Followers

Sunday, May 18, 2014

பொது சிவில் சட்டம் வந்தால் என்ன நஷ்டம்.?- ரங்கநாதன்!

திரு ரங்கநாதன்!

//சுவனப்ரியன் அவர்களுக்கு பொது சிவில் சட்டம் வந்தால் என்ன நஷ்டம்.?//

நமது நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த 60 ஆண்டுகளில் சிவில் சட்டங்கள் மதங்களுக்குள் வேறுபடுவதை வைத்து என்ன பிரச்னையை இந்த நாடு சந்தித்து விட்டது? கிரிமினல் சட்டங்களை பொறுத்த வரை அனைவருக்கும் பொது சட்டமே. திருமண சம்பந்தம், பாகப்பிரிவினை, மத சடங்குகள் இதில் மட்டும்தான் அவரவர் மத சட்டங்களை பின் பற்ற நமது நாட்டு சிவில் சட்டம் அனுமதிக்கிறது. பல மதங்களை உடைய நமது நாட்டுக்கு இந்த சட்டம் மிக அவசியம்.இதனால் கலவரமோ, அரசுக்கு வருவாய் இழப்போ ஏதும் வந்துள்ளதா?

கிரிமினல் சட்டங்களை பொறுத்த வரை அது ஒரு மதத்தோடு முடிந்து விடுவதில்லை. உதாரணத்திற்கு ஒரு முஸ்லிம் ஒரு இந்துவை கொடுக்கல் வாங்கலில் கொல்லலாம். அதே போல் ஒரு இந்து மற்றொரு முஸ்லிமையும் கொடுக்கல் வாங்கலில் கொல்லலாம். இங்கு இரு மதங்கள் சம்பந்தப்படுவதால் பொது சட்டம் தேவைப்படுகிறது. எனவே தான் நமது சட்டத்தை வகுத்தவர்கள் கிரிமினல் சட்டங்களுக்கு அனைத்து மதத்தவரையும் உள்ளாக்கியிருக்கிறார்கள். ஆனால் சிவில் சட்டம் மற்ற மதத்தோடு சம்பந்தப்படுவதில்லை. திருமணமோ பாகப்பிரிவினையோ மத சடங்குகளோ மற்ற மதத்தவரை பாதிப்பதில்லை. எனவே தான் அவரவர் மத கோட்பாடுகளுக்கொப்ப சிவில் சட்டங்களை வகுத்துள்ளனர்.

இனி பொது சிவில் சட்டம் வந்தால் என்னவெல்லாம் அரங்கேறும் என்பதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

அல்லாஹ்வையும் வணங்கிக் கொள், அருகில் ராமனையும் கிருஷ்ணனையும் வைத்துக் கொள். குர்ஆனையும் படி: அதோடு ராமாயணத்தையும் படி: அதன் கருத்துக்களை உள் வாங்கி அதற்கு மதிப்பு கொடு. திருமண ஒப்பந்தம், சொத்து பாகப்பிரிவினை, போன்ற அனைத்திலும் பார்பனிய சட்டங்களை முஸ்லிம்களாகிய நீ பின்பற்று: எவ்வாறு சமணத்தையும் பவுத்தத்தையும் இந்து மதத்தின் ஒரு பிரிவாக மாற்றினோமோ அதுபோல் இஸ்லாமும் கிறித்தவமும் இந்து மதத்தின் ஒரு பிரிவாக அதாவது இந்திய கலாசாரத்தை ஏற்றுக் கொண்ட மதங்களாக மாறிவிட வேண்டும். இதை நோக்கித்தான் பொது சிவில் சட்டம் செல்கிறது.

இதற்கு இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே முதலில் எதிர்க்க ஆரம்பிப்பார்கள். ஏனெனில் இந்துக்களில் பலர் இறந்த உடலை எரிக்கிறார்கள்: சிலர் புதைக்கிறார்கள்: பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் சாதி வழக்கத்திற்கு ஒப்ப பல கடவுள்களை வணங்குகின்றனர். பார்பனர்கள் ராமன், கிருஷ்ணன், போன்ற உயர் ரக கடவுள்களை மட்டுமே வணங்குவர். சுடலை மாடன், போன்ற கிராமிய கடவுள்களை பார்பனர்கள் கடவுளாக மதிப்பதில்லை. தங்கள் கோவில்களில் அதற்கு இடமும் தர மாட்டார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் கோவில்களில் ராமனும், கிருஷ்ணனும் தெய்வங்களாக வீற்றிருக்கும். பொது சிவில் சட்டத்தில் அரசு எதனை கடவுளாக்க வேண்டும், எப்படி வழிபட வேண்டும், எப்படி திருமணம் செய்ய வெண்டும் என்பது வரை சட்டங்களாக்கி அதனை பொதுவாக்கி விடுவர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே! கிராமிய கோவில்களில் ஆடு, கோழி, மாடு போன்றவற்றை பொது சிவில் சட்டத்தில் பலி கொடுக்க முடியாது. பார்பனர்களுக்கு காளை மாடு, பசு மாடு போன்றவை தெய்வங்கள். எனவே அதனை பலி கொடுப்பதற்கும் உணவுக்காக அறுப்பதற்கும் தடை விதிக்கப்படும்.

நாட்டின் முக்கால் வாசிப்பேர் வறுமையல் உழன்று கொண்டிருக்கும் போது அதனை போக்க நமது அரசு முயற்சிக்க வேண்டும். பொது சிவில் சட்டம் அவனது வறுமையை எந்த வகையில் போக்கி விடும் என்று நினைக்கிறீர்கள்.?

No comments: