Followers

Wednesday, July 15, 2026

கேதரின் மேயோ அவர்களின் Mother Indi’a தமிழாக்கமே “இந்திய மாதா”.

பிராமணீயக்_கொடுமை

 




கேதரின் மேயோ அவர்களின் Mother Indi’a தமிழாக்கமேஇந்திய மாதா”. இந்நூலில் அவரது சென்னை அனுபவத்தினை “பிராமணீயக் கொடுமை” எனும் கட்டுரையில் விளக்குகிறார்.இந்தக் கட்டுரையில் மேயோ சந்தித்த தாழ்த்தப்பட்ட தலைவர்,செல்வந்தர் அரசியல் தலைவர் யார் எனத் தெரியவில்லை. அவர் பனகல் ராஜா எனும் குறிப்புகள் உள்ளதை பின்னாளில் அறிந்தேன்.

 

இந்தியாவிற்கு அரசியல் சுதந்திரம் கிடைத்தால் மட்டும் போதாது social freedom வேண்டும் என்பதை தமிழக அரசியல் தலைவர்கள் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே குரல் கொடுக்க ஆரம்பித்ததை இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

 

இனி கட்டுரைக்குள் செல்வோம்.

 

பிராமணீயக் கொடுமை:

 

வங்காளத்திலிருந்து ரயில் மார்க்கமாக சென்னைக்குப் பிரயாணமானோம். காடு, மலை, வனாந்தரம் முதலியவைகளை யெல்லாம் தாண்டிக்கொண்டு ரயில் வாயுவேகம், மனோ வேகமாக வந்து கொண்டிருந்தது. இருபுறமும் ஆகாயத்தை யளாவி நிற்கும் மரங்களையும், கருமை நிறமுள்ள மலைகளையும் குன்றுகளையும், கரைபுரண்டு வெள்ளம் ஓடும் ஆறுகளையும், பசுமையான நிலங்களையும், கடந்து வந்தோம். ஆங்காங்கே சிறு கிராமங்களும், மண் குடிசைகளும், மந்தை மந்தையாய் ஆடுகள் மேய்வதும், தென்னை, பலா, புன்னை மருது, புரசு, புளி, அத்தி, ஆல், அசோகம், இலவு, மா, கருந்தேங்கு, வாழை, எலுமிச்சை முதலியமரங்களடர்ந்த சோலைகளும், மரங்களில் குரங்கு முதலிய விலங்கினங்கள் கூட்டம் கூட்டமாகத் துள்ளி விளையாடுவதும், குயில், மயில் போன்ற பறவைகள் இனிமையாகப் பாடுவதும், எங்கள் மனதைக் கவர்ந்தன. இவற்றையெல்லாம் கடந்து சென்னை வந்து சேர்ந்தோம். சென்னை ராஜதானி தான் பிராமணீய ஹிந்து மதத்தின் இருப்பிடமாகும். பூர்வீக குடிகளான கருநிறமுள்ள திராவிட மக்களின் இருப்பிடமும் சென்னை ராஜதானியே. பிராமணீய ஹிந்து மதம் திராவிடர்களை சின்னாபின்னப் படுத்தி, அவர்களை பலஜாதிகளாகப்பிரித்து, பறையர்களெனவும், கீழ் ஜாதியார்களெனவும் கூறி அடிமையாக ஒதுக்கி வைத்ததுடன் அவர்களை அறிவில்லாதவர்களாயும், கல்வி இல்லாதவர்களாயும் செய்து நசுக்கி வைத்தது. பிரிட்டிஷாரும் வந்து சேர்ந்தனர். நாட்டில் அமைதியை ஏற்படுத்தினர். ஜனங்களும் கொஞ்சங் கொஞ்சமாக தங்கள் உரிமையைப் பெற்றனர். ஜனநாயக ஆட்சி நிலவ ஆரம்பித்தது.

 

திராவிட மக்களும் காலக் கிரமத்தில் தாங்கள் நெடு நாளாகத் தூங்கிக் கொண்டிருந்த உறக்கத்திலிருந்து கண் விழித்துக் கொண்டனர். திராவிட மக்களைக் கண்டு மற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தாரும் தலை தூக்கத் தொடங்கினர். பிராமணர்களுக்கு விரோதமாக பிராமணரல்லாதார் கட்சி என்ற பெயருடன் ஒரு கட்சி தோன்றியது. இக்கட்சிக்கு அதிக பலமிருப்பதால், சென்னை சட்டசபையில் பிராமணர் வகித்திருந்த அரசியல் ஆதிக்கத்தை பறிமுதல் செய்து, அதிகாரங்களை பிராமணரல்லாதார் கைப்பற்றிக் கொண்டனர். பிராமணர் ஆதிக்கத்தை ஒழித்து பிராமணரல்லாதார் அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்டது இந்து தேச சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய முக்கியமானதொரு சம்பவமாகும்.

 

தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவரும், செல்வந்தரும், அரசியல் துறையில் வேலை செய்து வருபவரும், பொது ஜனங்களால் நன்கு மதிக்கப்பட்ட வருமான ஒருவரை சென்னையில் சந்தித்தேன். அவர் மிகவும் ஊக்கமும், உற்சாகமும் உள்ளவர். தாராளமாகப் பேசும் இயல்புள்ளவர். அவருடன் நான் வெகுநேரம் அந்தரங்கமாக சம்பாஷித்துக் கொண்டிருந்தேன். பிராமணர்களைப்பற்றி விவரமாகக் கூறும்படி அவரை வேண்டிக்கொண்டேன். அவர் பண்டைக்காலத்தில் எல்லா மனிதர்களும் அவரவர்கள் விருப்பப்படி வாழ்ந்து வந்த பொழுது பிராமணன் மட்டும் கல்வி கற்கத் தொடங்கினான், பிராமணன் இயற்கையிலேயே மிகவும் தந்திரசாலியாதலால், அவன் கல்வி கற்றதும், புராண சாஸ்திரங்களை யெல்லாம் தன்வசமாக்கிக் கொண்டு பிராமணனே எல்லா ஜாதியாரிலும் உயர்ந்தவன், பிராமணனே அனைவருக்கும் குரு என அந்த சாஸ்திரங்களில் எழுதி வைத்து விட்டான்.

 

ஆண்டுகள் பல கழிந்தன. பிராமணர்களைத் தவிர வேறு எவரும் கல்வி கற்கவில்லை. பிராமணன்தான் கல்வி கற்றவன். அவனைத் தவிர வேறு எவரும் புராணங்களையும் சாஸ்திரங்களையும் கண்ணடுத்துக் கூட பார்க்கக் கூடாதென பிராமணன் புத்தகங்களில் எழுதிவைத்துவிட்டபடியால் பிற ஜாதியார் அவைகளில் நம்பிக்கைவைத்து அவனை 'பூதேவன்* என மதித்து அவனுக்குக் கீழ்படிந்து நடக்க ஆரம்பித்தனர். ஆகவே எல்லா ஹிந்துக்களுக்கும் பிராமணனே தலைவனானான்.

 

அவன் கூறிய மொழிக்கு எதிர்மொழிகூற எவருக்கும் தைரியமில்லை. அவன் ஆணைக்கு மறுமொழி கூறாமல் அவனிட்ட வேலைகளையெல்லாம் தாள் பணிந்து, இருகை கூப்பி, செய்து வந்தனர். ஆங்கிலேயர் வந்து, எல்லா ஜாதியார்களும் கல்வி பயிலலாமென்ற உரிமையை அளித்து, பள்ளிக்கூடங்கள் ஸ்தாபிக்கும் வரை, ஹிந்து இந்தியா மேற்கூறிய நிலைமையிலேயே இருந்து வந்தது.

 

சென்னை மாகாணத்திலோ நாங்கள் பிராமணர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். பல்லாண்டுகளாக பிராமணன் உயர்ந்த நிலைமையிலிருந்து வந்ததனாலும், பேய்க் கூட்டங்களைப் போல் தந்திரமும், சூழ்ச்சியுமுள்ளவனாக விருந்தபடியாலும், அவனை எதிர்த்துப் போராடி வெல்வது அதிக கஷ்டமாகத்தானிருக்கிறது.

 

பத்திரிகைகள் பிராமணர் வசமிருக்கிறது. சர்க்கார் உத்தியோகங்களில் 100-க்கு 80 பிராமணன் கையிலிருக்கின்றது. நீதி ஸ்தலங்கள், கச்சேரிகள் எல்லாம் பிராமணனுக்கே சொந்தம். கீழ்த்தர குமாஸ்தா உத்தியோகத்திலிருந்து உயர்தர நீதிபதி உத்தியோகம் வரை பிராமணன் வசமே யிருக்கின்றது. அதிகாரங்கள் தங்கள் கையில் அகப்பட்டுக்கொள்ளவே ஜனங்களை விசேஷமாக பெண்களை அதிகமாக பயமுறுத்த ஆரம்பித்தனர். ஏனெனில் நாங்களெல்லாம் ஏழைகள், கல்வியில்லாதவர்கள். பிராமணர்களுடைய சூழ்ச்சியை அறியாமல் அவர்கள் கூறிவந்த மூட பழக்க வழக்கங்களில் நம்பிக்கை வைத்து விட்டோம். ஆகவே 'பூதேவர்' களாகிய பிராமணர்களுக்கு நாங்கள் அடிமைகளாகிவிட்டோம்.

 

எங்களை நசுக்கி, கசக்கிப் பிழிவதற்கு பிரிட்டிஷார் தடையாயிருப்பதால் பிரிட்டிஷார் மீது பிராமணன் சீறி விழுகின்றான். ஆத்திரத்துடன் துள்ளிக் குதிக்கின்றான். பெரிய தேசாபிமானிபோல் போலி வேடந்தரித்து மேடைகள் மீது நின்றுகொண்டு பிரிட்டிஷார் நாட்டை விட்டு போய்விட வேண்டுமென்று உரக்கக் கத்துகிறான். போதும்! போதும்! பிரிட்டிஷார் போய்விட்டால் பிராமணனுக்குக் கொண்டாட்டந்தான். எங்கள் மீது நன்றாகக் குதிரை சவாரி செய்வான். எங்கள் மூச்சைப் பிடித்துக் கொல்லத் தொடங்குவான். பிரிட்டிஷார் இந்தியாவிற்கு வருவதற்கு முன் இந்தியா என்ன நிலைமையிலிருந்ததோ அந்த நிலைமை மறுபடியும் வந்துவிடும். பண்டைக் காலத்தில் ஆதிக்கம் பெற்றிருந்த புரோகிதராட்சி மறுபடியும் வந்து விடும். நாங்களெல்லோரும் மீண்டும் அடிமைகளாக வேண்டியதுதான். இன்னும் மூட நம்பிக்கைகள் நம்மை விட்டபாடில்லை. இந்நிலைமையிலேயே நமக்கு இத்துணை இன்னல்களிருக்கின்றன. இன்னும் பண்டைய புரோகிதராட்சி வந்து விட்டால் எங்கள் பாடு திண்டாட்டந்தான். இதுமட்டுமா, இன்னும் சொல்கிறேன் தயை கூர்ந்து சற்று செவி சாய்த்துக் கேட்க வேண்டுகிறேன்.

 

பணம் பறித்தல்:

 

சர்க்காருக்கு கொடுக்கும் வரியைக்காட்டிலும் பிராமணனுக்கு அதிகமான வரிகளைக் கொடுக்கிறோம். பிறந்த தினத்திலிருந்து இறக்கும்வரை ஒரு ஹிந்து பிராமணனுக்கு வரி கொடுத்துகொண்டேயிருக்கிறான். குழந்தை பிறந்தவுடன் பிராமணனுக்கு தக்ஷணை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை சுகமாய் வளராதாம். குழந்தை பிறந்த 16வது நாள் 'தீட்டுக் கழியும்' சடங்கென்று ஒரு விழா நடத்த வேண்டும். அதற்கும் பிராமணனுக்கு தக்ஷனை கொடுக்க வேண்டும். சிறிது நாட் கழித்து குழந்தைக்குப் பெயரிட வேண்டும். அதற்கும் அவனுக்கு தக்ஷணை உண்டு. ஒரு வருடம் கழித்து ஆண்டு நிறைவு விழா வந்துவிடும். அப்பொழுதும் பிராமணனுக்குக் கொண்டாட்டந்தான்.

பின்பு குழந்தைக்கு சாதம் ஊட்ட வேண்டும். அதற்கும் பிராமணனுக்குத் தக்ஷணை உண்டு. குழந்தை ஆண் குழந்தையாயிருந்தால் குழந்தைக்குக் குடுமி வைக்க வேண்டும். அதற்கும் பிராமணனுக்கு தக்ஷணை உண்டு. ஏழாவது வயதில் குழந்தைக்கு அக்ஷராப்பியாசம் செய்விக்க வேண் டும். அப்பொழுதும் பிராமணனுக்குக் கொண்டாட்டந்தான். கொஞ்சம் செல்வந்தர்கள் வீடாயிருந்தால் தங்கத்தினால் பேனா செய்து அதை பிராமணனுக்குத் தத்தம் பண்ண வேண்டும்.

 

பெண் குழந்தையாயிருந்தால், 16 வயதுக்குள் கல்யாணம் செய்விக்க வேண்டும். இச் சமயத்தில் பிராமணனுக்கு கொழுத்த பணம் கிடைக்கும். கிரகண தினம் வந்தால் அப்பொழுதும் பிராமணனுக்கு ஏராளமான தக்ஷணை கிடைக்கும். இன்னும் ருது சாந்தி முதலிய வைபவங்களிருக்கின்றன.

 

இவ்விதமாக பல தடவைகளில் பிராமணனுக்கு உயிருள்ள மட்டும் தக்ஷணை கொடுக்க வேண்டும்.

 

இது இத்துடன் நின்றபாடில்லை. இறந்த பின்பும் பிராமணப் பேய் நம்மை விட்டு விடாது. பிராமணனுக்குப் பணம் கொடுக்காமல் பிரேதத்தை அடக்கம் செய்யக் கூடாது. பிரேதத்தை அடக்கம் செய்யும் பொழுது பிராமணனுக்குக் கொழுத்த தக்ஷணை கொடுக்க வேண்டும். ஒருவன் இறந்து ஒரு வருடம் வரை மாதா மாதம் அவனுடைய மகன் சிரார்த்தம் கொடுக்க வேண்டும். ஏனெனில் பிராமணன் உண்பதும், உடுப்பதும், குடிப்பதும் பிதுர்களுக்கு திருப்திச் செய்யக் கூடியதாம். பின்பு ஒவ்வொரு வருடமும் இறந்தவனுடைய மகன் பிராமணனுக்கு, வயிறு நிறைய விருந்தளிக்க வேண்டும், ஹிந்து மதச்சாரப்படி இந்த வருமானமெல்லாம் பெற பிராமணனுக்கு உரிமையிருக்கிறதெனக் பிராமணனுக்குக் கொடுக்க வேண்டியவைகளைக் கொடுக்காதவன் நரகத்தில்போய் விழுந்துவிடுவான் என பிராமணன் சொல்லுகிறான். இந்த சடங்குகள் நடக்கும் போதெல்லாம் பிராமணனுடைய பாதங்களை தண்ணீரால் கழுவி அந்த அழுக்குத் தண்ணீரை ஜனங்கள் குடிக்க வேண்டுமாம். ஏழைகளை பல மூட வழக்கங்களில் நம்பச் செய்து, அவர்களை ஏமாற்றிப் பணம் பறித்து சோம்பேறியாக பிராமணன் வாழ்ந்து வருகிறான்,

 

 சர்க்கார் உத்தியோகமோ, அல்லது வக்கீல் உத்தியோகமோ தவிர வேறு எந்த உத்தியோகமும் பிராமணன் பார்ப்பதில்லை. சென்னை மாகாணத்தில் 15 லக்ஷம் பிராமணர்களிருக்கிறார்கள். இவர்களுக்கு அடிமையாக, இவர்களுக்கு உழைத்துப் போடுவதற்கு சுமார் நான்கு கோடியே பத்து லக்ஷம் பிராமணரல்லாதாரிருக்கின்றனார். ஆகையால் நாங்கள் விடுதலை பெற்று, சுதந்திரமடைந்து, பிறர் உதவியின்றி வாழும் ஆற்றல் அடையும்வரை,நாட்டில் சமாதானத்தையும், பாதுகாப்பையுமளிக்க நம் தேசத்தை அன்னிய தேசத்தவர் ஆளுவதே பொருத்தமானது. எங்களை ஏமாற்றி, எங்களுடைய பணத்தை பிய்த்து, பிடுங்கித் தின்று கொண்டே, எங்களைத் தீண்டாதவர்களென்றும், நாங்கள் தொட்டால் அசுத்தமாகி விடுமென்றும் கூறும் 15 லக்ஷம் பிராமணர்களுக்கு அடிமையாக நாங்கள் வாழ்வதைவிட எங்களைப் பாதுகாத்துவரும் அன்னியர் ஆளுகை எவ்வளவோ மேலானது.

 

குறிப்பு: இந்திய மாதா வின் மூல ஆங்கில நூலானது 1927 ல் வெளியானது. அதற்கு அடுத்த ஆண்டே (1928) ல் இந்திய மாதா தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இதை தமிழில் மொழிபெயர்த்தவர் கே.எஸ்.சுந்தரம் அவர்கள்.இந்த நூலின் முகவுரையில் எஸ்.சுந்தரம் அவர்கள் கடுமையாக மேயோ அவர்களை விமர்சித்துள்ளார். 1989 ல் வெளியான இந்நூலின் இரண்டாம் பதிப்பிற்கு கி.ரா அவர்கள் அருமையான முன்னுரை வழங்கியிருக்கிறார்.இதைத் தவிர இந்திய மாதா எனும் தலைப்பில் வ.ரா மற்றும் சி.எஸ் ரங்கய்யர் மொழிபெயர்த்த நூல்களும்(காதரீன் மேயோவின் இந்திய மாதா: ஏற்பும் மறுப்பும்) உண்டு.

 

 

No comments: