Followers

Wednesday, December 11, 2019

தேசப் பிரிவினை அமித்ஷாவின் பொய்யுரை - அ.அன்வர் உசேன்



தேசப் பிரிவினை அமித்ஷாவின் பொய்யுரை - அ.அன்வர் உசேன்
குடியுரிமை திருத்த மசோதா - 2019 பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஏன் முஸ்லீம்களுக்கு மட்டுமே எதிராக உள்ளது? ஏன் இலங்கை போன்ற தேசங்கள் சேர்க்கப்படவில்லை? இந்த கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் முறையான பதிலை தர இயலவில்லை. இலங்கை தமிழர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என்பதுதான் மோடி அரசாங்கத்தின் மதிப்பீடா? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து முஸ்லீம்கள் வந்தால் இந்தியா ஏற்று கொள்ளாதா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.
ஒரு பலவீனமான கருத்தாக்கத்தை நிலைநாட்டத் திணறும் பொழுது ஒரு நபர் என்ன செய்வார்? அவதூறுகளையும் பொய்களையும் அள்ளி வீசுவார். மக்களவையில் திங்களன்று இரவு 12 மணி வரை நீடித்த இம்மசோதா மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசுகையில் அமித்ஷா இதைத்தான் செய்துள்ளார். பொய்களில் புரள்வது சங் பரிவாரத்தினருக்கு கை வந்த கலை என்பது அனைவரும் அறிந்த உண்மைதானே!
வல்லபாய் பட்டேலும் பிளவுவாதியா?
இந்த சட்டத்திற்கு கடுமையான விமர்சனம் எழுந்த பொழுது அமித்ஷா கூறினார்: “இந்த சட்டம் ஏன் தேவை என்பதை நான் கூறுகிறேன். ஏனெனில் காங்கிரஸ்தான் இந்த தேசத்தை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தியது.”
அதன் காரணமாகவே இந்த சட்டத்தை கொண்டு வருவதாக அமித்ஷா கூறுகிறார். அன்றைய காங்கிரஸ் எனில் சர்தார் வல்லபாய் பட்டேலும் உள்ளடக்கியதுதான்! அப்படி எனில் தேசத்தை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தியதில் பட்டேலும் குற்றவாளி என்கிறாரா அமித்ஷா? ஏனெனில் 1945க்கு பிறகு எந்த ஒரு தருணத்திலும் தேசப்பிரிவினையை பட்டேல் எதிர்க்கவில்லை. காங்கிரசின் உள் விவாதங்களில் கூட பட்டேல் எதிர்த்ததாக ஆதாரம் இல்லை. மாறாக அன்றைய சூழலில் பிரிவினை மிக அவசியமான ஒன்று என்பதுதான் பட்டேலின் நிலைபாடு.
பிரிவினை குறித்து காந்திஜி கீழ்கண்டவாறு தனக்குத் தானே கூறிக்கொண்டதாக அவரது சீடர் பியாரேலால் குறிப்பிடுகிறார்: “நான் இன்று தனியாளாக ஆகிவிட்டேன். சர்தார் (பட்டேலும்) மற்றும் ஜவஹர்லால்(நேரு) கூட தேசத்தை பிரிவினை செய்து விட்டால் அமைதி திரும்பிவிடும் என எண்ணுகின்றனர்......பிரிவினை மூலம் இப்பிரச்சனையை தவறாக கையாள்கிறோம் என்பதில் நான் தெளிவாக உள்ளேன். ............ (பிரிவினையின்) விளைவுகள் உடனடியாக தெளிவாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் இவ்வளவு பெரிய விலையை கொடுத்து நாம் பெறும் விடுதலையின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக இருக்கப் போகிறது என்பது எனக்கு தெளிவாக தெரிகிறது.”
(மகாத்மா காந்தி வாழ்வின் இறுதிக் கட்டம்/இரண்டாம் தொகுதி பக் : 210/11/ இ.எம்.எஸ். பக்/897.)
காங்கிரசையும் நேருவையும் விமர்சிக்கும் கண்மூடித்தனமான வெறி காரணமாக பட்டேலையும் விமர்சிக்கும் நிலைக்கு அமித்ஷா தள்ளப்படுகிறார்.
பிரிவினையை ஆதரித்த இந்துத்துவவாதிகள்
1930களில் பிரிவினையை முன்வைத்தது முஸ்லீம் லீக் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அதில் மிக அடிப்படையாக இருந்தது ஜின்னாவின் சுயநலமும் அவர் பிரதிநித்துவப்படுத்திய முஸ்லிம் முதலாளி வர்க்கத்தின் நலனும்தான் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை! எனினும் பிரிவினைக் கருத்துக்களை முன்வைத்த இன்னொரு பகுதியினர் இந்துத்துவாதிகள் ஆவர். இன்னும் சரியாக சொல்வதானால் முஸ்லீம் லீகிற்கு முன்பே பிரிவினை தொடர்பான பல கருத்துகளையும் கோட்பாடுகளையும் முன்வைத்தன இந்துத்வா அமைப்புகள்! இந்துத்துவ தேசியத்தின் பிதாமகர்கள் என கருதப்படுபவர்கள் ராஜ் நாரயண் பாசு(1826-99) மற்றும் நபா கோபால் மித்ரா (1840-94) ஆவர். ராஜ் நாரயண் பாசு என்பவர் அரவிந்த கோஷ் அவர்களின் தாய் வழிப் பாட்டனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மகா இந்து சமிதி மற்றும் பாரத் தர்ம மகாமண்டல் ஆகிய அமைப்புகளை உருவாக்கினர். இந்த அமைப்புகள் மூலம் இந்துக்கள் “ஆரிய தேசத்தை“ இந்தியாவில் உருவாக்க முடியும் என பிரச்சாரம் செய்தனர். இந்த ஆரிய தேசத்தில் சாதிய பிரிவினைகள் இருக்கும் எனவும் அது நியாயமானது எனவும் அவர்கள் கூறினர். இவர்கள் உருவாக்கிய மேற்படி அமைப்புகள்தான் பின்னர் இந்து மகாசபையாக பரிணமித்தது.
(நரேந்திர சிங்/இந்திய வரலாறு தகவல் களஞ்சியம்/ பக்:588-590/ ஷம்சுல் இஸ்லாம்/பக்:55.)மதங்கள் அடிப்படையில் (இந்தியா- பாகிஸ்தான் என) இரு தேசங்கள் கோட்பாட்டை ஜின்னா முன்வைப்பதற்கு 50 ஆண்டு களுக்கு முன்பே நபா கோபால் மித்ரா இந்த கருத்தை முன்வைத்தார் என்கிறார் வரலாற்று ஆசிரியர் ஆர்.சி. மஜும்தார்.
பாய் பரமானந்த்
ஆரிய சமாஜம் அமைப்பின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவர் பாய் பரமானந்த் (1874-1947). இவர் இந்து மகாசபா மற்றும் காங்கிரசின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் 1908ம் ஆண்டு கீழ்கண்டவாறு எழுதினார்: “சிந்து பகுதிக்கு அப்பாற்பட்ட நிலப்பரப்பை ஆப்கானிஸ்தானு டனும் வடமேற்கு எல்லை மாகாணத்துடனும் இணைத்து முஸல்மான் களின் பெரிய அரசாட்சியை உருவாக்க வேண்டும். அங்கு வாழும் இந்துக்கள் அங்கிருந்து வெளியேறி வர வேண்டும். இந்தியாவின் இதர பகுதிகளில் வாழும் முஸல்மான்கள் இங்கிருந்து வெளியேறி முஸல்மான்களின் பகுதிக்கு சென்று குடியமர வேண்டும்.
(­பரமானந்த் பாய்/ எனது வாழ்வின் கதை/பக்.36/ ஷம்சுல் இஸ்லாம்/பக்:57) - இவர் இவ்வாறு எழுதியது 1908ம் ஆண்டு. அப்பொழுது முஸ்லீம் லீக் அல்லது ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைக்கவில்லை. அந்த காலகட்டத்திலேயே முஸ்லீம்கள் நாடு எனவும் இந்துக்கள் நாடு எனவும் பாய் பரமானந்த் வலுவாக
எழுதியும் பேசியும் வந்துள்ளார். அதாவது 1947ல் பாகிஸ்தானிலிருந்து இந்துக்களும் இந்தியாவிலிருந்து இசுலாமியர்களும் வெளியேறும் பிரிவினைத் திட்டத்தை 1908ம் ஆண்டே பாய் பரமானந்த் முன்வைத்தார் என்பது கவனிக்கத்தக்கது.

சாவர்க்கர்
1937ம் ஆண்டு அகமதாபாத் இந்துமகாசபை கூட்டத்தில் வி.டி.சாவர்க்கர் கீழ்கண்டவாறு தெளிவாக கூறினார்: “இந்தியாவில் இரண்டு முரண்பட்ட தேசங்கள் அருகருகே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. (இந்த இரண்டு தேசங்களும்)ஒன்றாக கூடி வாழ்கின்ற நாடாக இந்தியா உள்ளது என்றோ அல்லது இரண்டு தேசங்களையும் ஒன்றுபடுத்திவிட முடியும் என்றோ சில சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் எண்ணுகின்றனர். அது மிகப்பெரிய தவறு ஆகும்”. அவர் மேலும் கூறுகிறார்:
“இந்தியா ஒரே தேசமாக அல்லது ஒற்றைத் தன்மை கொண்ட தேசமாக உள்ளது என்று கருத முடியாது. மாறாக இரண்டு தேசங்கள் இந்தியாவில் உள்ளன. ஒன்று முஸ்லீம்கள் தேசம்; மற்றொன்று இந்துக்கள் தேசம்”.
கோல்வால்கர்
1939ம் ஆண்டு வெளியிடப்பட்ட தனது “நாம் அல்லது நமது தேசியம் வரையறுக்கப்பட்டது” எனும் ஆவணத்தில் கோல்வால்கர் கீழ்கண்டவாறு நஞ்சை உமிழ்கிறார்: “இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்; இந்து மதத்தை புகழ்பாட வேண்டும். இந்து இனத்தையும் கலாச்சாரத்தையும் புகழ்பாடுவதை தவிர வேறு எந்த சிந்தனையும் (இந்துக்கள் அல்லாதவர்களுக்கு) இருக்கக்கூடாது. “அவர்கள் அன்னியர்களாக இருப்பதை நிறுத்த வேண்டும். (அவர்கள் அன்னிய மதத்தை கைவிடாவிட்டல்) இந்து தேசத்திற்கு முற்றிலும் அடிமைகளாக மட்டுமே இருக்கலாம். எந்த உரிமையை யும் அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. இந்திய குடிமகனுக்கான உரிமையைக் கூட எதிர்பார்க்கக்கூடாது”
(நாம் அல்லது நமது தேசியம் வரையறுக்கப்பட்டது/பக்: 48.)இவ்வாறு இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் ஆகிய இரண்டு மதத்தவரும் இரண்டு தேசங்கள்; அவர்கள் இந்தியா எனும் ஒரே நாட்டிற்குள் சேர்ந்து வாழ முடியாது என இந்துத்துவவாதிகள் திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்தனர். பாய் பரமானந்த் போன்றவர்கள் முஸ்லீம்களுக்கு தனி நாட்டை உருவாக்கி அவர்களை அங்கு விரட்டிவிட வேண்டும் என்று கூறினார். வரலாற்று ரீதியாக பார்த்தால் தேசப்பிரிவினை குறித்து முதலில் பேசியது இந்துத்துவவாதிகள்தான்!
பிரிவினையை எதிர்த்த கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய சோசலிஸ்டுகள் சார்பாக ஜெயப் பிரகாஷ் நாராயணனும் கம்யூனிஸ்டுகள் சார்பாக பி.சி. ஜோஷியும் பிரிவினையை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்தனர். பி.சி.ஜோஷி, பிரிவினைத் திட்டம் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்: “இந்தியாவைத் துண்டாடுகின்ற பிரிட்டிஷாரின் புதிய திட்டம் விடுதலை இயக்கத்திற்கு எதிரானது. இந்திய விடுதலை இயக்கத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் எனும் பிரிட்டஷா ரின் விரக்தியின் அடிப்படையில் உருவான கடைசி முயற்சி இது. (பிரிவினை இல்லாத) ஒட்டுமொத்த இந்தியாவின் முழு விடுதலை வேண்டும் என்பதுதான் விடுதலை இயக்கத்தின் குறிக்கோள் ஆகும்.”
பிரிவினை குறித்து பிரிட்டஷ் கம்யூனிஸ்ட் தலைவர் ரஜினி பாமிதத் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்: “பிரிவினை என்பது இந்தியாவுக்கு தீர்வு அல்ல; மாறாக கொடும் தீமைகளையே விளைவிக்கும். எதிர்கால மோதல்களுக்கான விதையாகவே பிரிவினை விளங்கும்.” இதனை பாமிதத் எழுதியது 1947ம் ஆண்டு ஜூலை மாதம்; அதாவது விடுதலைக்கு ஒரு மாதம் முன்பு. ஆனால் அது மிகச்சரியான மதிப்பீடாக அமைந்தது என்பதைக் கூறத் தேவை இல்லை.
(Labour Monthly/The Mountbatten Plan For India/R Palme Dutt)
பிரிவினையை எதிர்த்த முஸ்லீம்கள்
ஜின்னா முன்வைத்த பாகிஸ்தான் கோரிக்கையை எதிர்த்த கணிசமான முஸ்லீம்கள் உண்டு. பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்து சுயேச்சையான தேசபக்த முஸ்லீம்கள் மாநாடு 1940ம் ஆண்டு ஏப்ரல் 27 முதல் 30 வரை தில்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்த ஒரு லட்சம் முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். அகில இந்திய ஜமாத்துல் உலமா/அகில இந்திய மொமீன் மாநாடு/அகில இந்திய மஜ்லீஸ் அமைப்பு/அகில இந்திய ஷியா அரசியல் மாநாடு/பக்துன் மக்களின் குதாய் கிட்மடர்கள்/ பலுச்சிஸ்தானின் அஞ்சுமனே வட்டான்/அகில இந்திய முஸ்லீம் மஜ்லிஸ் ஆகிய பல அமைப்புகள் பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தன.
பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிரான குரல்கள் தமிழகத்திலும் ஒலித்தன. 1941ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கும்பகோணத்தில் பிரிவினை எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. மதறாஸ் மாகாண முஸ்லீம் லீக்கின் தலைவர்களாக இருந்த அல்லா பிச்சை மற்றும் பஷீர் அகமது சையத் ஆகியோர் பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்து தமது பதவிகளிலிருந்து விலகினர்.
(The political evolution of Muslims in Tamilnadu and Madras/P. More/page 190.) எனவே, தேசப் பிரிவினைக்கு காரணமான குற்றவாளிகள் என பட்டியலிட்டால் கீழ்கண்டவாறு கூற வேண்டும்: முதல் குற்றவாளி - முகம்மதலி ஜின்னா தலைமையிலான முஸ்லீம் மதவாதம். இரண்டாவது குற்றவாளி- சாவர்க்கர்/ கோல்வால்கர் தலைமையிலான இந்து மதவாதம். மூன்றாவது குற்றவாளி- இந்த முரண்பாடுகளை கூர்மையாக்கிய பிரிட்டஷ் ஆட்சியாளர்கள். 1945 வரை பிரிவினையை எதிர்த்த காங்கிரஸ் பின்னர் அதனை ஏற்றுக் கொண்டது. இதில் மோடியும் அமித்ஷாவும் சிலாகிக்கும் வல்லபாய் பட்டேலும் அடங்குவார். இந்த உண்மைகளை அமித்ஷா மறைக்க முயல்கிறார். எனினும் விடுதலைக்குப் பிறகு இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பது பட்டேல், நேரு உட்பட்ட காங்கிரஸ் மட்டுமல்ல; கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், அம்பேத்கர் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்ட கோட்பாடு. இந்திய மக்களும் இதனை அங்கீகரித்தனர். இந்த கோட்பாடு மீதுதான் சங் பரிவாரம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. குடியுரிமை திருத்த மசோதா 2019 இந்த தாக்குதலில் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வு. இந்த சவாலை எதிர் கொள்ள வேண்டிய தேவை மிக முக்கிய அரசியல் கடமையாக முன்வந்துள்ளது எனில் மிகை அல்ல.
தகவல் உதவி
தீக்கதிர்
11-12-2019


2 comments:

Dr.Anburaj said...

என் பிணத்தின் மீதுதான் பிரிவினை நடக்க முடியும் என்றாா். நவகாளியில் கலவரம் நேரடி நடவடிக்கை என்று மிகக் கொடுயான செயல்களை செய்து இந்துக்களை அழித்தது முஸ்லீம் லீக்தான். இந்து அமைப்புகளுக்கு அகில இந்திய அளவில் இந்துக்கள் மத்தியில் 0.001 சதம் கூட செல்வாக்கு கிடையாது. மக்கள் ஆதரவை பெற்ற கட்சி காங்கிரஸ்தான். மற்ற இந்து அமைப்புகள் தூசிதான். காங்கிரஸ் கட்சியையே ஜின்னா பல இடங்களில் இந்துக்கள் கட்சி என்று விமா்சனம் செய்கிறாா்.
----------------------------
கறந்தபால் முலை போகாது.
இனி பிரிவினைக்கு முந்திய காரணங்கள் குறித்து பேசி என்ன பயன் ? இனிமேல் அமைதியாக வாழ என்ன வழி ? அமைதி வளா்ச்சி இதுதான் இந்தியாவிற்கு கொள்கையாக உள்ளது.பாக்கிஸதானுக்கு இல்லை.
-------------------------------------------------------------------------
இந்த சட்டம் ஏன் முஸ்லீம்களுக்கு மட்டுமே எதிராக உள்ளது?
தவறு- இந்திய முஸ்லீம்களுக்கும் இந்த சட்டத்திற்கும் சம்பந்தமேயில்லை.
இந்திய அரசின் எல்லைகுட்பட்டவர்கள் இந்திய முஸ்லீம்கள் மட்டுமே.தனிநாடு பெற்று 8,81,913 சதுர கிலோ மீட்டா்பகுதியை இந்தியாவில் இருந்து வெட்டி பிளந்து பெற்று விட்டு 3 போர்களை நடத்தி பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு படுகொலைகள் நடத்திவரும் பாக்கிஸ்தானில் வாழ்ந்து விட்ட முஸ்லீம்கள் ஆபத்தானவர்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் கேள்வியே எழக் கூடாது. அவர்கள் உம்ரா-தங்களின் பிரச்சனைக்கு பாக்கிஸ்தானில் தீர்வு காணத்தான் வேண்டும்.
ஆக்கரமிக்கப்பட்ட பகுதியில்உ ள்ள முஸ்லீம் இந்தியாவிற்குள் வர அனுமதிக்க வேண்டாம். பாக்கிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியின் சொந்தக் காரன்.பங்காளி.அவன் அங்குதான் வாழ வேண்டும். அங்கு வாழந்து இடம் பெயா்ந்த இந்துக்களை அங்கு குடியேற்ற வேண்டும்.
பாக்கிஸ்தான் பிரஜையான முஸ்லீம் அகதி அல்ல.அவன் 8,81,913 சதுர கிலோ மீட்டா் பகுதிக்கு பங்காளி சொந்தக்காரன். அங்கு வாழும் இந்து . 8,81,913 சதுர கிலோ மீட்டா்பகுதிக்கு அவன் சொந்தம் கொண்டாட அந்த அரசு மறுத்து விட்டது.ஆகவே இந்து அகதியாகின்றான். அகதிக்கு பிச்சை போடுவதில் முஸ்லீம்கள் பங்கு கேட்பது விநோதமே.வம்புதான்.

Dr.Anburaj said...

சிந்து பகுதிக்கு அப்பாற்பட்ட நிலப்பரப்பை ஆப்கானிஸ்தானு டனும் வடமேற்கு எல்லை மாகாணத்துடனும் இணைத்து முஸல்மான் களின் பெரிய அரசாட்சியை உருவாக்க வேண்டும். அங்கு வாழும் இந்துக்கள் அங்கிருந்து வெளியேறி வர வேண்டும். இந்தியாவின் இதர பகுதிகளில் வாழும் முஸல்மான்கள் இங்கிருந்து வெளியேறி முஸல்மான்களின் பகுதிக்கு சென்று குடியமர வேண்டும்.
----------------------------------------------------------------------
பாகப்பிரிவினை நடந்தால் இப்படித்தான் நடக்க வேண்டும்.

இந்தியாவில் இன்று 20 கோடிக்கு மேல் முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனா்.நியாயமாக பார்த்தால் அனைவரும் பாக்கிஸ்தான் கிழக்கு பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் சென்று இருக்க வேண்டும்.ஆனால் நயவஞ்சகமாக காங்கிரஸ் கட்சியும் அப்பாவி இந்துக்களையும் ஏமாற்றி முஸ்லீம்கள் இன்று இந்தியாவில் பெரும்ச க்தியாக வளா்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் பாக்கிஸ்தான் முஸ்லீம்களுக்கும் இடம் கொடுக்க வேண்டும்எ ன்று கோருவது அநியாயம்தான். முஸ்லீமகள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியே செல்லுங்கள். அ்ங்கிருக்கும் இந்துக்கள் அனைவரையும் இந்தியாவிற்கு அனுப்பி விடுங்கள்.சம்மதம்.
இந்த சட்டத்திற்கு அவசியம் இல்லை.