Followers

Wednesday, April 11, 2018

"கேடயம்தான் ஆன்மிகம்'' - இயக்குநர் அமீர்


``தவறுகளிலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ளும் கேடயம்தான் ஆன்மிகம்'' - இயக்குநர் அமீர்


வ்வொருவரும் ஒவ்வொருவிதமான மதத்தையும் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் பின்பற்றுகிறார்கள். வாழ்வியல்ரீதியாக அவரவர் கடைப்பிடிக்கும் ஆன்மிகம் தனித்துவமானது. இங்கே இயக்குநர் அமீர், அவர் எப்படி ஆன்மிகப் பாதைக்கு வந்தார் என்பதையும், தனது ஆன்மிக நெறிமுறைகளையும் குறித்து விரிவாகப் பேசுகிறார். திரைப்பட இயக்கம் தொடங்கி, சமூகப்பணிகள், அரசியல் பார்வை, துணிச்சலாக மனதில் பட்டதை உடைத்துப் போடும் குணம்... என எல்லாவற்றிலும் தனி முத்திரை பதித்துவருபவர் அமீர். அவரின் இன்னொரு பக்கம்...

``எந்தக் குழந்தைக்குமே ஆன்மிகம்ங்கிறது அதன் தாய், தந்தையாரால் ஊட்டப்படுவதுதான். எந்தக் குழந்தைக்குமே தான் எந்த மதத்தைச் சார்ந்தவர், எந்தக் கடவுளை வழிபட வேண்டும், எந்தத் தத்துவத்தைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் தெரியாது. தாய், தந்தையர்தான், `இதுதான் நம்ம சாமி. இதுதான் நம்ம குலதெய்வம்' என்று சொல்லி வளர்க்கிறார்கள். அங்கிருந்துதான், அவர்களிடமிருந்துதான் குழந்தைகளின் ஆன்மிகம் தொடங்குகிறது.

அப்படிப் பார்க்கும்போது எனக்கும், நான் சார்ந்திருக்கும் இஸ்லாம் மதம் தொடர்பான ஆன்மிகம்தான் சொல்லித்தரப்பட்டது. பெயரளவுக்குத்தான் சொல்லித் தரப்பட்டது. முழுவதையும் உணர்ந்து சொன்னார்களா என்பது எனக்குத் தெரியாது. அவையும் மூடநம்பிக்கைகள் சார்ந்துதான் இருந்தன. 

கடவுளுக்கு பூசை வெச்சு படைப்பது, நாம் செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகப் பழங்கள், பூக்கள், இனிப்புகளான பூந்தி, நாட்டுச்சர்க்கரை இதையெல்லாம் வெச்சுப் படைக்கிறது இதெல்லாம் இருந்துச்சு. இந்த மாதிரி படைக்கப்படும் பொருள்கள் மதுரை, ராமநாதபுரம் எனத் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப மாறுபடும். 

கடவுளுக்குப் படைச்சுட்டு அதன் பிறகு அதை நாம்தான் சாப்பிடுவோம். சின்ன வயசுல அந்தப் படையலைக் `குறுகுறுனு பார்த்துக்கிட்டு இருப்போம். மொத்தத்தில் மனிதன் அவன்  தன் குடும்பத்தினருடன் என்ன சாப்பிட நினைக்கிறானோ அது சைவமோ, அசைவமோ அதைத்தான் கடவுளுக்கும் படைத்தான். 

எங்க வீட்டுக்குக் கீழே இந்துக் குடும்பங்கள்தாம் அதிகமிருந்தன. அதுவும் நாங்க இருந்த யானைக்கல் பகுதியில 90 சதவிகிதம் இந்துக்கள்தாம் இருப்பாங்க. அவங்க கொண்டாடுற பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்குக் கொழுக்கட்டை, சரஸ்வதி பூஜை-ஆயுத பூஜைக்குப் பொரிகடலை, நாட்டுச்சர்க்கரை எல்லாம் கொடுப்பாங்க. இவை தவிர தீபாவளி, பொங்கல் இருக்கு. அப்புறம் சபரிமலைக்குப் போற சாமிகள் சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சி நடத்துவாங்க. அங்கெல்லாம் போய் ரொம்ப ஆசையா சாப்பிட்டிருக்கேன். சின்ன வயசுல இதுதான் என் ஆன்மிகமா இருந்துச்சு. 

நான் வளர்ந்த பிறகு எக்ஸாம் டயத்துல மறக்காம எல்லாக் கடவுளையும் தேட ஆரம்பிச்சிடுவேன். பரீட்சை பேப்பர் வாங்கினதுமே பதில் எழுதுறேனோ, இல்லையோ பிள்ளையார்சுழி, இந்தப் பக்கம் பிறைநிலா, அந்தப் பக்கம் சிலுவையைப் போட்டுடுவேன். `எம்மதமும் சம்மதம்'னு  எழுதிட்டுத்தான் பதில்களையே எழுத ஆரம்பிப்பேன். அது பப்ளிக் எக்ஸாமாக இருந்தாலும் சரி. இந்த அடையாளங்கள் இல்லாம என்னோட பரீட்சை பேப்பரே இருக்காது. அப்படி எழுதின சில பரீட்சையில பாஸ் பண்ணினதும் உண்டு; சிலவற்றில்  ஃபெயிலானதும் உண்டு.

ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ வந்த பிறகு, கடவுள், மதம், சாமி இதையெல்லாம் விட்டு விலகியாச்சு. எந்தக் கடவுள் நம்பிக்கையும் இல்லை. இஸ்லாமிய நம்பிக்கையும் கிடையாது. அதுவும் வாலிப வயசுக்கு வந்த பிறகு, எப்பவும் விளையாட்டு, ஜாலி, கேளிக்கைகள்தாம். அடுத்து... அடுத்துனு எல்லாப் பழக்கங்களும் வந்து சேர்ந்துடுச்சு.  

காரணம்தான் தேவை. காரணம் எதுவாக இருந்தாலும் தண்ணி அடிக்க ஆரம்பிச்சிடுவோம். நாலு ஃப்ரெண்ட்ஸ் சேர்ந்தோம்னா போதும் பேசிக்கிட்டே இருப்போம். போரடிக்குதுனாகூட தண்ணி அடிக்க ஆரம்பிச்சிடுவோம். ரெகுலரா  தண்ணி அடிக்க ஆரம்பிச்சிட்டோம்.

தகப்பனார் இல்லாத காரணத்தால தாயாரால் அதிகம் கண்டிக்க முடியலை. எங்க வீட்டுல நாங்க நாலு பேருமே பசங்க.   

1989-
ம் வருஷம்னு நினைக்கிறேன். ஒருநாள் நானும் என் ஃப்ரெண்டும் தண்ணி அடிச்சிட்டு வந்தப்போ ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சு. கிட்டத்தட்ட நான் இறந்து விட்டதாகத்தான் நினைச்சேன். என் ஃப்ரெண்டு, யாரையாவது உதவிக்குக் கூப்பிடலாம்னு ஓடிட்டான். ஆனா, அதுக்குள்ள வேற யாரோ ஒருத்தர் என்னை மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்துட்டார். 

அந்த டாக்டரும் நல்ல திறமையானவர். சிறப்பான முறையில எனக்குச் சிகிச்சை அளித்துக் காப்பாத்திட்டார். அதன் பிறகும் எங்க பழக்க வழக்கங்கள் மாறலை. என் ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு விபத்து. கால் உயரமே மூன்று அங்குலம் குறைஞ்சிடுச்சு. என் ஃபிரெண்ட் ஒருத்தனுக்கு மறுநாள் கல்யாணம். அன்னிக்கு ராத்திரி அவன் தம்பி இறந்துட்டான். இப்படி நிறையச் சம்பவங்கள்... 

என் மனசுக்குள்ள சில கேள்விகள் எழுந்துச்சு. ஏன் இவ்வளவு துன்பங்கள்... எனக்கு ஏற்பட்ட விபத்துல நான் ஏன் பொழைச்சேன்... என்னைப் பொழைக்கவெச்சது யார்... இந்த வாழ்க்கைங்கிறது என்ன... இந்தப் பயணம் எதை நோக்கி... இதை இயக்குறது யார்? யோசிச்சேன். அப்போதான் ஒரிஜினலான ஆன்மிகம் எனக்குள்ளே வந்தது. 

