Followers

Showing posts with label கேரளா. Show all posts
Showing posts with label கேரளா. Show all posts

Wednesday, November 25, 2015

மதரஸாக்களை விமரிசித்த இஸ்லாமிய பெண்மணி மிரட்டப்படுகிறார்!



கேரள கோழிக்கோட்டில் ஜர்னலிஸ்டாக பணி புரிந்து வரும் ஏபி ரெஜினா தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்த செய்திகளுக்காக பலராலும் மிரட்டப்படுகிறார்.

அவர் பதிந்த செய்தியின் சுருக்கம்:

'நான் சிறுமியாக மதரஸாக்களில் படித்து வரும் போது மாணவர்களும் மாணவிகளும் ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். இதனை வெளியில் சொல்லாமல் இருக்க மிரட்டவும் பட்டனர்.

இதனை நான் முகநூலில் பகிர்ந்ததற்காக பலராலும் மிரட்டப்படுகிறேன். நான் உண்மையைத்தான் சொன்னேன். இதனை பகிர்ந்ததன் மூலம் தவறிழைக்கும் ஆசிரியர்கள் திருந்த வாய்ப்புள்ளது. இதைப் பகிர்ந்ததற்காக என்னையும் எனது தனிப்பட்ட வாழ்க்கையையும் சிலர் அவதூறுகளால் விமரிசிக்கின்றனர். அதைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. இறைவன் இட்ட கட்டளைப்படி வாழும் ஒரு முஸ்லிம் பெண்மணி நான். என் உள் மனதில் என்ன உள்ளது என்பதை எனது இறைவன் அறிவான்' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரெஜினா!

தகவல் உதவி
என்டிடிவி
26-11-2015

இந்த பெண்மணி கூறியதில் உண்மை இருந்தால் சம்பந்தப்பட்ட மதரஸாக்களின் ஆசிரியர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அந்த ஆசிரியர்களை மதரஸாக்களிலிருந்து நீக்கவும் வேண்டும். மதரஸாக்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.

அதை விடுத்து குற்றம் சுமத்திய பெண்ணை மிரட்டுவதாலோ அவரது முகநூலை முடக்குவதாலோ தவறுக்கு நாமும் துணை போகிறோம் என்பதை ஏனோ இதனை எதிர்ப்பவர்கள் உணரவில்லை.

இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்துவானாக!

Friday, September 05, 2014

மனுதர்மத்தை தூக்கிப் பிடிப்போரே! இதைப் படியுங்கள்!



மனுதர்மத்தை தூக்கிப் பிடிப்போரே! இதைப் படியுங்கள்!

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில், பார்ப்பனப் பிடியிலிருந்து வெளியேறி சாணார் (நாடார்) சாதியினருக்கான புதிய வழிபாட்டுமுறையை ஐயா வைகுந்தர் என்பார் உருவாக்கினார். இன்றளவும் அவ்வழிபாட்டினர் குமரியில் வாழ்ந்து வருகிறார்கள். ஐயா வைகுந்தர் வழிபாடு குறித்தும், அக்காலத்தின் சாதியக் கொடுமைகள் குறித்தும் மாநாட்டில் திரு. சுயம்பு (வயது 50) எடுத்துரைத்தார்.

“ஐயா வைகுந்தர் வாழ்ந்த காலத்தில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. அரசன் பதினெட்டு வகைச் சாதிகளாக மக்களைப் பிரித்து வைத்து ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவற்றில் நாடார் சாதியினரைப் பதினெட்டாம் சாதியாக வைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.

அம்மக்கள் கோவில் தெருக்களில் செல்வதற்கும், உயர்சாதியினரின் தெருக்களில் செல்லவும், குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், குளிக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் திருமணங்களில் தாலி கட்டுவதற்குக் கூட வரி விதிக்கப்பட்டது. பசுக்கள், மண்வெட்டிகள், அரிவாள்களுக்கும் கூட வரி விதிக்கப்பட்டது. பனைத் தொழில் செய்பவர்கள் பனை மரத்திற்கும் கூட வரி செலுத்த வேண்டும் என்ற பெயரில் கொத்தடிமைகளாகக் கூலியின்றி வேலை செய்ய வேண்டும். சாணார் மக்கள் தீண்டத்தகாதவர்களென்றும் தள்ளி வைக்கப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிவதற்கும், தெய்வத்தை வழிபடுவதற்கும் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை” என எழுதியுள்ளனர். இக்கொடுமைகளைக் கண்டதனால் தான் விவேகானந்தர் குமரிக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” எனக் குறிப்பிட்டார்.

