தேவதாசி முறை மற்றும் பொட்டுக் கட்டுதல் என்றால் என்ன?
ஓரிரு வாரங்களாகத் தேவதாசிகள் பேசுபொருளாகியுள்ளனர்; சமூக ஊடகங்களில் கருத்துகளும் சர்ச்சைகளும் நிறைந்து வழிகின்றன. அவர்களை
வாழ்த்திப் பேசுவோர், அவர்கள் பட்ட துயரங்களை மூடிமறைக்கவே முயல்கிறார்கள். அது
‘அருமையான சமூகக் கட்டுமானம்’ என்றும், ‘கலை இலக்கியம் செழித்த காலம்’ என்றும் சிலர் சிலாகிக்கின்றனர். ஆயிரக்கணக்கான
தேவதாசிகளுள் ஓரிருவர் இசையிலும் நாட்டியத்திலும் நிபுணத்துவம் பெற்றிருக்கலாம்; அதன் அழகியலை யாரும் மறுக்கவில்லை. கேள்வி, அவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதே.
இதைப் புரிந்துகொள்ளச் சான்றுகள் உள்ளன. அவற்றை
விட்டுவிட்டுக் கதை புனைந்து உண்மைபோலப் பேசுகிறார்கள். புனைவு கதைக்கு அழகு; வரலாற்றுக்குத் தரவுகள் வேண்டும். கடந்த காலத் தரவுகள் பலவும் அவர்கள்
வாழ்க்கையைச் சிறப்பிப்பதாக இல்லை என்பதே உண்மை.
தொடக்கத்தில் துறவு வாழ்வுபோல இருந்தபோது, தேவரடியார், மாணிக்கத்தார் என்ற பெயர்களில் இறைவனுக்குச் சேவை செய்பவர்
என்ற மரியாதைக்குரிய பொருள் இருந்திருக்கலாம். அது நிறுவனமயமானபோது ஆணாதிக்கச்
சமூகம் அவளைத் ‘தாசி’யாக்கிவிட்டது என்பதையே வரலாறு சொல்கிறது. அவர்கள் செல்வச்
செழிப்போடு சுதந்திரமாக வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்; உண்மையில் அவலமே அவர்கள் வாழ்க்கை. அவர்கள் உடல் அவர்களுக்குச் சொந்தமில்லை.
இந்த உண்மையை மறைத்துக் கலையழகை மட்டும் காட்டுவது வரலாற்றுக்குச் செய்யும்
துரோகம்.
பொட்டுக் கட்டும் வயது
இது கோயிலுக்குக் கோயில் மாறுபடும். சில கோயில்களில் ஐந்து
முதல் எட்டு வயதுக்குள்; தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் பூப்படையும் முன் பொட்டுக்
கட்டி அனுப்ப வேண்டும். உத்தேசமாக ஐந்து முதல் பதின்மூன்று வயது. அந்தக் குழந்தை
கோயில் தர்மகர்த்தா அல்லது பொட்டுக் கட்டிய அர்ச்சகரின் பொறுப்பில் இருக்கும்.
இளம் பிஞ்சுகளைக் கோயிலுக்கு அர்ப்பணிப்பது பக்தி என்றும் புண்ணியம் என்றும்
சித்தரிக்கப்பட்டது; ஆனால் அது குழந்தைகள் மீதான உரிமை மீறலே.
இந்த வயதில் சடங்கு பற்றியோ, தான் வாழப்போகும் வாழ்க்கை பற்றியோ சிறுமிக்கு என்ன புரிதல் இருக்கும்? அதன் அவலம் புரியும் வயதில், அவள்
வாழ்க்கை ஒரு வட்டத்துக்குள் அடைபட்டுவிடும். விரும்பினாலும் மற்ற பெண்களைப்போலக்
குடும்ப வாழ்க்கை வாழ முடியாது. முத்துலட்சுமி ரெட்டியின் தாய் சந்திராம்மா போல
ஓரிருவர் விதிவிலக்கு; அவரும் சமூகத்தின் ஏச்சுபேச்சுகளுக்கு நடுவேதான் வாழ்ந்தார்
என்கிறது முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கை வரலாறு. அவ்வளவு துணிவும் வாய்ப்பும்
பெரும்பாலானோருக்கு வாய்க்கவில்லை.
