ஆனால் கடந்த இருபது இருபத்தைந்து வருடங்களாக மேற்கொண்ட அயராத பிரசாரத்தின் பலனாக இன்று பட்டி தொட்டிகளெல்லாம் குர்ஆன் ஹதீஸின்படி தங்களின் வாழ்க்கையை மாற்றிக் கொண்ட பல கிராமங்களை நம்மால் பார்க்க முடிகிறது. பல இளைஞர்கள் 'வரதட்சணை பெண்ணிடம வாங்கினால் நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்' என்று பெற்றோர்களிடம் வம்பு பண்ணிக் கொண்டிருப்பதை நாம காண்கிறோம். முன்பு அறியாத நாட்களில் வாங்கிய வரதட்சணையை பெண்ணின் தகப்பனிடம் திரும்ப கொடுத்த பல நிகழ்வுகளை நாம் பல ஊர்களில் பார்க்கிறோம். தர்ஹா கொடியேற்றத்தில் கூட்டங்களை காணவில்லை. பள்ளிப் படிப்புகளை பாதியிலேயே விட்ட பல மாணவர்கள் இன்று படிப்பின் அருமை உணர்ந்து மற்ற இன மாணவர்களோடு போட்டி போடும் நிகழ்வுகளை ஆங்காங்கே பார்க்கிறோம். எங்கள் ஊரில் இன்று வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவானதை ஆச்சரியத்தோடு பார்க்கிறேன். இருந்த சினிமா ரசிகர் மன்றங்களெல்லாம் நற்பணி மன்றங்களாக மாற்றப்பட்டு உள்ளது. ஆறாவது ஏழாவதோடு பள்ளிப் படிப்பை முடித்த பெண்மணிகள் இன்று காலேஜ் செல்ல பஸ்ஸீக்காக காலையிலேயே வீட்டு வாசலில் காத்திருக்கும் அழகை இன்று எங்கும் பார்க்கலாம்.
இதனை பிடிக்காத சிலர் இவற்றுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட ஆரம்பித்தனர். இது போன்ற சீர்திருத்தங்களை எல்லாம் செய்தால் பள்ளியில் அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு சில செல்வந்தர்கள் மிரட்ட ஆரம்பித்தனர். உடனே ஒரு இளைஞன் தனது பெயரில் உள்ள பல லட்சம் பெறுமானமுள்ள ஒரு மனையை பொதுவாக்கி 'அங்கு புதிதாக பள்ளி கட்டி கொள்ளுங்கள்' என்று கொடுத்த அழகை என்னவென்பது. சிங்கப்பூரில் பைலட்டாக வேலை செய்யும் ஒரு இளைஞர் சில கோடிகள் பெறுமானமுள்ள தனது பூர்வீக வீட்டை முதியோர் இல்லமாக மாற்றி ஊருக்கு பொதுவாக்கி தவ்ஹீத் ஜமாத்துக்கு அளித்த ஈகை குணத்தை என்னவென்பது. இவை எல்லாம் சமீப காலங்களில் நடந்த ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள். இத்தகைய பரந்த மனப்பான்மையை உண்டாக்கியது எது?
'இறைவனின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு பின்னர் செலவிட்டதை சொல்லிக் காட்டாமலும் தொல்லைத் தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.
-குர்ஆன் 2:262
'தமது செல்வங்களை இறைவனின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு இறைவன் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். இறைவன் தாராளமானவன்: அறிந்தவன்:'
-குர்ஆன் 2:261
மேற்கண்ட இது போன்ற இறைவனின் வசனங்கள் அந்த இளைஞர்களின் மனதில் ஆழமாக வேரூன்றியதாலேயே இவை எல்லாம் சாத்தியப்படுகிறது. இந்த மாற்றங்கள் எங்கள் ஊரில் மட்டும் அல்ல: தமிழகம் முழுவதும் ஏறத்தாழ இந்த நிலைதான்.
திருத்துறைப் பூண்டியை ஒட்டிய ஒரு குக்கிராமத்தில் சமீப காலங்களில் ஏற்பட்ட மாற்றங்களை இனி இந்த காணொளியில் காண்போம்.
--------------------------------------------------------------

பரங்கிப்பேட்டையில் கொடிகட்டி பறந்த “கண்டெடுத்த தர்கா கொடியேற்றம் ஊர்வலம்” இந்த வருடம் 28.10.2011 அன்று நடைப்பெற்றது. மக்களின் எந்தவித ஆதரவின்றியும், ஆராவரம்யின்றியும் குதிரை மேல் கொடி வைத்து செல்லும் தர்காவை சேர்ந்த ஒரு நபரும், குதிரை ஒட்டுபவர் ஆகிய இருவரும் மற்றும் ஆட்டோவில் ஒரு சிறுவன் மட்டும் என்று ஊர்வலம் போனதை காண முடிந்தது.
முன்பு எல்லாம் குதிரை மேல் கொடியை வைத்து பிடிக்க பலர், மிகப்பெரிய கூட்டம், ஊர்வலம் முன்பு கையில் கொடியேந்தி சிறுவர் பட்டாளம் செல்ல அதனை தொடர்ந்து தப்ஸ் குழு (பேண்டு வாத்தியம்) முழங்க சினிமா பாடலின் மெட்டுகளில் இஸ்லாமிய(?) பாடல்கள் என்று வெகு விமர்சையாக நடைப்பெற்ற இந்த கொடி ஊர்வலம்…!
இன்று மக்களின் ஆதரவின்றி பார்க்கும் போதும், ஒரு காலத்தில் 365 வலிமார்கள் அடங்கிய தர்கா உள்ள ஊர் என்றும் கூறுவார்கள். ஆனால் இன்று ஒரு சில தர்காக்களை தவிர மற்றவை எங்குயுள்ளது என்று தெரியாத நிலை. இவைகளின் மூலம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பரங்கிப்பேட்டையில் தவ்ஹீத்தின் (ஏகத்துவ) எழுச்சியும், வளர்ச்சியும் காணமுடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இது போன்ற இஸ்லாமிய அடிப்படை கோட்பாட்டை தகர்க்கும் அல்லாஹ்விற்கு இனை வைக்கும் ஷிர்க் என்னும் பெரும் பாவத்திற்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தின் விளைவு இன்று பெரும்பலான மக்களை தர்கா என்னும் அல்லாஹ்விற்கு இனை வைக்கும் வழிகேட்டிலிருந்து மக்களை மீள வைத்திருக்கு என்றால் அது மிகையாகது.
எல்லாம் புகழும் அகிலத்தை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!
செய்தி: முஹம்மது இஸ்மாயில்
www.tntj.net
டிஸ்கி: துல்ஹஜ் ஒன்பதாம் நாள் ஹஜ்ஜூக்கு வராத முஸ்லிம்களை நோன்பு வைக்க சொல்லி நபிகள் நாயகம் அறிவுறுத்தியிருக்கிறார்கள். எனவே சகோதரர்கள் மறக்காமல் நோன்பு வைக்க இப்பதிவின் மூலம் நினைவுபடுத்துகிறேன்.
டெல்லியில் உள்ள ஏஜண்டுகள் கடைசி நேரத்தில் செய்த குளறுபடியால் எனது தாயார் இந்த வருடம் ஹஜ் பயணம் செய்யமுடியாது போய்விட்டது. இறைவன் நாடினால் அடுத்த வருடம் இனிதே முடிப்பார்கள். இதனால் நான் மெக்கா செல்லவில்லை. மெக்காவில் உள்ள நண்பர்களுக்கு இதன் மூலம் அறியத் தருகிறேன். இறைவன் நாடினால் அடுத்த வருடம் சந்திப்போம்.