிப்பதைக் காட்டுகின்றன. குறிப்பாக, தனக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமை பற்றி ஒரு மாநில முதலமைச்சரே வெளிப்படையாகத் தன் குமுறலை வெளியிட்ட பின்னரும், ஓட்டுக்கட்சிகளோ, ஊடகங்களோ அது பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அந்தக் குறிப்பிட்ட தொகுதியின் எம்.எல்.ஏ. வெளியிட்ட மறுப்புச் செய்தியோடு அப்பிரச்சினை அமுக்கப்பட்டுவிட்டது.
தருமபுரி இளவரசன் கொலைக்குப் பிறகு, தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் ஒரு சேரி உருவாக்கப்பட்டிருக்கிறது. வெறி பிடித்த வன்மத்தோடு தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக ரீதியாகப் பின்னோக்கித் தள்ளப்படுகின்றனர். நெல்லை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக வெளிப்படும் வன்முறை, இது ஒரு பொதுப்போக்காக வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.
நாடெங்கும் புதுப்புது வடிவத்திலான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதற்கும், கண்ணகி-முருகேசன் கொலை உள்ளிட்ட கொடிய வன்கொடுமைக் குற்றங்களில் கூட யாரும் தண்டிக்கப்படாத நிலையிலும், அச்சட்டதையே நீக்க வேண்டும் என்று ஆதிக்க சாதிவெறியர்கள் கூச்சலிடுவதற்கான அடிப்படை என்ன?
அதிகரித்து வரும் நகரமயமாக்கம், தவிர்க்கவியலாமல் காதல் திருமணங்களுக்கும் சாதிரீதியான ஒன்றுகலத்தலுக்கும் வழிவகுக்கிறது. தருமபுரி முதல் உசிலை வரையிலான பல நிகழ்வுகள் அதற்குச் சான்றாக உள்ளன. இந்த மாற்றத்தை கிராமப்புறத்தில் சாதியக் கலாச்சாரத்தில் ஊறியிருக்கும் பழமைவாதப் பெற்றோர்களால் ஒப்புக் கொள்ள முடிவதில்லை என்ற போதிலும், இந்த முரண்பாடு ஒரு கலவரமாக வெடிப்பதற்கு அப்பெற்றோர்கள் காரணமாக இருப்பதில்லை.
எல்லா சாதிகளிலும் தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் விளைவாக உருவாகியிருக்கும் புதிய வகை தரகு வர்க்கங்களும், அரசியல் பிழைப்புவாதிகளும்தான் இந்த முரண்பாட்டைத் தீவிரப்படுத்துகிறார்கள். அது மட்டுமல்ல, சொல்லிக்கொள்ளப்படும் இந்த வளர்ச்சியாக இருக்கட்டும், கைபேசி முதல் இணையம் வரையிலான முன்னேற்றங்களாக இருக்கட்டும், இவை எதுவும் சமூகத்தில் ஒரு ஜனநாயகப் பண்பாட்டை உருவாக்கவில்லை; மாறாக, சீரழித்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் போலவே, பெண்களுக்கும், சிறுமியர்க்கும் எதிரான பாலியல் குற்றங்களின் அதிகரிப்பும், திருட்டு, ஆதாயத்துக்கான கொலைகள், மோசடிகள், முதியோர் கொலைகள் உள்ளிட்ட குற்றங்களின் அதிகரிப்பும் இந்த வளர்ச்சிப்பாதை தோற்றுவித்துள்ள கொடிய விளைவுகள் என்பதைக் கணக்கில் கொண்டு, இவற்றுக்கெதிரான போராட்டத்தை நடத்தவேண்டியிருக்கிறது.
- இளங்கதிர்
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பகிர்வுக்கு நன்றி சகோ ...
முறையான சமய கலாச்சாரக்கல்வி கிடைக்காததால்தான் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு இந்துவுக்கும் சுவாமி விவேகானந்தாின் ஞானதீபம் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். R.S.S. இயக்கத்தில் பண்புப்பயிற்சி பெறவேண்டும். நிச்சயம் வெற்றி பெறுவோம்.மதச்சாா்பின்மை என்ற பெயாில்சமய கல்வி கலாச்சாரத்தை மறந்ததால் இந்து சமூகத்திற்கு இக்கேடு வந்துள்ளது. இசுலாமிய சமூகம் மட்டும் ரொம்ப யோக்கியமோ ?
Post a Comment