Followers

Friday, February 27, 2009

சூரியனின் செயல்பாடு ஒரு அற்புதம்! குர்ஆனின் விளக்கம்.



'இறைவன் இரவைப் பகலில் நுழைப்பதையும் பகலை இரவில் நுழைப்பதையும் சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும். இறைவன் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.'
-குர்ஆன் 31:29


இந்த வசனம் பூமியில் நடைபெறும் இரவு பகல் இயக்கம் என்பது பகலை இரவில் நுழைப்பதாலும் இரவைப் பகலில் நுழைப்பதாலும் ஏற்படுவதாகும் என்று விளக்குகிறது. இதிலிருந்து இரவு பகல் இயக்கத்தைத் தோற்றுவிப்பது புவி மையக் கோட்பாடு அல்ல என்றும் சூரிய மையக் கோட்பாட்டின் படிதான் இரவு பகல் உண்டாகிறது என்றும் ஒரு அறிவியல் அறிஞரைப் போல் குர்ஆன் பேசுகிறது.

புவி மையக் கோட்பாடு என்பது சூரியனும் மற்ற கோள்களும் பூமியை மையமாக கொண்டு சுழல்கின்றன எனும் பிழையான தத்துவமாகும். இதைத்தான் பல அறிஞர்களும் உண்மை என்றும் நம்பி வந்தார்கள். இங்கு சூரியன் பூமியைச் சுற்றுவதாக இருந்தால் இரவு எப்போதும் பகலுக்குப் பிறகு ஓடிக் கொண்டிருக்குமே அன்றி அது எங்குமே நகராமல் நிற்பதில்லை. இரவை நகராமல் நிறுத்த முடியாவிடில் அதற்குள் பகலை எவ்வாறு நுழைக்க முடியும்? அவ்வாறே பகலை நகராமல் நிறுத்த முடியாவிட்டால் பகலுக்குள் இரவை எவ்வாறு நுழைக்க முடியும்? ஒரே ஒரு வழியே உண்டு. பகலை விட இரவை விரட்டினால் பகல் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையிலேயே அதற்குள் இரவை நுழைத்து விட முடியும். அப்படிச் செய்தால் இரவானது திரும்பத் திரும்ப பகலுன்னுள் நுழையுமே அன்றி பகல் எப்போதுமே இரவுக்குள் நுழையாது. ஆனால் குர்ஆனோ பகலுக்குள் இரவு நுழைவது போல் இரவுக்குள் பகலும் நுழைவதாகக் கூறுகிறது.

எவ்வளவு துல்லியமாக சிறந்த கவனத்தோடு கையாளப்பட்ட இந்த வார்த்தைப் பிரயோகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். இப்போது சூரியன் பூமியைச் சுற்றி வருவதால் மட்டும் பகலோ இரவோ ஏதேனும் ஒன்று ஏதேனும் ஒன்றுக்குள் நுழைய முடிகிறதா? இல்லவே இல்லை. ஏன்? ஏனெனில் சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் பகலும் இரவும் ஒன்றன் பின் ஒன்றாக சம வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக சம வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் எந்த இரண்டு பொருட்களும் ஒன்றுக்குள் ஒன்று ஒரு போதும் நுழையாது. எனவே பூமி அதன் அச்சில் சுழலும்போது மட்டுமே பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இரவு பகல்கள் நகராமல் ஒரே இடத்தில் கட்டுண்டு நிற்க முடிகிறது.

பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இரவு பகல்கள் கட்டுண்டு நிற்கும்போது பூமியின் பகல் பிரதேசம் பூமியின் சுழற்ச்சியால் சுழன்று வந்து ஆகாயத்தில் கட்டுண்டு நிற்கும் இரவுக்குள் நுழைய முடிகிறது. அதைப் போல மறுபக்கம் பூமியின் மீதுள்ள இரவுப் பிரதேசம் சுழன்று வந்து ஆகாயத்தில் கட்டுண்டு நிற்கும் பகலுக்குள் நுழைய முடிகிறது.

'பகலுக்குள் நுழையும் இரவு! இரவுக்குள் நுழையும் பகல்' எவ்வளவு சிறப்பான அறிவியல் ஞானத்தை திருக் குர்ஆனின் மேற்கண்ட வசனம் மிகச் சாதாரணமாகச் சொல்லி செல்கிறது! படிப்பறிவில்லாத முகமது நபியால் இந்த உண்மைகளை எவ்வாறு சொல்ல முடிந்தது என்று நினைத்து ஆச்சரியப்பட்டுப் போகிறோம்.

நன்றி ஏ.கே.அப்துல் ரஹ்மான்.

Monday, February 23, 2009

ஆஸ்கார் அவார்டும் சில எதிர்பார்ப்புகளும்!



பலரும் எதிர்பார்த்தபடி 'ஸ்லம்டாக் மில்லினர்' மற்றும் 'பிங்கி' ஆகிய இரு இந்திய படங்களுக்கும் ஆஸ்கார் விருது கிடைத்து விட்டது. இந்தியர்கள் என்ற வகையில் அனைவரும் பெருமைப்படக் கூடிய நிகழ்வு இந்த வருட ஆஸ்கார் தெரிவு.

ஏ.ஆர்.ரஹ்மான்: திறமை இருந்தால் அங்கீகாரம் தானாக தேடி வரும் என்பதற்கு நல்ல உதாரணம் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரே நேரத்தில் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றுள்ளார். விருது வாங்கும் போது தமிழை மறக்காமல் தமிழிலேயே 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று சொன்னதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட். தாய் மொழியின் மேல் அவருக்குள்ள பிடிப்பை நினைத்து நெகிழ்ந்தேன்.

இந்தி பேசும் மாநிலங்களில் பல இந்திக்காரர்கள் ரஹ்மானின் ஆள் உயர கட்அவுட்களை வைத்து பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். தமிழன் என்ற முறையில் நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயம் இது.

ரசூல் குட்டி: சவுண்ட் மிக்ஸிங்கில் சிறப்பாக பணியாற்றிய மற்றொரு இந்தியர் ரசூல் குட்டிக்கும் ஆஸ்கார் அவார்ட் கிடைத்துள்ளது. மனிதர் விருதை வாங்கும் போது உணர்ச்சிப் பெருக்கால் வார்த்தைகள் வெளியில் வரவில்லை. ஆனந்தத்தில் திளைக்கிறார். இவரைப்பற்றி அதிகம் நானும் படித்ததில்லை. பூர்வீகம் கேரளா என்று நினைக்கிறேன். மேலதிக விபரம் தெரிந்தவர்கள் விளக்கவும்.

இந்த விருதுகளால் இந்தியர்கள் என்ற முறையில் நாம் பெருமைபட்டுக் கொள்ளும் இதே நேரம் இந்த படம் உருவான மும்பை தாராவி சேரிகளின் வாழ்க்கை முறைகளை நினைத்தால்தான் மனம் கனக்கிறது. நம் தமிழ் நாட்டிலும் பல சேரிகளில் அடிப்படை சுகாதார வசதிகள் ஏதும் இன்றி நாட்கள் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த படத்தைப் பார்த்தாவது நமது அரசியல்வாதிகள் சேரி மக்களின் வாழ்க்ககையை முன்னேற்ற திட்டங்கள் வகுக்க வேண்டும். இங்கு வாழும் அந்த சிறுவர்களின் வாழ்க்கைத் தரம் இனியாவது உயர்ந்தால் அதுவே இப்படத்துக்கு உண்மையான அவார்டாக இருக்கும்.

Tuesday, February 17, 2009

குழந்தையும் தெய்வமும் ஒன்றாகி விடுமா?




'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே! நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே!' என்றும் 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்றும் திரைப்படப் பாடல்களை தொடர்ந்து கேட்டதாலோ என்னவோ குழந்தையை தெய்வத்துக்கு ஒப்பிடுவது நம்மிடையே பழக்கத்தில் வந்து விட்டது. குழந்தை கள்ளம் கபடம் இல்லாமல் சிரிக்கும் சிரிப்பில் மயங்கிப் போய் புகழ்கிறோம் என்ற பெயரில் தெய்வத்துக்கு ஒப்பாக்கி விடுகின்றோம்.

எக்காலத்திலும் மனிதன் மனிதன்தான். அவன் எந்த நிலையிலும் இறைத் தன்மையை அடைய முடியாது. இதை சாதாரணமாக நாம் எடுத்துக் கொள்வதால்தான் இறைக் கொள்கையில் பல குறைபாடுகளும் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது. எந்த நாட்டையும் விட நம் இந்திய நாட்டில்தான் ஆன்மீகத்தின் பெயரால் பலரின் பிழைப்பு அமோகமாக நடந்து வருகிறது. இந்து, இஸ்லாம், கிறித்தவம் என்று இந்த சுரண்டல் எந்த மதத்தையும் விட்டு வைக்கவில்லை. இதற்கெல்லாம் மூல காரணம் 'மனிதனும் தெய்வமாகலாம்' என்ற சித்தாந்தம்தான். முதலில் தெய்வத்தை குழந்தைக்கு சமமாக ஒப்பிடுகிறோம். சில காலம் கழித்து வளர்ந்த மனிதனுக்கும் இறைத் தன்மையை கொடுக்க ஆரம்பித்து விடுகிறோம்.

இதனால் குழந்தைகளிடம் பாசம் காட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை. மற்ற மதங்களில் குழந்தைகளைப் பற்றி எப்படி சொல்லப்பட்டிருக்கிறதோ தெரியாது. இஸ்லாமிய பார்வையில் குழந்தைகளின் மீது பாசம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இரண்டொரு உதாரணங்களைப் பார்ப்போம்.

'முகமது நபி தன் பேரன் ஹஸனை முத்தமிட்டார். அப்போது அவரின் அருகில் அமர்ந்திருந்த தோழர் ஹாபிஸ் அத் தமீமி 'எனக்கு பத்து குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை.' என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த முகமது நபி 'அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்' என்றனர்.

ஆதாரம்: புகாரி 5997

ஒரு கிராமவாசி முகமது நபியிடம் வந்து 'நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை' என்றார். அதற்கு முகமது நபி 'இறைவன் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழட்டி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டார்.

ஆதாரம்: புகாரி 5998

பிள்ளைகளின் மீது அன்பு செலுத்தாதவர்களுக்கு இறைவனின் அருள் இல்லை என்பதை இந்த நபி மொழி நமக்கு உணர்த்துகிறது. அதே சமயம் அன்பு செலுத்துகிறோம் என்ற பெயரில் அந்த குழந்தையை கடவுள் நிலைக்கு உயர்த்துவதையும் இஸ்லாம் தடுக்கிறது.

இறைவனே மிக அறிந்தவன்.

Saturday, February 14, 2009

காதலர் தினமும் சில கேலிக் கூத்துகளும்!


காதலர் தினமும் சில கேலிக் கூத்துகளும்!

காதலர் தினமான இன்று உலகம் முழுவதும் காதலர்கள் தங்களின் ஜோடிகளோடு வலம் வந்தவண்ணம் உள்ளனர். இது தேவையான ஒரு விழாவா! நமது நாட்டுக்கு இது தேவைதானா என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும்.

நமது இந்துத்வா நண்பர்கள் அதாவது பஜ்ரங் தள் உஜ்ஜயினியில் ஒரு ஜோடியை பிடித்து அடிக்கவும் ஆரம்பித்து விட்டனர். அவர்கள் அழுது கொண்டே 'நாங்கள் இருவரும் காதலர்கள் அல்ல. இந்த பெண் என்னுடைய உடன் பிறந்த சகோதரி. நாங்கள் மாணவர்கள். ஆராய்ச்சிக்காக உஜ்ஜயினிக்கு வந்துள்ளோம்.' என்றனர். கேட்பதற்குதான் யாருமில்லை.

சிவசேனாவும் தன் பங்குக்கு ஆக்ராவில் ஒரு காதல் ஜோடியை பிடித்து காதலனின் தலை முடியை மழித்து பெண்ணை அடிக்கவும் செய்தனர். மற்றொரு ஜோடியை பிடித்து தோப்புக்கரணம் போட வைத்தனர்.

மற்றொரு ஜோடியை வழி மறித்து பஜ்ரங்தள் ராக்கி கட்டும் காட்சியைத்தான் மேலே பார்க்கிறீர்கள். காதலர் தின கார்ட் விற்பனை செய்த கடையையும் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.

இந்து மதத்தின் கொள்கைகளை விளக்க எத்தனையோ வழிகள் இருக்க காதலர்களை இம்சைபடுத்தும் இந்த செயல் சரிதானா! இந்த அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது. தவறாகவே இருந்தாலும் கண்டிக்கும் முறை சரிதானா?

'காமசூத்ரா' வை வழங்கியது இதே நமது நாடுதானே! கோவில்களில் உள்ள சிற்பங்கள் நமக்கு சொல்லும் செய்திகள் இதை விட அதிகமல்லவா! அதை பக்தி கண் கொண்டு பார்ப்பதில்லையா? பிறகு யார் மேல் இந்த இந்துத்வவாதிகளுக்கு கோபம்? விடை சொல்வோர்தான் யாருமில்லை.

Tuesday, February 10, 2009

யூதர்கள், அமெரிக்கர்களின் பங்கு இந்தியாவில் எத்தகையது?

யூதர்கள், அமெரிக்கர்களின் பங்கு இந்தியாவில் எத்தகையது?

ஆசிய நாடுகளில் மிக முக்கியமான நாடாக விளங்குவது நமது இந்தியா. பாகிஸ்தானும் ஓரளவு மனித வளங்களை கொண்ட நாடு. இந்த இரண்டு நாடுகளும் தொழில் துறைகளில் நெருங்கி வர ஆரம்பித்தால் மிகப் பெரிய பொருளாதார மாற்றத்தை கொண்டு வர முடியும். இந்த இரு நாடுகளும் நட்பு நாடுகளாக மாறுவதில் நேரிடையாக பாதிக்கப்படுவது வேறு இரு நாடுகள். அவை முறையே அமெரிக்காவும் இஸ்ரேலும்.

இந்தியாவிற்கு மிகவும் அதிகமான இராணுவ தளவாடங்களை விற்பனை செய்து கொண்டிருப்பது அமெரிக்காதான். பாகிஸ்தானுக்கு அதிக அளவில் இராணுவத் தளவாடங்களை விற்பனை செய்து கொண்டிருப்பதும் அமெரிக்காவே! இராணுவத் தளவாடங்களை வளரும் நாடுகளான இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு விற்று இலாபம் சம்பாதிப்பதில்தான் அமெரிக்காவின் பொருளாதாரமே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இராணுவத் தளவாடங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் நாடு இஸ்ரேல். 2007 முதல் 2012 வரை இந்திய அரசு 50000 கோடி ரூபாயை இராணுவத் தளவாடங்களுக்கு செலவிட இருக்கிறது. இதில் பெரும் பகுதி அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் தான் செல்ல இருக்கிறது.

இப்படி நமது நாடு ஏராளமான தொகையை ராணுவத்துக்கு செலவிடக் காரணம் நமக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பகைதான். உள் நாட்டு பிரச்னைகளை நமது காவல் துறையை வைத்தே சமாளித்து விடலாம். எனவே நமக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுவதில் நஷ்டத்திற்கு உள்ளாகும் நாடுகள் முதலில் அமெரிக்கா அடுத்து இஸ்ரேல் மூன்றாவது ரஷ்யா. மேலும் நமது நாட்டிலுள்ள வகுப்பு வெறி பாசிஸ்டுகள் என்று பட்டியல் நீள்கிறது.

