Followers

Monday, August 10, 2015

சவுதி ஏர்லைன்ஸில் கிடைத்த மன மகிழ்ச்சிகள்!





நான்கு மாத தாய் தமிழக விடுப்புக்குப் பின் சவுதி வருவதற்காக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை அடைந்தேன். இளைய மகனிடம் விமான நிலையத்தில் விடைபெற்றுக் கொண்டு சவுதி அரேபியன் ஏர்லைன்ஸில் சென்று அமர்ந்தேன். எனக்கு பக்கத்து சீட்டில் ஒரு சகோதரர் வந்து அமர்ந்தார். நலம் விசாரிப்புக்குப் பிறகு ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். என்னைப் பற்றி நான் சொல்லும் போது இணையத்தில் 'சுவனப்பிரியன்' என்ற புனைப் பெயரிலும் அவ்வப்போது எழுதி வருகிறேன் என்று சொன்னவுடன் 'அடடே.... நீங்கள் தான் சுவனப்பிரியனா? உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று பல நாட்களாக முயற்சி செய்து வருகிறேன். இறைவன் இன்று உங்களை எனக்கு பக்கத்திலேயே உட்கார வைத்து விட்டான்' என்று தொடர்ந்து பேச ஆரம்பித்தார். நாகூரை சொந்த ஊராகக் கொண்ட சகோதரர் இத்ரீஸ் அவர்கள் என்பதை பிறகுதான் தெரிந்து கொண்டேன். பல முறை இணையத்தின் மூலம் பேசிக் கொண்டாலும் இன்று தான் முதன் முதலாக அவரை நேரில் சந்தித்தேன்.

தனது ஊரான நாகூரில் தற்போது ஏகத்துவ சிந்தனை எந்த அளவு வந்துள்ளது என்பதை விரிவாக எடுத்துச் சொன்னார். தனது மகனின் எதிர்கால படிப்புக்காக சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்க எந்த அளவு சிரமப்பட்டார் என்பதையும் ஆர்வமுடன் சொல்லிக் கொண்டு வந்தார். ஒட்டு மொத்த தமிழக இஸ்லாமிய சமூகத்தில் படிப்பின் மீது உள்ள ஆர்வத்தை சகோதரர் இத்ரீஸ் அவர்களின் பேச்சு எனக்கு உணர்த்தியது.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே பகல் நேரத் தொழுகையான லுஹரின் நேரம் வரவே இருவரும் தொழுகைக்கு தயாரானோம். பிரயாணத்தில் பகல் நேர மற்றும் மாலை நேர தொழுகைகளை சேர்த்து தொழுது கொள்ள அனுமதி இருப்பதால் இரண்டு தொழுகைகளையும் சேர்த்து தொழுது கொண்டோம்.

ஏர் லங்கா மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் அருகில் அமர்ந்திருப்பவர்களிடமிருந்து மதுவின் நெடி குடலை பிரட்டும். பலமுறை இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டுள்ளது. நமது நாட்டு விமானத்தில் பயணிக்கவே ஆசை அதிகம். ஆனால் மதுவின் பிரச்னையால் நமது நாட்டு விமானங்களை கூடிய வரை தவிர்த்து விடுவேன்.

சவுதி ஏர்லைன்ஸில் ஒரு சிறப்பம்சம் பிராயண பிரார்த்தனையோடு 'அல்லாஹூ அக்பர்... இறைவன் பெரியவன்' என்ற முழக்கத்தோடு விமானத்தை எடுப்பர். அடுத்து நாம் தொழுது கொள்வதற்கு என்றே பிரத்யேகமாக இடத்தையும் ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். அங்கு விமானத்தின் உள் சகோதரர் ஒருவர் தொழுவதைத்தான் பார்க்கிறோம். இதற்காக ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ள சவுதி ஏர்லைன்ஸ் நிர்வாகத்தை பாராட்டுவோம். சவுதி ஏர் லைன்ஸை பின் பற்றி மற்ற விமான சேவை நிறுவனங்களும் தங்கள் விமானத்திலும் மதுவை முற்றாக தவிர்ப்பார்களாக! தொழுவதற்காக பிரத்யேக இடங்களையும் ஏற்படுத்தித் தருவார்களாக!

Sunday, August 09, 2015

திருவள்ளுவர் நாத்திகரா? ஆத்திகரா? இந்துவா? இஸ்லாமியரா?

ஒரு வடமாநிலத்துக்காரர் ஹிந்தியைத் தாய்மொழியாகக்கொண்டிருப்பவரான தருண் விஜய் ஒரு பி ஜே பி எம் பி. ஆர் எஸ் எஸ் பத்திரிக்கையான அபசர்வை பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர். இவர் தமிழைப்படித்திருக்கிறார். எல்லாரிடமும் வள்ளுவர் இந்து என்றும் தமிழரின் தாய்மதம் இந்துவே என்றும் பரப்புரை செய்து வருகிறார்.இராஜ இராஜ சோழன் வைதீகமதத்தை தழைக்கச்செய்தவன் என்று ஆர் எஸ் எஸ்காரர்கள் விழா எடுக்கிறார்கள்.

எனவே வள்ளுவர் இந்து என்று நிலைநாட்டுவது இன்றைய இந்துத்வாக் கொள்கையாகும். எனவே ஓர் அரிசோனன், இராமா பாண்டியன் போன்றோர் வள்ளுவரை ஓரிறைக்கொள்கையுடையோராக காட்டினால் இசுலாமியர் போலிருக்கிறதே என்று பயப்படுகிறார்கள். தமிழர்களில் இந்துக்களுக்கே அதுவும் வைதீக இந்துக்களுக்கே வள்ளுவர் என்பதே இவர்கள் கொள்கை.

பாவம் வள்ளுவரின் நிலைமை அரசியல் பகடைகாயாகிவிட்டது....


தமிழன் எதையும் செய்து சிரிப்பு மூட்டட்டும். மாலை போடட்டும் இல்லை மாலையை எடுக்கட்டும்.

ஆனால் வள்ளுவரை ஏன் வடவனுக்கு கொடுத்து இந்துத்வா சிறைக்கூண்டில் அடைக்க வேண்டும். நாளை இந்து என்று மட்டும் சொல்லி நிற்கமாட்டான் அவன். நாங்கதான் தமிழனுக்கு எல்லாமே சொல்லித்தந்தோம். கூமுட்டைப்பயலுக என்றால் சிரிக்கலாமே! இந்துத்வாவுக்கு மானத்தை இழக்கக்கூடாது. என்னவென்றாலும் இங்கேயே அடித்துக்கொள்ளுங்கள்.ஒன்றும் குடிமுழுகாது. ஆனால், மூன்றாம் நபரை உள்ளே விடாதீர்கள். வள்ளுவர் உங்கள் சொத்து. மற்றவனுக்குக் கோட்டை விடாதீர்கள். இன்றைக்கு வள்ளூவர் இந்து என்பான். நாளை அவர் ஹிந்திக்காரர் என்பான். போதுமா?


No he is not an atheist. அவர் நாத்திகரென்று சொல்ல அவர் கடவுள் மறுப்பு என்று எதையும் எழுதவில்லை.அவர் என்னைப்போல என்று நான் நினைக்கிறேன். அதாவது கடவுள் நம்பிக்கை உடைய நாங்கள், கடவுள் பெயரால் அரங்கேறும் அயோக்கியத்தனங்களை எதிர்க்கிறோம். மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் என்கிறோம். மததத்தைக்காட்டி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் சண்டாளர்களைக்கண்டு கொதிக்கிறோம். இந்தசண்டாளர்களை வளரவிட்டு உழைப்போரின் உணவைப்பறிக்கும் கூட்டத்தை ஒன்று செய்யாமல் இருக்கிறாயா என்று இறைவனுக்கே சாபம் விடுகிறோம். இப்படி மக்களை அலையவிட்ட நீயும் அலைந்து கெடுவாய என்று இறைவனைப்பழிக்கிறோம் (இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.)

மக்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர் தீண்ட்படாதார் என்று பிறப்பிலேயே எல்லாம் இருக்கிறது. அதைச்செய்தவன் ஆண்டவன் என்று ஊத்தக்கதை விட்டு ஊரை ஏமாற்றுவோரைப்பார்த்து. பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால் என்கிறோம். மனந்ந்தூயமை செயல் தூய்மையிருந்தால் போதும் இறைவன் வேறெதையும் விரும்புவதில்லை என்று மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல் நீர பெற என்கிறோம். அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்று டுபாக்கூர் ஆசாமிகளை எச்சரிக்கிறோம் ;அதே சமயம், இறைவன் உண்டு. கற்றதாலாய பயன் அவனின் திருவடி தொழுதலே என்கிறோம்.

ஆக, வள்ளுவர் ஒரு கடவுள் நம்பிக்கையாளர். ஆனால் அந்நம்பிக்கை மக்களுக்குப் பலனைத் தரவேண்டுமென்று நம்புகிறவர். மக்களுக்கு நன்மையில் என்றால் அவ்விறை நம்பிக்கை தேவையில்லை.

-BS

Tuesday, August 04, 2015

டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு! வெட்கக்கேடு!





உலகிலேயே தனது சொந்த மக்களை குடிகாரர்களாக்கி அழகு பார்க்கும் அரசை நாம் பார்க்க முடியாது. ஆனால் நமது தமிழகத்தில் அரசே சாராயத்தை விற்பதும் அதனை தடுப்பவர்களை காவல் துறையை ஏவி விட்டு அடித்து விரட்டுவதும் இந்த ஆட்சி தனக்குத் தானே குழி பறித்துக் கொள்கிறதோ என்று எண்ண வேண்டியதாய் இருக்கிறது.

எனது வீட்டில் டிவி இல்லை: கிரைண்டர் இல்லை என்று எவனாவது போராடினானா? எதற்கு இந்த இலவசங்கள்? ஓடாத டிவியும் ஓடாத கிரைண்டரும் யாருக்கு தேவை? ஒரு வீட்டின் தலைமகனை குடியால் அழித்து விட்டு அந்த வீட்டுக்கு டிவியும் கிரைண்டரும் போய் என்ன பயன்? இலவச திட்டங்களால் பலனடைந்து வருவது அதிகம் கட்சிக் காரர்கள்தானே? சாராய ஆலைகளால் லாபம் பார்ப்பது மிடாஸ் ஆலை தானே? அது யாருக்கு சொந்தமானது? அந்த ஆலையின் பங்குதாரர்கள் கோடி கோடியாக லாபம் பார்க்க தமிழனின் ரத்தம் தான் கிடைத்ததா? பெண்கள், கல்லூரி மாணவர்கள் என்று எங்கு பார்த்தாலும் சாராய நெடி. பேரூந்தில் பயணித்தால் காலையிலேயே சாராயத்தை ஊற்றிக் கொண்டு அருகில் வந்து அமர்ந்து கொண்டு நம்மோடு பேசவும் செய்கிறான். ஏதாவது சொன்னால் தகராறு. ஒரு தலைமுறையே இன்று குடிக்கு அடிமையாகி உள்ளது. இவர்களை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கே இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம்.

வருகின்ற தலைமுறைகளையாவது நாம் காப்பாற்றியாக வேண்டும். தற்போது அதற்கான சிறு பொறி தூவப்பட்டுள்ளது. ஆங்காங்கே சாராய கடைகள் அடித்து நொறுக்கப்படுவதாக செய்திகள் வருவது மகிழ்ச்சியே. அதோடு ஊற்றுக் கண்ணாக விளங்கும் சாராய ஆலைகளை உற்பத்தி பெருக்க விடாமல் கூடிய வரை முயற்சிக்க வேண்டும். சாதி, மதம், கட்சி எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு நாம் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சியாளர்கள் தங்களின் தவறை உணருவார்கள். நீங்கள் என்ன போராட்டம் நடத்தினாலும் எனக்கு சாராய வருமானம் வேண்டும் என்று இந்த அரசு சொல்லுமானால் அடுத்த முதல்வராக ஸ்டாலின் அமருவதற்கு ஜெயலலிதாவே காரணமாகி விடுவார்.


Sunday, August 02, 2015

ஆடுதுறை மற்றும் மன்னார்குடியில் எதிர்ப்பை மீறி உடல் அடக்கம்!



ஆடுதுறை சம்பவத்தைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சுன்னத் ஜமாத் என்ற பெயரில் மார்க்கம் அறியாத மூடர்கள் நபி வழியில் இறந்த உடலை அடக்கம் செய்ய மறுத்தனர். இதற்கு காவல் துறையும் துணை போனது.

இந்த அடாவடித்தனத்தைக் கண்டு பொறுக்காத தவ்ஹீத் ஜமாத்தினர் தடையை மீறி உடலை அடக்கம் செய்தனர். ஆடுதுறையிலும் இதே போன்று தடையை மீறி இறந்த உடலை அடக்கம் செய்துள்ளனர். இனி மேல் எதிர்ப்பு தெரிவித்தால் இதே போன்று தடையை மீறி உடலை அடக்கம் செய்ய தமிழகம் முழுவதும் தவ்ஹீத் வாதிகள் தயாராக வேண்டும்.

இதே போன்று சென்ற ரமலானில் பண்டாரவாடையில் இறந்த உடலை அடக்கம் செய்ய ஒரு கூட்டம் மறுத்தது. பள்ளி வாசலின் உள்ளே ஒரு இளைஞன் சரியான குடி போதையில் இடையிடேயே வெளியே வந்து 'உயிரே போனாலும் உடலை அடக்க விட மாட்டோம்' என்று வெறித் தனமாக கத்தி விட்டு சென்றான். காவலுக்கு நின்ற போலீஸ்காரர் ஒருவர் 'எங்கள் கோவிலில் தான் இது போன்று சாராயத்தை குடித்து விட்டு அலம்பல் செய்வார்கள். உங்கள் பள்ளி வாசலில் இவ்வாறு ஒருவன் குடித்து விட்டு கத்திக் கொண்டு நிற்பதை முதல் முறையாக பார்க்கிறேன்' என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

பண்டாரவாடையில் இவ்வாறு பிரச்னை நடந்து கொண்டிருந்தபோது மாலை நேரத் தொழுகைக்கும் இரவு நேரத் தொழுகைக்கும் பாங்கு கொடுக்கப்பட்டது. பாங்கு கொடுத்தவுடன் சுன்னத் ஜமாத் பெரிய பள்ளியின் உள்ளே 'உடலை அடக்கக் கூடாது' என்று கோஷமிட்ட ஒரு பெரும் கும்பல் பள்ளிக்கு வெளியே தொழாமல் வந்தது. சில அடி தூரத்தில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளியின் வெளியே கூடியிருந்த அனைத்து மக்களும் தொழ பள்ளிக்கு சென்றனர். ஆனால் தொழ பள்ளியில் இடமில்லை. இரண்டாவது ஜமாத், மூன்றாவது ஜமாத், நான்காவது ஜமாத் என்று தொழுது தங்கள் கடமையை தவ்ஹீத் இளைஞர்கள் நிறைவேற்றினர்.

பெரிய பள்ளியில் குடித்து விட்டு கும்மாளமிட்ட சுன்னத் ஜமாத் இளைஞர்களையும் ஆறு நோன்பு வைத்துக் கொண்டு கடமையான தொழுகைகளையும் நிறைவேற்றிய தவ்ஹீத் பள்ளியில் தொழுத ஏகத்துவ இளைஞர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். சாராயத்தில் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞர்களின் நேர்வழிக்காக பிரார்த்தனை செய்தேன்.

ஐந்து வேளை தொழாதவன், சாராயம் குடிப்பவன், வட்டி வாங்குபவன், விபசாரம் புரிந்தவன், பள்ளி வாசல் சொத்தை கொள்ளை அடித்தவன், அரபு நாடுகளில் வேலை செய்து கம்பெனி பணத்தை சுருட்டிக் கொண்டு வந்து ஊரில் பெரிய மனிதனாக உலா வருபவன் இவனது குடும்பத்தாருக்கெல்லாம் இறந்த உடலை அடக்கம் செய்ய எந்த வித கட்டுப்பாடுகளையும் பள்ளிவாசல் நிர்வாகம் விதிப்பதில்லை.

ஆனால் நபி சென்னபடி தனது வாழ்வை அமைத்துக் கொண்டு ஏகத்துவத்தைக் கடை பிடிக்கும் இளைஞனின் வீட்டு இறந்த உடலை இந்த பள்ளி நிர்வாகிகள் அடக்க இடம் தர மறுக்கிறார்கள். இவர்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்களை இந்த உலகிலேயே இறைவன் இழிவுபடுத்துவான். மறு உலகிலும் உலக மக்கள் முன்னிலையில் கடுமையான தண்டனையை தருவான். அந்த நாளுக்காக நாமும் பொறுத்திருப்போம்.

இராஜகிரி தவ்ஹீத் பள்ளியில் ஒரு அழகிய பயான்!



சில நாட்களுக்கு முன்பு தவ்ஹீத் ஜமாத் ராஜகிரி கிளையில் ஜூம்ஆ தொழுகைக்கு சென்றிருந்தேன். குத்பா பிரசங்கத்துக்கு வாரம் ஒரு புது முகங்கள் வருகை புரிவர். இந்த வாரம் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனையொத்த தோற்றத்தோடு ஒரு சகோதரர் பயான் செய்ய வந்திருந்தார். வழக்கமாக நாம் நீண்ட தலைப்பாகை, நீண்ட ஜிப்பா, நீண்ட தாடி போன்ற தோற்றத்தோடு மார்க்க அறிஞர்களை பார்த்து பழக்கப்பட்டுள்ளோம். நமக்கு இந்த வித்தியாசமான தோற்றத்தில் வந்திருந்தது புதிதாக பள்ளிக்கு வருபவருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும். இந்த சிறு வயதில் என்ன பேசப் போகிறாரோ என்று அலட்சியமாக அமர்ந்திருந்தேன். பேச ஆரம்பித்தவுடன்.... ஆஹா.... அருவிபோல சரளமாக அவரது பேச்சு சென்று கொண்டிருந்தது. 'ரமலானில் நாம் பெற்ற படிப்பினைகள்' என்ற தலைப்பில் அழகிய முறையில் முக்கால் மணி நேரம் மிகச் சிறந்த உரையை இந்த சகோதரர் நடத்தி முடித்தார்.


தமிழகத்தில் பள்ளி வாசல்களின் பெரும்பாலான ஜூம்ஆ உரைகளில் மக்கள் தூங்கி வழிவதைத்தான் பார்த்து வருகிறோம். குர்ஆனையும் ஹதீஸையும் வெள்ளி மேடைகளில் மக்களுக்கு சொல்லாமல் இமாம்கள் தங்களின் சொந்தக் கருத்துக்களை மத்ஹப் கிதாபுகளின் கருத்துக்களை வலிந்து திணிப்பதாலேயே இந்த நிலை. இனி வருங்காலங்களிலாவது வெள்ளி மேடைகள் குர்ஆனையும் நபி மொழிகளையும் போதிக்கட்டும். இளைஞர்களின் எதிர்காலத்தை சீராக்கும் வகையில் அமையட்டும்.