பூப்பெய்தல் சடங்கு
பொட்டு என்பது வட்ட வடிவச் சிறு தங்கக் காசு. கோயிலில் பூசை
செய்யும் பிராமணர், பூசாரி அல்லது மூத்த தேவதாசி அதைக் கட்டுவார்கள்.
அன்றுமுதல் சிறுமிக்கு ஆடல், பாடல்
பயிற்சி தொடங்கும். பயிற்சி என்பது கலைக்காக மட்டுமல்ல; அவள் எதிர்காலத்தில் யாருக்கு, எப்படிப் பயன்பட வேண்டும் என்பதற்கான தயாரிப்பாகவும் இருந்தது.
அவள் பருவமடைந்ததும் நாள் பார்த்துச் சடங்கு நடக்கும்; அங்குதான் பாலியல் சுரண்டலுக்கு அவள் ஆளாக்கப்படுகிறாள். இதில் அவளது
விருப்பம் என்பதற்கே இடமில்லை; சடங்கு
என்ற பெயரில் நடக்கும் ஏற்பாடு இது. குடும்பப் பெண்களுக்குச் சடங்கு நடக்கும்போது
உறவினர்களுக்குச் சொல்வார்கள்; இங்கோ
பெருஞ்செல்வந்தர்கள், அரசர்கள், சிற்றரசர்கள், மந்திரிகள், அரசனுக்கே கடன் கொடுக்கும் செல்வந்தர்களுக்குச்
சொல்வார்கள். அலங்காரத்துடன் அவள் அந்த அவைக்கு வரும்போது பொன்னும் நவரத்தினமும்
பரிசாகக் குவியும். அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவனோடு வாழ வேண்டும்; பிறக்கும் குழந்தைக்கு அவள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். பதினைந்து
வயதுக்குட்பட்ட அந்தச் சிறுமி, தன்
விருப்பம் எதுவும் கேட்கப்படாமல், தாய்
அல்லது மூத்த தேவதாசியின் வழிகாட்டுதலில் வாழத் தொடங்குவாள். அவன் செல்வம்
தீர்ந்ததும் வேறொருவன்; அவளது வாழ்க்கை செல்வந்தர்களின் வருகையையும் வறுமையையும்
பொறுத்தே நகரும். தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் வரும்போது, அவள் வயதான தலைமை தேவதாசியாகிவிட்டிருப்பாள். அவள் தன் உடலின் மீது எங்கே
ஆதிக்கம் செலுத்துகிறாள்?
முத்திரை இடும் வைபோகம்
எந்தக் கோயிலுக்கானவர் என்று அடையாளப்படுத்த முத்திரை
இடுவார்கள். சிவன் கோயிலில் லிங்க முத்திரை (லிங்க பாசவி); விஷ்ணு கோயிலில் சங்கு சக்கர முத்திரை (கருட பாசவி). இரும்பில் முத்திரையைச்
செய்து பழுக்கக் காய்ச்சித் தொடையிலும் மார்பிலும் சூடு பதிப்பார்கள். வலியை மறக்க
மதுவும் தருவார்கள். இவை அனைத்தும் சமய நம்பிக்கையின் பெயராலேயே நடந்தன; அந்த அடையாளம் அவளுக்கு வாழ்நாள் அடிமைச் சின்னமாகவே அமைந்தது. சில
கோயில்களில் பாதங்களில் குலக்குறி இடப்பட்டதாக கே.கே. பிள்ளை கூறுகிறார்.
“திருவல்லம் உடையார் திருப்பாதத்திலே உதகம் பண்ணித் திரிசூலம் சாட்டித் தேவரடியாக
ஆகிவிட்டேன்” என்று முதலாம் குலோத்துங்கனின் திருவல்லக் கல்வெட்டு இதற்குச்
சான்று.
கி.பி. 1088-ல் ஒரு தாசிக்குத் தவறுதலாக அரச முத்திரை பொறிக்கப்பட்டு, பின்னர் அது அகற்றப்பட்டு, பாதங்களில்
குலச்சின்னம் இடப்பட்டதாக நந்திவர்ம கோயில் குறிப்பேட்டில் உள்ளது; இதை கா. மீனாட்சி சுந்தரம் தம் ‘வடுப்படுத்தலும் உறுப்புச் சிதைத்தலும்’
நூலில் குறிப்பிடுகிறார். தென் மாவட்டங்களில் கைக்கோளர் நெசவாளர் குடும்பங்களில், வீட்டுக்கு ஒரு பெண்ணைத் தேவதாசியாக்கும் வழக்கம் இருந்தது; அவர்கள் இரும்பு முத்திரைக்குப் பதிலாகக் கருடன், லிங்க வடிவங்களைப் பச்சை குத்துவார்கள்.
மொட்டாயி
தேவதாசி ஒழிப்புச் சட்டத்துக்குப் பின், வசதியுள்ளோர் தம் கலைத் திறமையால் பிழைத்துக்கொண்டனர். கோயிலில் விளக்கேற்றல், ஊர்வலத்தில் விளக்கு ஏந்துதல், மலர், கோல அலங்காரம் போன்ற உபரி வேலைகள் செய்தவர்கள் வேலை
இழந்தனர்; கோயில் மானியங்கள் நிறுத்தப்பட்டதால், பெரும்பாலானோர் உடலை விற்றுப் பிழைக்கும் அவலத்தில் சிக்கினர். கல்வியோ, சொத்தோ, குடும்ப ஆதரவோ இல்லாத நிலையில், கோயிலும் சமூகமும் கைவிட்ட பின், கலைத் திறமையற்றோருக்கு வாழ வேறு வழியில்லை. சில தலைமை தேவதாசிகள், தங்கள் குழுவில் சில பெண்களுக்குத் தண்டனையாக, பெண்ணுறுப்பின் உணர்வு மொட்டைத் (கிளிட்டோரிஸ்) தீய்த்துவிடுவதுமுண்டு; இது ஆந்திர, கர்நாடகப் பகுதிகளில் அதிகம் இருந்ததாகத் தெரிகிறது; இத்தகைய கொடுமைகள் வெளியே பேசப்படுவதே இல்லை. இப்படிப்பட்டவரை ‘மொட்டாயி’
என்பார்கள். கர்நாடகத்திலிருந்து வருபவர் ‘மொய்லி’, ஆந்திரத்திலிருந்து வருபவர் ‘பாசவி’.
பொட்டுக் கட்டப்படும் எல்லோரும் எம்.எஸ்.
சுப்புலட்சுமிபோலப் பாடவோ, பாலசரஸ்வதிபோல ஆடவோ முடியாது; நூற்றுக்கு ஓரிருவரே தேறுவார்கள்; அந்தச் சிலரின் புகழை வைத்துப் பெரும்பான்மையினரின் துயரத்தை மறைக்க முடியாது.
மற்றவர்களுக்குக் குடும்பமும் இடம் தராது. அவர்கள் பாலியல் தொழிலுக்குத்
தள்ளப்படுகிறார்கள்; சிலர் நோயாளராகி, இறுதிக் காலத்தில் பிச்சை எடுக்கிறார்கள். எந்தப் பாதுகாப்புமின்றிச்
சமூகத்தின் புறக்கணிப்பிலேயே முதுமை வரை வாழ்கிறார்கள்.
இன்றும் தொடரும் அவலம்
வடமாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகம்; இன்றைய தலைமுறையினர் பலரும் இந்த உண்மையை அறியாமலே உள்ளனர். திருவேலங்காடு
கோயிலைச் சுற்றி வாழும் சிலரைப் பற்றிச் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆவணப்படம்
எடுத்துள்ளனர். இது கடந்தகாலக் கதை மட்டுமல்ல; மறைந்துபோன வழக்கமும் அல்ல. நாகரிகச் சமூகம் மறந்துவிட்ட இந்தப் பெண்கள்
இன்றும் வாழ்கிறார்கள். இவர்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும்
உண்டு. பலருக்கு வீடில்லை, முகவரி இல்லை, ரேஷன் கார்டு இல்லை; பெண்களுக்கான அரசு சலுகைகளையும் பெற முடியவில்லை.
அரசு இதில் தலையிட்டு இவர்களைக் கணக்கெடுக்க வேண்டும்; பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும், வீடு, முகவரி, குடும்ப
அட்டை போன்ற அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.
கலையைக் கொண்டாடுவது வேறு; அதன் பெயரால் நடந்த சுரண்டலை நியாயப்படுத்துவது வேறு. மகிமைப்படுத்தும் கதைகளை
விடுத்து, சான்றுகளின் அடிப்படையில் உண்மையான வரலாற்றைப் பேசுவோம்; பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நிற்போம்.
தீக்கதிர் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.
.png)
No comments:
Post a Comment