அந்தச் சிறுவனுக்கு வயது 16 இருக்கும். ஓரிடத்தில் நிற்க முடியாமல் எம்பிக் குதித்துக்கொண்டிருந்தான். கை கால்களை உதறினான். கை கால்களில் ஏதோ ஒட்டிக்கொண்டிருப்பதுபோல வழித்துவிட்டான். கொசுவை அடிப்பதுபோல உடலெங்கும் அடித்துக்கொண்டான். கன்னத்தில் நகத்தால் கீறி, பிய்த்துப்போட்டான். ரத்தம் வழிந்தது. வலி தாங்காமல் கதறி அழுதான். அருகில் இருந்த அவனது பெற்றோர் அவனை ஆற்ற முடியாமல் தவித்தனர்.
“ஒரு மாசமா இப்படித்தாங்க பண்றான். பாலிடெக்னிக் படிக்க அனுப்பினோம்ங்க. அங்க குடிக்கக் கத்துக்கிட்டான். எங்களால அவனைக் கட்டுப்படுத்த முடியலைங்க. இப்பெல்லாம் வீட்டுக்கே வாங்கிட்டு வந்துடறான். அது பிராந்தி மாதிரியும் தெரியலை. கருப்பா, கலங்கலா இருக்கு. அவன் ரூம்ல தேடிப் பார்த்தோம். அங்கங்க ஒளிச்சி வெச்சிருக்கிற பிராந்தி பாட்டிலுக்குள்ள எதையோ ஊறப்போட்டு வெச்சிருக்கான். எங்களுக்கு ஒண்ணுமே புரியலைங்க” என்றார்கள். எனக்குப் புரிந்தது. அது கஞ்சா. சமீப காலமாக குடிநோயாளிகளிடம் அதிகரித்துவரும் புதுவிதப் பழக்கம் இது.
குடிநோயாளிகள் தொடர்ந்து மது அருந்தும்போது அவர்களின் ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு கணிசமாகக் கூடிப்போயிருக்கும். ஒரு கட்டத்தில் வழக்கமான அளவில் மது அருந்தும்போது அவர்களுக்குப் போதை ஏறாது. சிலருக்குக் கூடுதலாக மது அருந்தினாலும் போதை ஏறாது. ‘அடுத்து என்ன?’ என்று தேடுவார்கள். பெரும்பாலும் அவர்களுக்குக் கிடைப்பது கஞ்சா அல்லது சில வகையான மாத்திரைகள்.
‘மம்மி’ வண்டுகள்
டாக்டரிடமிருந்து அழைப்பு வந்ததும் ஓடோடிச் சென்றான் அந்தச் சிறுவன். மணிக்கட்டிலிருந்து ஏதோ ஒன்றைப் பிடித்து, “இந்தப் பூச்சிதான் டாக்டர், உடம்பெல்லாம் ஊருது. தோலுக்குள்ள குடையுது” என்று டேபிள் மீது வைத்தான். அங்கு ஒன்றும் இல்லை. ஆனால், மறுபடியும் மறுபடியும் பிடித்துப் பிடித்து வைத்தான். டாக்டர் ஊசி போட்ட பின்புதான் ஆசுவாசம் அடைந்தான்.
திண்டுக்கல் அருகே வட மதுரையில் மது மீட்புச் சிகிச்சை மையம் நடத்திவருகிறார்கள் மருத்துவத் தம்பதியர் பாலகுரு - ஷர்மிளா. அங்குதான் இந்தக் காட்சியைப் பார்க்க நேர்ந்தது. “ஹாலிவுட் படமான ‘மம்மி’யில் ஒரு காட்சியைப் பார்த்திருப்பீர்கள். வண்டுகள் மனிதனின் தோலில் ஊடுருவிச் சென்று கொன்றுவிடும். பார்க்கப் படுபயங்கரமாக இருக்கும். அப்படியான ஒரு வியாதிதான் இது. உண்மையில் பூச்சிகள் எதுவும் தோலுக்குள் இருக்காது. ஆனால், அப்படியான மனப்பிரமை ஏற்படும். சமீப காலமாக திண்டுக்கல்லில் இதுபோன்ற கேஸ்கள் அதிகம் வருகின்றன. அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவு வருவதுதான் அதிர்ச்சி. மாணவர்கள் மதுவுடன் கஞ்சாவையும் கலந்து குடிக்கப் பழகிவிட்டார்கள். அதன் விளைவுகளுள் ஒன்றுதான் இந்தச் சிறுவனுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சிறுவனுக்குத் தோலுக்கு அடியில் ஏதோ ஊர்வதுபோல இருக்கும். நேரமாக நேரமாக இந்த நமைச்சல் அதிகரிக்கும். தோலுக்குள் ஒரு பூச்சி துளைத்துக்கொண்டு ஊடுருவினால் எப்படி இருக்குமோ அப்படி வலிக்கும். பாதிப்பைப் பொறுத்துச் சிலருக்கு உடலின் சில பாகங்களில் மட்டும் இது ஏற்படும். சிலருக்கு உடல் முழுவதும் ஏற்படும். கண்ணுக்கு எதிரே ஏதோ உருவம் தெரியும் விஷுவல் ஹாலுசினேஷன் போல, காதுக்குள் குரல் கேட்கும் ஆடிட்டோரி ஹாலுசினேஷன் போல. இந்தப் பையனுக்கு இருப்பது டேக்டைல் ஹாலுசினேஷன் (Tactile hallucination). இதனை நாங்கள் ‘பக்ஸ் அண்டர் ஸ்கின்’(Bugs under skin) என்போம்.
இந்த நோயின் முற்றிய நிலையில் எப்போதும் கை, கால்களிலிருந்து எதையோ பிய்த்துப்போட்டபடி இருப்பார்கள். சிலர் உடலில் இருக்கும் ரோமங்களை எல்லாம் பிய்த்துப்போட்டிருப்பார்கள். ரத்தம் வருவதுகூட அவர்களுக்குத் தெரியாது. உடலெங்கும் புண்கள் காணப்படும். அவர்கள் அப்படிப் பிய்த்துப்போடும்போது அவர்களின் கண்களுக்கு மட்டும் உண்மையிலேயே பூச்சி தெரிவது போலிருக்கும். அதனை நசுக்கிக் கொல்லவும் செய்வார்கள். கஞ்சாவுக்கே உரிய பிரத்யேக வியாதி இது. அதிலும் மதுவுடன் கஞ்சாவைக் கலந்து குடிக்கும்போது குறுகிய காலத்திலேயே இந்த நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். மூளை, நரம்பு மண்டலத்தை மிகவும் சேதமாக்கிவிடும் இது” என்றார் பாலகுரு.
நான் கடவுள்!
திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் மதுவுக்கு இணையாகத் தாராளமாகக் கிடைக்கிறது கஞ்சா. முள்ளிப்பாடி, மூணாண்டிப்பட்டி, வத்தலக்குண்டு, வடமதுரை ஆகிய இடங்களில் கணிசமான அளவு கல்லூரி மாணவர்களுக்கு இந்தப் பழக்கம் ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது. டாக்டர் ஷர்மிளா சொல்லும் விஷயங்கள் அதிர்ச்சிகரமானவை. “ஒட்டன்சத்திரம் அருகே விழுப்பாச்சி அருவியில் ஒரு கோயில் இருக்கிறது. காட்டுப் பகுதியான அங்கு நிறைய சாமியார்கள் உலவுகின்றனர். அவர்களிடையே கஞ்சா சர்வ சாதாரணமாகப் புழங்குகிறது. திண்டுக்கல்லில் ஒருசாரார் ஆன்மிகத்தையும் போதையையும் போட்டுக் குழப்பிக்கொண்டு இதற்கு அடிமையாகி விடுகின்றனர். அதுபோல நிறைய கேஸ்கள் எங்களிடம் வருகின்றன.
ஒரு கல்லூரி மாணவர் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு ஒரு சாமியாரிடம் சென்றிருக்கிறார். தன்னை மறந்தால்தான் கடவுளைக் காண முடியும் என்று மாணவரை சாமியார் கஞ்சாவுக்குப் பழக்கியிருக்கிறார். கூடவே, மதுவும். வீட்டை விட்டுச் சென்ற அந்த மாணவரை இரண்டு மாதங்கள் கழித்துத் தேடிக் கண்டுபிடித்துள்ளனர். அவரை இங்கு அழைத்து வந்தபோது ‘நானே கடவுள்! எனக்கே சிகிச்சை அளிக்கிறீர்களா? அற்ப மானிடப் பிறவிகளா...’ என்று வசனம் பேச ஆரம்பித்துவிட்டார். சுமார் ஒரு மாதம் கடவுளை வைத்திருந்து சிகிச்சை அளித்து மனிதனாக அனுப்பி வைத்தோம்” என்று சிரித்தார்.
(தெளிவோம்)
- டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
நன்றி: தமிழ் இந்து நாளிதழ்
21-11-2014
No comments:
Post a Comment