'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, September 13, 2014
குதிரைகளைப் பற்றி சில ருசிகர செய்திகள்!
குதிரைகளைப் பற்றி சில ருசிகர செய்திகள்!
மனிதன் பயன்படுததும் விலங்குகளிலேயே குதிரை ஒரு வித்தியாசமான பிராணி என்று சொல்லலாம். அதன் கம்பீரம்: அதற்குள்ள வேகம்: அது நடக்கும் அழகு: என்று சொல்லிக் கொண்டே போகலாம். நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கார்பரேஷன் பள்ளிக்கு குதிரை வண்டியில் போனது உண்டு. தாத்தா தனது வயல் வேலையாகவும் கடை வேலையாகவும் செல்லும் போது என்னையும் ஏற்றிக் கொண்டு செல்வார். குதிரை வண்டியில் போகும் ஆர்வத்தினாலேயே பள்ளிக்கு மட்டம் போடாமல் தொடர்ந்து போய் வந்தேன்.
'டக்..டக்...டக்...' என்ற குளம்போசை தாள லயத்தோடு அந்த குதிரை எங்களை இழுத்துக் கொண்டு ஓடும் அழகே தனி. இது ஐந்து வருடம் தொடர்ந்தது. பிறகு நான் வேறு பள்ளி மாறிய போது எனக்கு சைக்கிள் கிடைத்ததால் குதிரை சவாரி நின்று போனது. எனினும் இன்று கூட குதிரைகளை பார்த்தால் பழைய ஞாபகங்கள் வந்து போகும்.
'காசை குதிரை உட்றான்' என்று சொல்வார்கள். அதுபோல் எங்கள் ஊரில் ஆசைக்கு குதிரைகளை வாங்கி அதிலேயே பெரும் தொகைகளை இழந்தவர்களும் உண்டு. அந்த காலத்திலிருந்து இன்று வரை குதிரை தனது செல்வத்துக்கு ஒரு அளவு கோளாக மனிதன் பாவித்து வந்திருக்கிறான்.
---------------------------------------------------
இந்த குதிரையின் ஓட்டத்தை வைத்து குர்ஆன் சில விஷயங்களை சொல்கிறது. அதனையும் பார்ப்போம்.
'மூச்சிறைத்து வேகமாக ஓடுபவற்றின் மீதும்,
தீப் பொறியை பறக்கச் செய்பவற்றின் மீதும்,
அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும்,
அதனால் புழுதியை பரப்பி வருபவை மீதும்,
படைகளுக்கு மத்தியில் ஊடுருவிச் செல்பவை மீதும் சத்தியமாக!
மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
அவனே இதற்கு சாட்சியாக இருக்கிறான்.
அவன் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறான்.'
-குர்ஆன் 100: 1, 2, 3, 4, 5, 6, 7, 8
இனி இந்த வசனத்தின் சந்த அழகை பார்ப்பதற்கு மூல மொழியான அரபியில் இந்த வசனங்களை பார்போம்.
'வல்லாதியாத்தி லப்ஹன்:
வல் மூரியாத்தி கத்ஹன்:
ஃபல் முகீராத்தி சுப்ஹன்:
பஃதர் நபிஹி நக்அன்:
பவசத் நபிஹி ஜம்அன்:
இன்னல் இன்சான லிரப்பிஹி லகனூத்:
வஇன்னஹூ அலா தாலிக லஸஹீத்:
வஇன்னஹூ லிஹூப்பில் ஹைரி லஸதீத்'
என்ன அழகிய வார்த்தை சீரமைப்பு. சந்தம் எந்த அளவு நெருங்கி வருவதைப் பாருங்கள். பலர் எழுதும் கவிதைகளில் சந்தங்கள் சரியாக அமைந்தால் பொருள் ஏனோ தானோ வென்று இருக்கும். பொருள் அருமையாக இருந்தால் ஏதோ உரை நடையை படிப்பது போல் இருக்கும். இங்கு இரண்டுமே மிக அழகாக பொருந்தி வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். இந்த ஒரு இடம் மட்டும் தான் என்று இல்லை. குர்ஆன் முழுக்க இந்த வசன நடை தொடர்ந்து வருவதை பார்த்திருக்கலாம். அரபி மொழி தெரிந்தவர்களுக்கு இந்த வார்த்தை கட்டுக்கள் இன்னும் சிறந்த ஈர்ப்பை ஏற்படுத்தும். அதனால் தான் அரபி மொழி நன்கு தெரிந்த அன்றைய அரபு புலவர்கள் குர்ஆன் ஓதப்படுவதைக் கேட்டால் கைகளால் காதை பொத்திக் கொள்வார்களாம். அதன் வசன நடையும் அதற்குள் பொதிந்திருக்கும் சிறந்த கருத்துக்களும் தங்களின் சிந்தையை கலைத்து இஸ்லாத்துக்குள் இழுத்துக் கொண்டு சென்று விடுமோ என்று அஞ்சுவார்களாம். அந்த அளவு குர்ஆனின் கருத்துக்களில் அன்றைய அரபு புலவர்கள் கலக்கம் அடைந்திருந்தனர்
இனி குர்ஆனின் விளக்கத்தைப் பார்ப்போம்.
மூச்சிறைத்து ஓடும் ஒரு குதிரை எந்த அளவு உண்மையானதோ, கால் குளம்பின் தீப் பொறி பறக்க ஓடும் குதிரை எந்த அளவு உண்மையானதோ, போர்க் காலங்களில் அதிகாலையில் உக்கிரமாக தாக்குதல் நடத்தும் குதிரைகள் எந்த அளவு உண்மையானதோ, அந்த சண்டையில் புழுதியைக் கிளப்பும் குதிரைகள் எந்த அளவு உண்மையானதோ, போரில் படைகளுக்கு நடுவே ஊடுருவிச் செல்லும் குதிரைகள் எந்த அளவு உண்மையானதோ அதே அளவு உண்மையோடு மனிதன் தனது இறைவனுக்கு நன்றி மறந்தவனாக இருக்கிறான். அதற்கு அவனே சாட்சியாகவும் இருக்கிறான். அழிந்து போகும் உலக செல்வத்தை மிகக் கடுமையாக நேசிக்கவும் செய்கிறான் என்கிறான் இறைவன்.
அதாவது அனைத்து சுகங்களையும் இறைவன் தந்திருக்க அதற்கு நன்றி மறந்து நாத்திக கருத்துக்களை சிலர் பரப்பி வருவதை பார்க்கிறோம். சிலர் படைத்த இறைவனை மனம் போன போக்கில் நிந்திப்பதை பார்க்கிறோம். இன்னும் சிலர் மனிதர்களை தெய்வங்கள் என்றும் தெய்வத்தின் அவதாரங்கள் என்றும் நம்பி தங்களின் பொருளையும் கற்பையும் ஒரு சாதாரண மனிதனிடம் இழந்து நிற்பதைப் பார்க்கிறோம். இவற்றிலிருந்தெல்லாம் நாம் விடுபட்டு நம்மை படைத்த இறைவனை அவன் வணங்க சொன்ன வழியில் வணங்க வேண்டும் என்று மானிடர்க்கு இங்கு அறிவுறுத்துகிறான் இறைவன்.
குர்ஆனில் குதிரை சம்பந்தமாக வந்திருக்கும் வேறு சில வசனங்கள்.
'பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம், மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள், ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். இறைவனிடம் அழகிய புகலிடம் உள்ளது.'
-குர்ஆன் 3:14
உலகம் முழுவதும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விஷயங்களும் உலக மக்களால் இன்று வரை கவர்ச்சிக்குரியதாகவே எடுத்துக் கொள்ளப்படுவதை பார்க்கிறோம்.
'குதிரைகள், கோவேறுக் கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும் மதிப்புக்காகவும் அவன் படைத்தான். நீங்கள் அறியாதவற்றை இனி படைப்பான்'
குர்ஆன் 16:8
அன்றைய அரபுகள் பார்க்காத எத்தனையோ வாகனங்களை இன்று பார்த்து அனுபவித்து வருகிறோம். அன்றைய காலத்தில் இது போன்ற முன்னேற்றம் ஏற்படும் என்று எவருமே சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment