Followers

Tuesday, May 20, 2014

காந்தியின் பேரன் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம்!



பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் மோடி அவர்களுக்கு வணக்கம்! உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை நான் மிகவும் உளப்பூர்வமாகத்தான் சொல்கிறேன்; இப்படிச் சொல்வது ஒன்றும் எனக்கு அவ்வளவு எளிதான செயலல்ல. ஏனெனில், நீங்கள் இப்போது அடைந்திருக்கும் உச்சபட்ச பதவியில் உங்களைக் காண விரும்பியவர்களில் ஒருவனல்ல நான். நீங்கள் பிரதமராகியிருப்பதுகுறித்துக் கோடிக் கணக்கானோர் பரவசத்துடன் இருக்கும் அதே வேளையில், இன்னும் கோடிக் கணக்கானோர் இதே காரணத்துக்காக வருத்தமுற்றிருக்கக் கூடும் என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள்.

ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி போன்றவர் களும், இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலகட்டத்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்துக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாயும், பிறகு உங்கள் அரசியல் குரு வாஜ்பாயும் உட்கார்ந்த நாற்காலிக்கு இதோ நீங்களும் வந்துவிட்டீர்கள். உங்களை இந்த இடத்தில் பார்க்க விரும்பாதவர்கள் நீங்கள் இந்த இடத்துக்கு வந்திருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்த கவுரவத்தை நீங்கள் பெறுவதுகுறித்து எனக்குப் பெருமளவில் ஐயப்பாடுகள் இருந்தாலும்கூட, உங்களைப் போல் பின்தங்கிய சமூகத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் வரும் ஒருவர் பிரதமர் ஆவதை நான் பெரிதும் மதிக்கிறேன். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் லட்சியமான சமத்துவம் என்பதை இது பரிபூரணமாக நிறைவுசெய்கிறது.

தேசம் என்னும் கருத்தாக்கம்

‘டீ விற்றவர்' என்று மூர்க்கமாகவும் கேலியாகவும் உங்களைப் பற்றிச் சிலர் பேசியபோது எனக்குக் குமட்டிக் கொண்டுவந்தது. பிழைப்புக்காக டீ விற்ற ஒருவர் இந்திய அரசுக்குத் தலைமை தாங்க வருவது என்பது எவ்வளவு அற்புதமான விஷயம் என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஒருவருக்குக் கூஜா தூக்குவதைவிடப் பலருக் கும் டீ கூஜாவைத் தூக்கிச்செல்வது என்பது மேல் அல்லவா.

இதையெல்லாம் தாண்டி, இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் நீங்கள் இருப்பது கோடிக் கணக்கான இந்தியர்களை ஏன் சங்கடப்படுத்துகிறது என்பது குறித்து நான் பேசியாக வேண்டும். 2014 தேர்தலில் வாக்காளர்கள் மோடிக்காகவோ அல்லது மோடிக்கு எதிராகவோ வாக்களித்திருக்கிறார்கள் என்பது வேறு யாரையும்விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். தேசத்தின் சிறந்த பாதுகாவலன், உண்மையில் அதன் ரட்சகன் என்று சொல்லி 31% மக்களை நீங்கள் கவர்ந்ததன் மூலம், பா.ஜ.க. இவ்வளவு இடங்களை வென்றிருக்கிறது. அதே நேரத்தில் 69% மக்கள் உங்களை அவர்களின் பாதுகாவலராகக் கருதவில்லை என்பதையும் கவனித்தாக வேண்டும். இந்த தேசம் என்பது உண்மையில் என்ன என்பதில் உங்களுக்கு உள்ள கருத்துடன் மாறுபடும் கருத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தேசம் என்கிற இந்தக் கருத்தாக்கம் குறித்துப் பேசும்போதுதான் இந்திய அரசியலமைப்பு, அதாவது நீங்கள் பிரதமர் பதவியில் அமர்வதற்குக் காரணமான அந்த அதிகாரம், முக்கியத்துவம் பெறுகிறது திரு மோடி அவர்களே. இந்த நேரத்தில்தான் தேசம் என்னும் கருத்தாக்கத்தைத் திரும்பிப்பார்க்க வேண்டுமென்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

சிறுபான்மையினருக்கு நம்பிக்கையூட்டுதல்

ஒற்றுமையையும் ஸ்திரத்தன்மையையும் பற்றிப் பேசும் போதெல்லாம் சர்தார் வல்லபபாய் படேல் பெயரையும் அவருடைய ஆளுமையையும் துணைக்கு அழைக்கிறீர்கள். சிறுபான்மையினருக்கான அரசமைப்புச் சட்டக் குழுவுக்கு சர்தார் தலைமையேற்றிருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். கல்வி, கலாச்சாரம், மதம் போன்றவை தொடர்பாகச் சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டம் முக்கியமான உத்தரவாதங்களைத் தருகிறது என்றால், அதற்கு சர்தாருக்கும் அந்தக் குழுவின் பிற உறுப்பினர்களுக்கும் நன்றி சொல்லியாக வேண்டும். சிறுபான்மையினர் தொடர்பாக அரசமைப்புச் சட்டம் கொண்டிருக்கும் லட்சியத்தை உங்கள் நோக்கத்துக்கு ஏற்றவிதத்தில் மாற்றியமைக்கவோ, நீர்த்துப்போகவோ செய்யாமல் அதை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் திரு மோடி அவர்களே.

அளவுக்கு அதிகமாகவும் வெளியில் சொல்ல முடியாத வகையிலும் பலரிடத்திலும் பயம் இருக்கிறது, என்ன காரணம்?

ஏனென்றால், நீங்கள் பேரணிகளில் உரையாற்றும்போது, இந்தியக் குடிமக்கள் என்ற கருத்தாக்கத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு ஜனநாயகவாதியின் குரலைத்தான் அவர்கள் கேட்க விரும்புகிறார்களே தவிர, கட்டளைகளைப் பிறப்பிக்கும் ஒரு சக்ரவர்த்தியின் குரலை அல்ல. நீங்கள் செய்ய வேண்டியது சிறுபான்மை மக்களின் அச்சத்தைக் களைவதுதானே தவிர, ஏதோ அவர்களுக்குப் பரிபாலனம் செய்வதுபோல் நடந்துகொள்வதல்ல. ‘பாதுகாப்பு' என்பதற்கு வளர்ச்சி என்பது எந்த வகையிலும் மாற்றாகாது. ‘ஒரு கையில் குர்ஆன், மறு கையில் மடிக்கணினி’ என்ற ரீதியில் நீங்கள் பேசினீர்கள். அந்தப் படிமம் அவர்களுக்கு நம்பிக்கை யூட்டுவதாக அமையாது. ஏனெனில், வேறொரு படிமம் அவர்களை அச்சுறுத்துகிறது: இந்து என்ற தோற்றத்துக்குள் ஒளிந்துகொண்டு ஒருவர் இந்துப் புராணமொன்றின் டி.வி.டி-யை ஒரு கையிலும் அச்சுறுத்தும் வகையில் திரிசூலத்தை மற்றொரு கையிலும் வைத்திருக்கும் படிமம்.

உப்பு தடவிய பிரம்பு

முன்பெல்லாம், பள்ளிக்கூடங்களில் உப்பு தடவிய பிரம்பை வகுப்பறைக்கு வெளியே தலைமையாசிரியர்கள் வைத்திருப்பது உண்டு. பார்த்தாலே பயம் வரும்; தப்பு செய்தால் தலைமையாசிரியர் எப்படியெல்லாம் தோலை உரிப்பார் என்பதை நினைவூட்டும் விதத்தில் அந்தப் பிரம்பு வைக்கப்பட்டிருக்கும். முசாபர்நகரில் 42 முஸ்லிம்கள் 20 இந்துக்கள் இறப்பதற்கும் 50,000 பேர் வீடுவாசலை இழந்து அகதிகளானதற்கும் காரணமான கலவரங்களைப் பற்றிய மிகச் சமீப காலத்திய நினைவுகள்தான் அந்தப் பிரம்புகள். “ஜாக்கிரதை, இதுதான் உங்களுக்கு நடக்கும்!” என்ற எச்சரிக்கை கோடிக் கணக்கானவர்களின் பகல் நேர அச்சமாகவும் இரவு நேரப் பயங்கரமாகவும் நுழைந்துவிட்டிருக்கிறது.

உங்கள் கையில்தான் இருக்கிறது திரு மோடி அவர் களே, அந்த அச்சத்தை விரட்டும் பொறுப்பு. அதைச் செய்வதற் கான அதிகாரமும் சக்தியும் உங்களிடம் இருக்கிறது; அதைச் செய்யும் உரிமையும் கடப்பாடும்கூட உங்களிடம் இருக் கிறது. யார் யாரோ என்னென்னவோ சொன்னாலும்கூட, அந்த அச்சத்தை நீங்கள் போக்குவீர்கள் என்றே நம்ப விரும்புகிறேன்.

நீங்கள்தான் செய்ய வேண்டும்

முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள மதச் சிறுபான்மையினர் அனைவரும் தங்கள் மனதில் ஆழமான வடுக்களைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள், மேற்கு பஞ்சாபிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள் போலவும் காஷ்மீர் பண்டிட்டுகள் போலவும். யதேச்சையான அல்லது திட்டமிட்ட காரணங்களுக்காகத் திடீரென்று ஏதாவது கலவரம் ஏற்படும் என்றும் அதற்குப் பல மடங்கு, குறிப்பாக பெண்களை இலக்காகக் கொண்டு, பழிவாங்கல் என்றெல்லாம் தொடரும் என்றும் ஒரு அச்சம் நிலவுகிறது. தலித் மக்களும் பழங்குடியினரும், குறிப்பாகப் பெண்கள், தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் அவமானத்திலோ, அவமானத்துக்குள்ளானதைப் பற்றிய நினைவிலோதான் கழிக்கிறார்கள். இந்நிலையைக் கருத்தில் கொண்டு, பேச்சளவிலும் செயலளவிலும் அவர்களுடைய நம்பிக்கையை வென்றெடுங்கள் திரு மோடி அவர்களே. அவர்களுடைய நலன்களுக்காகக் குரல்கொடுக்கும் முதல் நபர் நீங்கள்தான் என்ற உறுதியை அளிப்பதன் மூலம் இதை நீங்கள் சாதிக்க முடியும்.

குடியாட்சியின் பன்மைத்துவத்திடம் முடியாட்சியின் ஒருமைத்துவ மொழியில் பேசக் கூடாது; ‘பல' என்ற சிந்தனையிடம் ‘ஒன்று' என்பதன் சொற்களில் பேசக் கூடாது. இந்தியா என்பது பன்மைத்தன்மையின் காடு. அதில் எண்ணற்ற தாவர இனங்கள் இருக்கின்றன. அவை செழித்து வளர்வதற்கு உதவும் இலைமக்கினை (ஹ்யூமஸ்) நீங்கள் போஷிக்க வேண்டுமென்று அந்தக் காடு விரும்புகிறது. ஒற்றை வண்ணம் கொண்ட ஒற்றைக் கலாச்சாரத்தை அதன் முன்னே வைத்துவிடாதீர்கள்.

ஆச்சரியப்படுத்துங்கள்!

பிரிவு 370 பற்றி நீங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு, பொது சிவில் சட்டம்குறித்த புளித்துப்போன கோரிக்கை, அயோத்தியில் ராமர் கோயில், இந்து அகதிகளையும் முஸ்லிம் அகதிகளையும்பற்றி நீங்கள் பேசியது, இவையெல்லாம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை; பயத்தைதான் ஏற்படுத்து கின்றன. வெகுஜன அச்சம் என்பது இந்தியக் குடியரசின் குணாம்சமாக இருக்க முடியாது திரு மோடி அவர்களே.

வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை அடைந்திருக்கிறீர்கள் திரு மோடி அவர்களே. அதற்காக மறுபடியும் வாழ்த்துக்கள்! இந்த வெற்றியை அடுத்து வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சிக் காலம் தொடங்கட்டும். அதன் மூலம் இந்த உலகத்தின் முன் நிறைய ஆச்சரியங்களை, அதாவது உங்கள் ஆதரவாளர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்த்திருக்காத ஆனால், பெரும்பாலானோர் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஆச்சரியங்களை அந்த ஆட்சிக் காலம் நிகழ்த்தட்டும். நீங்கள் மிகவும் புத்திக்கூர்மை கொண்டவர் என்பதால், முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து வரும் அறிவுரையை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். உங்கள் ஆதரவாளர்களிடமிருந்து வரும் கைத்தட்டல்களுக்கு வேண்டிய கைம்மாறு செய்யுங்கள். ஆனால், உங்களுக்கு ஆதரவளிக்காதவர்களின் நம்பிக்கையையும் பெறுங்கள்.

அரசாட்சிக் காலத்தைச் சேர்ந்தவையும், சித்தாந்தரீதியி லானவையுமான உதாரணங்கள் உங்களுக்குப் பிடிக்கும். எனவே, உங்கள் போராட்டத்தில் நீங்கள் ஒரு மகாராணா பிரதாப் சிங்கைப் போல இருங்கள், சாந்தத்தைப் பொறுத்த வரை அக்பராக இருங்கள். இதயத்தில் சாவர்க்கராக, அதாவது நீங்கள் விரும்பினால், இருங்கள்; ஆனால், மனதால் ஒரு அம்பேத்கராக இருங்கள். உங்கள் டி.என்.ஏ-வைப் பொறுத்தவரை, நீங்கள் விரும்பினால், ஆர்.எஸ்.எஸ்-காரராக இருந்துகொள்ளுங்கள். ஆனால், உங்களுக்கு வாக்களிக்காத 69 சதவீதத்தினருக்காக அவர்கள் விரும்பும் விதத்தில் இந்துஸ்தானின் வஸிர்-இ-ஆசமாக (வஸிர்-இ-ஆசம் = உருது மொழியில் ‘பிரதம மந்திரி') இருங்கள்.

நமது தேசத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களுடன்,

உங்கள் சக குடிமகன்,
கோபாலகிருஷ்ண காந்தி

கட்டுரையாளர், காந்தியின் பேரன், மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர். தமிழில்: ஆசை
நன்றி: ஹிந்து தமிழ் நாளிதழ்

---------------------------------------------------------

In invoking unity and stability, you have regularly turned to the name and stature of Sardar Vallabhbhai Patel. The Sardar, as you would know, chaired the Constituent Assembly’s Committee on Minorities. If the Constitution of India gives crucial guarantees — educational, cultural and religious — to India’s minorities, Sardar Patel has to be thanked, as do other members of that committee, in particular Rajkumari Amrit Kaur, the Christian daughter of Sikh Kapurthala. Adopt, in toto, Mr. Modi, not adapt or modify, dilute or tinker with, the vision of the Constitution on the minorities. You may like to read what the indomitable Sardar said in that committee.

Why is there, in so many, so much fear, that they dare not voice their fears?

It is because when you address rallies, they want to hear a democrat who carries the Peoplehood of India with him, not an Emperor who issues decrees. Reassure the minorities, Mr. Modi, do not patronise them. “Development” is no substitute to security. You spoke of “the Koran in one hand, a laptop in the other,” or words to that effect. That visual did not quite reassure them because of a counter visual that scares them — of a thug masquerading as a Hindu holding a Hindu epic’s DVD in one hand and a minatory trishul in the other.

1 comment:

Seeni said...

பகிர்வுக்கு நன்றி..