Followers

Sunday, April 08, 2018

30 வருடங்கள் பின்னோக்கி செல்கிறேன்.....


30 வருடங்கள் பின்னோக்கி செல்கிறேன்.....

ஆம்.... 30 வருடங்களுக்கு முன்னால் ஏகத்துவத்தை சொல்ல தெருவுக்கு இரண்டு பேர் இருப்போம். நான் எங்கள் ஊர்  பள்ளிக்கு தொழுக சென்றேன். ஒரு ஆள் வழி மறித்து 'நஜீர்... தொப்பி போட்டுக் கொண்டு எங்களைப் போல் கூட்டு துவாவிலும் கலந்து கொண்டால் பள்ளிக்கு வா' என்றார். அறியாமையில் இருக்கிறார்கள் என்று பிரார்த்தித்து விட்டு வந்தேன். வட்டியை தனது முழு நேர தொழிலாக வைத்துள்ளர் அவர் என்பது பிறகுதான் தெரிந்தது.

தஞ்சை மாவட்டத்தில் ஒரு இஸ்லாமிய கிராமத்தில் பிஜேயின் கூட்டத்துக்கு ஒரு வேனில் சென்றோம். அவ்வூரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டோம். 'தம்பீ... இந்த வழியா போகாதீங்க... தர்கா சாயுபுமார்கள் உருட்டு கட்டையோடு நிற்கிறார்கள். வேறு வழியை காண்பிக்கிறேன்' என்றார்கள். பிறகு அந்த நபர் காட்டிய வழியில் சென்று மாநாட்டு பந்தலை அடைந்தோம்.

30 வருடங்களுக்கு முன்னால் எங்கள் ஊரில் (ராஜகிரி, பண்டாரவாடை) வரதட்சணை மாநாடு நடத்த ஏற்பாடுகளை செய்தோம். பிஜே, பாக்கர், டி எம் மணி போன்றோர் சிறப்புப் பேச்சாளர்கள். ஊரில் பயங்கர எதிர்ப்பு. காவல் துறையிலும் ஓர் சார்பாக புகார் அளித்துள்ளனர். கூட்டம் நடப்பது எங்கள் தெருவில். குடிகாரர்கள், தர்ஹா வணங்கிகள், சில முல்லாக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு ஊர் முழுக்க ஆதரவு திரட்டினர். நாங்களோ வெகு சொற்பம். நானும் சவுதியிலிருந்து விடுமுறையில் வந்து ஒரு மாதம் ஆகிறது. 'நஜீர்... நாங்கள் முன்னே நின்றால் மேலும் எதிர்ப்பு அதிகமாகும். எனவே நீ புதிது. மேடை பொறுப்பை நீ பார்த்துக் கொள்' என்று எனது ஏகத்துவ நண்பர்கள் சொன்னார்கள். நானும் ஒத்துக் கொண்டேன்.

மாநாட்டு நாளான அந்த நாளும் வந்தது. காலை எட்டு மணிக்கு இரண்டு பேர் வந்தனர். 'பாய்... மாநாட்டு பந்தல் போட வந்த எங்களை சிலர் மிரட்டுகின்றனர். கொஞ்சம் வருகிறீர்களா?' என்றனர். எனக்கோ பயங்கர கோபம். சாராயக் கடையை திறக்கிறோமா? அல்லது கூத்தாடிகளின் ரசிகர் மன்றத்தை திறக்கிறோமா? அல்லது வட்டிக் கடையை திறக்கிறோமா?  ஏன் எதிர்க்கிறார்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை. எங்கிருந்துதான் அந்த வீரம் வந்ததோ தெரியவில்லை. வீட்டிற்குள் அடுப்பங்கரையில் இருந்த பெரிய அரிவாள் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு 'வா... யார் தடுக்கிறார்கள் என்று பார்போம்' என்று அவர்களை அழைத்துக் கொண்டு மேடை அமைக்க பள்ளம் தோண்டச் சொன்னேன். மேடைக்கு பள்ளம் தோண்டும் செய்தி வெளியில் செல்ல ஒவ்வொருவராக வருவதும் நான் கையில் அரிவாளோடு நிற்பதை பார்த்து விட்டு அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு களைவதுமாக இருந்தார்கள்.. வாழ்க்கையில் முதன் முதலாக அரிவாளை தூக்கியதால் உடலில் ஒரு நடுக்கமும் இருந்தது. 😊 கொத்தரங்கா ஜாபர் அலி என்று ஒருவர் எங்கள் ஊரில் இருந்தார். அவர் சைக்கிளில் என்னருகே வந்து 'உனக்கு ஏன் நஜீர் இந்த வேலை? குழப்பத்தை உண்டு பண்ணக் கூடிய ஒரு கூட்டத்தை ஏன் கூட்டுரே?' என்று கேட்டார்.

'என்ன குழப்பம்? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க' என்றேன்.

'அதெல்லாம் எனக்கு தெரியாது? ஊருல எல்லோரும் எதிர்க்கிறாங்க. இங்க கூட்டம் நடத்தக் கூடாது?'

'நாங்கள் காவல் துறையின் அனுமதியோடு நடத்துகிறோம். கூட்டத்தை நாங்கள் நடத்துவோம்.' என்று கறாராக சொன்னேன்.  (பேசும் போதே எனக்குள் உதறல் எடுக்கிறது. ).  ஆனாலும் சத்தியத்தில் இருப்பதால் எங்கிருந்தோ ஒரு தைரியம் வந்தது. இப்படி எல்லாம் நான் வாக்கு வாதம் செய்தது கிடையாது. அந்நியன் படத்தில் வரும் அம்பி போல பரம சாதுவாக்கும் நான் கிராமத்தில் :-) சிறுவனான நான் இந்த அளவு தைரியமாக பேசுவதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே அவரும் நகர்ந்தார். மேடை தயாரானது. காரைக்காலில் இருந்து 20 பேரை அழைத்தோம். அவர்களும் இரு சக்கர வாகனத்தில் கொடியோடு எங்கள் ஊரை வலம் வந்தனர்.  கொஞ்ச நஞ்சம் இருந்த எதிர்ப்பும் அடங்கியது. இதிலெல்லாம் தோல்வியடைந்த சமாதி வழிபாட்டாளர்கள் பிஜே சென்னையிலிருந்து வரும் போது மறித்து விடலாம் என்று திட்டம் தீட்டினர். உடனே பிஜே வரும் வழியை ரகசியமாக வைத்திருந்து அவரை வேறு மார்க்கமாக திருப்பி விட்டோம். காரைக்காலிலிருந்து வந்த நண்பர்களுக்கும் ஊர் நண்பர்களுக்கும் மதிய உணவு எங்கள் வீட்டில் வைத்து ஏற்பாடு செய்தோம். நேரம் நெருங்க நெருங்க எங்களுக்குள் பீதி. கூட்டம் ஒழுங்காக நடக்குமா? வெளியூர்களிலிருந்து வரும் பெண்களை பாதுகாப்பாக அனுப்ப முடியுமா? பிஜே சரியாக கூட்டத்துக்கு வந்து விடுவாரா? என்று கேள்வி மேல் கேள்வி எங்களுக்குள்.

மாலை ஐந்து மணி ஆனது. ஓரளவு கூட்டம் வந்தது. இரவு ஏழு மணியானது. எங்கிருந்துதான் கூட்டம் வந்ததோ தெரியவில்லை. மூன்று தெருக்கள் சந்திக்கும் அந்த முக்கியமான இடத்தில் கூட்டம் குழுமத் தொடங்கியது. டி எம் மணி முதலில் பேச ஆரம்பித்தார்.  பிறகு பாக்கர் என்னிடம் 'சிறுநீர் கழிக்க வேண்டும் ' என்றார். வாருங்கள் என்று அருகிலுள்ள கீழப்பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் பெரும் கூட்டத்தை பார்த்தவுடன் பள்ளியை எப்போதும் இல்லாமல் பூட்டி விட்டார்கள். குர்ஆனையும் ஹதீதையும் பறை சாற்றும் ஒரு விழாவுக்கு வந்தவர்களுக்கு தொழக் கூட அனுமதியில்லை. பிறகு எங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கூட்டத்தை நோக்கி சென்றோம். இரவு ஒன்பது மணிக்கு பிஜேயும் கூட்டத்தை வந்தடைந்தார்.

ரஜினிக்கும் கமலுக்கும் ரசிகர் மன்றம் வைத்திருந்த இளைஞர்கள் எல்லாம் அவரோடு கை குலுக்க பேச போட்டி போட்டனர். இது என்னவொரு ஆச்சரியம். கருப்பாகவும், அதிக கவர்ச்சியும் இல்லாத இந்த தலைவனை நோக்கி இத்தனை இளைஞர் பட்டாளமா? என்று நானே வியந்து போனேன். குர்ஆனையும் ஹதீதையும் சாமான்யனும் விளங்கிக் கொள்ளும் அளவு பிரசாரம் செய்ததன் விளைவை அன்று அந்த கூட்டத்திலே கண்டேன். கட்டுக்கடங்காத கூட்டம். கூட்டம் முடிந்து நான் வீட்டுக்கு வரும்போது இரவு இரண்டு மணி. ஏதோ ஒரு போர்க்களத்துக்கு போய் விட்டு வந்ததை போன்ற உணர்வு.

இவ்வளவு மெனக்கெட்டு இதனை நான் இங்கு எழுத காரணம் இந்த தவ்ஹீத் ஜமாத் மிக எளிதாக இந்த வளர்ச்சியை பெற்று விடவில்லை. லட்சக்கணக்கான இளைஞர்களின் தியாகம் இதனுள் புதைந்துள்ளது. தற்போது ஏதோ சிறிய சலசலப்பு வந்தவுடன் ஓய்ந்தார்கள் ஏகத்துவவாதிகள் என்று கொக்கரிப்பது தற்போது அதிகம் கேட்கிறது. அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம். இந்த முறையும் உங்களுக்கு இறைவன் தோல்வியையே தருவான். ஏனெனில் ஏக இறைவனை எத்தி வைக்கும் இந்த ஜமாத்தை காக்கும் பொருப்பை அந்த இறைவனே ஏற்றுக் கொண்டுள்ளான்.



1 comment:

sultangulam@blogspot.com said...

1986 லிருந்து தவ்ஹீத் செயல்பாடுகளில் என்னை ஐக்கியப்படுத்தி கொண்டவன்.
எதுவரை இக்லாஸ் இருந்ததோ அதுவரைதான் வளர்ச்சி. எப்போது அந்த உளத்தூய்மை குறைகிறதோ அது முதல் அல்லாஹ் பல பாடங்களை படிக்கத் தருவான். படித்துக் கொண்டால் நல்லது. என்னை விட யார் என்று நடந்தால்.... வளர்ச்சியும் அழிவுக்கான துவக்கம்தான். உணர முடியாது ஆனால் ஒழியும். (பார்த்த அனுபவத்தில் இருந்து)
திருந்த இன்னும் வழிஇருக்கிறது