இந்த போதைக்கு  நாம அடிமையா... நமக்கு இந்த போதை அடிமையா?னு என் மனசு ஒரு நாள் கேட்டுச்சு. இதை எப்படிக் கட்டுப்படுத்துறது... வாழ்க்கை என்பது என்ன... இதை எப்படித் தெரிஞ்சிக்கிறதுனு புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சேன். எனக்கு பௌத்த மதம், சீக்கிய மதம் எல்லாம் அப்போ அவ்வளவா பரிச்சயம் இல்லை. எனக்குக் கிடைச்சதெல்லாம் இஸ்லாம் தவிர்த்துகிறிஸ்துவம், இந்து மத நூல்கள்தாம். 

கிறிஸ்துவ மதத்தைப் பொறுத்தவரை முதல் மனிதன் `ஆதாம் ஏவாளி'லிருந்து தொடங்குது. இந்து மதம் எங்கிருந்து தொடங்குதுனு தேடிப் பார்த்தேன். `அது ஆதியும் அந்தமும் அற்றதுனு சிலர் சொல்றாங்க. கடவுள் இப்படி இருப்பார், அப்படி இருப்பார்னு உருவகப்படுத்தப்படுது.

இஸ்லாம் என்ன சொல்லுதுனு பார்த்தேன். கிறிஸ்துவம் சொல்லுகிற `ஆதாம் ஏவா'ளிலிருந்து தொடங்கிய உலகம் இயேசு நாதருக்குப் பின்னால் வந்த முகமது நபி வரைக்கும் சொல்லப்படுது. இஸ்லாம், வாழ்வு என்பது என்னங்கிறதுக்கு நிறைய விளக்கங்களைச் சொல்லித் தருது. இதுல எல்லோரும் வாழ்ந்தவங்களாக இருக்காங்களே தவிர, புனையப்பட்ட கதாபாத்திரங்களாக இல்லை. உலகம் என்பது உருவமற்ற கடவுளால் படைக்கப்பட்டது. இறைவன் என்பவன் யாரையும் பெறவுமில்லை; யாராலும் பெறப்படவுமில்லை. அவரது அதிகாரத்துக்கு உட்பட்டுத்தான் இந்த அண்ட சராசரங்களும் இயங்குதுனு சொல்லுது. `இதை நீ நம்பு. இதில் நீ நம்பிக்கை கொண்டால், அடுத்து மேலே படி எனச்சொல்லுது. 

இஸ்லாமியர்களுடைய ஐந்து கடமைகள்ல இதைத்தான் முதல் கடமையாகச் சொல்லுது. அரசனிலிருந்து ஆண்டி வரையிலும் எல்லாவிதமான மனிதர்களாலும்தான் இந்த உலகம் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் செய்யும் தவறுகள், அவற்றால் படும் துன்பங்கள், அவற்றைத் தீர்த்துவைக்க அவ்வப்போது  இறைவனால் அனுப்பப்படும்  இறைதூதர்கள்னு என் வரைக்கும் நான் ஏற்றுக்கொள்ளும்விதமாக அதன் சித்தாந்தம் இருக்கிறது. அப்படி வந்த தூதர்களில், இறுதித் தூதர்தான் முகம்மது நபி. 

`நீ இந்த பூமிக்கு வந்த ஒரு பிரயாணிதான். அடுத்த நொடி என்பது கூட உனக்கு உறுதி செய்யப்படாத ஒன்று. அதனால் இப்போதே உன்னால் என்ன நன்மை செய்ய முடியுமோ, அதை மற்றவர்களுக்குச் செய்' எனச் சொல்கிறது. `நீ நன்மை செய்ய நினைத்தாலே அதற்கான கூலி உனக்குக் கொடுக்கப்பட்டு விடும். நீ நன்மை செய்தால் இரண்டு மடங்காக உனக்கு வழங்கப்படும். தீமை என்பதை நீ மனத்தால் நினைத்தால், குற்றம் பிடிக்கப்பட மாட்டாது. ஆனால், அதைச்  செய்தால், நீ குற்றம் பிடிக்கப்படுவாய்'னு சொல்லுது. 

இப்படி இருக்கும் இறைச் சட்டங்கள் என்னை நானே தெளிவாக இனங்கண்டுகொண்டு ஒழுங்குபடுத்திக்கொள்ள உதவியா இருக்கு. இவையெல்லாம் இந்து மதத்திலோ, கிறிஸ்துவ மதத்திலோ சொல்லப்படாமலில்லை. ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கு. என்னை நான் ஒழுங்குபடுத்த ஆன்மிகம் தேவைப்பட்டது. 

நான் தனிமையா இருக்கும்போது, தவறு செய்ய நூறு சதவிகிதம் வாய்ப்பிருக்கு. ஒரு வியாபாரத்திலோ, உறவுக்காரர்களிடமோ பொய் சொல்லவும் அல்லது ஏமாற்றவும் நூறாயிரம் சந்தர்ப்பங்கள் இருக்கு. ஆனால், உருவமற்ற இறைவன் ஒருவன் பார்த்துக்கிட்டிருக்கான்கிறதை நினைக்கும்போது அந்தத் தவற்றிலிருந்து நான் விலகிடுறேன். 

அந்த இடத்தை நான் விரும்பி ஏத்துக்கிறேன். அது ஒரு கட்டுப்பாடான வாழ்க்கைதான். ஆனா, அது நிச்சயம் நம் எல்லோருக்கும் தேவையா இருக்குது.

மனம் என்பது ஒரு குரங்குபோலவும், மனம் சாத்தானின் பட்டறையாகவும்தான் இருக்கு. நம்மைச் சுற்றிலும் தீய சக்திகள் இருப்பதால், எப்போ வேண்டுமானாலும் தவறு செய்யத் தயாராக இருக்கிறேன். வாய்ப்புக் கிடைத்தால், ஒருவரிடம் பொய் சொல்லவும், ஒருவரை ஏமாற்றவும் தயாராக இருக்கிறேன். வாய்ப்புக் கிடைத்தால் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்கவும் தயாராக இருக்கிறேன் என்கிற ரீதியில்தான் மனித மனம் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நம் செயல்கள் எல்லாவற்றையும் ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்னு நினைக்கும்போது நாம் அதைச் செய்வதில்லை.

ஆன்மிகம்கிறது தவறுகளிலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ளும் கேடயமா இருக்கு. அதனால்தான் ஒரு நாளைக்கு ஐந்து முறை அந்த ஏக இறைவனை தொழுகிறேன். 1993 -ம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளாக இதை நான் கடைப்பிடிச்சிக்கிட்டிருக்கேன். வருடத்தில் 30 நாள்கள் நோன்பு வைக்கிறேன். இரண்டு தடவை `உம்ரா பயணம்' மேற்கொண்டிருக்கிறேன்’’ என்றவரிடம், `நள்ளிரவு நேரத்தில்கூட தொழுகை செய்வதுண்டா?’ எனக் கேட்டோம். 


``இஸ்லாத்தில் 5 முறை தொழுவதுதான் கடமையாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நள்ளிரவில் நாம் விழித்துக்கொண்டால், தொழுதுவிட்டு பிறகு உறங்கச்செல்வது சிறப்பு. நாம் விழித்துக் கொள்ளும் போதெல்லாம் இறைவன் அளித்த வாழ்வு தொடங்குகிறது. அதற்கு நன்றி சொல்லும்விதமாக, நாம் அந்த நேரத்தில் செய்யும் தொழுகைக்குப் பலன் மிகுதியாக இருக்கும். ஏனென்றால், மற்ற தொழுகைகளைக்கூட நீங்கள் ஒரு சம்பிரதாயமாகச் செய்யலாம். ஆனால், அப்போது நீங்கள் செய்யும் தொழுகை உங்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. யாரும் நம்மைக் கட்டாயப்படுத்தவில்லை. அதனால், அதற்கு வலிமை மிகவும் அதிகம்'' என்கிறார் அமீர்.

நன்றி

விகடன்.காம்
09-04-2018




 




No comments: