சக கமணம் -
உயிரோடு புதைக்கப்பட்ட கற்பரசிகளின் கதை
முகலாயர் காலத்தில்தான்
உடன் கட்டை ஏறும் வழக்கமே உருவானது என்று பலர் கதை கட்டி வருகின்றனர். ஆனால் உண்மை
வேறாக இருக்கிறது. நமது தமிழகத்திலும் இந்த உடன் கட்டை ஏறும் வழக்கம் பல பெயர்களில்
நிலவி வந்துள்ளது. முகலாயர் ஆட்சி வருவதற்கு முன்னரே இது போன்ற கொடிய பழக்கங்கள் தமிழர்களிடத்தில்
இருந்துள்ளது என்பது தெரிய வருகிறது.
வட
இந்தியாவில் உடன்கட்டை ஏறுதல் என்றால், தென்னிந்தியாவில் அதன் இன்னொரு கொடூர வடிவம்
தான் சக கமணம்.
சக கமணம்
பற்றி நம் , நடுகற்களில்
தடயங்கள் உண்டு. பொதுவாக உடன்கட்டை ஏறுதலை இரண்டாக பிரிப்பார்கள்.
1. சகமரணம் /
சககமணம்: கணவன் இறந்த அதே இடத்தில், அதே சிதையில் மனைவியும் உடன் விழுந்து உயிரை
விடுவது.
2. அனுகமணம்:
கணவன் போரிலோ, வெளியூரிலோ
இறந்த செய்தி கேட்டு, மனைவி வேறு
ஒரு இடத்தில் தீ மூட்டி இறப்பது.
இது இந்துக்களில்
எரியூட்டும் வழக்கம் உள்ள பிரிவினரிடம் நடந்தது.
ஆனால்
வீரசைவம் / லிங்காயத்துகள் என அழைக்கப்படுபவர்கள் இறந்தவர்களை எரிப்பதில்லை.
அவர்கள்
இறந்தவரை சிவனோடு ஐக்கியமானவராக கருதி, பத்மாசனத்தில் அமர வைத்து புதைக்கும் வழக்கம்
உடையவர்கள். இதனால் அவர்களிடம் உடன்கட்டை ஏறும் வழக்கம் சற்று வேறுபட்டு, மிக கொடூரமாக இருந்தது. அதுவே சக கமணம்.
சக கமணம்
எப்படி நடந்தது?
கணவன்
இறந்தவுடன், ஊருக்கு
வெளியே பெரிய சவக்குழி வெட்டப்படும். குழிக்குள் இரண்டு மண் மேடைகள் நாற்காலி போல
செய்யப்படும்.
ஒன்றில் இறந்த
கணவனின் உடல் உட்கார வைக்கப்படும். மற்றொன்றில், உயிரோடு இருக்கும் மனைவி அலங்கரிக்கப்பட்டு, வீர உணர்ச்சி ஊட்டும் பாடல்களுடன் அமர
வைக்கப்படுவாள்.
பின்னர்
உறவினர்களே அந்த குழிக்குள் மண்ணைத் தள்ளி, கணவனோடு சேர்த்து உயிருடன் இருக்கும்
மனைவியையும் புதைத்து விடுவார்கள். மூச்சு திணறி, கதற கதற அவள் மண்ணுக்குள் சமாதி ஆவாள்.
இப்படி இறந்த
பெண்ணுக்கு "கற்பரசி" என்று பெயர் சூட்டி, அவளுக்கு கல் நட்டு தெய்வமாக வணங்குவார்கள்.
இதுவே நாம் காணும் சதிக்கல் / மாசதிக்கல் ஆகும்.
உண்மையில் 12-ம் நூற்றாண்டில் பசவண்ணர் தோற்றுவித்த வீரசைவ
இயக்கம் சாதி மறுப்பு, பெண்களுக்கு
சம உரிமை, விதவை மறுமணம்
ஆகியவற்றை ஆதரித்தது.
ஆனால்
பிற்காலத்தில் பிராமணிய சடங்குகளின் தாக்கத்தால், தமிழக கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழ்ந்த
சில வீரசைவ குழுக்களிடம் இந்த கொடூர வழக்கம் புகுந்து கொண்டது என்று ஆய்வாளர்கள்
கூறுகின்றனர்.
நான் எடுத்த
படம் என்ன சொல்கிறது?
இந்த படம்
சேலம் மாவட்டம், அல்லிக்குட்டை
பகுதியில் உள்ள புலிக்குத்திபட்டான் கல்,மற்றும் சதிகல்
இது ஒரே
கல்லில் இரண்டு வரலாறுகளை சொல்கிறது.
ஒரு பக்கம்
ஒரு வீரன் புலியுடன் போரிட்டு இறந்ததை காட்டும் புலிக்குத்தி நடுகல். வீரன் புலியை
குத்தி கொல்வது போல சிற்பம் உள்ளது.
அதன்
அருகிலேயே கை கூப்பி நிற்கும் பெண் உருவம் அவன் மனைவி உடன் கட்டை ஏறியதை காட்டும் சதிக்கல்.
இது போன்ற
சதிக்கற்கள் தமிழகத்தில் நாயக்கர் காலத்தில் (16-17ம் நூற்றாண்டு) அதிகம் காணப்படுகின்றன.
திருப்பூரில் 300 ஆண்டுகள்
பழமையான சதிக்கல் கண்டெடுக்கப்பட்டது போல, நம் சேலம் மண்ணிலும் இவை சிதறிக்
கிடக்கின்றன.
1829-ல் ராஜாராம்
மோகன்ராய் அவர்களின் முயற்சியால் கிழக்கிந்திய கம்பெனி உடன்கட்டை ஏறுதலை தடை செய்த
பிறகு, சக கமணமும்
படிப்படியாக ஒழிந்தது.
இந்த கற்கள்
வெறும் கற்கள் அல்ல. ஒரு காலத்தில் பெண்களின் உயிர் எவ்வளவு மலிவாக கருதப்பட்டது, கற்பு என்ற பெயரில் எவ்வளவு கொடூரமான கொலைகள்
நியாயப்படுத்தப்பட்டன என்பதற்கான ரத்த சாட்சிகள்
.
இன்று அந்த
கற்பரசிகள் தெய்வமாக வணங்கப்படுகிறார்கள். ஆனால் அந்த தெய்வங்களுக்கு பின்னால்
இருப்பது ஒரு உயிருள்ள பெண்ணின் கடைசி கதறல்.
அந்த கதறலை ஊர்
வழக்கமாக்கி பல வாழ வேண்டிய பெண்களின் உயிரை குடித்துள்ளது பண்டைய தமிழர்களின் வழக்கம்.
இந்த பழக்கம் கூட ஆரிய வருகைக்குப் பின் என்பதாகவும் பல ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில்
நாடோடிகளாக சுற்றித் திரிந்த ஆரியர்கள் கணவன் இறந்தவுடன் அந்த பெண்ணை அழைத்துச் செல்வது
மிகச் சிரமம். எனவே எங்கு தங்குகிறார்களோ அங்கு சிதை மூட்டி உடலை எரித்து விடுவது ஆரியர்களின்
பழக்கம். அதையும் தமிழர்கள் கடன் வாங்கிக் கொண்டனர்.
#சககமணம் #சதிக்கல் #புலிக்குத்திகல் #நடுகல் #சேலம்வரலாறு #வீரசைவம் #Allikuttai #SalemHistory


No comments:
Post a Comment