Followers

Showing posts with label 'தி ஹிந்து' பத்திரிக்கை. Show all posts
Showing posts with label 'தி ஹிந்து' பத்திரிக்கை. Show all posts

Monday, April 13, 2015

உபியில் நாகப் பாம்புடன் இளைஞருக்கு திருமணம்!



உத்தரப்பிரதேசத்தில் நாகப் பாம்புடன் இளைஞருக்கு நடக்கவிருந்த வினோத திருமணம் போலீஸார் தலையிட்டதால் தடுத்து நிறுத்தப்பட்டது.

உ.பி.யின் மத்தியப் பகுதியில் உள்ள பூல்பூர் நகரில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் பத்வாபூர் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலில் கடந்த வாரம் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் கூடியி ருந்தனர். மனிதனாக மாறியுள்ள இச்சாதாரி பாம்பு என்று தன்னை கூறிக்கொண்ட 27 வயது சந்தீப் பட்டேலுக்கு அங்கு திருமணம் நடைபெற இருந்தது.

இது வழக்கமான திருமணமாக இல்லாமல், மணப்பெண்ணாக நாகப்பாம்பு இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. பண்டிதர் ஒருவரும் அருகில் அமர்ந்து வேத மந்திரம் ஓத, பாம்புக்கு இளைஞன் தாலி கட்டும் நேரத்தில் வில்லன் போல் அங்கு போலீஸார் புகுந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி யுள்ளனர்.

இது குறித்து பூல்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சஞ்சீவ்குமார் மிஸ்ரா ‘தி இந்து’விடம் கூறும் போது, “இந்த வினோத திருமணம் குறித்து ஒருநாள் முன்னதாக அறிந்து, சந்தீப் வீட்டுக்குச் சென்று விசாரித்தோம். அப்போது அவரது குடும்பத்தினர், கிராமத்தின் அமைதி கெடும் வகையில் எதையும் செய்ய மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். ஆனால் அந்த உறுதி மீறப்பட்டதால் தந்தை மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

பத்வாபூரில் வசிக்கும் தயா சங்கர் என்ற விவசாயியின் மகனான சந்தீப், சூரத்தில் பணியாற்றி வந்துள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த பிப்ரவரி 17- தேதி சொந்த ஊர் திரும்பினார். இங்கு வந்ததில் இருந்தே தான் மனிதனாக மாறியுள்ள இச்சாதாரி பாம்பு என்று கூறி வந்துள்ளார். இதனால் கிராம மக்கள் அவரை இச்சாதாரி என்றே அழைத்து வந்துள்ளனர். இதனிடையே சந்தீப் அங்குள்ள சிவன் கோயிலில் தான் ஒரு பெண் நாகத்தை சந்தித்ததாகவும், அது முற்பிறவியில் தனக்கு ஜோடியாக இருந்ததை நினைவூட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும் அதே பெண் நாகத்தை அந்த சிவன் கோயிலில் ஏப்ரல் 5-ம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த திருமணத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்கி கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி யுள்ளனர். கூட்டத்தில் சில பெண்கள் சாமியாடவும் செய்து பக்தி பரவசப்படுத்தியுள்ளனர். இக்கூட்டத்தை கலைக்க சுற்றி யுள்ள காவல் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான போலீ ஸார் வரவழைக்கப்பட்டனர். கூட்டத்தில் பலர் சந்தீப்புக்கு ஆதரவாக போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களை சமாளித்து சந்தீப் மற்றும் அவரது தந்தையை கைது செய்ய போலீஸாருக்கு மதியம் 3 மணி வரை ஆகியுள்ளது.

சூரத் மருத்துவமனையில் சந்தீப் சிகிச்சை பெற்ற மருத்துவக் குறிப்புகளை போலீஸார் ஆராய்ந்த போது, அவர் மனநலம் பாதிக்கப் பட்டு இருந்தது தெரியவந்தது.

பாம்புகள் தொடர்பான மூட நம்பிக்கைகள் உ.பி.க்கு புதிதல்ல. அலிகருக்கு அருகில் உள்ள பிசாவா என்ற கிராமத்தில் கடந்த 1995-ம் ஆண்டு டிராக்டர் ஓட்டிச் சென்ற விவசாயி ஒருவர் வழியில் 2 பாம்புகளை கொன்றுவிட்டார். அப்போது ஊருக்குள் பாம்பு குற்றம் நிகழ்ந்துவிட்டதாகவும் பாம்புகள் படை எடுத்து வந்து ஊரையே பழி வாங்கும் என்றும் பீதி கிளம்பியது.

சில தினங்களில் கிராமத்தில் தானியப் பயிர்களின் இலைகளில் பாம்பு போல் வளைந்த கோடுகள் உருவானது. “இறந்த பாம்புகளின் ஆவிதான் இப்படி பயிரில் கோடு போடுகின்றன. அடுத்து பாம்புகள் படையெடுத்து வந்து ஊரையே அழித்துவிடும். இதற்கு நாகபூஜை செய்து பரிகாரம் தேட வேண்டும்” என்று மக்கள் புரளி கிளப்பினர். ஆங்காங்கே பலர் நாக பூஜைகள் செய்யத் தொடங்கினர்.

இந்தப் பிரச்சினையில் தலையிட்ட அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை, “அந்தப் பகுதியில் பயிர்களின் இலைகள் மீது பரவியுள்ளது ஒரு வகை வைரஸ்” என்று கூறியது. மேலும் ஆய்வில் ஈடுபட்டு சில மாதங்களில் அதற்கான மருந்தையும் கண்டுபிடித்தது. அதன் பிறகே அடங்கியது பாம்பு பீதி.

இது நடந்த 2 மாதங்களில் ஆக்ரா - அலிகர் இடையில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்புடன் ஒரு பெண்ணுக்கு காதல் உண்டாகி விட்டதாக ஒரு செய்தி கிளம்பியது. அந்தப் பாம்பு அடிக்கடி வந்து அந்தப் பெண்ணை அன்பாக கொத்திவிட்டுச் செல்வதாகவும், ஆனால் விஷம் கக்குவதில்லை எனவும் மக்கள் பேசினர். பிறகு சில நாட்கள் கழித்து அது விஷமில்லாத பாம்பு எனவும் அந்தப் பெண், தான் பிரபலம் அடைவதற்காக கிளப்பிய புரளி இதுவென்றும் குட்டு வெளிப்பட்டது. இதுபோல் இன்னும் பல கதைகள் உ.பி.யில் நிலவுகின்றன.

திருமண முயற்சிக்கு முன் சடங்குகளில் ஈடுபட்ட சந்தீப் பட்டேல் மற்றும் அவரது உறவினர்கள். அடுத்த படம்: வேடிக்கை பார்க்கும் கிராம மக்கள்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
13-04-2015

ஒரு மதமாகட்டும், அல்லது ஒரு மார்க்கமாகட்டும், அதன் சட்டதிட்டங்கள் இன்னதுதான் என்று வரையறுக்கப்படாவிட்டால் அந்த சமூகம் இது போன்ற மூடப் பழக்கங்களில் வீழ்ந்து தங்களின் அறிவை இழந்து விடுவார்கள் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்.

Thursday, April 02, 2015

இந்திய இஸ்லாமியரை ஐஎஸ்ஐஎஸ் வசப்படுத்த முடியாது - டேவிட்



தங்கள் நாட்டில் நிலவும் பன்முக கலாசாரத் தன்மையின் காரணமாக, ஐ.எஸ். தீவிரவாதிகளின் வலையில் சிக்கப்படுவதில் இருந்து இந்திய இளைஞர்கள் தப்பிவிடுகின்றனர் என்று அமெரிக்க பாதுகாப்பு துறை நிபுணர் டேவிட் எப் ஹேமென் கருத்து தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளைப் போல் இந்திய முஸ்லிம் இளைஞர்களை ஐ.எஸ். இயக்கம் வசப்படுத்த முடியாது என்பதை அவர் திட்டவட்டமாக கணித்து கூறினார்.

அமெரிக்க பாதுகாப்பு துறை நிபுணரும், தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஆய்வாளருமான டேவிட் ஹேமென், இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அவர், 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியது:

"இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து புதிதாக எழும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக திட்டமிட வேண்டியது அவசியம்.

உலக நாடுகளில் பரவலாக இருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல், இளைஞர்களை அத்தகைய செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் பங்கு குறித்து இங்கு ஆலோசனை நடத்தினேன்.

பயங்கரவாதம் குறித்து அமெரிக்கா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இதன் அப்படையில் எங்களால் பிரச்சினைகளையும் அதற்கான காரணங்களையும் கண்டறிய முடிகிறது.

மேற்கத்திய நாடுகளை பொறுத்தவரையில், அங்கு வாழும் முஸ்லிம் இளைஞர்கள் அவர்களது நாட்டிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டது போல கருதுகிறார்கள். அவர்கள் கருதுவது போன்ற நடவடிக்கைகள் நடப்பதும் அதற்கு காரணம். இதனாலே அங்கிருக்கும் இளைஞர்கள் ஐ.எஸ். இயக்கத்தால் அதிகளவில் ஈர்க்கப்பட்டு, அதில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால், இந்தியாவில் அத்தகைய சூழல் இல்லை. மனித உரிமைகளை இந்தியர்கள் மதிக்கின்றனர். இங்கு அமைந்திருக்கும் பன்முக கலாசாரம் கொண்ட ஜனநாயகத் தன்மை ஒவ்வொரு தனி மனிதனையும் தன்னை சமுதாயத்தில் ஒருவனாக உணர்ந்து செயல்படுவதற்கான சூழலை அமைத்து தருகிறது. இந்தியாவில் தீவிரவாதம் வேரூன்றாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

ஆனால், அமெரிக்காவில் இந்த நிலைமை இல்லை. அங்கு உள்நாட்டிலேயே தீவிரவாதம் உருவெடுக்கிறது. இளைஞர்கள் மிக எளிதாக அதற்கு ஈர்க்கப்படுவதால், தீவிரவாதம் வீட்டிலிருந்து வளர்க்கப்படுவதை போல் ஆகிவிட்டது. இந்தியாவில் அந்தச் சுழல் தடுக்கப்படுகிறது" என்றார் டேவிட் எப் ஹேமென்.

தகவல் உதவி

தமிழ் இந்து நாளிதழ்
03-04-2015

Wednesday, April 09, 2014

பிஜேபியின் தேர்தல் அறிக்கை குறித்து நாம் பேசியாக வேண்டும்

இந்த 16-வது மக்களவைப் பொதுத்தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கும்வரை, பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. இந்தியத் தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியபோதிலும் எந்த விளக்கமும் அளிக்காத கட்சி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய பின் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

தேர்தல் அறிக்கை என்பது பெரிய விஷயமல்ல என்று பா.ஜ.க. நினைப்பதுபோலத் தெரிகிறது. ‘வளர்ச்சி நாயகன்' என்று அழைக்கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பிரச்சார இயந்திரம், 2002-ல் நடந்ததைப் பற்றி விவாதிக்க விடாமல் - அல்லது அதிலிருந்து கவனத்தை வேறு திசைகளில் இழுத்துச்செல்லும் வேலையை - தனது வரம்புக்கு உட்பட்ட வகையில் ஏற்கெனவே கச்சிதமாகச் செய்துமுடித்துவிட்டது. ‘மோடி மந்திரம்' கையில் இருக்கும்போது தேர்தல் அறிக்கைக்கு என்ன தேவை என்று கட்சி நினைத்திருக்கலாம்.

தாமதத்தின் உண்மையான பின்னணி

ஏனைய தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகும், முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை தொடங்கும் வரை பா.ஜ.க-வால் தேர்தல் அறிக்கையைக் கொண்டுவர முடியவில்லை என்பது சாதாரண விஷயமல்ல. யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய வாக்காளர்களுக்கு அவசியமான தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் இவ்வளவு தாமதம் ஏற்பட உண்மையான காரணம் என்ன?

இது தொடர்பாக பா.ஜ.க. தலைமையிடமிருந்து விளக்கம் ஏதும் வருவதற்கு முன்பாகவே, ஊடகங்களில் ‘பா.ஜ.க. சார்புள்ளவர்கள்' முந்திக்கொண்டு பதில் அளிக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ‘நெட்வொர்க் 18' குழு வெளியீடுகளின் தலைமை ஆசிரியர் ஆர். ஜெகந்நாதன், “மோடியே தேர்தல் அறிக்கைதான்; கனமான இன்னொரு அறிக்கை பா.ஜ.க-வுக்குத் தேவையா என்ன?” என்று கட்டுரையில் வினவுகிறார். கட்டுரையின் கடைசிப் பகுதியை அவர் இப்படி முடிக்கிறார்: “தேர்தல் அறிக்கைகள் என்பவை கால்கட்டு மாதிரி, தேர்தலில் நிச்சயம் வெற்றிபெற்று ஆட்சியமைக்கப்போகும் கட்சிக்கு இம்மாதிரியான தளைகள் தேவையில்லை.”

இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ‘நிச்சயம் வெற்றிபெறக்கூடிய கட்சிக்கு இந்தத் தேர்தல் அறிக்கை என்பதெல்லாம் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினையாக மாறிவிடக்கூடும்' என்று தெரிகிறது. தேர்தல் அறிக்கை என்பது ‘தெரிவிப்பது குறைவாகவும் மறைப்பது அதிகமாகவும்' இருப்பது. அப்படி மறைக்கப்பட வேண்டியவற்றில் கட்சியின் சித்தாந்தம், குணவிசேஷம் ஆகியவை முக்கியமானவை.

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை கவனத்துக்குரியவை அதன் சங்கப் பரிவாரங்களின் முக்கியமான செயல்திட்டங்கள், நோக்கங்கள், சித்தாந்தங்கள், ‘இந்துத்துவா' என்று அது கருதும் விஷயங்கள் - அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டுவது, காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்வது, அனைவருக்கும் பொதுவான குடியுரிமைச் சட்டம் இயற்றுவது, மதமாற்றங்களைத் தடை செய்வது, பசுவதைத் தடை – உள்பட பல.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அம்சங்களெல்லாம் பெரும்பாலான மக்களுடைய கவனத்திலிருந்து தப்பிவிடுவதுதான். பா.ஜ.க. என்பது தன்னுடைய கொள்கைகளில் பிடிப்பு உள்ள கட்சி. எந்தக் காரணத்துக்காகவும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய உணர்ச்சிப் பிழம்பான அமைப்புகளைக் கொண்டதுதான் சங்கப் பரிவாரம். இவற்றையெல்லாம் ஊட்டி வளர்ப்பது ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்' என்ற தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்புகளுக்குள்ள உறவு எப்படிப்பட்டது, அவை எப்படிச் செயல்படுகின்றன என்று அறிய வேறெங்கும் போக வேண்டாம் அவற்றின் இணையதளங்களைக் கவனித்தாலே போதும்.

ஒரு இணையதளம் சொல்கிறது: “சங்கப் பரிவாரத்தின் மிகவும் பிரபலமான அங்கம் பாரதிய ஜனதா கட்சி… இந்திய வரலாறு எது என்பதில் சங்கப் பரிவாரங்கள் தெளிவாக இருக்கின்றன. இந்திய நாட்டுக்கும் சமூகத்துக் கும் இந்து மதம்தான் அடையாளம், இந்துத்துவம்தான் கலாச்சாரம்.”

அடிநாதம் இந்துத்துவமே

பா.ஜ.க. 1980-86 காலகட்டத்தில் அதன் ‘சாதாரணமான' வலதுசாரிக் கருத்துகளுக்குக் கிடைத்த தேர்தல் வெற்றிகளால் துணிச்சல் பெற்று, 1989-ல் ‘தீவிரமான' இந்துத்துவக் கருத்து களை முன்வைத்துச் செயல்படத் தொடங்கியது. 1996 தொடங்கி பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கைகளை ஊன்றிக் கவனித்தால், 1999 தவிர பிற தேர்தல்களிலெல்லாம் இந்துத்துவக் கருத்துகளை மையமாக வைத்தே அது தேர்தல் அறிக்கையைத் தயாரித்துவந்துள்ளது தெரியவரும். கொள்கைகளைச் சொல்லப் பயன்படுத்தும் மொழி, தொனி, பாணி வேறுபட்டாலும் பிரதான அம்சங்கள் அப்படியே தொடர்கின்றன.

பா.ஜ.க-வின் 1998 தேர்தல் அறிக்கை அதனுடைய முக்கியக் கொள்கைகளை வெளிப்படையாகப் பேசுகிறது. “சனாதன தர்மம்தான் இந்திய தேசியத்துவம்” என்கிறது. “ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே தேசம்” என்ற லட்சியத்தை முழங்குகிறது. “அரசியலில் இந்துத்துவம் உருவாவது, சமுதாயத்தின் சிலருக்கு சலுகைகள் காட்டி திருப்திப்படுத்துவதற்கும், சிலரை வாக்கு வங்கிகளாக நடத்துவதற்கும் நல்ல முறிவு மருந்தாக இருக்கும்” என்கிறது. “இந்தியாவின் மனசாட்சியாக பகவான் ராமர் இருக்கிறார்” என்கிறது.

“அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அழகிய, பெரிய ஆலயத்தை எழுப்ப வேண்டும்” என்கிறது. “இதைச் செய்ய சட்டபூர்வமாகவும் கருத்தொற்றுமை அடிப்படையிலும், அரசியல் சட்டம் மூலமாகவும் முயற்சிகளை மேற்கொள்வோம்” என்கிறது. மேலும், காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்துசெய்யப்படும் என்று எச்சரிக்கும் அந்த அறிக்கை அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் வகுக்கப்படும் வகையில் அனைத்து மரபுகளிலும் உள்ள முற்போக்கான அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு சட்ட ஆணையத்துக்கு அளிக்கப்படும் என்கிறது.

அடுத்த பொதுத்தேர்தலில் – அதாவது 1999 தேர்தலில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக, ‘நிர்வாகத்துக்கான தேசிய செயல்திட்டம்' வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதில் இந்துத்துவத்தின் அடிப்படை அம்சங்கள் விலக்கி வைக்கப்பட்டிருந்தன.

அடுத்த பொதுத்தேர்தலில் பல கட்சிகளையும் உள்ளடக்கி விரிவான கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டபோதிலும் இந்துத்துவக் கொள்கைகள், ‘2004-க்கான தீர்க்கதரிசனத் திட்டங்கள்' என்ற பெயரில் அப்படியே இடம்பிடித்தன. இந்த அறிக்கையின் முக்கிய அம்சம், அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்ற தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை பா.ஜ.க. மீண்டும் கையில் எடுத்ததுதான். அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதிலாக, “ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகளுக்கும் போதிய நிதி, நிர்வாக அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சி பிரதேச ஆணையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்” என்ற கோரிக்கை இதில் இடம்பெற்றிருந்தது.

மீண்டும் இறுகிய இந்துத்துவா

மீண்டும் இந்துத்துவக் கொள்கைகள் தீவிரமாக வலியுறுத்தப்பட்டன 2009 தேர்தல் அறிக்கையில். “அத்வானி தலைமையிலான அயோத்தி இயக்கம்தான் சுதந்திர இந்தியாவில் மக்களிடையே எழுச்சியைப் பெற்ற பெரிய நிகழ்வு” என்று வாழ்த்துப் பாடிய அந்த அறிக்கையில், “காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும்” என்ற பழைய பல்லவி மீண்டும் ஒலித்தது. அனைத்து மதத்தவருக்கும் பொதுவான குடியுரிமைச் சட்டத்தை உருவாக்க உறுதிபூண்டிருப்பதாகவும் எல்லா மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த அம்சங்களை ஒன்றுசேர்த்து நவீன சமூகத்துக்கு ஏற்ற வகையில் குடி யுரிமைச் சட்டம் தயாரிக்கப்படும் என்றும் அது கூறியது.

முன்தயாரிப்புகள்

இந்த 2014 தேர்தல் அறிக்கைக்கான பூர்வாங்க வேலைகளை 2013 அக்டோபரிலேயே பா.ஜ.க. தொடங்கி விட்டது. வாக்காளர்களிடமிருந்தே யோசனைகளை வரவேற்கிறோம் என்றெல்லாம், தனி இணையதளம் தொடங்கப்பட்டாலும் கட்சியின் அடிப்படை என்னவோ இந்துத்துவக் கொள்கைகள்தான். உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க-வினர் நடத்தும் மதவாதம் தெறிக்கும் பிரச்சாரங்களும், அமித் ஷாவின் அனல் கக்கும் பேச்சுகளும் எதைக் காட்டுகின்றன? பா.ஜ.க-வின் குணம் மாறவே மாறாது என்பதைத்தான் வெளிப்படுத்துகின்றன.

- என். ராம், மூத்த பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: nram@thehindu.co.in
© ‘தி ஹிந்து' (ஆங்கிலம்), தமிழில்: சாரி

Tuesday, February 11, 2014

அசீமானந்தா பேட்டி: என்ஐஏ மூலமாக விசாரிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

பொதுமக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளை திட்டமிடுவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்தலைவர்களை தான் தொடர்பு கொண்டதாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அசீமானந்தா பேட்டி கொடுத்துள்ளார்.

இது பற்றி என்ஐஏ மூலமாக விசாரணை நடத்தவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சியின் பொலிட்பீரோ வெளியிட்ட செய்திக்குறிப்பு: அசீமானந்தா கொடுத்த பேட்டியைக் கொண்டு ஒரு பத்திரிகை வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள வெடிமருந்துகள் விவரம் பல கேள்விகளை எழுப்புகிறது.இது பற்றி விரிவாக விசாரணை நடத்தப்படவேண்டும்.

பொதுமக்களை இலக்கு வைத்து நடத்திய தொடர் குண்டுவெடிப்புகளை திட்டமிடும் போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்தலைவர்களை தான் தொடர்புகொண்டதாக பேட்டியில் அசீமானந்தா தெரிவித்திருக்கிறார்.

82 பேர் உயிரிழக்கக் காரணமான 3 பயங்கரவாத தாக்குதல்களில் அசீமானந்தாவுக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு தொடரப் பட்டுள்ளது.

பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட மேலும் சில வழக்குகளிலும் அவர் விசாரணை வளையத்தில் கொண்டுவரப் பட்டுள்ளார்.

குஜராத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பான வனவாசி கல்யாண் ஆசிரமத்துடன் இணைந்து பழங்குடிகள் வாழும் பகுதிகளில் அசீமானந்தா வசிப்பவர். சூரத்தில் 2005 ஜூலையில் நடந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்துக்குப் பிறகு தற்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், இந்திரேஷ் குமார் என்பவருடன் டாங்ஸ் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றார்.

இந்தியாவில் முஸ்லிம்களை இலக்குவைத்து குண்டுவெடிப்பு நடத்திட திட்டமிடுவது பற்றி அந்த கோயிலில் விவாதிக்கப்பட்டதாக பேட்டியில் தெரிவித்திருக்கிறார் அசீமானந்தா. இப்படியொரு பேட்டி யாருக்கும் தரப்படவில்லை என அசீமானந்தா தரப்பு வழக்கறிஞர் மறுத்தாலும் தங்களிடம் பேட்டி சம்பந்தமான பதிவுகள் இருப்பதாக தெரிவித்திருக்கிறது அந்த பத்திரிகை

சில ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அந்த பேட்டியில் தெரிவித்துள்ள விவரங்கள் தேசிய பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்பதால் தேசிய புலனாய்வு அமைப்பு மூலமாக விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. -பி.டி.ஐ.

http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article5678578.ece?homepage=true