Followers

Monday, April 03, 2023

ரமலான் வெளியீடு!

 


ரமலான் வெளியீடு!

 

அன்பு நண்பர்களே,

இந்த ரமலான் காலத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தேன். விடியற்காலை அறையைக் காலி செய்து சாவி கொடுக்க வந்தேன். மேலாளர் ஓர் இசுலாமிய இளைஞர்.

 

அந்நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

 

கனிவான முகம். ' காத்திருக்கிறேன் சாப்பிட்டு வாங்க!' என்றேன்.

 

கைகழுவி வந்தவர் கணக்கை முடித்து உதவினார். அல்லாஹ் இந்த இளைஞனின் பாதையில் ஒளியேற்ற வேண்டுமென எண்ணிக் கொண்டேன்.

 

இப்பருவம் விசேஷமானது. குரான் அருளப்பட்ட காலம். ஆதாமின் பிள்ளைகள் சாத்தான் வழி சென்றுவிடக் கூடாதே! என புலனடக்கி வாழும் காலம்.

 

கடவுள் தன் பிள்ளைகளை பசிகிடக்க,

தாகித்திருக்க விரும்புவதில்லை.

 

ஆனாலும் மனித மனம் பழிபாவங்களுக்கு அஞ்சுவது. அதிலிருந்து தன்னை எப்படியாவது காத்துக் கொள்ள விரும்புகிறது.

 

இதன் பொருட்டே நோன்பிருப்பதும்.

 

சொர்க்கத்தின் வாசல் திறந்திருக்கும் பருவமிது. சாத்தான்கள் கை விலங்கிடப்பட்ட காலமிது. இந்தப் பருவம் அமைதியும் சமாதானமும் நிரம்பியது.

 

நெற்றித் தழும்பேறத் தொழுது நாளும் அல்லாஹ்ஹின் நாமம் உரைத்து,

கனிந்திருக்கும் இசுலாமியர்களிடம் நபிகள் , 'உங்களை யாராவது தாக்கவந்தாலும்

பதற்றமடையாதீர்கள்.நாங்கள் நோன்பிருப்பவர்கள்!'

என சாந்தம் பழக்குகிறார்.

 

உலகத்தின் அத்தனை அழிவு

சாதனங்களையும் வைத்திருக்கும் அமெரிக்காவும், வன்முறையையும், ஃபாஸிஸத்தையும் வழிமுறையாகக் கொண்ட சங்பரிவார் கூட்டமும் இவர்களைத்தான் வன்முறையாளர்

களாகச் சித்தரிக்கிறது. நமது சினிமாவும் சீரியலும் இவர்களைத்தான்

வில்லன்களாகக் காட்டித் தொலைக்கிறது.

 

இஸ்லாம் ஒரு மார்க்கம்.

 

தேசத்தால் இவர்கள் இந்தியர்கள்.

 

 

நமது கங்கைக்கும் காவிரிக்கும் சொந்தக்காரர்கள். இஸ்லாம் அந்நிய மண்ணிலிருந்து வந்த மார்க்கம் என்கிறார்கள். அப்படி பார்த்தால், சங்பரிவார்களின் இன ஃபாசிசமும், துவேஷமும் வெளியிலிருந்து வந்தவைதாம். உருவ வழிபாட்டை மறுத்த பௌத்தமும் சமணமுமே நம் இந்திய மரபு. அந்த வகையில் இஸ்லாம் இந்தியாவுக்கு நெருக்கமான மார்க்கமாகவே இருக்கிறது.

 

காஷ்மீர், சி.., என்.பி.ஆர், என்.ஆர்.சி, முத்தலாக், பாப்ரி மஜீத், மாட்டிறைச்சி கொலைகள், என இந்திய இசுலாம் சமூகத்தின் காயங்கள், வரலாற்றின் அழியாத் தழும்புகளாக இருக்கின்றன.

 

இந்த வலதுசாரி ஃபாசிசப் போக்கு நிச்சயம் முடிவுக்கு வரும். ஏனென்றால் இது வெறும் சங்பரிவார்களின் இந்தியா மட்டுமில்லை. இது புத்தரும், மகாவீரரும், காந்தியும், நேருவும், உருவாக்கிய இந்தியா.

 

இதன் சுதந்திரப் போரில் முஸ்லீம்களின் வாளும் ரத்தமும் இருந்திருக்கிறது.

'இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது' என்கிறார் பிரபல பத்திரிகை ஆளுமையான குஷ்வந்த் சிங்.

 

வட இந்தியாவின் பாதி அழகுகள் அக்பரும் பாபரும் ஔரங்கசீப்பும் உருவாக்கியவை. இந்திய சினிமா, இந்திய இலக்கியம், இந்திய இசை, இந்திய மருத்துவம் என எல்லா தளங்களும் இஸ்லாமியப் பங்களிப்பால் முழுமை பெற்றவை.

 

யார் நம்மை சாதிகளாக பிளவு படுத்தினார்களோ, ஆண், பெண் என்று பாலால் பாகுபடுத்தினார்களோ, அவர்கள்தாம் இந்தியர்களை இந்துக்களென்றும் இஸ்லாமியரென்றும் கிறித்துவரென்றும் பிரித்து

இணக்கம் குலைக்கிறார்கள்.

 

சங்பரிவார் கட்டமைக்க விரும்பும் இந்து, இந்தி , இந்தியாவில் இஸ்லாமியருக்கு மட்டுமில்லை, தலித்துக்கு, பிற்படுத்தப் பட்டவருக்கு, தமிழர்க்கு, மலையாளிக்கு, தெலுங்கருக்கு, கன்னடருக்கென யாருக்கும் சமத்துவமோ, விடுதலையோ இல்லை.

 

அதனால்தான் இது காஷ்மீர் பிரச்சனை,

 

இது வடகிழக்கிந்தி முஸ்லீம் பிரச்சனை,

 

இது முஸ்லீம் கல்யாண பிரச்சனை என நாம் ஒதுங்கிவிட முடியாது. குடியுரிமை பிரச்சனை முஸ்லீமுக்கு மட்டுமில்லை, ஈழத்தமிழ் அகதிகளுக்கும் எதிரானது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை பறித்தவர்கள் நாளை இட ஒதுக்கீட்டை பறிக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

 

 

இதன் பொருட்டே வரவிருக்கும் ரமலான் பெருநாளுக்கு ' வளர்பிறை காலம்' நூலை வேரல் பதிப்பக வெளியீடாகக் கொண்டு வருகிறோம்.

 

இது இசுலாமியர்களின் அரசியலையும் அழகியலையும் உரையாடுகிற ஒரு நூல்.

 

இந்திய/ தமிழக கலை, இலக்கியப் புலத்தில் இசுலாமிய பெருமக்கள் ஆற்றியிருக்கும் பங்களிப்பைப் பேசுகிற ஒரு நூல். இந்தியாவின் இணக்கத்துக்கான நம்பிக்கை ஒளி இந்நூல்.

 

புத்தனுக்கும், ஏசுவுக்கும் நபிகள் பெருமானுக்கும் இருந்தவை ஒத்த இதயங்கள்.

 

'உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்!' என்கிறார் நபிகள் நாயகம்.

 

இதைப் பின்பற்றியே இசுலாமியப் பெருமக்கள் தம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மௌனமாக இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

மதச்சர்பின்மையில் அக்கறை கொண்டவர்கள், சமாதானத்தில் விருப்பமுடையவர்கள் , பன்மைத்துவத்தில் கரிசனம் கொள்பவர்கள், வேரலின் இம்முயற்சியை ஆதரிக்க வேண்டும்.

 

'வளர்பிறை காலம்' நம் முற்றத்தை ஒளியூட்ட வருகிறது. இந்த பிறைநிலா காலம் வளர்ந்து நம் தேசத்தில் பூர்ணிமை நிறையட்டும்!

 

- கரிகாலன்

 

No comments: