'கால் நடைகளை உங்களுக்காகவே அவன் படைத்தான். அவற்றில் குளிரை தடுக்கும் கம்பளி போன்ற பயனும் உண்டு: அவற்றிலிருந்து உணவாக சாப்பிடுகிறீர்கள்.'
'மாலையில் ஓட்டிச் செல்லும் போதும் காலையில் ஓட்டிச் செல்லும் போதும் அதில் உங்களுக்கு அந்தஸ்து இருக்கிறது.'
'பெரும் சிரமத்துடனே நீங்கள் சென்றடையும் ஊருக்கு உங்கள் சுமைகளை அவை சுமந்து செல்கின்றன. உங்கள் இறைவன் நிகரற்ற அன்புடையோன்: இரக்கமுள்ளவன்'
'குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள், ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும் மதிப்புக்காகவும் அவன் படைத்தான். நீங்கள் அறியாதவற்றை இனி படைப்பான்.
-குர்ஆன் 16:5,6,7,8 (தேனீக்கள்)
மனிதப் படைப்பான நமக்கு இறைவன் எத்தகைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். அன்றைய கால மக்கள் அறியாத எத்தனையோ புதிய வசதிகளையும் இன்று நாம் அனுபவித்து வருகிறோம். அதற்காக இறைவனை நாம் என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? அவனது அருட்கொடைகளை எண்ணி நன்றி செலுத்தியிருக்கிறோமா என்றால் பெரும்பாலோரிடமிருந்து இல்லை என்ற பதிலே வரும்.
அந்த இறைவன் நாடி விட்டால் ஒரு நிமிடத்தில் நம்முடைய வாழ்வை இருக்கும் இடத்திலிருந்தே பறித்து விட முடியும். கருணையாளனான அந்த இறைவன் தன்னை எதிர்ப்பவர்கள், தன்னை தூற்றுபவர்கள், மனிதர்களுக்கு துரோகம் செய்பவர்கள் அனைவரையும் விட்டு வைத்திருக்கிறான். வரும் காலங்களிலாவது நேர்வழியைப் பெற மாட்டார்களா! என்ற நல்ல எண்ணத்திலேயே இன்றுவரை அவர்கள் அனைவரையும் விட்டு வைத்திருக்கிறான். இந்த கருணையை பலர் கையாலாகததனம் என்று நினைத்து வாழ்க்கையை வீணிலும் விளையாட்டிலும் கழித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த கூட்டத்தில் எல்லாம் நம்மை சேர்க்காமல் இறை வசனங்களை கேட்க ஆர்வமுடன் வந்திருக்கும் நம் அனைவரின் இம்மை மறுமை வாழ்வு சிறப்பாக அமைய பிரார்த்தித்தவனாக எனது இந்த சிற்றுரையை முடிக்கிறேன்.'
என்று தனது சிற்றுரையை முடித்தார் சகோதரர் அன்சாரி.

அதன் பிறகு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தையொட்டியுள்ள கிராமத்திலிருந்து தமிழ்ச் செல்வன் என்ற இளைஞன் போன வருடம் டிரைவர் பணிக்காக வந்துள்ளார். அவர் தனது பேச்சில்.
'நான் சிதம்பரம் அண்ணமலை பல்கலைக்கழகத்திலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்துருக்கேங்கண்ணா! பத்தாம் வகுப்பு வரை படிச்சிருக்கேங்கண்ணா! போன வாரம் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேங்கண்ணா! என் குடும்பத்தவர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். என் தம்பி ரொம்பவும் எதிர்த்தாங்கண்ணா! ஏக இறைவனை நம்ம பழைய மதத்திலேயே இருந்துக்கிட்டு கும்பிடலாமே என்று எங்க அம்மா கேட்டாங்கண்ணா! எந்த கோவிலுக்கு போனாலும் ஏதாவது ஒரு சாமி சிலைதானே இருக்கு. ஏக இறைவனை நான் எப்படி அங்கு வணங்க முடியும்? எந்த முறையிலே நான் வணங்குறது. எந்த சாமியை நான் வணங்குறதுண்டு கேட்டங்கண்ணா. அதற்கு எங்க அம்மா எந்த பதிலும் சொல்லாமல் 'உன் விருப்பப்படி இருந்து கொள்' என்று சொல்லிட்டாங்கண்ணா. முதலில் எதிர்த்துக்கிட்டு இருந்த என் தம்பியும் இப்ப தன் முடிவை மாத்திக்கிட்டாண்ணா. அவனையும் இஸ்லாத்துல சேர்த்துருவங்கண்ணா!
ஒரு சின்ன சிக்கல். உங்களை மாதிரி அரபியில் குர்ஆனை சரளமாக ஓத சிரமமாக இருக்கிறது. அதுக்கு மட்டும் கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்க. பல பேரோட சொற்பொழிவு எனக்கு சரியா புரிய மாட்டேங்குது. ஆனா அண்ணன் பிஜே பேசினா எனக்கு தெளிவா விளங்குது. அவரோட சிடிக்களை பார்த்துதான் இந்த முடிவையே எடுத்தேன். அவருக்கு ரொம்ப நன்றிங்கண்ணா! எனக்கு மெக்கா போய் கஃபாவை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அதற்கும் ஏற்பாடு பண்ணுங்கண்ணா!'
என்று மிக இயல்பாக வெள்ளாத்தியாக கொச்சைத் தமிழில் பேசி முடித்தார். ஒரு வாரத்தில் அவருக்குள் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எண்ணி வியந்தோம். இறைவன் ஒருவனுக்கு நேர்வழியை காட்ட எண்ணி விட்டால் அதற்கு திரை ஏது? தமிழ்ச் செல்வன் என்ற பழைய பெயரிலேயே அவர் இஸ்லாத்தில் இருக்கலாம். ஆனால் இந்த பெயரில் இருந்தால் 'இவர் என்ன சாதி? படையாச்சியா, செட்டியாரா, தலித்தா' என்ற கேள்வி வரும். தற்போது தனது பெயரை முஹம்மது என்று மாற்றியுள்ளார். இனி உலக முஸ்லிம்களில் ஒருவராக ஐக்கியமாகி விட்டார். சாதியும் ஒழிந்தது. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற 2000 வருடத்திய மூதாதையரின் திராவிட பாரம்பரியத்துக்கு மீண்டு வந்துள்ளார் தமிழ்ச் செல்வன்.
இனி உலகின் எந்த பள்ளியிலும் முதலில் சென்றால் முன் வரிசையில் அமரலாம். கஃபாவுக்குள் சென்றாலும் முதல் ஆளாக சென்று நிற்கலாம். வழிபடுவதற்கு கட்டணம் ஏதும் இல்லை. இனி கூனி குருகி உயர் சாதியினர் முன்னால் செல்ல வேண்டியதில்லை. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு செல்லலாம்.
"தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி
வாடித் துன்ப மிக வுழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?"
என்று இறுமாப்போடு வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிப்பவர்களைப் பார்த்துக் கேட்கலாம்.
----------------------------------------------
தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டலம் சார்பாக உம்ரா பயணம் ஏற்பாடு செய்துள்ளனர். உம்ரா முடித்து விட்டு அங்கிருந்து ஜெத்தா சென்று ஒரு நாள் கப்பல் பயணமும் ஏற்பாடு செய்துள்ளனர். குடும்பத்தோடு வருபவர்களுக்கும் ஏற்பாடு ஆகியுள்ளது. வரும் மார்ச் 28,29,30 புதன்கிழமை கிளம்பி வெள்ளிக்கிழமை ரியாத் திரும்புகின்றனர். இறைவன் நாடினால் இதில் சகோதரர் முஹம்மதும்(தமிழ்ச் செல்வன்) பயணிப்பார்.
“விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக ! மேலும் மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக !”
-குர்ஆன் 16:125
“மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.”
-குர்ஆன் 4:1
“மார்க்க விஷயத்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும், அல்லாஹ் விலக்கவில்லை. நிச்சயம் அல்லாஹ் நீதி செய்கிறவர்களை நேசிக்கிறான்.”
-குர்ஆன் 60:8