Followers

Wednesday, October 07, 2020

தனக்குத் தானே வலைவிரித்து சிக்கினார் .

 இந்து அதிரடிப்படை பொது செயலாளர் ஸ்கூட்டர் எரிவதை செல்போனில் 20 நிமிடம் படம் பிடித்தது அம்பலம்!

 

தனக்குத் தானே வலைவிரித்து சிக்கினார் .


ஈரோடு , அக் , 5 : 

இந்து அதிரடிப்படை பொதுச்செயலாளர் ராஜகுரு , தன்னை தீவிரவாதிகள் கொல்ல முயன்றதாக நாடகமாடியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார் . ஸ்கூட்டரை அவரே எரித்துவிட்டு அதனை 20 நிமிடம் செல்போனில் படம்பிடித்துள்ளார் . இதன் மூலம் அவர் போலீசாரிடம் எளிதில் சிக்கிக் கொண்டார் . 


கோபி அருகே கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ராஜகுரு ( 31 ) . இந்து அதிரடிப்படை மாநில பொது செயலாளராக இருந்து வருகிறார் . 


இவர் கடந்த 1 ம் தேதி இரவு 4 பேர் தன்னை கொலை செய்வதற்காக கத்தியுடன் துரத்தி வந்ததாகவும் , அவர்களிடம் இருந்து தப்ப வாய்க்காலில் குதித்து கரையேறி தப்பிவிட்டதாகவும் , தன்னை கொலை செய்ய முடியாததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் தன்னுடைய ஸ்கூட்டரை தீ வைத்து எரித்துவிட்டு தப்பி சென்று விட்டதாகவும் கோபி போலீசாரிடம் கூறி இருந்தார் . 


விசாரணையில் ராஜ குருவை யாரும் துரத்தி வரவில்லை என்பதையும் அவரே தனது ஸ்கூட்டரை எரித்து தானே நாடகமாடியதும் தெரிய இதையடுத்து ராஜகுருவை கோபி போலீசார் கைது செய்தனர் , ராஜ குரு நாடகமாடியதை போலீசார் எப்படி கண்டுபிடித்தனர் என்பது குறித்து மாவட்ட எஸ்.பி.சிவக்குமார் கூறியதாவது : 


சம்பவ தினத்தன்று ராஜகுரு ஸ்கூட்டரை எரித்துவிட்டு , எரிந்து கொண்டிருந்த ஸ்கூட்டரை அவரது செல்போனில் படம் பிடித்துள்ளார் . அவரை மர்ம ஆசாமிகள் துரத்திய போது வாய்க்காலில் குதித்து தப்பி ஓடியதாக போலீசாரிடம் கூறியிருந்தார் . உடனடியாக அங்கிருந்த ராஜகுருவின் ஆடைகள் நனையாமல் இருந்ததை கவனித்துள்ளனர் . ஓடிச்சென்று வாய்க்காலில் குதித்து தப்பியதாக கூறியதற்கான எந்த சுவடும் அவரிடம் இல்லை . 


ஓடும்போது காலணியை தாறுமாறாக சுழற்றி விட்டு தப்பி சென்றதாக கூறியிருந்தார் . ஆனால் போலீசார் சென்றபோது காலணி ஒரே இடத்தில்தான் கிடந்தது . அவரது செல்போனை சோதனை செய்தபோது ஸ்கூட்டர் எரிந்து கொண்டிருப்பதை 20 நிமிடங்கள் வரைபடம் பிடித்திருப்பது தெரியவந்தது. 


தன்னை துரத்தி வந்த கும்பல் ஸ்கூட்டரை எரித்து விட்டு சென்று நீண்ட நேரம் கழித்துதான் சம்பவ இடத்திற்கு வந்ததாக ராஜகுரு கூறியிருந்தார் . 


ஆனால் செல்போனில் 20 நிமிடம் வரையிலும் ஸ்கூட்டர் எரிந்து கொண்டிருக்கும் காட்சியை படம் பிடித்திருந்ததால் ராஜகுரு மீது சந்தேகம் வந்தது , 


விசாரணையில் ஸ்கூட்டரை ராஜகுருவே எரித்தார் என்பது தெரியவந்ததையடுத்து அவர் மீது கூகலூர் விஏஓ வெங்கடாசலத்திடம் இருந்து புகார் பெறப்பட்டு கைது செய்யபப்பட்டார் . இவ்வாறு எஸ்.பி. , சிவகுமார் தெரிவித்தார் ,

3 comments:

Dr.Anburaj said...

சமூகத்தோடு பிணைந்தது தனிநபரின் மனநலன்
நலம் என்பது என்ன? இன்றைய காலகட்டத்தின் மிக அவசியமான கேள்வி. பெரும்பாலான நேரங்களில் நோய்கள் எதுவும் இல்லாதிருக்கும் நிலையையே நலம் என்று நாம் கருதிக்கொள்கிறோம். ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் வரையறையின் படி ‘முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த உடல், உள்ளம், சமூகத்தின் ஆரோக்கியமே நலம்’.

அன்றாட வாழ்க்கையில் நாம் நலம் எனக் கவலைப்படுவது எல்லாம் உடல் நலத்தைப் பற்றி மட்டுமே. உள நலனோ அல்லது சமூக நலனோ நலம் தொடர்பாக நாம் கொண்டிருக்கும் வரையறைக்குள் வருவதில்லை. முதிர்ச்சியான உள்ளமும், பொறுப்பான சமூகமும் எப்படி தனிப்பட்ட ஒருவரின் உடல் நலனைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றன என்பதைக் கண்கூடாக இந்த கரோனா காலத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதே வேளையில், உடல் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு உள நலனையும், சமூக நலனையும் நாம் எப்படிப் புறக்கணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதையும் இந்தக் காலத்தில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

மனநலமும் மனநோயும்

உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டதை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். நாம் இன்று புழங்கும் உலகின் வன்முறை இயல்புக்கான உதாரணம் அது. பலர் இதே வெறுப்பு - வன்மத்தின் வேறு வடிவத்தை இணையத்தில் இன்று பலரிடம் காண முடிகிறது. குறிப்பாக, பல இளைஞர்கள் இன்று எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக, நிதானமற்றவர்களாக, சுயநலமிக்கவர்களாக, கேளிக்கைவாசிகளாக இருக்கிறார்கள். எதிலும் ஆழ்ந்த வாசிப்பு இல்லை, மனிதர்கள் மீதான கரிசனங்களோ அல்லது பெரும் மதிப்பீடுகளோ இல்லை, நீடித்த உறவை அவர்களால் யாருடனும் பேண முடிவதில்லை, மொத்தத்தில் சகிப்புத்தன்மை குறைந்த, உயர்ந்த சிந்தனைகளோ அல்லது லட்சியங்களோ எதுவுமற்ற ஒரு தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆசியாவிலேயே இளைஞர்களின் தற்கொலை வீதம் அதிகமாக இருக்கும் நாடாக இந்தியா இன்று திகழ்கிறது என்பதை இங்கே இணைத்துப் பார்க்க வேண்டும். ஆனால், பொதுவில் அப்படி அணுகப்படுவதில்லை என்பதற்கு மாணவர்களின் தற்கொலைகள் ஓர் உதாரணம். சமூக, பொருளாதாரப் பின்புலங்கள் அத்தனையும் புறந்தள்ளப்பட்டு ஒரே தேர்வு, ஒரே கல்வி என அவர்களின் அறிவுசார் மதிப்பீடுகள் புதிய வடிவம் பெறுவதன் விளைவாக நிகழும் மாணவர்களின் தற்கொலைகளைக்கூட அந்தந்தத் தனிப்பட்ட மாணவர்களின் மனநிலையோடு தொடர்புபடுத்தி முடிப்பதுதானே இங்கு நடக்கிறது?.......2

Dr.Anburaj said...



இப்போதைய கொள்ளைநோய் காலகட்டத்தை எடுத்துக்கொள்வோம். “ஊரடங்கானது மக்களின் பொருளாதார நிலையிலும் அன்றாட வாழ்க்கையிலும் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் மனநலத்தைப் பாதுகாப்பதற்கான செயல்பாடுகளை அந்தந்த நாடுகள் துரிதப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இது மிகப் பெரிய சமூக, பொருளாதாரப் பிரச்சினையாக உருவெடுக்கும்” என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ். எத்தனை சமூகங்கள் இதைக் கவனத்தில் கொள்கின்றன?

பொதுவாகவே, நாம் மனநலத்தையும் மனநோயையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்திக்கொள்கிறோம். அதன் விளைவாகவே மனநலம் தொடர்பாகப் பேசத் தயங்குகிறோம். நான் மனநலத்துடன் இல்லை அல்லது எனது மனம் ஆரோக்கியமாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுப்பதற்குக் காரணம், அது மனநோய் என்று உருவகப்படுத்தப்படுமோ என்ற பயம்தான். அதனால்தான், மனநலம் என்ற வார்த்தையின் மீதே நமக்கு ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டுவிடுகிறது.

மனநலப் பிரச்சினைகளை நமக்குள்ளே ரகசியமாய் வைத்துக்கொள்கிறோம்; அதற்கான உதவிகள் கேட்பதைக்கூடப் பலவீனமாய் நினைத்துக்கொள்கிறோம். மனநலம் தொடர்பாகத் தனிப்பட்ட முறையில் நாம் கொண்டிருக்கும் இந்தக் கற்பிதங்கள்தான் மனதைப் பற்றி நாம் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கும் நிலைக்குக் காரணம்.

தனிப்பட்ட ஒருவரின் மனநலம் என்பது அந்தத் தனிப்பட்ட நபர்தான் பொறுப்பு என்பதும்கூட தவறான வாதம். ஒரு சமூகத்தின் மானுடம் பற்றிய மதிப்பீடுகள், அறங்கள், விழுமியங்கள் ஆகியவைதான் தனிப்பட்ட ஒருவரின் மனநிலையை வளர்த்தெடுக்கின்றன. குற்றங்களும் தற்கொலைகளும் பட்டினிச் சாவுகளும் அதிகளவில் நடக்கும் சமூகம் தன்னளவில் ஆரோக்கியம் குன்றிய ஒன்றாகவே இருக்கிறது. இந்த நிலையில், அந்தச் சமூகம் முழுமையாக அதன் கோட்பாடுகளையும் மதிப்பீடுகளையும் மாற்றிக்கொள்ளாத வரை அந்தச் சமூகத்தில் நடக்கும் குற்றச் செயல்களையோ தற்கொலைகளையோ தவிர்க்க முடியாது. அந்த வகையில் தொடர்ச்சியாகத் தற்கொலைகளும் குற்றச் செயல்களும் நடக்கும்போது அந்தத் தனிப்பட்ட நபர்களை மட்டுமே அதற்குக் காரணமாகச் சொல்வது அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஒரு உத்தியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

Dr.Anburaj said...



அனைவருக்குமான மனநலம்

சமூகத்தின் நலனும் மனநலனும் ஒன்றோடொன்று இணைந்தது என்னும் கருத்தாக்கத்தின் வழியாகவே மனநலம் தொடர்பான உரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். மனநலம் என்பது மனநல மருத்துவமனைக்கு வெளியே விவாதிக்க வேண்டிய ஒன்றாகவே எப்போதும் பார்க்க வேண்டும். மாத்திரைகளிலோ உளவியல் சிகிச்சைகளிலோ ஆலோசனைகளிலோ மனநலம் சாத்தியப்பட்டுவிடும் போன்ற நம்பிக்கைகளிலிருந்து வெளியே வர வேண்டும்.

அறநெறிகளையும் சிந்தனைகளையும் வளர்த்தெடுக்கும் சுமையற்ற கல்வி, பாகுபாடில்லாத பார்வையையும் பாசாங்கற்ற நடத்தையையும் சுய ஒழுக்கத்தையும் பிரதானமாகக் கொண்ட வளர்ப்பு முறை, சமத்துவத்தையும் சுதந்திரப் போக்கையும் சமூக ஒழுங்கையும் எப்போதும் கொண்டிருக்கும் முதிர்ச்சியான சமூகம் என இத்தனையும் சேர்ந்தே ஒருவரின் மனநலத்தைத் தீர்மானிக்கின்றன. ‘அனைவருக்குமான மனநலம்’ என்ற உலக மனநல அமைப்புகளின் பிரச்சாரம் இவை அத்தனையையும் உள்ளடக்கியதாக இருந்தால் மட்டுமே நாம் முழுமையான நலத்தை நோக்கி நகர முடியும். அப்படிப்பட்ட நலத்தின் வழியாகவே நாம் ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கட்டமைக்க முடியும்.

- சிவபாலன் இளங்கோவன்,

மனநல மருத்துவர், எழுத்தாளர்.