Followers

Sunday, June 20, 2021

இன்று தந்தையர் தினமாம்!

 

இன்று தந்தையர் தினமாம்!

 

எனது தந்தையின் இளமைக்கால புகைப்படம்....

 

எனக்கு வாய்த்த தந்தை ஒரு வித்தியாசமானவர். எந்த கண்டிப்பும் என்னிடம் காட்டியதில்லை. ஒரு முறை 'வா சினிமாவுக்குப் போவோம்' என்று தங்கப்பதக்கம் படம் பார்க்க கும்பகோணம் கற்பகம் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். அப்போது அந்த படம் ரிலீஸ்.  'ஒரு தந்தையும் மகனும் சேர்ந்து பார்க்க வேண்டிய படம்' என்பார்.

 

எனது தந்தை நல்ல இசைப் பிரியர். 'ஆராதனா' படம் ரிலீஸ் ஆனபோது அதன் கிராம போன் தட்டு எங்கள் வீட்டில் தினமும் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறு வயதிலேயே எனக்கு மனனம்.

 

20 வயதில் இஸ்லாமிய மார்க்க பற்றால் தாடி வைத்திருந்தேன். 'இப்போவே கிழவன் வேஷம் போடாதே! தினமும் ஷேவ் செய்து விட்டு ட்ரிம்மாக வயசு பசங்கள் போல இரு' என்று சொல்வார். தஞ்சை செயின்ட் ஆண்டனியில் எனது தகப்பனாரை படிப்புக்காக சேர்த்து விட்டார் தாத்தா. இரண்டு வருடம் படித்து விட்டு அங்கும் ஏதோ பிரச்னை பண்ணி விட்டு வந்து விட்டார். பிறகு பாபநாசம் அரசு மேல் நிலைப் பள்ளியில் படிப்பை தொடர்ந்தார்.

 

எங்கள் குடும்பத்தில் ஏழை உறவினர்களை தேடிச் சென்று உதவுவார். எனது தாத்தாவுக்குத் தெரியாமல் இந்த உதவிகள் நடக்கும். அவர் அன்று காலத்தினால் செய்த உதவிகளை இன்றும் எங்கள் உறவினர்கள் சொல்லி பெருமை படுத்துவர் எனது தந்தையை.

 

சந்நியாசிகள் வாரம் ஒரு முறை எங்கள் தெரு வழியாக செல்வார்கள். அவர்களுக்கு ஒரு ரூபாய் நாணயம் மாற்றி வைத்து வரிசையாக கொடுத்துக் கொண்டிருப்பார். திண்ணையில் அமர்ந்து கொண்டு வழியில் போகும் சேரி மக்களை கூப்பிட்டு எதிரே அமர வைத்து வெற்றிலை பாக்கு எல்லாம் கொடுத்து மகிழ்வார். நான் தொழுகைக்காக பள்ளிக்குச் செல்ல திண்ணையை கடக்கும் போது அந்த மக்கள் மரியாதைக்காக எழுந்திருப்பர். 'உன் வயசென்ன? என் மகனின் வயசென்ன? எதற்கு எழுந்திருக்கிறே? உட்காருப்பா?' என்று அவர்களை மிரட்டி உட்கார வைப்பார். சமத்துவம் பேணுகிறாராம். நானும் சிரித்துக் கொண்டே சென்று விடுவேன்.

 

தற்போது எனது தந்தை இல்லை.  அவருக்கு நன்மைகள் சேரும் விதமாக என்னால் ஆன சிறு சிறு உதவிகளை அவர் பெயரில் செய்து வருகிறேன். அவரின் பாவங்களை மன்னித்து நன்மைகளை அதிகமாக்கி இறைவன் அவருக்கு சுவனத்தை தருவானாக!




No comments: