ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிழல் முகங்கள்
------------------------------------------
மங்களூரில் ஈஸ்வரி மேன்பவர் சொல்யூஸன்ஸ் லிமிட்டட் என்று ஒரு நிறுவனம்
இருக்கிறது. அந்த
நகரத்தில் பஞ்ரங் தள் (இந்த அமைப்பு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் அணி. விஸ்வ
ஹிந்து பரிஷத் என்பது ஆர்எஸ்எஸின் கலாச்சார அமைப்பு) குண்டர்கள் மால்களையும்
கடைகளையும் அவ்வப்போது தாக்குவதால் ஏற்படும் அச்சுறுத்தலைச் சமாளிக்க
வேண்டுமென்றால், இந்த
நிறுவனத்திடமிருந்துதான் ஆட்களை வாடகைக்கு அமர்த்த வேண்டும்.
அவர்களை அமர்த்திக்கொண்டுவிட்டால், பஜ்ரங் தள்
குண்டர்கள் அந்த மால்களை நெருங்க மாட்டார்கள்.
இப்படி பஜ்ரங் தள்ளுக்கு பெரும் சவாலாக இருக்கும் இந்த நிறுவனத்தை நடத்துவது
ஷரன் பாம்ப்வெல். இவர்தான் தெற்கு கர்நாடக பஜ்ரங் தள்ளின் அமைப்பாளர்.
புரியவில்லையா? பஜ்ரங் தள்
குண்டர்களிடமிருந்து பாதுகாப்பளிக்கிறது ஒரு நிறுவனம்; அந்த
நிறுவனத்தை நடத்துவது பஜ்ரங் தள் அமைப்பாளர் - குழப்பமாக இருக்கிறதா?
குழப்பமே வேண்டாம். முதலில் கடைகளை பஜ்ரங் தள் தாக்கும். பிறகு, ஈஸ்வரி
மேன்பவர் ஆட்கள் உங்களை அணுகி பாதுகாப்பு அளிப்பதாக சொல்வார்கள். நீங்கள்
ஒப்புக்கொண்டால், பாதுகாவலர்கள்
அனுப்பப்படுவார்கள். அந்தப் பாதுகாவலர்கள் பஜ்ரங் தள்ளைச் சேர்ந்தவர்கள். அவர்களை
அனுப்பிவைப்பது பஜ்ரங் தள் அமைப்பாளர்!! அதாவது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும்
அவர்களே.. பாதுகாவலர்களை அனுப்புவதும் அவர்களே..
*******************
2008 செப்டம்பர் 29ஆம் தேதி
மகாராஷ்ட்ராவில் உள்ள முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும், விசைத் தறி தொழிற்சாலைகள் நிறைந்த மாலேகாவ்ன்
பகுதியில் குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. இது குறித்த புலன் விசாரணையைத் துவங்குகிறார்
ஹேமன்த் கார்கரே. இந்த ஹேமந்த் கார்கரேவின் விசாரணையின்போதுதான், மாலேகாவ்ன்
குண்டுவெடிப்பின் பின்னணியில் இந்து பயங்கரவாத அமைப்பான அபினவ பாரத் இருப்பது
தெரியவருகிறது.
இதைத் திட்டமிடுவதில் முக்கியப் பங்கு வகித்தவர் லெப்டினன்ட் கர்னல் புரோஹித். இந்த குண்டுவெடிப்புகளை
நடத்த ஆட்களை சப்ளை செய்தவர், ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின்
முன்னாள் தொண்டரான சாத்வி பிரக்யா சிங் தாகுர். இந்த வழக்கை விசாரித்துவந்த
ஹேமந்த் கார்கரே அதே ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பை பயங்கரவாதத் தாக்குதல்
சம்பவத்தின்போது கொல்லப்படுகிறார்.
***********************
இந்தியாவில் பயங்கரவாத அமைப்புகள் என்றாலே இஸ்லாமிய அமைப்புகளும் நக்ஸல்
அமைப்புகளும்தான் மனதில் தோன்றும். ஆனால், இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள், இவற்றைவிட
பயங்கரமானவை. காரணம், அவை இந்த
நாட்டில் பெரும்பான்மையாக உள்ள மதத்தின் பெயரால் செயல்படும் அமைப்புகள்.
இருந்தபோதும், பொதுவாக இந்த
அமைப்புகள் குறித்தும் அவை எப்படி செயல்படுகின்றன, எந்தெந்த பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டன, எத்தனை பேர்
கொல்லப்பட்டார்கள், இவற்றை
இயக்குவது யார் என்பதெல்லாம் பெரிதாக பேசப்படுவதில்லை.
இந்த நிலையில்தான் பத்திரிகையாளரான தீரேந்திர கே. ஜா இந்து பயங்கரவாத
அமைப்புகள் குறித்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர்
Shadow Armies. வெளியிட்டிருப்பது
Juggernaut
பதிப்பகம்.
இதில் எட்டு இந்து பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. 1. சனாதன்
சன்ஸ்தான் 2. பஜ்ரங் தள் 3. ஹிந்து யுவ வாஹினி 4. அபினவ பாரத் 5. ஸ்ரீ ராம சேனா 6. ராஷ்ட்ரீய சீக் சங்கட் 7. ஹிந்து ஐக்கிய வேதி 8. போன்சாலா
மிலிட்டரி ஸ்கூல்.
ஒவ்வொரு அமைப்பைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் ஆதாரங்களுடன்
கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அசர வைக்கின்றன. மாலேகாவ்ன் குண்டுவெடிப்பின்
பின்னணியில் இருந்த அபினவ பாரத் அமைப்பை ஒரு கட்டத்தில் இயக்கியது கோபால்
கோட்ஸேவின் மகளும் 'தேச பக்தர்' வீர்
சாவர்க்கரின் தம்பியான நாராயண் சாவர்கரின் மருமகளுமான ஹிமானி சாவர்க்கர்!!
அதேபோல, உத்தரப்
பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்ய நாத்திற்காக மாநிலம் முழுவதும்
கலவரங்களிலும் கொலைகளிலும் ஈடுபடும் அமைப்புதான் ஹிந்து யுவ வாஹினி!!
பெயர்களைப் பாருங்கள்.. ஸ்ரீ ராம சேனா, ஹிந்து ஐக்கிய வேதி, சனாதன்
சன்ஸ்தான்....இந்த அமைப்புகளைப் பற்றி கேள்வியெழுப்பினாலே இந்து விரோதி என்று பட்டம்கட்ட
ஏதுவாக வைக்கப்பட்ட பெயர்கள்..
ஒவ்வொன்றாக அம்பலப்படுத்துகிறது இந்தப் புத்தகம். இந்தியா எவ்வளவு பெரிய
அபாயத்தில் உள்ளது என்பது இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது சுரீரென உரைக்கிறது.
விலை. 499/-
நன்றி: Muralidharan Kasi Viswanathan
No comments:
Post a Comment