Followers

Friday, November 28, 2014

செவ்வாய் கிரகத்துக்கு ஒரு வழிப் பாதையாக போவது தடுக்கப்பட்டது!

செவ்வாய் கிரகத்துக்கு ஒரு வழிப் பாதையாக போவது தடுக்கப்பட்டது!




பூமியல் மனிதன் கால் தடம் பதிக்காத இன்னும் எத்தனையோ தரைப் பகுதி இருக்க செவ்வாய் கிரகத்தில் சென்று நிரந்தரமாக தங்கிக் கொள்ள பலரும் விருப்பப்படுவது ஆச்சரியமே! மனிதனுக்கு எதையாவது வித்தியாசமாக செய்து பார்ப்பதில் அலாதி பிரியம். :-) ஆராய்ச்சி முறையில் அங்கு சென்று ஆய்வுகள் மேற் கொள்வதை யாரும் தடுக்கவில்லை. ஆனால் ஒரு வழிப் பாதையாக உங்களை அழைத்து சென்று அங்கே இறக்கி விட்டு விடுவார்களாம். அப்போ சாப்பாட்டுக்கு என்ன செய்வதாம்? உணவை எத்தனை நாளுக்கு உங்களால் கெடாமல் காப்பாற்றி வைக்க முடியும்? விளை நிலங்களும் இல்லை. ஒரு வழிப் பாதையாக செல்வதற்கு டிக்கெட் விலையும் மிகக் குறைவு. எனவே இதற்கு பலரும் முயற்சிக்கின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து வெளிவரும் 'கலீஜ் டைம்ஸ்' என்ற பத்திரிக்கை இவ்வாறு ஒருவழிப் பாதையாக செல்வது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமானம் என்றபடியால் இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது என்று மார்க்க அறிஞர்களின் 'ஃபத்வா' வை வெளியிட்டுள்ளது. இந்த முடிவுக்கு கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தை ஆதாரமாக்கி இந்த மார்க்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

'நீங்களே உங்களை கொன்று விடாதீர்கள். இறைவன் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.'

-குர்ஆன் 4:29


கிட்டத்தட்ட 2 இலட்சம் பேர் 400 நாடுகளிலிருந்து செவ்வாய் கிரகத்தில் தங்க விண்ணப்பங்களைக் கொடுத்துள்ளார்களாம். இதில் 500 சவுதி நாட்டவரும் அடக்கம். பூமியில் உள்ள மக்களின் வாழ்வு மேம்பட செவ்வாய் கிரகத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் செல்வதை எவரும் தடுக்கவில்லை. ஆனால் பணம் இருக்கிறது என்ற மமதையில் இது போல் ஆபத்தான ஒரு பயணத்தை சுற்றுலாவாக மேற்கொள்வது அதுவும் அதிக அனுபவம் இல்லாதவர்கள் இது போன்ற பயணங்கள் மேற்கொள்வதை இஸ்லாமிய அறிஞர்கள் தடுக்கின்றனர். இவர்களின் அறிவிப்பைத் தோடர்ந்து விண்ணப்பித்திருந்த பலரும் தங்களின் விண்ணப்பங்களை திரும்பப் பெற்றுள்ளனர்.

தகவல் உதவி

அல்அரபியா
20-02-2014

----------------------------------------------------------------

பூமியைத் தவிர உலகின் மற்ற எந்த கோள்களிலும் மனிதன் வாழ முடியாது: அதற்கான வசதிகள் இல்லை என்று குர்ஆன் அடித்து சொல்கிறது. இதைப்பற்றியும் பார்ப்போம்.

பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்'

- குர்ஆன் 7;175

பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். (ஆனால்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

- குர்ஆன் 7;10


இது சம்பந்தமாக வரும் வேறு வசனங்கள் (2;36- 7;24- 30;25)பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு, செவ்வாய்க்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே!மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே!

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

மேற்கண்ட இரண்டு குர்ஆன் வசனங்களிலிருந்தும் நமக்கு தெரிய வருவது மனித இனமும் மற்ற பூமியில் உள்ள உயிரினங்களும் பூமியில் மாத்திரமே உள்ளன. வேற்று கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவை பூமியை ஒத்த உயிரினங்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்த கோள்களின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அங்குள்ள உயிர்களின் உடல்வாகு அமைக்கப்பட்டிருக்கும். இனி வருங்காலத்தில் செவ்வாயிலோ, புதனிலோ, வியாழனிலோ உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பூமியில் உள்ள உயிரினங்களை ஒத்து இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. நம் காலத்திலேயே அந்த உயிரினங்கள் கண்டு பிடிக்கப்படலாம். இறைவன் நாடினால் நாமும் அந்த உயிரினங்களை பார்க்கலாம்.

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.' - குர்ஆன் 42:29

No comments: