Followers

Showing posts with label ஈ.வெ.ரா.பெரியார். Show all posts
Showing posts with label ஈ.வெ.ரா.பெரியார். Show all posts

Wednesday, January 13, 2016

பெரியார்தாசன் இஸ்லாத்தை சொல்லும் அழகைப் பாருங்கள்!

ஒரு தாழ்த்தப்பட்டவரின் நியாயமான கேள்விகளுக்கு பெரியார்தாசன் பதிலளிக்கிறார்!'நாங்க இந்தியாவிலதான் பிறந்தோம்: எங்கள இந்த...

Posted by Nazeer Ahamed on Wednesday, January 13, 2016

ஒரு தாழ்த்தப்பட்டவரின் நியாயமான கேள்விகளுக்கு பெரியார்தாசன் பதிலளிக்கிறார்!

'நாங்க இந்தியாவிலதான் பிறந்தோம்: எங்கள இந்து என்றுதான் சொல்றாங்க: எங்கள தாழ்த்தப்பட்டவங்க என்று சொல்லி கோவிலுக்குள்ள வர வேண்டாங்கறாங்க... நாங்க செஞ்ச செருப்பை அவங்க போடறாங்க: ஆனா.. எங்கள போடக் கூடாதுங்கறாங்க: எங்க எருமை மாடு குளிக்குதுங்க குளத்துல... எங்கள குளிக்கக் கூடாதுன்னு சொல்றாங்களே... இதெல்லாம் இஸ்லாத்துல சேர்ந்துட்டா போயுடுமா... கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க... '

Wednesday, June 03, 2015

பெரியார் இஸ்லாமிய நம்பிக்கைகளை விமரிசித்தாரா?


ஹானஸ்ட் மேன்!

//கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று யாரை சொன்னார் என்று நீர் நினைத்து கொண்டீர்? இந்து கடவுளை மட்டும்தான் என்றா?//

Rama!

//EVR was an atheist. As per him,anyone who believes in God, like yourself, is a fool. So, why are you, a Allah fearing Islamist, be a side kick to an atheist?//

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள்.

அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை.

ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால்,

அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன.

வீரம் இருக்கின்றது.

வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான்.

இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை.

அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை.

அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும்.

இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள்.

இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது.

இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள்.

அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம்.

ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை.

ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம்

. ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது?

கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர்.

இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா?

கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.

(பெரியார் சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931)

Tuesday, March 10, 2015

கல்லு போன்ற உறுதி எது? விளக்குகிறார் பெரியார்!



"சகோதரர்களே!

இந்த மாதிரியான முக்கிய சந்தர்ப்பத்தில் கூட்டப்பட்ட இப்பெரியக் கூட்டத்தில் என் போன்றவர்களது அபிப்பிராயத்தையும், தெரிவிக்கச் சந்தர்ப்பமளித்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன் இங்கு பேசிய இருவர்களில் முதலில் பேசிய மௌலானா மௌல்வி அ. க. அப்துல் அமீது சாயபு (பாகவி) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் இதற்குமுன் பலதடவை நம் ஈரோட்டிற்கு வந்திருந்தாலும் குறிப்பாக திரு. காந்திய வர்களும், மௌலானா அசாத் சோபானி அவர்களும் நம் ஈரோட்டிற்கு வந்திருந்தபோது மௌலானா அவர்கள், மௌலானா அசாத் சோபானி அவர்களின் உருது உபந்நியாசத்தைத் தமிழில் மொழி பெயர்த்ததோடு தமிழ்நாடு முழுவதும் அவர்கள் கூடவே இருந்தவர் என்பது உங்களனைவருக்கும் ஞாபகமிருக்கலாம். அவர்கள் இதுவரை பேசியதிலிருந்து எதையும் எந்த மதத்தையும் சரித்திரத்திலிருந்து தீர்மானிக்கக் கூடாது என்றும், அதன் பலனைக் கொண்டும், அது மக்களுக்கு என்ன நன்மை அளித்தது என்பதைக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டுமென்றும், மதம் என்பது வெறும் வேஷத்திலில்லையென்றும், அது மக்களின் நன்மைக் காகவே இருக்க வேண்டுமென்றும், அத்தோடு அது எவருக்கும் நம்பிக்கையில் மாத்திரம் இல்லாமல், பகுத்தறிவிற்கும், ஆராய்ச்சிக்கும், அனுபவத் திற்கும் ஏற்றதாயிருக்க வேண்டுமென்றும் சொன்னார்கள். இதை நான் முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறேன். மற்றும் உலகத்திலுள்ள மதக்காரர்களெல்லாம் இதை ஒப்புக் கொள்ளும்பட்சம் நாட்டில் மத சம்மந்தமான எவ்வித சண்டையும், அபிப்பிராயபேதமும், பிரிவும் பல மதங்களும் ஏற்பட இடமே இருக்காது. தவிர மௌலானா அவர்கள் இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கும், தீண்டாதார் என்பவர்களுக்குமுள்ள பல சுதந்திரங்களையும், இந்து மதத்தில் அவை இல்லாததையும் எடுத்துச் சொன்னார்கள். அதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும் அதைப் பற்றியே இரு சமூகத்திற்கும் பயன் படுமாறு சில வார்த்தைகள் பின்னால் பொதுவாகச் சொல்லுகிறேன்.

இந்துக் கடவுள்கள் உருவத்தை எல்லாம் இஸ்லாமியர்கள் உடைத்து சின்னாபின்னமாக்கப்பட்டதாகவும், ஒரு கையில் வாளையும், மற்றொரு கையில் குரானையும் வைத்து மதப் பிரசாரம் செய்ததாகவும் சொல்லப் படுகின்றது. அது உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம், பொய்யாயிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் அது உண்மையாயிருந்தால் அந்த கொள்கை கொண்ட மகமதிய அரசாங்கம் இதுவரை இந்தியாவில் இருந்திருக்குமாயின் இன்றைய இந்தியாவின் நிலை எவ்வளவோ மேன்மையாய் இருந்திருக்கும். தீண்டாதார்களாக ஆறு கோடியும் பயங்காளிகளும், கோழைகளும் ஒற்றுமையற்றவர்களும் சோம்பேறிகளுமாக இருபது கோடியுமுள்ள மக்கள் இன்று கண்டிப்பாய் இந்தியாவில் இருந்திருக்க மாட்டார்கள் என்பது கல்லு போன்ற உறுதி.

குழவிக் கல்லுக்கு கோடி ரூபாய்

ஒரு பக்கம் நமது மக்கள் கஞ்சிக்கில்லாமல் அலையவும் - நாட்டை விட்டு லட்சக்கணக்கான பேர்கள் கஞ்சிக்காக வெளி நாடுகளுக்கு ஓடவும் பார்த்துக் கொண்டே நமது கடவுள்கள் குழவிக் கல்லுகள் அவதாரத்திலிருந்து கொண்டு இவ்வளவு பெரிய கோவிலுடனும், இத்தனைக் கோடி ரூபாய்கள் நகையுடனும், இத்தனை வேளை பூசையுடனும், இத்தனை தாசி, வேசி, வைப்பாட்டி, பெண்டாட்டிகளுடனும் இருந்து கொண்டு பல்லக்கு, ரதம், தேர், ஆனை, குதிரை, ஆடு, மாடு, மயில், குரங்கு, கழுகு வாகனத்தில் சவாரி செய்து கொண்டு ஊர்வலம் வந்துகொண்டே இருக்குமா? இருக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? அல்லது இவ்வளவு பணம் நமது நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு கொள்ளை போய் கொண்டு இருப்பதற்கு நமது மக்களே அனுகூலமாய் இருப்பார்கள் என்று கருதுகின்றீர்களா?

இந்தியாவானது எத்தனையோ காலத்திற்கு முன் சுயராஜியத்துடன் உலகத்திலுள்ள நாடுகளில் எல்லாம் மேன்மையாக இருந்து கொண்டிருக்கும். ஆகையால் அதைப் பற்றி அதாவது வாள் கொண்டு இஸ்லாம் மதப் பிரசாரம் செய்ததைப் பற்றியும் நமது கோயில்களை இடித்து சாமிகளை ஊனப்படுத்தினார்கள் என்பதைப் பற்றியும் நான் சிறிதும் வருத்தமடையவில்லை. அன்றியும் அதுவேதான் அம் மாதிரியாகச் செய்வதுதான் மற்ற எல்லா மதத்தினுடையவும் பிரசார தர்மமாகவும் இருந்திருக்கின்றது. இன்றும் இருக்கின்றது.

-ஈரோடு முனிசபல் எலிமெண்டரி பாடசாலையில் நடந்த நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாள் விழாவிலும் சத்தியமங்கலம் விழாவின் தலைவர் முடிவுரையிலும் பெரியார் அவர்கள் பேசியது.-”குடி அரசு” - சொற்பொழிவு - 24.08.1930

Saturday, December 27, 2014

தந்தை பெரியார் ஏக இறைவனை மறுத்தாரா?



திரு ஜெயபாரதன்!

//அப்படியானால் கடவுளை நம்பிய திருவள்ளுவர், இளங்கோ வடிகள், கம்பர், காளிதாசர், ஆண்டாள், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர், பாரதியார், அருணகிரிநாதர், வள்ளலார், மீரா, காரைக்கால் அம்மையார், ஏசுநாதர், அன்னை தெரேசா, நபிநாயகம் ஆகியோரெல்லாம் முட்டாளா ?//

பெரியாரின் கருத்துக்களை தவறாக விளங்கிக் கொண்டதால் பலருக்கு இதில் தெளிவு கிடைக்கவில்லை. பெரியார் சொல்வதைக் கேளுங்கள்.

"கடவுளை மக்களிடையே பரப்பினவனை ஏன் அயோக்கியன் என்கின்றோம் என்றால், கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை, பற்றற்றவர், எங்கும் நிறைந்தவர், எல்லாமுமானவர் என்பது தெரிந்தும் அதற்கு மனிதனைப் போல உருவம் அமைத்து மனிதனுக்குள்ள ஆசாரபாசங்கள் யாவும் அதற்கு உண்டு என்று கதை எழுதி, அதற்கும் பொண்டாட்டி, பிள்ளைக்குட்டி, கோயில் என்பதெல்லாம் உற்பத்தி செய்து, அதற்குச் சோறு, பூசை என்றும், அவனைக் கொன்றது - இவனைக் கொன்றது என்றெல்லாம் எழுதி அதை மக்களிடையே பரப்பி, மக்களையும் அறிவற்ற முட்டாள்களாக - மூட நம்பிக்கைக்காரர்களாக ஆக்கியதால் கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்கின்றோம்."

- பெரியார்
('விடுதலை', 29.01.1969)

கற்பனை செய்ய முடியாத அந்த கடவுளுக்கு உருவத்தைக் கொடுத்து அதற்கு மனைவியையும் உண்டாக்கி அந்த கடவுளுக்கு குழந்தைகளையும் உருவாக்கி அதன் மூலம் காணிக்கை வசூலிக்கும் புரோகிதத்தனத்தை வெறுத்ததனால் எழுந்த வார்த்தைகளே இவை. கடவுள் இருக்கிறான் என்பதை பெரியாரும் உணர்ந்தே இருந்தார்.

Wednesday, September 03, 2014

'குரு உத்ஸவ்' க்கு ஏன் தமிழகத்தில் இத்தனை எதிர்ப்பு?



(வட மாநிலங்களில் தலித் பெண்களை கற்பழிப்பதும் அதன் பிறகு அவர்களை தூக்கில் மாட்டி தொங்க விடுவதும் ஆதிக்க சாதிகளுக்குரிய இலக்கணம் என்ற பொது புத்தி அந்த மக்களிடம் வேருன்றி இருப்பதற்கு வட மொழியில் இயற்றப்பட்ட மனு ஸ்ருமிதியே காரணம் எனலாம்)

'குரு உத்ஸவ்' க்கு ஏன் தமிழகத்தில் இத்தனை எதிர்ப்பு?

செப்டம்பர் 5ம் தேதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தினத்தில் “குரு உத்சவ்” கொண்டாடப்பட வேண்டும் என்று பள்ளிகளுக்கு மத்திய மனித வள ஆற்றல் துறை அமைச்சகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப் பட்டது. இந்த சுற்றறிக்கையானது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்டும் அல்ல. கல்கத்தாவில் நிலைமை எப்படி என்பதையும் பார்போம்.

கோல்கட்டா: 'குரு உத்சவ்' எனும் ஆசிரியர் தினத்தன்று, பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மோடியின் உரையை கேட்க எந்தவித ஏற்பாடுகளையும் மேற்கு வங்க அரசு இதுவரை செய்யவில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மோடியின் உரையை புறக்கணிக்க உள்ளன. இது தொடர்பாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி கூறுகையில், மோடியின் உரையை கேட்க தேவையான உள்கட்டமைப்புகள் இங்கு இல்லை. ஆசிரியர் தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வர் மம்தா ஆசிரியர்களை கவுரவிக்க உள்ளார் என கூறினார்.

இந்தியா என்பது தங்களுக்கு என தனியான கலாச்சாரம், மொழி, சமுக அமைப்பு ஆகியவற்றை கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு துணைகண்டம். இந்த துணைகண்டம் ஒரே நாடாக உருவானதற்கு மொகலாயர்களும் ஆங்கிலேயர்கள்தான் முக்கிய காரணம். சுதந்திரத்திற்கு பிறகு வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் எல்லா தேசிய இனங்களும் வாழ்ந்து வருகின்ற இந்தியாவில் வட இந்திய அரசியல் தலைவர்கள் இந்தியா என்பது இந்தி அல்லது சமஸ்கிருதம் பேசுகின்றவர்களுக்கு மட்டுமே உரியது போல நினைத்து மற்ற தேசிய இனங்கள் அவர்களை சார்ந்து வாழ வேண்டும் அல்லது அவர்களது ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும். இதை மறுப்பவர்கள் தேசிய விரோதிகள் என நினைத்து செயல்படுகிறார்கள். இது பல இனங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நமது இந்தியாவை கூறு போடும் நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை ஆட்சியாளர்கள் உணர மறுக்கின்றனர்.

பல மொழிகளை கற்றுக் கொண்டால் நன்மைதானே? இதில் என்ன பிரச்னை என்று கேட்பவர்களுக்கு சில விளக்கத்தை தர முயற்சிக்கிறேன்.

தமிழ்நாட்டில் ஆங்கில மொழி, அரபு மொழி, உருது மொழி, கன்னட மொழி, தெலுங்கு மொழி போன்ற பல தரப்பட்ட மொழிகளை கற்றுக் கொடுக்கும் பல கல்வி சாலைகள் சிறப்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதனை யாரும் எதிர்க்கவில்லை. அந்த மொழி பேசுபவர்களோடு அண்ணன் தம்பிகளாக தமிழர்கள் பழகியே வருகின்றனர். இந்து மதத்தின் ஒரு அங்கமாக பார்க்கப்படும் வட மொழியான சமஸ்கிரதத்தை மட்டும் ஏன் தமிழர்கள் வெறுக்க வேண்டும்? அதற்கான காரணம் என்ன?