இவற்றால் வெகுண்ட ஐயா வைகுந்தர் கொடுமைகளுக்கு ஆளான மக்களிடம், “மார்பில் ஆடையணியுங்கள். முட்டுக்குக் கீழ் துணி கட்டுங்கள். தங்கத்தில் தாலி கட்டுங்கள். இடுப்பில் குடம் வைத்துத் தண்ணீர் எடுங்கள். கோவில்களை நீங்களே கருவறையில் சென்று பூசை செய்யுங்கள், வணங்குங்கள்” என்றார். இதனைத் தொடர்ந்து மேலாடை அணிந்ததற்காகக் கர்ப்பிணிப் பெண்ணை ஏரில் கட்டி வைத்து அடித்தக் கொன்றனர். சிலரைச் சுடுமணலில் நாள் முழுவதும் நிற்க வைத்தார்கள் மேலாடை அணிந்த பெண்களின் மார்புகளை வெட்டினார்கள்.

இவ்வகையில், மன்னரையே எதிர்த்து, மக்களை ஒன்று சேர்த்து மன்னரிட்ட சட்டதிட்டங்களையெல்லாம் மிதித்து மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சி ஏற்பட வழிவகுத்துக் கொடுத்தார் ஐயா வைகுந்தர். அவர் மக்களோடு இணைந்து வாழ்ந்தார். மன்னரின் படைகள் அவரைக் கைது செய்ய முற்பட்ட பொழுது, மக்களனைவரும் மன்னரின் படைகளை எதிர்த்து வீரப்போரிட்டனர்.
172 ஆண்டுகளுக்கு முன்பே, கருவறையில் சென்று வழிபடும் நிலையை ஐயா வைகுந்தர் ஏற்படுத்தினார். எங்கள் வீட்டுச் சடங்குகளில் பார்ப்பனர்களை அனுமதியாமல் நாங்களே நடத்திக் கொள்கிறோம். தமிழிலேயே வழிபாடு செய்கிறோம். இன்றளவும் ஐயா வைகுந்தரை மக்கள் தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள்.”

------------------------------------------------------------------------

மனுதருமக் கொடுங்கோன்மை எங்கே என்போரே – இதோ இங்கே…

“மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி…”

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமைகளையும், சாணார் சாதியினர் (நாடார்கள்) எவ்வாறு ஒடுக்கப்பட்டனர் என்பதையும், இன்று தங்களுடைய ஒடுக்கப்பட்ட வரலாற்றை மறந்து ஆதிக்கச் சாதியினராக சாதியக் கொடுமைகளை நிகழ்ந்தும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் குறித்தும் வழக்குரைஞர் இலஜபதிராய் எடுத்துரைத்தார்:

“இராமன் சீதையைக் கரம் பிடித்த கதையையும், மகாபாரதக் கட்டுக்கதைகளையும், பகவத்கீதையின் பிதற்றல்களையும் அறிந்திருக்கும் நம் மக்கள், முத்துக்குட்டி என்றழைக்கப்பட்ட சமூகப் போராளியின் போராட்டங்கள் குறித்தோ அல்லது நமது சகோதரிகள் மேலாடை (மாராப்பு) அணியக் கூடாத அனுமதிக்கப்படாத அவலங்கள் குறித்தோ அறியாமலிருப்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.

1754-ல் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இத்தலைஇறையைக் கட்ட முடியாமல் பலரும் வாழ வழி தேடி திருநெல்வேலிக்குத் தப்பியோடினர். 1807-ல் மட்டும் ஈழவர், நாடார், சாம்பவர் சாதி மக்களிடம் ‘தலைஇறை’யாக வசூலிக்கப்பட்ட தொலை 88,000 ரூபாய். இவ்வரி வசூலிப்பு, ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த கைப்பிடியுள்ள குடைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி எனப் பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இப்பார்ப்பனியக் கொடுங்கோன்மையை எதிர்த்த முத்துக் குட்டி என்பவர், தமது ‘அகிலத் திரட்டு’ எனும் நூலில் அன்று நடைமுறையிலிருந்த பல்வேறு வரிகளைப் பதிவு செய்கிறார். “தாலிக்கு ஆயம்; சருகு முதல் ஆயம்; கம்புத் தடிக்கு ஆயம்; தாளமேறும் சான்றோருக்கு ஆயம்; அரிவாள் தூர்வெட்டிக்கு ஆயம்; வட்டிக்கு ஆயம்; வலங்கை சென்றோர் கருப்புக் கட்டிக்கும் ஆயம் வைத்தானே கருநீசன்” என்று குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட சாதிக்கொடுமைகள் நடைபெற்ற பொழுது, இந்துமத மடாதிபதிகளோ சைவ மடாதிபதிகளோ, சங்கராச்சாரிகளோ அச்சாதிக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.

1937 வரையிலும் கூட ஒடுக்கப்பட்ட சாதியினர் “தமது வீட்டுக் கதவுகளை” குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வைக்கக்கூடாது; அவர்கள் வீட்டில் செம்புப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது; வீடுகளில் பசுமாடுகள் வளர்க்கக் கூடாது; நிலம் வைத்திருக்கக் கூடாது” போன்ற கடுமையான விதிகள் அமுலாக்கப்பட்டன. இன்றும் நமது சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றங்கள் மூலமாகவும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ நடைமுறைப்படுத்தப்பட்டுத்தான் வருகின்றன.

ஒடுக்கப்பட்ட சாதியினர் செல்லப் பெயர்களைச் சூட்டிக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டனர்; ‘சோறு’ என்பதற்குப் பதிலாக ‘கஞ்சி’ என்றே சொல்ல வேண்டுமென்றும், தமது வீடுகளை ‘குடிசை’ என்றே அழைக்க வேண்டுமென்றும் இழிவுபடுத்தப்பட்டனர். குமரி மாவட்டத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்டனர். “அந்நடைமுறை நீடித்திருந்தால் நல்லதுதான். இன்று குமரி சுற்றுலா மையமாக மாறியிருக்கும்” என்று உயர்சாதி இளைஞனொருவன் வக்கிரமாகக் குறிப்பிடுகின்றான்.

1993-ல் அப்பாபாலு – இங்க்ளே எனும் வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கே.ராமசாமி என்பவர் வேதனையோடு குறிப்பிட்டதைப் போல, ‘இன்னும் இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக வன்கொடுமைச் சட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த அரசியலமைப்புச் சட்டம் பெயரளவில்தான் உள்ளது.’

“பசு புனிதமானதென்றும், இந்துக்கள் பசு மாமிசம் உண்ண மாட்டார்கள்” என்றும் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், குமரி மாவட்டத்திலுள்ள 60,000 பார்ப்பனர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் பசுமாமிசம் உண்பவர்கள்தான். அம்மக்களை இன்று ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தந்திரமாகத் தங்கள் பின்னால் அணிதிரட்டி வருகிறார்கள். ஆணாதிக்கக் கொடுங்கோலன் ராமனுக்கு, தன் மனைவி சீதையைச் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்யத் தூண்டிய ராமனுக்குக் கோவில் கட்ட முற்படுகிறார்கள்.

1746-ல் மார்த்தாண்ட வர்மா எனும் திருவனந்தபுரத்து மன்னன் தனது அரண்மனையைக் கட்டும் பொழுது, அரண்மனையின் பலத்துக்காக வேணி ஈழவர், நாடார், முக்குலர் சாதிகளைச் சேர்ந்த 15 குழந்தைகளைப் பலி கொடுத்தான். அத்திருவனந்தபுரம் அரண்மனை மட்டுமன்றி, நம்முடைய ஒட்டுமொத்த அரசியலமைப்புச் சட்டமும் கூட ஒடுக்கப்பட்ட சாதிகளின் பலிபீடங்களின் மேல்தான் நிறுவப்பட்டுள்ளது.”

நன்றி:
______________________________
புதிய கலாச்சாரம், மார்ச் 2003

Wednesday, September 03, 2014

பாரத் மாதா கீ.... ஜே - ஆர்எஸ்எஸ் வெறியாட்டம்!





கேரள மாநிலம் கதிரூர் என்ற இடத்தில் நேற்று முன் தினம் ஆர்.எஸ்.எஸ் உள்ளூர் நிர்வாகி தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்.எஸ்.எஸ் அழைப்பு விடுத்த முழு அடைப்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் அரங்கேறின. கந்து வட்டி பிரச்னை, பெண் பிரச்னை, ரியல் எஸ்டேட் அடிதடி என்று எதுவாக இருந்தாலும் அவர் இந்துத்வாவாதியாக இருந்தால் அதற்கு மதசாயம் பூசப்பட்டு மகான் ஆக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆர்எஸ்எஸ் அழைப்பு விடுத்திருந்த இன்றைய பந்தில் கேரள மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகளை வன்முறையாளர்கள் சேதப்படுத்தினர். தொடுபுழா என்ற இடத்தில் சந்தைப் பகுதியில் திறந்திருந்த கடைகளை ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க்பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கினர். புனலூரில் ஹோட்டல் ஒன்றை அடித்து உடைத்தனர். இதுத்தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். ஹரிப்பாடு என்ற இடத்தில் 2 லாரிகள் தாக்கப்பட்டன. எர்ணாகுளம் தெற்கு ரெயில்வே நிலையம் அருகே வாகனங்கள் மீது கல்வீச்சு நடந்தது.

ஓணம் பண்டிகைக்காக ஒரு லோடு பழங்கள் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டது. ஹர்த்தால் அனுசரித்து வந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அங்கு இறக்கப்பட்ட ஒரு லோடு வாழைப்பழங்களை ரோட்டில் வீசி எறிந்து அனைத்தையும் மிதித்து அழித்தனர். கடையின் உரிமையாளரான யூனுஸ் காசிமையும் அனைவரும் சேர்ந்து தாக்கினர். மீன் மார்க்கெட்டில் மீன் விற்கும் கடைகளையும் உடைத்து நாசப்படுத்தினர். இவை அனைத்தையும் செய்து விட்டு 'பாதர் மாதா கீ... ஜே!' என்று கோஷம் போடவும் தவறவில்லை.

இந்த காட்டுமிராண்டி கும்பல்தான் இந்து மதத்தை காப்பாற்ற போகிறாம். இந்த வருட ஓணம் பண்டிகையில் பழங்களின் விலை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பாதிப்படைவது இந்துக்களே! இந்த காட்டுமிராண்டி கும்பலிடம் உள்ள மூர்க்கத்தனத்தைப் பாருங்கள். பார்வையில் ஒரு வெறி. எதையும் அழித்தே பழக்கப்பட்டதல்லவா இந்த கும்பல். மனித உயிர்கள் கிடைக்கவில்லை என்றால் அந்த வேகத்தை காய்கறிகளிடம் காட்டுவார்கள் இந்த காட்டு மிராண்டிகள். தேசபக்தி என்பது இவர்கள் போடும் பகல் வேஷம். இந்த காட்டுமிராண்டி கும்பலின் பின்னால் அணி வகுக்கும் அப்பாவி இந்துக்களுக்கு உண்மையை விளக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். நமது நாட்டு நலனில் அக்கறை உள்ள ஒவ்வொரு இந்தியனும் இந்த காவிக் கும்பல்களின் அயோக்கியத்தனத்தை அனைத்து மக்களிடமும் எடுத்துச் செல்ல வேண்டும்.

இறைவா! எனது தாய் நாட்டை இந்த காவி கயவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக!