'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Showing posts with label மண் வளம். Show all posts
Showing posts with label மண் வளம். Show all posts
Sunday, November 11, 2012
தீபாவளியால் எனக்குள் ஏற்பட்ட விபத்து!
(பையன் மனதுக்குள்)
'ஹா...ஹா... செலவுக்கு பணம் தர மாட்டேண்டியா! அதான் உரல்ல வெங்காய வெடியை போட்டேன்.'
------------------------------------------------------
தீபாவளி வருவது இந்து மக்களுக்காக! ஆனால் எங்கள் கிராமத்தில் முன்பெல்லாம் 100 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை பட்டாசுகளை ஒன்றாக சேர்ந்து வாங்கி வந்து வெடிப்பது வழக்கம். எங்களுக்கு எந்த நரகாசுரன் செத்தான் என்று இன்று வரை விளங்கவில்லை. பெரியவர்கள் 'காசை இப்படி கரியாக்குறீங்களேடா' எனறு சொன்னாலும் எவரும் காதில் வாங்குவது இல்லை. அப்போது எனக்கு 13 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். இரண்டு பெட்டிகள் நிறைய பட்டாசுகளை வாங்கி இரவு நேரமானதும் வெடிக்க ஆயத்தமானோம். மத்தாப்பு, சங்கு சக்கரம், சுர்வானம், அணுகுண்டு என்று நண்பர்களோடு சேர்ந்து வெடிகளை வெடித்துக் கொண்டிருந்தேன்.
உள்ளதிலேயே மிகப் பெரிய சுர்வாணம் ஒன்று இடையில் வந்தது. அதனை கீழே வைத்து பேப்பரினால் பற்ற வைக்க முயற்சித்தோம். என்ன காரணத்தினாலோ அது பற்றவில்லை. பல முறை முயற்சித்தேன்.
'டேய்! கையில எடுத்து நேரிடையா பத்த வைடா'
பின்னாலிருந்து நண்பன் உசுப்பி விடவும் அதனை கையில் எடுத்து நேரிடையாக அதன் முனையை விளக்கில் காட்ட ஆரம்பித்தேன். வழக்கமாக உடன் பற்றிக் கொண்டு பூப்போல கொட்ட ஆரம்பித்து விடும். ஆனால் ஐந்து நிமிடம் ஆகியும் அது பற்ற வில்லை.
'
"நமத்து போயிருக்கோண்டா! இன்னும் கொஞ்சம் நேரம் காட்டு"
நண்பனின் பேச்சை தட்ட முடியாமல் இன்னும் கொஞ்சம் நேரம் காட்டினேன்.
'படார்'
பயங்கர சத்தத்துடன் சுர்வாணம் வெடித்து சிதறியது. அந்த இடமே ஒரே கருகிய நாற்றம். விளக்கும் அணைந்து விட்டது. சிறிது நேரத்துக்கு பிறகுதான் என் கையை பார்த்தேன். இப்பொழுதுதான் வலி தெரிய ஆரம்பித்தது. வலது கை முழுவதும் வெந்து விட்டது. வலி என்றால் உயிர் போகும் வலி. பெரியவர்கள் யாரும் பக்கத்தில் இல்லை. இங்கும் அங்கும் கத்திக் கொண்டே வீட்டுக்குள் ஓடினேன். ஓடிய வேகத்தில் வாளியில் இருந்த தண்ணீரில் கையை விட்டேன். அதற்குள் விஷயம் தெரிந்து கூட்டம் கூடி விட்டது. வலி பொறுக்க முடியாமல் கத்த தொடங்கினேன்.
உடனே வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு அதை விட வலி உயிர் போனது. மருத்துவர் மருந்துகளை வைத்து பெரிதான ஒரு கட்டை போட்டார். அந்த கட்டோடு கிட்டத்தட்ட ஒரு மாதம் மிகவும் சிரமப் பட்டேன்.
இதை நான் இங்கு பதிய காரணம் நாளை தீபாவளி. எனவே சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை இதில் மிக கவனமாக இருக்க வேண்டும். நேற்று கூட பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் இறந்துள்ளான். இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கமே பிற்காலத்தில் ஏற்பட்டது. மொகலாய மன்னர் பாபரின் காலத்தில் தான் இது போன்று சிறப்பான பண்டிகை நாட்களில் பட்டாசு வெடிக்கும் பழக்கம் ஏறபட்டது. அதற்கு முன்பு தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பது இந்தியர்களின் பழக்கமாக இருந்ததில்லை. இடையில் வந்த பழக்கத்தை சமூக நலன் கருதி படிப்படியாக விட்டு விடலாமே!
-----------------------------------------------------------
கூந்தன்குளத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகளுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் இக்கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை.
இதேபோல சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கொல்லுகுடிப்பட்டி கிராமத்திலும் கடந்த 40 வருடமாக மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை. இந்த கிராமத்தில் தீபாவளி சீசனின்போது பெருமளவில் வெளிநாட்டுப் பறவைகள் வரும். இதனால் இந்த சமயத்தில் பட்டாசு வெடித்தால் அது பறவைகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் பட்டாசு வெடிப்பதில்லை.
அதேபோல சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஊனத்தூர் கிராமத்திலும் தீபாவளிக்கு யாரும் பட்டாசு வெடிப்பதில்லை. இங்குள்ள மணி அம்மன் கோவிலைச் சுற்றிலும் நிறைய மரங்கள் உள்ளன. இங்கு கடந்த பல வருடங்களாக ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வசித்து வருகின்றன.
இந்த வவ்வால்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்கின்றனர் இப்பகுதி மக்கள். வவ்வால்களை யாராவது வேட்டையாட வந்தால் துரத்தி விடுகின்றனர்.
இந்த வவ்வால்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், யாரும் இந்த கிராமத்தில் பட்டாசு வெடிப்பதில்லை. தீபாவளி என்றில்லை எந்த விசேஷமாக இருந்தாலும் யாரும் பட்டாசு வெடிப்பதில்லை.
------------------------------------------------------
தீபாவளியன்று வளி மண்டலம் அதிக அளவில் மாசு அடையும் வாய்ப்பு உள்ளது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.தீபாவளிக்கு முன்னரும், பின்னரும் நகரில் மாசு அளவை கணக்கிட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்தது.
அதன்படி எய்ம்ஸ், லஜ்பத் நகர், கன்னாட் பிளேஸ், மயூர் விகார், கமலா நகர், பிதம்புரா, கிழக்கு அர்ஜூன் நகர், தில்ஷான் கார்டன், பிரகதி மைதானம் ஆகிய 9 இடங்களில் கண்காணிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜே.எஸ்.கம் யோத்ரா கூறுகையில், வளி மண்டலத்தில் காற்றின் அளவு மற்றும் சத்தத்தின் அளவுகள் பதிவு எடுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று இந்த 9 இடங்களிலும் தீபாவளி அன்று வாயுக்கள், சத்தத்தின் அளவுகள் பதிவு செய்யப்படும்.
கார்பன் மோனாக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரோஜன் டையாக்ஸைடு உள்ளிட்ட காற்றை மாசுபடுத்தும் கரியமில வாயுக்களின் அளவு அதிகரித்துள்ளாதா என்பது கண்டறியப் படும். இதுதவிர காற்று மாசு, சத்தத்தின் அளவு குறித்து ஆய்வு செய்யும்படி மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், மாசுக் கட்டுப்பாட்டு கமிட்டிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
தீபாவளி வரை தொடர்ந்து இந்த அளவீடுகள் பதிவு செய்யப்படும். பெருநகரங்களில் காற்று மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கண்காணிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்ப தால் ஏற்படும் மாசு அளவு எவ்வளவு என்பது தெரிவிக்கப்படும். காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் கணக்கிடப்படுகிறது. தற்போதைய தட்பவெப்பநிலை (குறைந்த வெப்பம்) நீடித்தால் தீபாவளியன்று வளி மண்டலம் கடுமையாக மாசுபடும் வாய்ப்பு உள்ளது என்றார். எனவே பட்டாசு வெடிப்பதை இந்த பண்டிகை நாளில் முடிந்த வரை குறைத்துக் கொள்ள முயற்சிப்போம்.
நண்பர்கள் அனைவருக்கும் வாழ்வில் இன்று போல் என்றும் மகிழ்ச்சி பூத்துக் குலுங்க பிரார்த்திக்கிறேன்.
Labels:
இந்தியா,
இந்து,
கார்ட்டூன்கள்,
தமிழர்கள்,
மண் வளம்
Monday, September 03, 2012
உயிரினங்களின் மூலம் தண்ணீர் என்பது உண்மைதானா?
பெல்ஜியத்தை சேர்ந்த ஜான் பாப்டிஸ்டா வேன் ஹெல்மண்ட் என்ற வேதியியல் நிபுணருக்கு தாவரங்களின் வளர்ச்சியைப் பற்றி ஒரு பெரும் சந்தேகம் வந்தது. இது எவ்வாறு வளர்கிறது என்பதை சோதிக்க எண்ணினார். எனவே வில்லோ மரம் ஒன்றினை ஒரு பெரிய தொட்டியில் மண்ணை நிரப்பி வளர்க்க ஆரம்பித்தார். தொட்டியில் இட்ட மண்ணின் அளவை குறித்துக் கொண்டார். அதே போல் மரத்தின் நிறையையும் குறித்துக் கொண்டார். மரமும் நன்றாக வளர்ந்தது. ஐந்து வருடங்களுக்கு பிறகு தொட்டியிலிருந்து மரத்தை வெளியில் எடுத்து அதன் நிறையை கணக்கிட்டார். மரத்தின் அளவு 164 பவுண்டாக இருந்தது. அதன் பிறகு மண்ணின் நிறையை அளக்க ஆரம்பித்தார். ஆச்சரியமாக மண்ணின் நிறையில் மிக சிறிய மாற்றமே உண்டானது. மரத்தின் நிறை கூடினால் மண்ணின் நிறை குறைய வேண்டும். அதுதான் இயற்கை என்று ஹெல்மண்ட் நம்பியிருந்தார். ஏனெனில் இந்த மரம் வளர்வதற்கு ஆதாரமாக மண்தானே இருக்கிறது என்பது அவரது எண்ணம். ஆனால் இந்த மரம் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் அவர் தினமும் ஊற்றிய தண்ணீர் என்பதை பிறகு தான் விளங்கிக் கொண்டார்.
அதன் பிறகு பின்னால் வந்த அறிவியல் அறிஞர்கள் தண்ணீரோடு ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளியும் ஒரு தாவரம் வளர அவசியம் என்பதை கண்டு பிடித்தனர். ஆக உயிரினங்கள் அனைத்தும் தங்கள் உடலில் உண்டாக்கப்பட்டுள்ள உடலமைப்பினால் தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்கின்றன. அது இயலாத பட்சத்தில் அந்த உயிரினத்திற்கு இறப்பு நிச்சயம் என்பதை நாம் அறிவோம். இந்த தண்ணீரிலிருந்துதான் உயிரினங்கள் தங்கள் உடம்புக்கு தேவையான சத்துக்களை கிரகித்துக் கொள்கின்றன. நாம் உண்ணும் உணவிலிருந்து குடிக்கும் அனைத்து பானங்களின் மூலமும் தண்ணீராகவே இருக்கிறது. உயிரியல் பாடங்களை நாம் எடுத்துக் கொண்டாலும் உயிரினங்களுக்கு 80 சதவீதம் நீர் அவசியம் என்று கூறுகிறது. அதே போல் என்சைக்ளோபீடியாவும் உயிரினங்களின் உயிர் வாழ தண்ணீர் 50 சதவீத்திலிருந்து 85 சதவீதம் வரை அவசியம் என்கிறது. தாவரங்களின் ஒளிச் சேர்க்கை நடைபெற அடிப்படை பொருட்களாக கார்பன் டை ஆக்சைடு, நீர், பச்சையம், மற்றும் சூரிய ஒளி அவசியமாகிறது. இங்கும் நீரின் தேவை மிக அவசியமாகிறது. இந்த உண்மைகள் எல்லாம் அறிவியல் அறிஞர்களால் 17 ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் கண்டுபிடிக்கப்படுகிறது.
சாதாரண மண்ணை எடுத்துக் கொள்வோம். வெறும் மணலாக இருக்கும் போது அந்த மண்ணுக்கு உயிர் வருவது இல்லை. அந்த மண்ணோடு தண்ணீரும் கலந்து சேறும் சகதியுமாக மாறியவுடன்தான் புல் பூண்டுகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. எனவே இந்த இடத்திலும் தண்ணீரின் அவசியத்தை நாம் பார்க்கிறோம். இன்னும் விளக்கமாக சொல்லப் போனால் நீர் இல்லாத மண்ணானது உயிர் இல்லாத உடலைப் போன்றது.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் மணலில் எந்த அளவு தண்ணீர் உள்ளது. மக்கிய தாவரங்கள் கலந்த மண்ணில் எந்த அளவு தண்ணீர் உள்ளது. பயிர்கள் அதிகம் விளையக் கூடிய களிமண்ணில் எந்த அளவு தண்ணீர் உள்ளது என்பதை விபரமாக விளக்குகிறது.
(The table and figures were originally published by the Institute of Agriculture and Natural Resources at the University of Nebraska - Lincoln.)