தங்கள் நாட்டின் பொருளாதார வருவாயை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக பல சூழ்ச்சிகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ வும் இஸ்ரேலின் உளவுத்துறையான மொஸாத்தும் இந்தியாவில் முழு வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மொஸாத் மும்பைக்குப் பக்கத்திலுள்ள தானா என்ற இடத்தில் 770000 சதுர அடியில் 'ப்ளாஸா' என்ற பெயரில் தனது அலுவலகத்தை நிறுவி வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இஸ்ரேல் நாட்டின் யூத மத குருக்களின் தலைவர் என்று அழைக்கப்படக் கூடிய யோனா மெட்ஸ்கர் (Israels chief robbyYona Metskar) என்பவருக்கும் இந்து தர்ம ஆச்சாரிய சபை தலைவர் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களுக்கும் சில காலம் முன்பு ஏற்பட்ட ஒப்பந்தத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் டெல்லியில் உள்ள ஓபராயில் வைத்து 2007 பிப்ரவரி 7 ஆம் நாள் நடைபெற்றது. இதற்கு முதல் நாள்தான் ராம ஜென்ம பூமி புகழ் எல்.கே.அத்வானியின் வீட்டில் ஒரு ரகசிய கூட்டம் நடைபெற்றது. சில பத்திரிக்கைகள் அன்று யூத மத தலைவர்கள் பலர் டெல்லி வந்திருந்ததாகவும் அவர்களுக்கும் இங்குள்ள இந்துத்வ தலைவர்களுக்கும் இடையே ஒருநாள் ரகசிய சந்திப்பு ஏற்பட்டதாகவும் கூறின.

ஆதாரம்
ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ்
பிப்ரவரி 07.

இஸ்ரேல் குஜராத் உறவுகள்!

குஜராத்தில் நவராத்திரி இரவுகளில் மக்களை மகிழ்வூட்ட இஸ்ரேலுடைய நடனக் குழு தருவிக்கப்பட்டிருந்தது. நடனக் குழுவை குஜராத் மாநில அரசின் சுற்றுலா மேம்பாட்டுத் துறைதான் தருவித்தது. இஸ்ரேல் நடனக்காரிகள் மிகவும் சிக்கனமாகவே ஆடை அணிந்திருந்தனர். ஆடியும் காட்டினர். 24.09.2006 அன்று அவர்கள் ஆடிக்காட்டியதை முதலமைச்சரே நேரில் கண்டு மகிழ்ந்தார்.

இஸ்ரேலிய மங்கையர் ஆபாசமாக ஆடை அணிந்திருந்ததால் மக்கள் வெகுண்டெழுந்து அவர்களை உடனே வெளியேற்றிட வேண்டும் என்றனர். இஸ்ரேலின் நடனக்குழு தலைவர் நாங்கள் வெளியேறிட இயலாது எனக் கூறினார். தங்கள் நாட்டில் மங்கையர் அப்படித்தான் ஆடை அணிவார்கள். அது இஸ்ரேல் நாட்டுப்புற நடனம். அது அப்படித்தான் என்று கூறி விட்டார். அத்தோடு மும்பையிலுள்ள இஸ்ரேலியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு புகார் கூறினார்.

மும்பையிலுள்ள இஸ்ரேலிய தொடர்பாளர் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியைத் தொடர்பு கொண்டார். மோடி குஜராத் சுற்றுலாத் துறை செயலாளர் ஆர்.எம்.பட்டேல் அவர்களை இஸ்ரேலிய நடனக் குழுவிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னார். மன்னிப்பும் கேட்கப்பட்டது. அத்தோடு நடனங்கள் சற்றும் ஆபாசம் குறைவில்லாமல் நடைபெற ஆவணச் செய்யப்பட்டது.

'முதலமைச்சர் நரேந்திர மோடி உரிய நேரத்தில் தலையிட்டதால் இஸ்ரேலுக்கும் குஜராத்திற்கும் இடையேயுள்ள உறவுகள் உடைந்து போகாமல் பாதுகாக்கப்பட்டன.'

-ஆதாரம்
தி ஹிந்து 29-06-2006

இதை இங்கு குறிப்பிட காரணம் மோடிக்கும் இஸ்ரேலியர்களுக்கும் எந்த அளவுக்கு நெருக்கம் உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே!

இந்த பதிவின் மூலம் படிப்பவர்களுக்கு என்ன சொல்ல வருகிறேன் என்பதை படிப்பவர்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

எனது தாய்நாடு இந்தியாவை இந்த சூழ்ச்சிக்காரர்களிடமிருந்து அந்த எல்லாம் வல்ல இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.