Followers

Monday, July 09, 2018

மீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி?

மீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி?
நேர்வழியும், உயர்வும் அல்லாஹ் கொடுப்பதே!
மீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக மாறியது நம் அனைவருக்கும் தெரியும். 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவி இந்தியாவையும் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ரஹ்மத் நகரில் பிபிசியின் தமிழோசைப் பிரிவு ஒரு நேர்காணலை சமீபத்தில் நடத்தியது. இதனை தயாரித்தவர் த.ந.கோபாலன். இனி பிபிசி சொல்லும் செய்தியை பார்ப்போம்.
”இறைவனே என் பாவங்களை மன்னிப்பாயாக! அருட்கொடையின் தலைவாசலை எங்களுக்காக திறந்து வைப்பாயாக”
மீனாட்சிபுரத்தில் உயரமாக நிமிர்ந்து நிற்கும் பள்ளி வாசலின் முன் பக்கம் எழுதப் பட்ட வாசகமே இது. தேவர் இனத்தவரின் சொல்ல முடியாத அடக்கு முறையினால் வேறு வழி இன்றி இஸ்லாத்தை நோக்கி இந்த மக்கள் சென்றனர். தற்போது இந்த மக்களின் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கண்டு வர எங்களது குழு மீனாட்சிபுரத்துக்கு சென்றது.
‘மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?’
‘நீங்க சொல்லித்தான் நாங்க மதம்மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடுதற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.’
‘மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா?’
‘நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் ‘டேய் சுப்பையா! டேய் மாடா! இங்கவாடா’ என்று தான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.’
‘வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன?’
‘எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம்.யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை ‘முருகேஷா இங்க வாடா’ என்று கூப்பிடுபவர்கள்மதம் மாறிய அன்வர் அலியை ‘வாங்க அன்வர் அலி’என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?’
நாம் பல இடங்களில் பார்த்த வகையில் இஸ்லாத்துக்கு மாறியதால் இந்த மக்களின் வாழ்வில் சமூக அந்தஸ்து கூடியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால் ஒரு பிரச்னை இன்றும் உள்ளது. அதாவது பூர்வீக இஸ்லாமியர்கள் இவர்களை மதிப்பதில்லை எனவும் இவர்களிடம் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை எனவும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது சம்பந்தமாக ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ என்ற கதை முன்பு வெளி வந்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதைப் பற்றி அந்த கிராம மக்களிடம் கேட்டோம்.
‘அந்த கதையை எந்த ஊரை மையமாக வைத்து அவர் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊரில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. 20 க்கு மேற்பட்டபெண்கள் இங்கிருந்து அங்கு போயிருக்கிறார்கள். அதே எண்ணிக்கையில் அங்கிருந்து இங்கு வந்திருக்கிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.ஏழைகள் ஏழை வீட்டைப் பார்த்து சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். வசதியுள்ளவர்கள்வசதியான இடததில் சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சில பூர்வீகமுஸ்லிம்கள் எங்களிடம் சம்பந்தம் பண்ண தயங்குவது பொருளாதார ஏற்ற தாழ்வுகளை வைத்தே. நாங்களும் அவர்களைப் போல் பொருளாதாரத்தில்நல்ல நிலைக்கு வந்தால் தாராளமாக பெண் கொடுத்து பெண் எடுப்பார்கள். சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.
‘உங்களின் கிராமத்தில் இன்னும் சிலர் இந்து மதத்திலேயே உள்ளனரே! அவர்கள் ஏன் மாறவில்லை’?
‘அதற்கு நாங்கதான் காரணம் என்றுசொல்லலாம். மார்க்கத்தை இங்குள்ளவர்கள் சரியாக விளங்காமல் பொடும் போக்காக உள்ளனர். மேலும் இங்கு வந்தால் சில சட்டதிட்டங்கள் கட்டுப்பாடுகள் (தொழுகை, மது உண்ணாமை, வட்டி வாங்காமை, நோன்பு) உள்ளதும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயங்குவதற்கான காரணம். இறைவன் நாடினால் அவர்களும் வருங்காலத்தில் எங்கள் மார்க்கத்தில் இணைவர்’
சில ஆதி திராவிட இந்துக்களையும் சந்தித்தோம். முருகேஷன் என்ற தலித் இளைஞர்:
‘மதம் மாறினா இட ஒதுக்கீடு கிடைக்காதுல்ல…அதான் நான் மாறல்ல. ஆனால் சமூகத்துல இன்னமும் ‘வாடா முருகேஷா’ என்றுதான் இன்றும் அழைக்கப்படுகிறேன். ‘வா முருகேஷா’ என்று கூட கூப்பிட சாதி இந்துக்களுக்கு நா எழ மாட்டேங்குது.”
தேன் மொத்தை ஊராட்சி மன்ற தலைவி. இவர் இன்னும் இந்து மதத்தில்தான் உள்ளார்.
‘நான் பஞ்சாயத்து போர்டு தலைவிங்கறதால ஏதோ மதிப்பு கொடுக்கறாங்க. ஆனால் மொத்தத்தில எங்களை சமூகத்துல இன்னும் கீழ்சாதியாத்தான் பார்க்கிறார்கள்’
மற்றொரு தலித் இளைஞரை சந்தித்தோம்.
‘முஸ்லிமாக மதம் மாறினவங்களுக்கும் உங்களுக்கும ஏதும் பிரச்னை வந்துள்ளதா?’
‘இல்லை. நாங்க சாமி கும்புடறப்போ அவங்க தொந்தரவு பண்றதில்லை. அதே போல் அவுங்க தொழுகை பண்ணும் போது எந்த இடைஞ்சலும் நாங்க கொடுக்கறது இல்ல.
எங்கள் குழு ஆராய்ந்த வகையில் தலித்கள் முஸ்லிமாக மாறியதற்கு பிறகு சமூக அந்தஸ்து அவர்களுக்கு கிடைத்துள்ளதாகவே அறிகிறோம்.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தையே பரபரப்பும் பதைபதைப்பும் அடையச் செய்த இயற்கை கொஞ்சும் அழகிய ஊர்.
ஆம்! தீண்டாமை என்னும் சாதித்தீயின் கோரப்பிடியில் இருந்து விடுதலை பெற்று ஏகத்துவம் என்ற கொள்கையை ஏற்று சமத்துவம் பெற்ற மீனாட் சிபுரம் மக்களின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள ஒரு விசிட் அடித்தோம்.
மீனாட்சிபுரம் “ரஹ்மத் நகர்’ ஆகி இன்று நம்மை வரவேற்றது. நாம் ஊருக்குள் நுழைந்தவுடன் நம்மை ஆச்சரியத்துடனும் அன்புடனும் எதிர் கொண்டனர் அவ்வூர் ஜமாஅத் தலைவர் சம்சுதீனும், துணைத் தலைவர் முஹம்மது இப்ராஹிமும். அவர் ளோடு உரையாடினோம்.
“சில வருடங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டி.எம். மணி என்பவர் இந்த ஊருக்கு வருகை தந்து எங்கள் வாழ்க்கை நிலை யினை நேரில் கண்டறிந்து உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
அரைவேக்காடு அன்வர் பால சிங்கம் என்னும் ஆணவம் பிடித்தவன், “கருப்பாயி என்ற நூர்ஜஹான்’ என்ற புத்தகத்தில் கற்ப னையுடன் பொய்யைக் கலந்து உண்மைக்கு புறம்பான, அவதூறு செய்திகளைப் பரப்பி வந்ததை கண்டித்தும் இஸ்லாத்தை ஏற்று கண்ணியத்தோடு நாங்கள் வாழ்ந்து வருவதை வெளி உலகுக்கு தயங்காமல் எடுத்துக் காட் டியதையும் அவரைப் போலவே சிராஜுதீன் என்பவரும் எங்களின் சகோதர – சமத்துவ நிலையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்…” என்றபடியே அருகில் இருந்த பெரிய பள்ளிவாசலுக்கு நம்மை அழைத்துச் சென்றனர்.
“நான் இப்பள்ளிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இமாமாக சேர்ந்தேன். இந்த ஊர் மக்கள் இப்போது கல்வி அறிவு பெற்ற நடுத்தர மக்களாக இருக்கிறார்கள். இஸ்லாமிய வாழ்வியல் நெறிகளை கடைபிடித்து நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்…” என்றார் நம்மிடம்.
நாம் அந்த ஊர் மக்களின் நிலையை ஆர்வத்துடன் கொண்டிருந்தபோது கையில் கம்பு ஊன்றிக் கொண்டு வந்த ஒருவர்,
“பேட்டி எல்லாம் எடுக்குறீங்களாமே? எதற்கு எடுக்கிறீர்கள்? இப்படித்தான் ஒவ்வொரு முறை யும் யாராவது பேட்டி எடுக்கிறேன் என்று சொல்லி எங்களை போட்டோ எடுத்துக் கொண்டு சென்று எங்களின் நிலையைப் படம் பிடித்துக் காட்டி பணம் வசூல் செய்து, எங்களை வியாபாரப் பொருளாக்கி விடுகிறார்கள். தயவு செய்து பேட்டி வேண்டாம்; போட்டோவும் எடுக்க வேண்டாம்…” என்றார் விரக்தி கலந்த கோபத்துடன்!
அவரிடம் கனிவாகப் பேசி, சமாதானப்படுத்தி நாம் யார் என்பதையும் நம்முடைய நோக்கம் என்ன என்பதையும் தெளிவு படுத்தியவுடன், அருகில் இருந்த சிறுவனிடம் நமக்காக குளிர்பானம் கொண்டு வரச் சொல்லி விட்டு நம்முடன் பேசினார்.
“இஸ்லாத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டதால் சாதி எங்களை விட்டு ஒழிந்து, சகோதரத்துவமும் சமத்துவமும் எங்களிடத்தில் ஏற்பட்டு இப்போது மிகவும் கண்ணியத்துடன் வாழ்ந்து வருகிறோம். மிகவும் சந்தோஷம் அடைகிறோம் தம்பி.
அதே வேளையில் வயதிற்கு வந்து 25-30 வயது கடந்தும் திருமணம் ஆகாமல் உள்ள இளம் பெண்களின் நிலை மிகவும் வேதனையாக உள்ளது…” என்றார்.
“ஏன் இந்த நிலை?” என்று நாம் கேட்டவுடன், “வரதட்சணை என்ற கொடிய நோய் இந்த ஊரில் பரவி உள்ளது. இஸ்லாம் எங்களை அரவணைத்துக் கொண்டது. ஆனால் ஒரு சில இஸ்லாமியர்கள் இன்று எங்களுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ள விரும் பவில்லை. ஐந்து லட்ச ரூபாய் இருந்தால் மட்டும் எங்களோடு உறவாடத்தயாராக உள்ளனர்.
எங்கள் ஆண் பிள்ளைகளை பரம்பரை முஸ்லிம்கள் தங்கள் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், எங்கள் பெண் பிள்ளைகளை இஸ்லாமியர்களில் சிலர் திருமணம் செய்ய முன் வருவதில்லை. இதற்கு காரணம் வரதட்சணைதான்…” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கூறியபோது நமக்கு சங்கடமாக இருந்தது.
நாம் வந்திருப்பதை அறிந்து அங்கு வந்த கனீபா என்கிற பி.இ. படித்த வாலிபர் நம்மிடம்,
“இஸ்லாத்தை ஏற்ற நாங்கள் எந்த துன்பம் வந்தாலும் இஸ்லாத்தை மட்டும் விட்டு வெளியேற மாட்டோம்! எங்களுக்கு பொருளோ பொன்னோ வேண்டாம். நாங்கள் யாருடைய ஆசை வார்த்தைக்கும் மயங்க மாட்டோம்…” என்று உறுதியுடன் சொன்னது ரஹ்மத் நகர் மக்களின் சமத்துவ வாழ்வை வெளிப்படுத்துவ தாய் இருந்தது.
இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற்று அவர் மேல் படிப்பு தொடர நாம் அவருக்கு ஆலோசனை வழங்கினோம்.
ரஹ்மத் நகருக்கு அருகில் உள்ள பண்பொழி, வடகரை ஜமாஅத்தார்கள் மனமுவந்து திருமண வயதில் உள்ள இளம் பெண்களை மண முடித்துக் கொண்டால் இன்னும் சமூக உறவு மேம்படும். எங்கள் மனம் குளிரும் என்று ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்துகின்றனர் ரஹ்மத் நகர் மக்கள்.
ரஹ்மத் நகர் இளைஞர்கள் இயக்க ரீதியான உறவுகளையும், ஜமாஅத்துகளின் ஒத்துழைப்புடனும் இயங்கினால் இன்னும் அவர்களின் எண்ணங்களும் செயல்களும் வெளி உலகுக்கு தெரிவதுடன் அவர்களின் பங்களிப்பும் நல்ல முறையில் அமையக் கூடும். அவர்களின் மனக்குறைகளும் மற்ற முஸ்லிம்களுக்கு தெரியவரும் என்று பள்ளிவாசல் இமாமிடம் நாம் ஆலோசனை கூற, கூடிய விரைவில் தங்கள் ஊர் இளைஞர்களிடம் தமிழகத்து இயக்கங்களின் செயல்பாட்டை விளக்கமாக எடுத்துரைக்க முயற்சி மேற்கொள்வதாக கூறினார்.
“ஒட்டுமொத்த மக்களும் இஸ்லாத்திற்கு மாறிய மீனாட்சிபுரம் என்னும் ரஹ்மத் நகருக்கு வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள், தமிழகத்து இந்துத்துவா அமைப்பினர் படையெடுத்து வந்தும், பணம், பொருள் போன்றவற்றைக் காட்டி அழைத்தபோதும் உறுதியுடன் நின்று இஸ்லாமே எங்களது வாழ்க்கைக்கு தீர்வு என்று பதிலளித்தவர்கள். இன்று இஸ்லாம் மூலமே நாங்கள் கண்ணியம் பெற்றோம்.
இழிவு எது வந்தாலும் ஈமானை இழக்கமாட்டோம். அப்படிப்பட்ட எந்த ஒரு இழிவையும் எங்கள் இறைவன் எங்களுக்கு வழங்க மாட்டான். அவன் மிகவும் கருணையாளன்…” என்று ஒரு மித்த குரலில் கூறியது இஸ்லாத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறுதிக்கு சாட்சியாக இருந்தது.
மனமாற்றத்தால் மதமாற்றம் பெற்ற இந்த மக்களை, இஸ்லாமிய சமூகம் வரதட்சணை எனும் சமூகத் தீமையிலிருந்து மனமாற்றம் பெற்று மகிழ்விக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
(நபியே! பிரார்த்தித்து) நீங்கள் கூறுங்கள்; எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். (3:26)
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காகவே கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர்தாம் ஏக இறைவனிடத்தில் நிச்சயமாக மிக்கமேலானவர். (அல்குர்ஆன் 49:13)
தகவல் உதவி
பிபிசி.காம்
ரெடிஃப். காம்
சுவனப்பிரியன்.காம்


1 comment:

Dr.Anburaj said...


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டனத்தில் உள்ள ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவிலில் தினசரி அதிக எண்ணிக்கையில் முஸ்லீம்களைக் காணலாம்.

தாங்களும் வந்து வணங்கி அம்மன் அருள் பெற அன்புடன் அழைக்கின்றேன்.