டார்வினின் பரிணாம வளர்ச்சி விதி உயிரினங்கள் அனைத்தும் நீரிலிருந்தான் தோன்றின என்கிறது. அதாவது ஒரு செல் உயிரிகள் தண்ணீரிலிருந்தே தோன்றி பிறகு கால்கள் முளைத்து கரைக்கு வந்ததாக சொல்வார். அந்த ஒரு செல் உயிரி உண்டானது தண்ணீரிலிருந்தே என்பது டார்வினின் தத்துவமாகும். ஆனால் அதன் பிறகுதான் குழம்பி விடுகிறார். பலரையும் குழப்பி விடுகிறார். :-)
நமது மூளை 80% நீரால் ஆனது. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும்போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் சப்ளை ஆகிறது. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும். 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும். நமது மொத்த உடல் எடையில் 12% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது. இவ்வாறு நமது உடலின் எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும் நீர் சார்ந்த பொருட்களே ஆதிக்கம் செலுத்துகிறது.
ஒவ்வொரு உயிரினத்தையும் இறைவன் நீரால் படைத்தான்..
குர்ஆன் 24:45
'உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்தே அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?'
குர்ஆன் 21:30
'அவனே தண்ணீரால் மனிதனை படைத்தான்'
குர்ஆன் 25:54
மேற்கண்ட வசனங்கள் மனிதன் மற்றும் உயிருள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் மூலமாக தண்ணீர் உள்ளது என்பதை விவரிக்கிறது. இது இன்று நமக்கு ஒரு சாதாரண கண்டுபிடிப்பாக இருக்கும். ஆனால் குர்ஆன் இறங்கிய அன்றைய அறியாமை காலத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நம் நாட்டைப் போல் நில வளம் பொருந்திய நாடு அல்ல அன்றைய சவுதி. எங்கு நோக்கினாலும் பாலைவனம்தான். ஏதோ ஒரு சில இடங்களில் அத்தி பூத்தாற்போல ஒரு சில பேரித்தம் மரங்கள் சோகமாக நின்று கொண்டிருக்கும். இது தான் அன்றைய அரேபியாவின் நிலை. அந்த சமூகமும் படிப்பறிவில்லாத சமூகம். இந்த நிலையில் எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு நாட்டுப் புற அரபி இவ்வாறு வசனங்களை சொல்லியிருக்க முடியும் என்பதை நம் அறிவு ஏற்கிறதா?
இல்லை: இது உங்களையும் என்னையும் படைத்த அந்த ஏக இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை என்ற முடிவுக்கே நாம் வருவோம்.
உயிர் வாழ மண்ணும் தண்ணீரும் எந்த அளவு அவசியம் என்று பார்த்தோம். மண்ணை மனைகளாக்காமல் பயிர் விளையும் பூமியாக்கி நீர் வளத்தையும் நில வளத்தையும் மாசு படாமல் காப்போம். பின்னால் ஏற்படக் கூடிய சிரமங்களை தவிர்ப்போம். தமிழக கிராமங்களில் உள்ள செல்வந்தர்கள் ஆங்காங்கே குளங்களை வெட்டி மழை நீரை சேகரித்து மக்களுக்கு சேவை செய்வோம். அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே திட்டம் வகுத்தால்தான் வருங்கால சந்ததிகள் நிம்மதியாக காலத்தை ஓட்ட முடியும்..
------------------------------------------------
கோவை சிறையில் பல ஆண்டுகள் விசாரணை கைதியாக இருந்து தற்போது விடுதலையாகியிருக்கும் சகோதரி ஆயிஷாவின் மனக்குமுறலை கேளுங்கள். இவரது தந்தை இன்றும் இந்துவாகத்தான் உள்ளார். சகோதரி ஆயிஷா புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். ஒருக்கால் இவர் இஸ்லாத்தை ஏற்றதுதான் இவர் செய்த குற்றமாக காவல் துறை கருதியதா?
கோவையில் குண்டு வைத்து அப்பாவிகள் இறக்க காரணமானவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் அவர்களை தூக்கில் கூட போடுங்கள். ஆனால் அப்பாவிகளை இத்தனை வருடம் விசாரணை கைதிகளாக வைத்திருந்து விட்டு தற்போது வெளியாக்குவதால் அவர்களின் சிறையில் கழிந்த வாழ்நாளை யார் திரும்ப கொடுப்பார்?
Labels:
அறிவியல்,
ஆரோக்கியம்,
குர்ஆன்,
நீர் வளம்,
மண் வளம்
Subscribe to:
Posts (Atom)



