Followers

Saturday, October 24, 2020

இன்னிசை ராணி

 இன்னிசை ராணி

==================
ஒரு காலத்தில் இந்தப் பெண்மணியின் இனிமையான குரல் ஒலிக்காத இஸ்லாமியர்களின் வீடே கிடையாது என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்லலாம். இவரது பாடல்கள் எல்லோருடைய உதடுகளையும் முணுமுணுக்க வைத்தது. இதமான குரல். இனிமையான சாரீரம். பண்ணிசையில் இலகுவான ஏற்ற இறக்கம். கண்ணை மூடிக் கொண்டு கேட்டாலும் இது கே.ராணி உடைய குரல் என்று எளிதில் கண்டுபிடித்துச் சொல்லி விடலாம்.
நாகூர் இசைமுரசு இ.எம்.ஹனிபாவுடன் இப்பெண்மணி இணைந்து பாடிய பாடல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. அத்தனையும் முத்துக்கள்.
இப்பாடல்களில் புலவர் ஆபிதீன் காக்கா, கவிஞர் நாகூர் சலீம் போன்றவர்களுடைய எழுத்தாற்றல் அதற்கு துணை நின்றது.
இசைமுரசு நாகூர் ஹனிபா எத்தனை எத்தனையோ இஸ்லாமியப் பாடல்கள் பாடியிருந்தாலும் தொடக்க காலத்தில் அவர் கே. ராணியுடன் இணைந்து பாடிய பாடல்களுக்கு நிகரில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இசை ஞானத்தில் இருவருக்கிடையிலும் நல்ல புரிதல்கள் இருந்தன. டி.எம்..எஸ்ஸுக்கு இணையான ஜோடி பி.சுசீலா போன்று, முஹம்மது ரஃபிக்கு இணையான ஜோடி லதா மங்கேஷ்கர் போன்று, இஸ்லாமியப் பாடல்களுக்கு நாகூர் ஹனிபா - கே.ராணி ஜோடி என்ற அளவில் சிலாகித்து பேசப்பட்டது.
இன்று, இசைமுரசு நாகூர் ஹனிபா, கே.ராணி இருவருமே நம்மிடையே இல்லை. ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய இன்னிசை என்றென்றும் நம் காதுகளில் தேனாய் பாய்ந்துக் கொண்டிருக்கிறது.
கே.ராணி பாடிய கீழ்க்கண்ட இஸ்லாமியப் பாடல்கள் அன்றும், இன்றும், என்றும் பசுமரத்தாணியாய் நம் மனதில் நீங்காது நிலைத்திருக்கும்.
அன்பு மார்க்கம் தந்த எங்கள் அஹ்மதே யா முஸ்தஃபா !
அறிவு தீபம் ஏற்றி வைத்த முஹம்மதே யா முஸ்தஃபா !
**********************************************************
திருமறையின் அருள்மறையில் விளைந்திருப்பதென்ன?-அறிவு
இறைத்தூதர் நபி பொன்மொழியில் பொதிந்திருப்பதென்ன-அன்பு
***********************************************************
ஓதுவோம் வாருங்கள் !
லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
உயர் கலிமாவின் பொருள் உலகெங்கும் கேட்க
**************************************************************
நெஞ்சிலே வாழ்கின்றவர் ! நேர்வழி காட்டுபவர் !
நானிலம் போற்றுபவர் ! நீதர் நபியாம் நாயகர் !
***************************************************************
தீனோரே நியாயமா மாறலாமா !
தூதர் நபி போதனையை மீறலாமா ! உள்ளம் சோரலாமா !
****************************************************************
வாழ வாழ நல்ல வழிகள் உண்டு ! நபி வழங்கிய நெறிகளிலே !
வாரி வாரி தந்த வைரம் உண்டு ! அவர் வாய்மலர் மொழிகளிலே !
*****************************************************************
எல்லாம் வல்ல ஏகன் நீயே ! இணையில்லாத அல்லாஹ் நீயே !
என்றும் புகழ்வோமே அல்ஹம்துலில்லாஹ் !!
******************************************************************
அருள் மேவும் ஆண்டவனே ! அன்புடையை காவலனே !
இருள் நீக்கும் தூயவனே ! இணையில்லாத அல்லாஹ்வே !
********************************************************************
தீன் கொடி நாட்டிய தேவா ! - இறைத்
தூதரே யா முஸ்தபா !
********************************************************************
பாலைவனம் தாண்டி போகலாமே நாம் !
புவிபோற்றும் மதினா நகராளும் நபியை நாம் !
பண்போடு சென்று காணலாம் !!
*********************************************************************
எல்லா உலகும் ஏகமாய் ஆளும் இணையற்ற அல்லாஹ்வே !
வல்லமை வாய்ந்த உன்னிடம் நாங்கள் மன்னிப்பை வேண்டுகிறோம் !
*********************************************************************
மக்கள் யாவரும் ஒன்றே குலமெனும் மார்க்கம் வந்தது யாராலே?
மக்காவென்னும் நகரம் தந்த மாந்தர் திலகம் நபியாலே !
**********************************************************************
இன்ப வாழ்வு பொங்கிட வேண்டும் !
ஏழை எளியோர் உயர்ந்திட வேண்டும் !
அன்பு எங்கும் பரவிட வேண்டும் !
யா அல்லாஹ் ! யா அல்லாஹ் !
கருணை செய்வாய் !!
***********************************************************************
இன்று வந்து நாளை போகும் நிலையிலே
என்ன செய்து வாழுகின்றாய் உலகிலே?
************************************************************************
இஸ்லாமியப் பாடல்கள் மாத்திரமே இவர் பாடியிருக்கிறார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவருடைய சாதனைகளின் மறுபக்கம் சரியாக எடுத்துரைக்கப்படவில்லை என்பது என் கருத்து. பி.சுசிலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரியைத் தெரிந்து வைத்திருக்கின்ற அளவுக்கு இவரை யாரும் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது வருத்தமான செய்தி.
வெறும் எட்டே வயது நிரம்பிய சிறுமியொருத்தி திரைப்படங்களில் பின்னணி பாடி, வானளாவிய புகழைப் பெற்றார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
சிறுமுது திறனாளியாக (Child Prodigy), குழந்தை மேதையாக இவர் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.
அக்காலத்தில் வைஜயந்திமாலாவின் நாட்டிய நிகழ்ச்சி பெரிய அரங்குகளில் நடைபெறும். நிகழ்ச்சிக்கிடையில் அவர் உடைமாற்றிக் கொண்டு வர சற்று நேரம் பிடிக்கும். அந்த இடைவெளி நேரத்தை பூர்த்தி செய்வதற்கு 5 வயது குழந்தையாக, அருமையாக பாடக்கூடிய திறன் படைத்திருந்த சிறுமி ராணியை மேடையில் ஏற்றி பிரபலமான பாடல்களை பாட வைப்பார்கள். கேள்வி ஞானத்தை வைத்து, கேட்டுப் பழகி, திறமையை வளர்த்துக் கொண்ட சிறுமி ராணியின் பிசிறில்லாத லாவகமான குரல்வளம் பலத்த கரகோஷத்தை அள்ளித் தரும்; அரங்கத்தையே அதிர வைக்கும்.
நாட்டிய நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே குழந்தை ராணி தூங்கிவிடுவாளாம். அவளை வைஜயந்திமாலாவும் அவருடைய பாட்டி யதுகிரி அம்மாளும் அவளை காரில் எற்றிக் கொண்டு அவளுடைய வீட்டிற்கு கொண்டு போய்ச் சேர்ப்பார்களாம். ஒரு பேட்டியில் அவரே இதைச் சொல்லியிருக்கிறார்.
ஒருநாள் வைஜயந்திமாலாவின் நடன நிகழ்ச்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தபோது அதைக் கண்டு களிக்க இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் வந்திருக்கிறார். சிறுமி ராணியின் திறமை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி போயிருக்கிறார். .
அடுத்த நாள் ஆர்மோனியத்தை எடுத்துக் கொண்டு ராணியின் வீட்டுக்கே வந்துவிட்டார். தமிழிலும், தெலுங்கிலும் ஒருசேர வெளிவந்த “தேவதாஸ்” திரைப்படத்தில் பாட வைத்தார். தேவதாஸ் படம் வெளிவருவதற்கு நீண்ட நாட்கள் பிடித்ததால், ராணி பின்னணி பாடியிருந்த மற்ற மற்ற படங்கள் முதலில் வெளிவந்தன.
1943-ஆம் ஆண்டில் பிறந்த இவர், தனது எட்டாவது வயதிலேயே ரூபாவதி (1951) , சிங்காரி (1951) போன்ற தெலுங்கு சினிமாவில் பாடத் தொடங்கிவிட்டார்.
இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டுச் சென்ற படம் “தேவதாஸ்” என்பதில் சந்தேகமில்லை.
தேவதாஸ் படத்தில் இவர் பாடிய
//எல்லாம் மாயை தானா? - பேதை
எண்ணம் யாவும் வீணா?
ஏழை எந்தன் வாழ்வில் - இனி
இன்பம் காண்பேனோ?”//
என்ற சோகம் பிழியும் பாடல் ‘சூப்பர் டூப்பர் ஹிட்’ ஆகி இவருக்கு வானளாவிய புகழைத் தேடித் தந்தது தெலுங்கு மொழியில் “அந்தா பிராந்தியேனா” என்று தொடங்கும் இவர் பாடிய இதே பாடலும் மிகவும் பிரபலமானது,
‘தேவதாஸ்’ படத்தில் கண்டசாலாவுடன் இவர் பாடிய “உறவும் இல்லை பகையும் இல்லை” என்ற பாடல், தெலுங்கில் “செலிய லேது செலிமி லேது” என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ராணிக்கு தாய்மொழி தமிழும் கிடையாது; தெலுங்கும் கிடையாது. இவர், கான்பூரிலிருந்து தென்னாட்டில் குடியேறிய ஒரு குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா கிஷன் சிங் ஒரு ஸ்டேஷன் மாஸ்டர். பல இடத்திலும் அவருக்கு பணிமாற்றம் நிகழ்ந்தது.
ராணிக்கு மொழி எந்தக் காலத்திலும் ஒரு தடைக்கல்லாக இருந்தது கிடையாது. ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றிய இவருடைய தந்தை பல இடங்களுக்கு மாற்றலாகிக் கொண்டிருந்ததால், பல மொழிகளையும் கற்கக் கூடிய வாய்ப்பு அவருக்கு கிட்டியது. சிறுவயது முதற்கொண்டே கிரகித்துக் கொள்ளக்கூடிய சக்தி மிகுதியாக இருந்ததால், அந்தந்த மொழிக்கு ஏற்றவாறு உச்சரிப்பை அட்சர சுத்தமாக பாடக் கற்றுக் கொண்டார். நாகூர் ஹனிபாவுடன் இணைந்து பாடிய பாடல்களில் அரபிமொழி உச்சரிப்பு இவரிடத்தில் அம்சமாக இருப்பதை நாம் நன்றாகவே உணர முடியும்.
இஸ்லாமியப் பாடல்கள் மட்டுமல்ல, பற்பல திராவிட முன்னேற்றக் கழக கொள்கைப் பாடல்கள் நாகூர் ஹனிபாவுடன் இணைந்து பாடியுள்ளார். ‘வாழ்க திராவிட நாடு’, ‘அன்னை மொழி காத்து நிற்கும் அண்ணா வாழ்கவே’ உள்ளிட்ட தி.மு.க. கொள்கை பாடல்களும் ராணியின் குரலில் ஒலிப்பதிவாகி உள்ளன.
நாகூர் ஹனிபா நாகூரில் சொந்த வீடு கட்டி அதன் திறப்புவிழாவிற்கு அறிஞர் அண்ணாவை அழைத்தபோது கே.ராணியுடைய பாட்டுக் கச்சேரியைத்தான் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், ஹிந்தி, வங்காளமொழி, சிங்களம் என ஏராளமான மொழிகளில் பாடியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் உஸ்பெஸ்கிஸ்தான் மொழியைக் கூட இவர் விட்டுவைக்கவில்லை.
500-க்கும் மேலான பாடல்கள் இவர் பாடியிருக்கிறார். இலங்கை தேசிய கீதம் இவர் பாடியது
அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் தில்லியில் நடந்த இசை நிகழ்ச்சியில் கர்மவீரர் காமராஜர் இவருக்கு “இன்னிசை ராணி” என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தார். ராஜ்கபூரின் ‘சங்கம்’ படப்பாடலை அந்த மேடையில் பாடியபோது, ராஜ்கபூர் மனம் நெகிழ்ந்து இவர் குரல்வளத்தைப் புகழ்ந்தார்.
‘பாரதரத்னா’ விருது பெற்ற புகழ்ப்பெற்ற இந்திய பொறியாளர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யாவின் நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொள்வதற்காக கர்னாடக அரசு இவரை தனி விமானத்தில் (Chartered Flight) ஏற்றி அனுப்பி வைத்தது.
“நல்ல சுருதி சுத்தமும் வார்த்தை சுத்தமும் உள்ள பாட்டு அவளுடையது, ரொம்ப நல்லா பாடுவா. அனுபவிச்சு பாடுவா, நல்ல ஞானம் உள்ளவ, அன்போடு பழக்க் கூடிய ஜீவன். நான் நிறைஞ்ச மனசோட நினைச்சுப் பார்க்கிற பாடகி” என்று பாடகர் டி.எம்.எஸ். செளந்தர்ராஜன் இவருக்கு புகழாரம் சூட்டினார்.
கே.ராணி அன்றைய காலத்தில் புகழ் உச்சியிலிருந்த அத்தனை இசையமைப்பாளர்களின் இசையிலும், அத்தனை பிரபல பாடகர்களுடனும் இணைந்து பாடியுள்ளவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு படத்தில் அவர் பாடியுள்ள படங்களை பட்டியலிட்டால் இங்கு பக்கங்கள் காணாது.
சுஜாதா (1953), செடா சுலங் (1955), சிரிமலி (1959) மெலிகொலுப்பு, போன்ற சிங்கள படங்களில் இவர் பின்னணிக் குரல் பாடியிருக்கிறார்.
கன்னட மொழி படங்கள்:
பாக்யோதயா 1956, ரத்னகிரி ரகசியா, ஸ்கூல் மாஸ்டர் (1958), காலி கோபுரா (1962) , ரத்ன மஞ்சரி (1962) லவகுசா (1963),
மலையாள மொழி படங்கள்:
அச்சனும் மகளும் (1957) வேலுத்தம்பி தாளாவா (1962) கலாயும் காமினியும் (1963)
தமிழில் இவர் பாடிய பாடல்களைக் கணக்கிட்டால் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கின்றன.
சின்னதுரை, தர்ம தேவதை, கல்யாணம் பண்ணிப் பார், கல்யாணி, வளையாபதி, சண்டிராணி, குமாஸ்தா, ஜெனோவா, கண்கள், மாமியார், பெற்ற தாய்,3 திரும்பிப்பார், வஞ்சம், கூண்டுக்கிளி, மா கோபி, நால்வர், நல்ல காலம், பணம்படுத்தும் பாடு, ரத்த பாசம், சுகம் எங்கே, ஆசை அண்ணா அருமை தம்பி, குணசுந்தரி, கதாநாயகி, முதல் தேதி, போர்ட்டர் கந்தன் , அமர கீதம், இல்லறமே இன்பம், காலம் மாறிப் போச்சு, மர்ம வீரன், சர்க்கஸ் சுந்தரி, மறுமலர்ச்சி, மாய மோகினி, நன்னம்பிக்கை, ஒன்றே குலம், பாசவலை, காவேரி, படித்த பெண், பிரேம பாசம், சந்தோஷம், அலாவுத்தீனும் அற்புத விளக்கும், எங்கள் விட்டு மஹாலக்ஷ்மி, மகதல நாட்டு மேரி, மாயா பஜார், தங்கமலை ரகசியம், அரசாளப் பிறந்தவன், பூலோக ரம்பை, எங்கள் குடும்பம் பெருசு, காத்தவராயன், மாலையிட்ட மங்கை, பானை பிடித்தவள் பாக்கியசாலி, சம்பூர்ண ராமாயணம், சாரங்கதாரா, அருமை மகள் அபிராமி, அழகர் மலைக்கள்வன், பால நாகம்மா, தெய்வ பலம், மன்னன் மகள், நல தமயந்தி, பாண்டித்தேவன் புதுமைப் பெண், சுமங்கலி, ஆளுக்கொரு வீடு , சவுக்கடி சந்திரகாந்தா, எல்லோரும் இந்நாட்டு மன்னர், குழந்தைகள் கண்ட குடியரசு, மங்கைக்கு மாங்கல்யமே பிரதானம், இந்திரா என் செல்வம், லவகுசா, வழி பிறந்தது,ஹரிச்சந்திரா, சந்திப்பு (வெளிவரவில்லை)
1965 ஆண்டுக்குப் பிறகு இவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதன்பிறகு இசைக்கச்சேரி செய்ய ஆரம்பித்தார். இக்கால கட்டத்தில் அவர் இசைமுரசு நாகூர் ஹனிபாவுடன் இணைந்து பாடிய பாடல்கள் யாவையுமே இஸ்லாமிய மக்கள் அல்லாது பிறசமயத்தார்களும் விரும்பிக் கேட்டனர்.
இவரது கணவரின் பெயர் சீதா ராமி ரெட்டி. முன்பே இறந்து விட்டார். இரண்டு வருடங்களுக்கு முன்பு (2018) இந்த ‘இன்னிசை ராணி’ தனது 75வது வயதில் மரணமுற்றார். ஹைதரபாத்தில் இவரது மகள் விஜயாவின் வீட்டில் இவருடைய உயிர் பிரிந்தது.
தமிழகத்தில் எந்த ஊடகங்களும் இவரது மரணச் செய்தியை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. தெலுங்கு மற்றும் சிங்களமொழி ஊடகங்கள் மாத்திரமே இவரை நினைவு கூர்ந்து இவரது சாதனைகளைப் பகிர்ந்தன. ஒரு சில தமிழ்ப் பத்திரிக்கைகள் ஓரத்தில் கட்டம் கட்டி சின்னதாக செய்தி வெளியிட்டிருந்தன..
காரணம் இவருடைய மரணச் செய்தி வனிதா விஜயகுமாரின் விவாகரத்து செய்தி போல அவ்வளவு முக்கியமான செய்தியாக அவர்கள் கருதவில்லை.

1 comment:

Dr.Anburaj said...


என்னடி சின்ன பொண்ணு எண்ணம் எங்கோ போகுது

பள்ளி அறை மோகமா பருவத்து வேகமா

என்ற பாடலும் அவர்கள் பாடியதுதான்.

இனிமையான குரல் இருந்தது.பாடும் திறன் இருந்தது.காசுக்கு விற்று சம்பாதித்தனா்.
முஸ்லீம் பெண்கள் பாட வரமாட்டார்கள்.இசுலாமிய கச்சேரிக்கு பெண்குரல் கிடைக்கவில்லை. சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தவுடன் சகோதரி இசுலாமிய பாடல்களை நாகூா் அனிபா அவர்களோடு சோ்ந்து பாட ஆரம்பித்து பணம் சம்பாதித்து வாழ்ந்தாா்.
பொது வாழ்க்கைக்கு இவா் என்ன செய்தாா் ?
ஏதும் செய்யவில்லை.

எனவே பிற பாடகிகள் வந்த வுடன் இவா் பெயரை மக்கள் மறந்து விடுவார்கள். இவா் பாடிய பாடல்கள் பழைய பாடல்களாகிவிட்டதால் கிழட்டு பாடல்கள் ஆகியதால் பல தடவை கேட்டு சலித்து விட்டதால் யாரும் கேட்க மாட்டார்கள்.எனவே ராயல்டியும் குறைந்திருக்கும்.

கடைசி வாழ்க்கை சுகமாக இருந்தால் அம்மணி புண்ணியம் செய்திருக்க வேண்டும். மகள் வீட்டில் நிம்மதியாக வாழ்ந்து அமரரானார் .... வாழ்க ராணி அம்மையாா்.