ஐ.நா சபையை உலுக்கிய ஈரானின் பகிரங்கக் குற்றச்சாட்டு: "அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஈரானில் அமில மழை; 4 தூதுவர்கள் படுகொலை!"
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்கள், பாரிய போர்க்குற்றங்களாகவும் மனிதநேயப் பேரவலமாகவும் மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானியத் தூதுவர் அமீர் சயீத் இரவானி (Amir Saeid Iravani) ஐ.நா பாதுகாப்புச் சபையில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் விநியோக நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவதாகக் கண்டனம் தெரிவித்துள்ள அவர், ஐ.நா சபையின் மௌனத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நச்சு கலந்த அமில மழையும் சுகாதாரப் பேரவலமும்
மார்ச் 7 ஆம் திகதி இரவு, ஈரானின் தலைநகர் டெஹ்ரான் மற்றும் ஏனைய நகரங்களில் அமைந்துள்ள பாரிய எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய போர் விமானங்கள் மூர்க்கத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டன. இதன் விளைவாகக் காற்றில் கலந்த அபாயகரமான நச்சு வாயுக்களால், மார்ச் 8 ஆம் திகதி காலை ஈரானில் அமில மழை (Acid Rain) பெய்துள்ளதாக ஈரானியத் தூதுவர் சபையில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
இந்த நச்சு மழையினால் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் எனப் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்குக் கடுமையான சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், டெஹ்ரானில் உள்ள மருத்துவமனைகள் உச்சக்கட்ட அவசர நிலையில் இயங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்கள் கட்டமைப்புக்கள் மற்றும் குடிநீர் நிலையங்கள் அழிப்பு
இராணுவ இலக்குகளைத் தாண்டி, பொதுமக்களின் வாழ்வாதாரங்கள் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. மார்ச் 7 ஆம் திகதி அதிகாலை டெஹ்ரான் மெஹ்ராபாத் (Mehrabad) விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பல பயணிகள் விமானங்களும், சிவில் கட்டமைப்புக்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
மேலும், ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் கெஷ்ம் (Qeshm) தீவில் அமைந்துள்ள பாரிய நன்னீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமெரிக்கா வேண்டுமென்றே தாக்கி அழித்துள்ளது. இதனால் அங்குள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டு, மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
பெய்ரூட்டில் ஈரானியத் தூதுவர்கள் படுகொ*லை
மார்ச் 8 ஆம் திகதி அதிகாலை, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ரமாடா (Ramada) ஹோட்டல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில், அங்குத் தங்கியிருந்த 4 ஈரானிய இராஜதந்திரிகள் படுகொ*லை செய்யப்பட்டுள்ளனர்.
லெபனான் வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடனும், ஒருங்கிணைப்புடனும் பாதுகாப்பிற்காக குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த தூதுவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலானது, ஐ.நா சாசனம் மற்றும் வியன்னா மாநாட்டு விதிகளை அப்பட்டமாக மீறும் பச்சையான போர்க்குற்றம் என ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஐ.நா பாதுகாப்புச் சபையின் மௌனமும் ஈரானின் எச்சரிக்கையும்
அப்பாவிப் பொதுமக்களையும், தூதுவர்களையும் இலக்குவைத்து நடத்தப்படும் இந்தப் படுகொலைகளைக் கண்டும் காணாமல், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை மௌனம் காப்பது அதன் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அமீர் சயீத் இரவானி கொந்தளித்துள்ளார்.
ஆக்கிரமிப்பாளர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களைப் பாதுகாக்கும் வகையிலான பக்கச்சார்பான தீர்மானங்களை ஐ.நா முன்னெடுப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், "இன்று இது ஈரானுக்கு நடந்துள்ளது; நாளை உலகின் வேறெந்தவொரு சுதந்திர நாட்டிற்கும் இது நிகழலாம்," என உலக நாடுகளுக்குப் பாரிய எச்சரிக்கையொன்றை விடுத்துத் தனது உரையை நிறைவு செய்தார்.

No comments:
Post a Comment