ஆங்கில மொழியோ, அரபு மொழியோ அல்லது உருது மொழியோ தமிழனின் வாழ்வோடு சம்பந்தப்படாத ஒன்று. வருமானத்திற்காகவும், வேலைக்காகவும் விரும்பியவர் படித்துக் கொள்ளலாம். விரும்பாதவர் விட்டு விடலாம். ஆனால் வட மொழியின் வரலாறு அப்படியா?

கண்டிப்பாக இல்லை. ஆரிய படையெடுப்பினால் தமிழன் எழுதிய எத்தனையோ லட்சக்கணக்கான ஓலைச் சுவடிகள் பொக்கிஷங்கள் சூறையாடப்பட்டன: பல நெருப்பில் இட்டு கொளுத்தப்பட்டன: மேலும் பல ஆறுகளில் கொட்டி தண்ணீரோடு தமிழனின் கலாசாரத்தையும் விரட்டியது ஆரியம். அதன் காரணமாக கோவில்களில் இருந்த தமிழ் வழிபாடு துடைக்கப்பட்டு சமஸ்கிரத மந்திரங்கள் வலிந்து புகுத்தப்பட்டன.

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்றும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றும் பரந்த மனப்பான்யோடு வாழ்ந்த தமிழனின் கலாசாரம் முற்றாக ஒழிக்கப்பட்டு மனிதர்களை பிளவு படுத்தும் வர்ணாசிரம கோட்பாடுகளை இறக்குமதி செய்தது ஆரியம். தலையில் பிறந்தவன் பார்பான்: காலில் பிறந்தவன் சூத்திரன் என்று போதிக்கப்பட்டு தீண்டாமை வலிந்து புகுத்தப்பட்டது. வெற்றி பெற்ற ஆரியர்கள் இந்த மண்ணின் மைந்தனை விலங்குகளை விடக் கேவலமாக நடத்தி அதனை சரியென்று மனு தர்மத்தை கொண்டு போதிக்கவும் செய்தனர். எத்தனையோ பெரியார்கள் முயற்சித்தும் இந்த ஆரிய மாயையை ஒழிக்க முடியவில்லை. எல்லோருக்கும் இட ஒதுக்கீடு கிடைத்ததனால் இன்று ஓரளவு பார்பனர் அல்லாதவர்கள் சில முக்கிய பொறுப்புகளில் அரசு வேலைகளில் அமர்த்தப்பட்டனர். இருந்தும் அவர்களையும் இயக்கும் முக்கிய பொறுப்புகளில் பார்பனியம் அமர்ந்து தங்களின் காரியத்தை தயக்கமின்றி நிறைவேற்றி வருகிறது.

அதன் வெளிப்பாடுதான் 'சமஸ்கிரத வாரம்' என்றும் 'குரு உத்ஸவ்' என்றும் அவ்வப்போது தமது அரிப்பைக் காட்டிக் கொண்டு பிறகு குட்டுப்பட்டவுடன் அதற்கு ஏதாவதொரு விளக்கத்தை கொடுத்து சமாளிக்கப் பார்க்கிறது பார்பனியம். எனவேதான் மற்ற மொழிகளை ஆதரிக்கும் தமிழர்கள் சமஸ்கிரதம் என்றால் காத தூரம் ஓடுகிறார்கள். இஸ்லாமியனான எனக்கு சமஸ்கிரதம் என்பது இறைவன் படைத்த பல மொழிகளில் ஒன்று என்று கருதி அதனையும் மதிக்கிறேன். ஆனால் இந்த சமஸ்கிரதத்தால் பாதிப்படைந்த கோடிக்கணக்கான திராவிடர்கள் நஞ்சாக இந்த மொழியை வெறுப்பது அவர்களை பொறுத்த வரை நியாயமான ஒன்றே. பாதிப்படைந்தவனுக்குத்தானே அதன் வலி தெரியும்.

எனவே மோடி ஆட்சியானது சரிந்து வரும் பொருளாதாரத்தை சரிகட்ட என்ன முயற்சியோ அதை எடுக்கட்டும். அதை விடுத்து கொலைகாரி சாது பிரக்யாசிங், கொலைகாரன் அசீமானந்தா, போன்றவர்களை பிணையில் விடுவிப்பதும் சமஸ்கிரத வாரம் என்றும் 'குரு உத்ஸவ்' என்றும் இந்துத்வா கொள்கைகளை மறைமுகமாக புகுத்த நினைத்தால் அது இந்து மதத்தை மேலும் பலவீனமாக்கும். தலித்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இஸ்லாத்தில் இணைவது அதிகரிக்கும். நமது இந்திய பொருளாதாரம் சாதி, இன, மொழி சண்டைகளால் மேலும் பலவீனமடையும்.

இந்தியாவை ஆண்ட மிக மோசமானவர்களில் ஒருவராக மோடி குஜராத் கலவரத்தின் மூலம் பெயர் எடுத்துள்ளார். அந்த பெயரை தனது சிறந்த ஆட்சியின் மூலம் மாற்ற மோடி முயற்சிக்கட்டும். அதை விடுத்து இது போன்ற முயற்சிகள் தொடருமானால் வரும் ஐந்தாண்டுகளில் திரும்பவும் காங்கிரஸ் அரியணை ஏறும். பிஜேபி என்ற ஒரு கட்சியே சுத்தமாக துடைத்தெறியப்படும். பிஜேபிக்கு சவக் குழி தோண்டும் இது போன்ற காரியங்களை இனியாவது இவர்கள் செய்யாதிருப்பார்களாக!

-------------------------------------------------

கற்பழிப்புகளில் விரைவில் இந்தியா முதலிடத்தை நோக்கி நகரும் அபாயம் – அதிர்ச்சி தகவல் :

தேசிய குற்ற ஆவண காப்பகம் National Crime Record Archive வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 3,425 பெண்கள் கற்பழிக்கப்பட்டு மத்திய பிரதேசம் முதலிட்டதிலும், 2,049 பெண்கள் கற்பழிக்கப்பட்டு உத்திரப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும், ராஜஸ்தான் மூன்றாம் இடத்திலும், 737 பெண்கள் கற்பழிக்கப்பட்டு தமிழகம் நான்காம் இடத்திலும் உள்ளன.

பெண்கள் தனித்து நடமாடுவதற்கு மிகவும் அச்சத்திற்குள்ளான நகரங்களாக டெல்லியும், பம்பாயும் இருப்பதாக கூறப்படுகிறது. ஏதோ பெரியார் போன்றவர்கள் இந்துத்வாவுக்கு தமிழகத்தில் முடிந்த வரை கடிவாளம் போட்டு வைத்திருந்ததனால் தமிழகம் முதல் இடத்தை பிடிக்காமல் தப்பித்தது.

Thursday, July 24, 2014

மறுமை நாளில் இறந்த குழந்தைகள் பேசுமா?

மறுமை நாளில் இறந்த குழந்தைகள் பேசுமா?

ஹானஸ்ட் மேன்!

//இறைவன் ஒரு உருவம் கொடுப்பது குழந்தை பருவத்தில்தான். அப்படியானால் மறுமை நாளில் அதே உருவத்தில் திரும்ப உயிர் கொடுக்கபடுவான் என்றால் குழந்தையை மறுமை நாளில் விசாரிப்பது நியாயமா? பேசமுடியாத அந்த குழந்தை விசாரணையின்போது பதில் சொல்ல இயலுமா?//



எந்த வயதில் இறக்கிறீர்களோ அந்த உருவத்திலேயே எழுப்பப்படுவீர்கள். ஒரு துளி இந்திரியத்தில் தாய் தகப்பனின் முகம், நிறம், குரல், குணம் என்று அனைத்தையும் ஜிப் செய்து அடைத்து வைத்த இறைவனால் ஒரு குழந்தையை பேச வைக்க முடியாதா? ஒரு குழந்தையை எந்த நியாயமும் இன்றி கொன்றவர்களுக்கு தண்டனை கொடுக்க அந்த குழந்தையிடம் விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதாக இறைவன் கூறுகிறான். அன்றைய அரபுகள் நபிகள் காலத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தால் அதனை உயிரோடு புதைத்து விடுவார்களாம். உசிலம் பட்டியிலும், சேலம் போன்ற பகுதிகளிலும் பெண் குழந்தை பிறந்தவுடன் கள்ளிப் பால்,அல்லது நெல் மணிகளைக் கொடுத்து கொன்று விடும் பழக்கம் இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகிறது. இப்படிகொல்லப் பட்ட பெண் குழந்தைகள் மறுமை நாளில் இறைவனுக்கு முன்னால் தன் பெற்றோர்களின் மேல் 'எந்த காரணத்திற்காக ஒரு பாவமும் அறியாத நாங்கள் கொல்லப் பட்டோம்' என்று வழக்கு தொடர்வார்கள் என்று இந்த வசனம் சொல்லிக் காட்டுகிறது.

'வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.'

-குர்ஆன் 17 : 31


'என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப் பட்ட பெண் குழந்தை மறுமை நாளில் விசாரிக்கும் போது'

-குர்ஆன் 81 :8,9


//புதன் கிழமை (அதாவது நேற்று) நைஜீரியாவில் கடுனா என்ற இடத்தில 2 குண்டுகள் வெடித்து 42 பேர் அல்லாவின் அடி சேர்ந்தனர். அது மட்டுமா? பாக்தாத்தில் கார் குண்டு வெடித்து 23 பேர் இறந்து 40 பேர் காயமுற்றனர். (இவை இரண்டும் இன்று வந்த செய்திதாளின் செய்தி. இப்படி தினசரி வந்த வண்ணம்தான் உள்ளது)//

ஈராக், நைஜீரியா, லிபியா, சிரியா போன்ற நாடுகள் முன்பு அமைதி தவழும் நாடுகளாகவே இருந்தன. அங்குள்ள கனிம வளங்களை சுரண்டுவதற்காக அமெரிக்காவும் அதன் அடிவருடியான இஸ்ரேலும் ரசாயன ஆயுதங்கள் உள்ளது என்ற பொய்க் காரணத்தை கூறி அந்த நாடுகளின் மீது பொர் தோடுத்தனர். லிபியாவில் கடாபியை எதிர்க்கும் குழுவுக்கு ஆதரவு நல்கினர். அன்றிருந்து அந்த நாடுகள் நிம்மதி இழந்து தவிக்கிறது. இதற்கு முழு காரணமும் அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்குலக நாடுகளும் ஆகும். நமது நாட்டிலும் குண்டு வெடிப்புகள், பெண் கொடுமை, கொலைகள் தினமும் நடந்தே வருகின்றன. அதற்காக ஒட்டு மொத்த இந்தியாவையும் சீரழிந்ததாக காட்ட முடியுமா?

//சரியாக இருந்தால் அவரை பின்பற்றும் முஸ்லிம்கள் இந்த குற்றங்களை செய்ய கூடாதே! ஏனென்றால் மனிதர்களை நேர்வழி படுத்ததானே குரான் அருளப்பட்டதாக சொல்கிறீர்கள். ஆனால் திருந்தவில்லையே!//

நபியையும் குர்ஆனையும் அனுப்பி கூடவே ஷைத்தானையும் இறைவன் அனுப்பியுள்ளான். நல் வழியில் செல்லாமல் தடுப்பது இந்த சாத்தானின் வேலை. அதனையும் மீறி இந்த பரீட்சையில் வெற்றி பெறுபவர்களே பாக்கியசாலிகள்.

//அது என்ன பெரியார் மண்? புதுசா ஏதேனும் சந்தையில் வந்திருக்கா?//

பெரியாரை அதிகம் மதிக்கும் அவரது கொள்கைகளை அதிகம் பின் பற்றும் இந்துக்களை கொண்ட நாடு நமது தமிழ்நாடு என்பது அதற்கு அர்த்தம்.

//வன்முறை பெரியார் மண்ணில் ஏற்படாது என்றால் அந்த ராமசாமி ராமரை செருப்பால் அடித்தாரே அதற்கு வன்முறை என்று பெயரில்லையா? உங்களுக்கு அது நன்முறையா?//

பெரியார் ராமர் என்ற மனிதனை அடிக்கவில்லை. ராமர் என்ற சிலையைத்தான் அடித்தார். அந்த அளவு அந்த மதத்தினால் பாதிப்படைந்ததனால் எழுந்த ஒரு வேகம் அது. ஆனால் பலரும் மதிக்கும் ஒருவரின் சிலையை இவ்வாறு பொதுவில் அடித்தது எனக்கு உடன்பாடு இல்லை. அது மேலும் குழப்பங்களையே உண்டு பண்ணும் என்பதே எனது நிலை. கல்வியிலும் சமூக அந்தஸ்திலும் தமிழர்களை தலை நிமிரச் செய்ததில் பெரியாரின் பங்கை அவ்வளவு லேசாக மதிப்பிட முடியாது. ஆனால் அதற்கு பின்னால் வந்த அவரது தம்பிகள் தங்களின் வாரிசுகளை முன்னிறுத்தி பெரியாரின் வழியை புறக்கணித்ததால்தான் இன்று தமிழன் டாஸ்மார்க்கில் க்யூவில் நிற்கிறான். உங்கள் ஆர்எஸ்எஸிடம் சொல்லி குடியால் அழியும் தமிழர்களை காக்க முயற்சி செய்யுங்கள்.


Sunday, May 25, 2014

தர்ஹாவை எப்பய்யா விடப் போறீங்க... - பெரியார்



'எங்க ஆளுங்க மாரியம்மனுக்கு தேர் இழுத்தா, உங்க ஆளுங்க நாகூர் பாவாவுக்கு கூடு இழுக்கிறீங்க...அட வெங்காயங்களா...நீங்க எல்லாரும் எப்பய்யா திருந்தப் போறீங்க....'

---------------------------------------------

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

குர்ஆன் 72:18


ஹஜ்ரத் அலி அவர்கள் அபுல் ஹய்யாஜ் அல் அஸதியை நோக்கி ‘அறிந்து கொள்! நபிகள் நாயகம் என்னை எதற்காக அனுப்பினார்களோ அதற்காக நானும் உன்னை அனுப்புகின்றேன். எந்த ஒரு சிலுவையையும் தரைமட்டமாக்காமல் விட்டுவிடாதே, மற்றும் பூமியின் மட்டத்தை விட்டும் உயர்ந்திருக்கின்ற எந்த ஒரு கப்ரையும் சமப்படுத்தாமல் விட்டு விடாதே எனப்பணித்து அனுப்பினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்:1662)

“அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.”
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்-1610)


‘இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.’
(அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: முஸ்னத் அல் ஹுமைதி)

தர்ஹாக்கள் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்படுவதற்கு இஸ்லாம் கடுமையாக தடை விதிக்கிறது. கிறித்தவ பைபிளிலும் இதற்கு ஆதாரம் உண்டு.

அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)

2678. தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) கூறினார்.
ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கலானார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)" என்று பதில் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர (வணக்கம்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அவருக்குக் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர வேறேதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அவருக்குக் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர வேறெதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பி நோற்கும் (உபரியான) நோன்பைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், இறைத்தூதர் ஸகாத்தையும் அவருக்கு (எடுத்துக்) கூறினார்கள். அவர் 'இதைத் தவிர வேறெதும் என் மீது (கடமையாக்கப்ப்டடு) உள்ளதா?' என்று கேட்டார். 'இல்லை; நீ தானாக விரும்பிச் செலுத்தும் (உபரியான) ஸகாத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மனிதர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவும் மாட்டேன்; இதைக் குறைத்துச் செய்யவும் மாட்டேன்" என்று கூறியபடி திரும்பிச் சென்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்துவிட்டார்" என்றார்கள்.
Volume :3 Book :52

நபி மொழி இப்படி இருக்க நமக்கு எதற்கு தேவையில்லாத தர்ஹா வழிபாடு? சிலர் கூறலாம் இது போன்ற விழாக்கள் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கிறது என்று. இது பொய்யான வாதம். ஏனெனில் முன்பு எங்கள் ஊரில் இதே தர்ஹா விஷேச நாளில் பல தகராறுகள் வரும். பெண்கள் கூட்டத்தில் சிக்குவதால் இதைப் பயன்படுத்தி பலர் தங்களது சில்மிஷங்களை ஆரம்பிக்கின்றனர். இதைப் பார்க்கும் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தவரை அடிக்க போய் பெரும் சண்டையாக மாறிய காட்சிகளும் உண்டு. ஒவ்வொரு முறை தர்ஹா விஷேச நாள் வரும்போது ஏதாவது ஒரு தகராறு வந்து விடும். இது எதற்கு? யாரை திருப்திபடுத்த?

Tuesday, April 23, 2013

ஈ.வெ.ராமசாமி பெரியார் ஒரு வஹாபியா?

ஈ.வெ.ராமசாமி பெரியார் ஒரு வஹாபியா?



'எங்க ஆளுங்க மாரியம்மனுக்கு தேர் இழுத்தா, உங்க ஆளுங்க நாகூர் பாவாவுக்கு கூடு இழுக்கிறீங்க...அட வெங்காயங்களா...நீங்க எல்லாரும் எப்பய்யா திருந்தப் போறீங்க....'

----------------------------------------------------------------

என்னைப் போன்ற ஆட்கள் நாகூர் சந்தனக் கூடு இழுக்காதீங்கப்பா, தர்ஹாவுக்கு போகாதீங்கப்பா, பல தெய்வ வணக்கத்தை விடுங்கப்பா, தட்டு தாயத்து என்று மூடப் பழக்கங்களிலிருந்து விடுபடுங்கப்பா, சாதி ஏற்றத் தாழ்வு கிடையாதுப்பா, சாதிகளே கிடையாதுப்பா,மாரியம்மன் திருவிழா மாதிரி அல்லா சாமி பண்டிகை எல்லாம் கொண்டாடாதீங்கப்பா, பெண்ணிடம் வரதட்சணை வாங்காதீங்கப்பா, பெண் குழந்தையை வறுமைக்கு பயந்து ஸ்கேன் பண்ணி அழிக்காதீங்கப்பா, சகோதர மதத்தவர்களோடு அன்போடும் பாசத்தோடும் பழகுங்கப்பா என்று பதிவு எழுதினால் எங்களை வஹாபிகள் என்று பலரும் குறை கூறுகினறனர். இன்று நாங்கள் என்ன சொல்கிறோமோ அதைத்தான் 80 வருடங்களுக்கு முன்பு பெரியாரும் சொல்லியிருக்கிறார். சந்தனக் கூடு எடுப்பதை அன்றே மிகக் கடுமையாக எதிர்த்திருக்கிறார். தேவையில்லாத விருந்துகளுக்கு செலவு பண்ணும் பணத்தை ஏழை மாணவ மாணவிகளின் கல்வி செலவுக்கு பயன்படுத்தச் சொல்லி முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகிறார். எல்லா பாவத்தையும தெரிந்தே செய்து விட்டு மக்காவுக்கு போனா எல்லாமே சரியாகி விடும் என்ற தவறான எண்ணத்தில் இருக்கும் பல முஸ்லிம்களை சாடுகிறார். வசதியில்லாத பலர் கடன் வாங்கிக் கொண்டு மக்காவுக்கு செல்வது தேவையில்லாதது என்று அறிவுறுத்துகிறார். அதுவும் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு மீலாது மேடையிலேயே கண்டிக்கிறார். பெரியாருக்கு தெரிந்த இஸ்லாம் கூட இன்று பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கும் பலருக்கு தெரிவதில்லை. என்ன அழகாக பெரியார் இஸ்லாத்தை அன்றே விளங்கியிருக்கிறார் என்பதை முழு உரையையும் கேட்டுத் தெளிவுறுங்கள்.

இனி பெரியாரின் பேச்சைக் கேட்போம்....

சகோதரர்களே! உங்கள் மத சம்பந்தமான ஒரு சிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்க அழைத்ததற்கு நான் நன்றி செலுத்துகிறேன். என்னை அநேகர் மத துவேஷி என்றும் கடவுள் மறுப்புக்காரன் என்றும் சொல்லுவார்கள். இந்த ஊரிலும் பலர் சொல்லுவார்கள். அப்படியிருக்க நீங்கள் என்னை அழைத்து மிகவும் தைரியமென்றே சொல்ல வேண்டும். எப்படி இருந்தாலும் நான் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எனது அபிப்பிராயத்தை வெளியிட பின்வாங்குவதே இல்லை. சென்ற வருஷத்திலும் இதேமாதிரி கொண்டாட்டத்தில் நான் பேசி இருக்கின்றேன். அதிலும் பல இந்து முஸ்லீம்களுக்கு அதிருப்தி இருந்திருக்கலாமானாலும் அநேகருக்கு திருப்தி ஏற்பட்டு முஸ்லீம்களால் அல்லாசாமிப் பண்டிகை நிறுத்தப்பட்டதற்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஆனால் என்பேரில் கோபித்துக் கொண்ட இந்துக்கள் இவ்வூரில் தங்கள் மாரியம்மன் பண்டிகையைக்கூட நிறுத்திவிட சம்மதிக்காமல் மிகுதியும் காட்டுமிராண்டித்தனமான முறையிலேயே நடத்துகின்றார்கள். இப்படியேதான் எங்கும் நடைபெறுகிறது. இந்துக்களை விட இஸ்லாமானவர்கள் அறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் என்பதும் நியாயத்தை ஒத்துக்கொண்டு அதன்படி உடனே நடப்பவர்கள் என்பதும் இதிலிருந்து ஒருவாறு உதாரணமாய் விளங்குகிறது. ஆனால் இன்னும் அநேக விஷயங்களில் திருத்துப்பாடு ஆகவேண்டி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். முஸ்லீம் சீர்திருத்தத் தலைவர்கள் இதை வலியுறுத்திக்கொண்டே வருகின்றார்கள். கூண்டு திருவிழா முதலிய வற்றையும் நிறுத்தி விடுங்கள். இதனால் எல்லாம் இஸ்லாம் கொள்கைகள் கெட்டுப்போகாது. இவை இருந்தால் தான் பரிகாசத்திற்கிடமானதாகும்.

இந்த முக்கியமான நாள் என்பதில் வேலூர் மௌல்வி சாயபு அவர்கள் குர்ஆனின் மேன்மையையும் திரு. முகமது நபி அவர்களின் உபதேசத்தின் பெருமையையும் பற்றி சொன்னார்கள். என்னால் அந்தப்படி சொல்ல முடியாது. ஏனெனில் நான் அவற்றை படித்துப் பார்த்தவனல்ல. அந்த வேலைக்கு நான் போவதுமில்லை. நான் அதற்கு அருகனுமல்ல. அப்படி ஏதாவது நான் படித்து அதைப்பற்றி இங்கு பேசுவது என்பதும் அதிகப்பிரசங்கித்தனமேயாகும். ஏனெனில் பெரிய பெரிய மௌல்விகள் இருக்கும் போது அவர்கள் முன் நான் என்னதான் படித்தாலும் என்ன பேச முடியும்? அன்றியும் புஸ்தகத்தில் இருப்பதை விட பிரத்தியக்ஷத்தில் உள்ளதைப் பற்றிப் பேசுவதே பலனளிக்கக்கூடும். நான் இந்த சந்தர்ப்பத்தை எதற்கு உபயோகித்துக் கொள்ள கூடுமென்றால் மக்களிடம் பிரத்தியக்ஷத்தில் காணும் விஷயங்களைப் பற்றியும் இன்னமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற விஷயத்தைப்பற்றியும் பேசுவதும் பயன்படுவதாகும் என்று கருதுகின்றேன்.

திரு.நபி அவர்களின் இவ்வளவு அருமையான உபதேசம் என்பவற்றில் உலக மக்கள் எல்லாம் பயன்அடையும்படி செய்ய என்ன என்ன செய்யவேண்டும் என்பதற்கு ஆகவே நீங்களும் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளப்பார்க்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

செட்டி முடுக்கா? சரக்கு முடுக்கா?

இஸ்லாம் மார்க்கம் “மக்களுக்கு உபதேசிப்பதிலும் வேதவாக்கியங்களிலும் மேன்மையானதாய் இருக்கின்றது” என்கின்ற திருப்தியானது மனிதசமூகத்திற்கு எல்லாப் பயனையும் அளித்துவிடாது. ஆனால் அதன் தத்துவத்திற்கொப்ப காரியத்தில் அதன் பயனை உலகத்தில் மேன்மையுறச் செய்து மக்களுக்கு நல்ல வழிகாட்டியாகி உலகமக்களை ஒன்றுபடுத்தவும் அனைவரையும் சகோதரத்தன்மையுடனும் இருக்கவும் பகுத்தறிவுடனும், சுயமரியாதையுடனும், சுதந்திரத்துடன் வாழவும் செய்யவேண்டும். எந்தக் கொள்கைக்காரனும் புஸ்தகத்தில் இருப்பதைக்கொண்டு தங்கள் முன்னோர்கள், பெரியார்கள் சொன்னார்கள் என்பதைக் கொண்டு இனி உலகத்தை ஏய்க்க முடியாது.

உலகம் பகுத்தறிவுக்கு அடிமையாகி எதையும் பிரத்தியக்ஷ அனுபவத்தைக் கொண்டு பரீட்சித்து சரிபார்க்க வந்துவிட்டது. அதற்கு துணிந்தும் விட்டது. செட்டி முடுக்கு செல்லாது. சரக்கு முடுக்காய் இருந்தால்தான் இனி செலாவணியாகும். ‘என் சரக்கை பரீக்ஷிக்கலாமா?’ என்கின்ற அடக்குமுறை இனிப்பலிக்காது. ‘அவர் ஒஸ்தியென்று சொன்னார்.’ ‘இவர் ஒஸ்தியென்று சொன்னார்’ ‘ஆண்டவன் சொன்னான்’ என்பதெல்லாம் அனுபவத்திற்கு நிற்காவிட்டால் காரியத்தில் நடந்து காட்டா விட்டால் இனி மதிப்புப்பெற முடியாது. ஆதலால் எந்தச்சரக்கின் யோக்கியதையும் கையில் வாங்கிப்பார்த்துதான் மதிக்க வேண்டியதாகும். அந்த முறையில் இஸ்லாம் கொள்கை என்பதும் முஸ்லீம் மக்களின் நடத்தையைக் கொண்டும் அவர்களது பிரத்தியட்சப்பயனைப் கொண்டும் தான் மதிக்கப் படமுடியும். உலகம் சிரிக்காதா?

இந்துக்கள் தேரிழுப்பதைப் பார்த்து முஸ்லீம்கள் பரிகாசம் செய்து விட்டு முஸ்லீம்கள் கூண்டுகட்டி சுமந்து கொண்டு கொம்பு, தப்பட்டை, மேளம், பாண்டு, பாணம் வேடிக்கைசெய்து கொண்டு தெருவில் போய்க் கொண்டிருந்தால் உலகம் திருப்பிச் சிரிக்கமாட்டாதா? என்று யோசித்துப் பார்க்கவேண்டும். இந்துக்கள் காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் போய் பணம் செலவழித்துவிட்டு “பாவம் துலைந்துவிட்டது” என்று திரும்பி வருவதைப் பார்த்து முஸ்லீம்கள் சிரித்துவிட்டு முஸ்லீம்கள் நாகூருக்கும், முத்துப் பேட்டைக்கும், மக்காவுக்கும் பணத்தை செலவு செய்து கொண்டு போய் விட்டு வந்து தங்கள் “பாவம் எல்லாம் துலைந்து விட்டது” என்று கருதிக் கொண்டு புதுக்கணக்குப்போட வந்தார்களானால் மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா? என்று நினைக்க வேண்டும்.

மக்கள் மார்க்கத்தைக் காப் பாற்றுவதென்றால் கொள்கைகளை பகுத்தறிவுக்கு இணங்கி இருக்கும்படி ஜாக்கிரதையாய் பார்த்து பயன்படுத்தவேண்டும். “தீர்க்கதரிசிகள் பகுத்தறிவுக்கு விறோதமாய் சொல்லி இருக்கமாட்டார்கள்” என்று கருதி அவற்றை தன் இஷ்டப்படி அருத்தம் செய்து கொண்டு பிடிவாதமாய் இருப்பது மூட நம்பிக்கையைவிட மோசமானதாகும். அம்மாதிரி மூட நம்பிக்கையின் பயனாய் தீர்க்கதரிசிகள் என்பவர்கள் சொன்னதின் கருத்தையும், உண்மையையும் அறிந்து கொள்ள முடியாமலும் போகும்.

பகுத்தறிவு

நமக்குப் பகுத்தறிவையும் நடுநிலைமையையும் எதிலும் பயன்படுத்த உறுதியும், துணிவும் இருந்தால்தான் உண்மையைக் கண்டு பிடிக்கவே முடியும். நாம் அறிவை உபயோகப்படுத்தாமல் நபிகள் வாக்கியத்திற்கு புரோகிதர்கள் சொல்லுகின்றபடி தப்பர்த்தம் செய்து கொண்டு ‘இதுதான் நபிகள் சொன்னது’ என்று சொன்னால் நபிகளுக்கு மரியாதை செய்ததாகுமா? நமது சொந்தக்கண்ணை பரிசுத்தப்படுத்திப் பரீட்சித்துப்பார்க்க வேண்டும். சாளேசரம் இருந்தால் சரியாய்த் தெரியாது. பக்கப்பார்வையாய் இருந்தாலும் சரியாய்த் தெரியாது. இரண்டுக்கும் தகுந்தபடி தூரத்தை சரிபடுத்தி நல்ல கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டும்.

மஞ்சள் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் மஞ்சளாகத்தான் தெரியும். சிகப்பு சிகப்பாகவும், பச்சை பச்சையாகவுந்தான் தெரியும். நல்ல சுத்தமான எந்தவித நிறமும் இல்லாத கண்ணாடிகொண்டு பார்க்கவேண்டும். அது போலவே தைரியமான பகுத்தறிவுடன் சுத்தமான நடுநிலைமை மனதுடன் எதையும் பார்க்கவேண்டும். கண்ட உண்மையை தைரியமாய் வெளியில் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிக்கில்லாமல் தங்களுக்கு தெரிந்த தப்பிதங்களை மூடி வைத்திருந்தால் கடைசியாக ரிபேர் செய்யமுடியாத அளவு மோசமானதாகி விடும்.

நீங்கள் பார்க்கின்ற கண்ணும், நீங்கள் செய் கின்ற அருத்தமும், நீங்கள் அறிந்த மாதிரியும் யுக்திக்கும், அனுபவத்திற்கும் பொறுத்திப் பாராமல் எல்லாம் சரியானதாகத்தான் இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். உங்களைப்போன்ற மற்றவர்கள் எப்படி நினைத்தார் கள்? நினைக்கிறார்கள் என்று பாருங்கள்.

மற்றவர்கள் மதிப்பது

நபி அவர்கள் உபதேசங்களை துருக்கியர் எப்படி மதிக்கின்றார்கள்? எப்படி அர்த்தம் செய்கின்றார்கள்? அவர்கள் என்ன பலன் அடைகின்றார்கள்? என்பவைபோல உலகத்தின் முஸ்லீம்களின் நடப்பு முழுவதையும், அமுலையும், பலனையும் நன்றாய் கவனித்துப் பார்க்க வேண்டும். உங்கள் ‘எதிரி’ மதத்தை (கொள்கைகளை) பரிசோதிப்பதுபோல் எதிரிஆதாரத்தை எந்தெந்த வழியில் பரிசோதித்து நியாயம் அநியாயம் சொல்லுவோமோ அந்த நோக்கத்துடன், அந்த வேகத்துடன் உங்கள் கொள்கைகள் என்று உங்களுக்குப் புரோகிதர்களால் போதிக்கப்பட்டு நீங்கள் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பரிசோதித்துப் பார்க்கவேண்டும்.

கண்ட உண்மையை வீரத்துடன் வெளியிட்டு குற்றமிருப்பின் திருத்தவேண்டும். மனிதன் முடிவுபெற்ற முற்போக்கானவன் என்று யாரும் கருதிவிடக்கூடாது. உலகமும் முழு முற்போக்கை அடைந்து விட்டதாகக் கருதிவிடாதீர்கள். திருத்தம் அவசியமானால் திருத்தியாக வேண்டும். திருத்தம் சரியென்று பட்ட வழியில் மனம் திரும்ப பயமோ வெட்கமோ அடையக்கூடாது.

இந்தியாவும் அப்படித்தான்

நபி அவர்கள் தோன்றிய காலத்தில் அரேபியாதேசம் எப்படி இருந்ததென்று மௌல்வீ சாயபு அவர்கள் சொன்னார்களோ அப்படியேதான் இன்னமும் இந்தியா இந்து கொள்கைகள் இருந்து வருகின்றது. அரேபியர்களிடத்தில் பெண் குழந்தை பிறந்தால் துக்கப்பட்டு கொல்லுகின்ற வழக்கம் இருந்ததாக மௌல்வி சாயபு சொன்னார்கள். இந்துக்களிடத்திலும் பெண் குழந்தை பிறந்தால் துக்கப்படும் வழக்கம் இன்னும் இருக்கின்றது. சமீப காலம் வரை பெண்களை பெரிய பெரிய பெண்களை புருஷன் இறந்துபோனால் பக்கத்தில் உயிருடன் வைத்து நெருப்புக்கொளுத்தும் வழக்கம் இருந்து வந்தது. இன்றும் பெண்களை அதைவிடக் கேவலமாய் விதவை என்று சொல்லி சகுனத்தடையாகப் பாவித்து கொடுமைப்படுத்தும் முறை இருந்துதான் வருகின்றது.

அரேபியர் பல கடவுள்களை வணங்கினதாகச் சொன்னார்கள். அதுபோலவே இன்றும் இந்துக்கள் ஒவ்வொருவரும் பல கோடிக்கணக்கான கடவுள்களை உருவத்துடன் மாத்திரமல்லாமல் பெண்டு, பிள்ளை வைப்பாட்டி ஆடு மாடு குதிரை யானை எலி பெருச்சாளி மயில் கெருடன் பாம்புவாகிய உருவங்களுடன் வணங்குகின்றார்கள். இவையெல்லாம் கீழ் மக்கள் என்று சொல்லுகின்றவர்களிடம்தான் இருக்கின்றது என்று நினைத்து விடாதீர்கள். மேல்மக்கள் என்று மதத்தின்பேரால் முடிவு கட்டப்பட்ட மக்களிடமே இருக்கின்றது. ஆதலால் திரு.மகமதுநபி அவர்கள் தோன்றுவதற்கு முன் அரேபியா பாலைவனம் எப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தில் இருந்ததோ அதுபோலவேதான் இன்றைய வரையில் இந்தியாவின் இந்து சமூகம் இருந்து வருகின்றது.

இந்த லட்சணத்தில் இதை எடுத்துச் சொன்னால் இந்துக்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லை. இந்தமாதிரியான ஒரு மதசம்பந்தமான முக்கிய நாள் என்பதற்கு உங்களைப் போல் இந்துக்கள் என்னைக் கூப்பிட வும் மாட்டார்கள். நான் ஏதாவது சொன்னால் பொறுக்கவும் மாட்டார்கள். என்னை வைவதையே அவர்கள் மதப்பிரசாரமாய் கருதுவார்கள். ஆனால் இஸ்லாம் கொள்கை என்பது எவ்வளவு பெருமையாய் எவ்வளவு சகோதரத் தன்மையாய் யாரையும் எந்தவித அபிப்பிராயக்காரனையும் கூப்பிடவும் அவர்கள் சொல்லும் எதையும் பொருமையாய் கேட்கவும் இருக்கின்ற சுதந்திரத்தைப் பார்த்து இவ்விஷயத்தில் இந்துக்கள் வெட்கப்பட வேண்டுமென்றே சொல்லுவேன்.

துலுக்கர் துடுக்கரா?

மௌல்வி ஆஜீ அப்துல் கரீம் சாயபு அவர்கள் துலுக்கன் துடுக்கன் என்று இந்துக்களால் சொல்லப்படுவதாய்ச் சொன்னார். இது இந்துக்களுக்குள் பலமில்லாத காரணத்தாலும் தங்களுக்குள் வீரமும் ஒற்றுமையும் இல்லாத காரணத்தாலும் சொல்லப்படுவதேயாகும். முஸ்லீம்களுக்குள் இருக்கும் ஒற்றுமையும் வீரமும் இந்துக்களுக்கு துடுக்கர்களாய் காணப்படுவது அதிசயமில்லை. என்னை ஒரு சாயபு அடித்தால் ஒரு அய்யரோ ஒரு செட்டியாரோ ஒரு முதலியாரோ சிபாரிசுக்கு வரமாட்டார். ஏனெனில் ஜாதிப்பிரிவு காரணமாக இந்துக்களுக்குள் சகோதரத்தன்மை இல்லாமல் போய்விட்டது. ஒருவனுக்கு மற்றவர்களிடம் அன்பு இல்லாமல் போய் விட்டது. ஜாதிப்பிரிவு இல்லாத காரணத்தாலேயே முஸ்லீம் மக்களுக்கு சகோதரத்தன்மை இருந்து வருகின்றது.

சகோதரர்களை தாராளமாய் உடையவனைக் கண்டால் யாரும் அஞ்சுவது வழக்கம்தான். ஆதலால் இந்துக்கள் உங்களை குற்றம் சொல்லுகிறார்களே என்று கருதி உங்கள் சகோதரத்தன்மையையும் வீரத்தையும் நழுவவிட்டு விடாதீர்கள். எண்ணிக்கையில் கொஞ்சமாயிருந்தாலும் உலகத்தில் நீங்களும் தலைசிறந்து விளங்கக் காரணமே உங்கள் சகோதரத்தன்மையே யாகும். ஆகையால் அதைவிட்டு விடாதீர்கள். ஆனால் மற்ற கொள்கைக்காரரையும் உங்கள் சகோதரர்களாக ஆக்கிக்கொள்ள முயலுங்கள். அதற்குத் தடையாயிருக்கும் சாதாரண காரியங்களையும் வெரும் வேஷமாத்திரத்தால் இருக்கும் வித்தியாசங்களையும் லக்ஷியம்செய்யாமல் ராஜிக்குத் தயாராயிருங்கள். இந்த வகையில் தான் ஒவ்வொரு கொள்கையும் செல்வாக்குப் பெற்று தலை சிறக்கமுடியும். இஸ்லாம் கொள்கையைப்பற்றி யாராவது தப்பிதமாய் நினைத்திருந்தால் தைரியமாய் திருத்த முற்படுங்கள்.

சந்தேகத்தை திருத்துங்கள்

உதாரணமாக மக்கா யாத்திரையைப் பற்றி மலேயா நாட்டில் உள்ள கிடாசுங்கப்பட்டானியில் என்னிடம் ஒரு இந்து என்பவர் ஒரு கேள்வி கேட்டார். அதாவது ‘இந்துக்களது காசி ராமேஸ்வரம் மதுரை யாத்திரையை மூடநம்பிக்கை என்கின்றாயே, இஸ்லாமானவர்கள் மக்கா யாத்திரை செய்ய மலேயாவில் அநேக முஸ்லீம்கள் செல்வதால் கஷ்ட நஷ்டப்படுகின்றார்களே’ என்றார். நான் பதில் சொல்லமுடியாமல் அப்படியானால் முஸ்லீம்கள் அநுசரிக்கும் கொள்கைகள் முழுவதும் பகுத்தறிவுக்கொள்கை என்று நான் சொல்லவரவில்லை என்றும் அதில் அநேக நல்ல கொள்கை பிரத்தியட்சத்தில் பார்க்கிறேன் என்றும் சொன்னேன்.

பிறகு சென்ற வருஷம் இதே கொண்டாட்ட நாளில் ஈரோட்டிற்கு வந்த மௌல்வி அப்துல் அமீது சாயபு பாகவியவர்களைக் கேட்டேன். அவர் விளக்கமாக்கினார். முஸ்லீம்கள் மக்காவுக்குப் போவதில் செல்வத்திலும், சரீர திடத்திலும் தகுதியுள்ளவர்கள் தான் போகவேண்டுமென்று இருக்கின்றதே தவிர எல்லோரும் போய்த்தீர வேண்டுமென்று இல்லை யென்றும் அந்த இடம் முகம்மதுநபி அவர்கள் உண்மையில் பிரத்தியட்சத்தில் பிறந்தஇடம் என்பதற்காக அங்கு போவது என்பது தவிர வேறு அற்புதமில்லை என்று அறிவு வளர்ச்சிக்கும் மற்ற மக்கள் நடை,

உடை, நாகரீகம் பார்த்து வரவும் பயன்படும் படியான ஒரு யாத்திரை என்றும் “கொலை களவு கொள்ளை நடத்தின பாபம் தீர்ந்து விடும் என்று சொல்லுவது தப்பு” என்றும் அந்த மாதிரி எண்ணத்துடன் யாரும் போவதில்லை என்றும் சொன்னார். யாராவது அந்தப்படி போனாலும் அது தெரியாத்தனமென்றே சொன்னார்கள். ஆகவே மக்களிலேயே பிறவியில் வித்தியாசமில்லை என்று சொல்லும் கொள்கையில் இடத்திற்கு இடம் வித்தியாசம் கற்பிக்கப்பட்டு இருக்காது என்பது பகுத்தறிவில் பட்டதேயாகும். ஆனால் இந்து கொள்கைகள் என்பவற்றில் ‘ஒரு மனிதன் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும், கொலை செய்தாலும், திருடினாலும், நம்பிக்கை துரோகம் வஞ்சகம் முதலிய காரியம் செய்தாலும், ஒரு ஊரை நினைத்தால் ஒரு ஊருக்குப் போனால் ஒரு ஊரில் ஒரு குளத்திலுள்ள தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டால் பாபம் பரிகாரமாகிவிடும், மோட்சமடைந்து விடுவான்’ என்று எவ்வளவோ அடியோடு பொய் பெருமைகளை கற்பித்து மூடநம்பிக்கை உண்டாக்கி அங்குள்ள சோம்பேறிகள் பிழைக்க ஸ்தல யாத்திரை ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற தென்றும், அப்படிப்பட்ட ஸ்தல யாத்திரைப்புரட்டுகள் எல்லாம் பகுத்தறிவுக்கு விறோதமானது ,மூடநம்பிக்கையில் பட்டது என்றும் சொல்லும்போது மற்றவர்கள் யாராவது அது போல் செய்தாலும், அந்தந்த தலைப்பின் கீழ்தான் வருமல்லவா? என்பதை யோசித்து நடக்க வேண்டியது மக்கள் கடமையாகும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

இப்படிப்பட்ட நாள்

ஆகவே இப்படிப்பட்ட அருமையான நாட்களை மனிதன் மேன்மைக்கும் முற்போக்கிற்கும் ஒற்றுமைக்கும் அறிவு விளக்கத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே இங்குள்ள இந்து முஸ்லீம்களை சகோதரர்களாகக் கருதியே என் மனதில் பட்டதைச் சொன்னேன். மௌல்வி சாயபு அவர்கள் இருவரும் சொன்ன விஷயங்களிலும் பெரிதும் அறிவுக்கு விரோதமானதோ கேள்விக்கு இடமானதோ இல்லை என்பதை முக்கியமாய் முஸ்லீம்களும் மற்ற இந்துக்களும் கவனித்துப் பார்த்து இதுபோலவே எல்லாக் கொள்கைகள் விஷயங்களிலும் பகுத்தறிவுடனிருக்க வேண்டுமென்றே கேட்டுக் கொள்ளுகிறேன்.

மற்றும் நான் சொன்ன விஷயங்களில் உங்கள் பகுத்தறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஒப்புக் கொள்ளாததைத் தள்ளி விடுங்கள். மற்றும் இம் மாதிரி நாட்களை வெறும் விருந்துக்கு உபயோகித்துக் கொள்ளாதீர்கள். இன்று சுமார் 500 ரூ. வசூல் செய்து பெரிய விருந்து சாப்பாடு செய்து சாப்பிட்டதாகத் தெரிகின்றது. இது பிரயோஜனமில்லை. பணங்கள் வசூல் செய்து பகுத்தறிவு பிரசாரம் செய்யவும் ஏழை மக்களுக்கு கல்விக்கும் கொள்கைகளின் உண்மை தத்துவத்தை பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்த்து பயன்படுத்தும் தத்துவத்திற்கும் உபயோகிக்கச் செய்யவும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

02.08.1931 அன்று ஈரோடு முஸ்லீம் வாலிப சங்கக் கட்டிடத்திற்கு முன் நடைபெற்ற நபிகள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய தலைமையுரை – “குடி அரசு” – சொற்பொழிவு – 09.08.1931

--------------------------------------------------------------

வஹாபிகளான நாங்கள் இன்று என்ன சொல்கிறோமோ அதைத்தானே அன்றே பெரியாரும் சொல்லியிருக்கிறார். அப்படீன்னா...பெரியாரும் வஹாபியா? :-)

//அந்த இடம் முகம்மது நபி அவர்கள் உண்மையில் பிரத்தியட்சத்தில் பிறந்தஇடம் என்பதற்காக அங்கு போவது என்பது தவிர வேறு அற்புதமில்லை //

இது தவறான புரிதல். முகமது நபி பிறந்த நாடு என்பதனால் அந்த பூமி புண்ணியமாகி விடவில்லை. உலகில் முதலில் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயம் கஃபா என்பதாலேயே அந்த இடம் புனிதப்படுகிறது. இதை அங்குள்ள மௌலவியாவது பெரியாருக்கு விளக்கி சொல்லியிருக்கலாம்.